பதிவு செய்த நாள்
22
மார்
2012
11:03
சேலம்: சேலம் மாநகரில் அதிகரித்து வரும் செயின் பறிப்பு, திருட்டு சம்பவங்கள் காரணமாக, எல்லைப்பிடாரி அம்மன் கோவில் திருவிழா பாதுகாப்புக்கான போலீஸ் எண்ணிக்கையை உயர்த்தி, கமிஷனர் மஹாலி உத்தரவு பிறப்பித்துள்ளார். சேலம் மாநகரில், ஒரு மாதமாக செயின் பறிப்பு, வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் குறைந்திருந்தது. சில நாட்களுக்கு முன், ஒரே நாளில் இரண்டு பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவம் நடந்தது. இந்நிலையில், மார்ச் 23ல் துவங்கி ஏப்ரல் 1 வரை சேலம் எல்லைப்பிடாரி அம்மன் கோவில் திருவிழா நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல், வரும் 29ல் நடக்கிறது. இதில், பத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வர். இந்தக் கூட்ட நெரிசலை பயன்படுத்தி வழிப்பறி திருடர்கள் கைவரிசை காட்டக் கூடும் என, சேலம் மாநகர போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும். அவர்களின் உடமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில், போலீஸ் பாதுகாப்பை அதிகரித்து கமிஷனர் மஹாலி உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆண்டு திருவிழாவின் போது, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட போலீஸாரின் எண்ணிக்கையை விட, இரண்டு மடங்கு அதிகமான போலீஸார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஒரு பெண் இன்ஸ்பெக்டர் உட்பட நான்கு இன்ஸ்பெக்டர், 21 எஸ்.ஐ.,க்கள், 50 ஊர்க்காவல் படையினர், 20 ஆயுதப்படை போலீஸார் உட்பட மொத்தம், 185 பேர் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர போக்குவரத்து பிரிவு போலீஸாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து உதவி கமிஷனர் ஒருவர் கூறியதாவது: எல்லைப்பிடாரி அம்மன் கோவில் திருவிழாவின் போது, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், குண்டம் திருவிழாவின் போது, பத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவிலுக்கு வருவர். இந்தக் கூட்ட நெரிசலை சாதகமாக பயன்படுத்தி, திருட்டு கும்பல், வழிப்பறி, செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபடக்கூடும் என, தகவல்கள் கிடைத்துள்ளது. அந்த கும்பலின் நடமாட்டத்தை கண்காணிக்க, சாதாரண உடையில் க்ரைம் பிரிவு போலீஸார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்களுடன், 185 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்களை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைக்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.