பதிவு செய்த நாள்
24
ஜூலை
2019
02:07
குளித்தலை: குளித்தலை அடுத்த, சிவாயம் அருகே, ஆதனூரில், கழுகுநாட்டை சேர்ந்த ஏழு ஊர் பங்காளிகளின் குலதெய்வமான சுயம்பு அங்காள பரமேஸ்வரி கோவிலில், முப்பூஜை திருவிழா நடந்தது.
இவ்விழா, கடந்த 16ல், குளித்தலை காவிரியில் நீராடி, காப்புகட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல் நாகனூர், கழுகூர், ஆதனூர், பேரூர், பொம்மாநாயக்கன் பட்டி, மேலவெளியூர், கீழ வெளியூர், காக்காயம்பட்டி ஆகிய ஊர்களில் இருந்து பக்தர்கள் விரதம் இருந்து அங்காள பரமேஸ்வரிக்கு மண்டல அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தனர்.
முதல் நாள் திருவிழாவான நேற்று (ஜூலை., 23ல்) காலை, குன்னாகவுண்டன் பட்டியில் இருந்து புனித நெல் அழைத்து வருதல், கோவிலில் தண்ணீரில் தீபம் ஏற்றுதல் முதலான நிகழ்ச்சிகள் நடந்தன. மாலையில், கடம்பர்கோவில் காவிரி ஆற்றில், அங்காள பரமேஸ்வ ரிக்கு கரகம் பாலித்து, பம்பை இசை முழங்க, 20 கி.மீ., பாதயாத்திரை சென்று, ஆதனூர் எல்லையை அடைந்தனர். அங்கு தயாராக இருந்த முத்துப்பல்லக்கில், அங்காளபரமேஸ்வரி திருக்கரகம் வீதிஉலா நடந்தது.
இரண்டாம் நாளான இன்று (ஜூலை., 24ல்), நாகனூரில் இருந்து சுவாமி அழைத்து வருதல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு பூஜை நடக்கிறது. திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். நாளை (ஜூலை., 25ல்) இரவு எரிகாவல், காடேறும் பூஜை நடக்கிறது. அப்போது, மதுரைவீரன் சுவாமிக்கு முப்பூஜை கொடுக்கும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகிறது.