அம்பிகைக்கு உரிய ஆடியில் யாரும் சுபநிகழ்ச்சி நடத்துவதில்லை. ஆனால் ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மனுக்கு ஆடியில் திருக்கல்யாணம் கோலாகலமாக நடக்கிறது. இத்தலத்தில் ராமர் வழிபட்ட சிவனே ராமநாத சுவாமியாக கோயில் கொண்டிருக்கிறார். பர்வதவர்த்தினி என்னும் பெயரில் அம்மன் இருக்கிறாள். தெய்வத் திருமணங்களுக்கு மாதம் தடையல்ல என்பதால் ஆடியில் திருக்கல்யாணம் நடத்தும் வழக்கம் இங்குள்ளது. பிதுர் தலமான இங்கு ஆடியில் பக்தர்கள் தீர்த்தமாட வருவர். அவர்கள் திருக்கல்யாணத்தையும் தரிசிக்கட்டும் என்ற நோக்கத்தில் ஆடியில் நடப்பதாகவும் சொல்வர்.
சீதையை மீட்டு வரும் வழியில் ராமர் இங்கு தங்கினார். சிவ பக்தரான ராவணனைக் கொன்ற பாவம் தீர, சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட எண்ணினார். வடக்கே சென்று இமயமலையில் சிவலிங்கம் எடுத்து வர ஆஞ்சநேயரை அனுப்பினார். அவர் வர தாமதமானதால், கடற்கரை மணலில் சிவலிங்கம் வடித்தாள் சீதை. அதை ராமர் வழிபடத் தொடங்கினார். இந்நிலையில் சிவலிங்கத்துடன் வந்த ஆஞ்சநேயர், மணலால் ஆன லிங்கத்தை வாலால் அடித்தார். ஆனால் அது உடையவில்லை. வாலால் கட்டி இழுக்க முயற்சித்தும் நகரவில்லை. ராமர் வழிபட்ட லிங்கம், ராமலிங்கம் (ராமநாதசுவாமி) என்றும், அனுமன் கொண்டு வந்த லிங்கம்’அனுமலிங்கம்’ என்றும் அழைக்கப்பட்டது. இத்தலத்தில் அனுமலிங்கத்தை வழிபட்ட பின்பே, ராமலிங்கத்தை பூஜிக்க வேண்டும் என்னும் விதிமுறை உள்ளது. பிரகாரத்தில் 22 புனித தீர்த்தங்கள் உள்ளன. கோயிலுக்கு நேர் எதிரில் அக்னி தீர்த்தம் என்னும் கடல் உள்ளது.
ஆடியில் பர்வதவர்த்தினிக்கு, ராமநாதசுவாமி திருக்கல்யாண விழா 17 நாட்கள் நடக்கும்.