பதிவு செய்த நாள்
26
மார்
2012
11:03
திருவனந்தபுரம்: பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறை பொக்கிஷங்களை மதிப்பீடு செய்ய அமைக்கப்பட்டுள்ள குழுவின் உறுப்பினர்கள் குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய விசாரணை அறிக்கையின்படி, குழு உறுப்பினர்கள் சிலரை மாற்ற, குழுவின் ஒருங்கிணைப்புத் தலைவர் ஆலோசித்து வருகிறார். இந்த விஷயத்தில் நாளை இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது. கேரளா திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் பூமிக்கடியில் உள்ள ஆறு அறைகளில், பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷங்கள் உள்ளன. அவற்றை மதிப்பீடு செய்ய, டாக்டர் வேலாயுதன் நாயர் என்பவரை ஒருங்கிணைப்பாளராகக் கொண்ட குழுவை சுப்ரீம் கோர்ட் நியமித்துள்ளது. இக்குழுவினர், கோவில் பொக்கிஷங்களை மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் குறித்து, மாநில லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரணை நடத்தி, அறிக்கையை ஒருங்கிணைப்பாளர் வேலாயுதன் நாயரிடம் அளித்தனர். அதில், கோவில் செயல் அலுவலர் அரிக்குமார், தொல்லியல் துறை இயக்குனர் ரெஜிக்குமார் உட்பட ஒன்பது பேர் மீது, குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்கள் மீது, பல புகார்களும் விசாரணையில் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. அறிக்கையை பரிசீலித்த வேலாயுதன் நாயர், கோவில் செயல் அலுவலர் அரிக்குமார் உட்பட கோவில் ஊழியர்களுக்குப் பதிலாக, வேறு நபர்களை நியமிக்கும்படி, திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்திடம் கோரியுள்ளார். மதிப்பீடு குழு உத்தரவுப்படி, குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்ட ஒரே நபர், தொல்லியல் துறை இயக்குனர் மட்டும் தான். இவர் இதுவரை நடந்த மதிப்பீடு பணிகளில் கலந்துகொள்ளவில்லை. தற்போது அவரும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதால், இனி அவர் மதிப்பீடு பணிகளில் ஈடுபடுத்தப்பட மாட்டார் என்பது உறுதி. லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிக்கை குறித்து மதிப்பீடு குழு ஆராய்ந்து அதன் அடிப்படையில், இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.