பதிவு செய்த நாள்
02
ஆக
2019
04:08
உடுமலை:ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடக்கிறது. நாளை, ஆடிப்பூரத்தையொட்டி, உடுமலை பகுதி, கோவில்களில் சிறப்பு பூஜை நடக்கிறது. உடுமலை தளி ரோடு காமாட்சி அம்மன் கோவிலில், ஆடிப்பூரம் ஊஞ்சல் உற்சவ விழா நடக்கிறது. நாளை, காலை, 7:00 மணிக்கு கணபதி ஹோமம், அம்பாளுக்கு அபிஷேகத்துடன் சிறப்பு அலங்காரம் நடக்கிறது.
தொடர்ந்து, மாலை, 5:00 மணிக்கு அம்மனுக்கு வளையல் அலங்காரத்தில் ஆடிப்பூர ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.நேரு வீதி காமாட்சி அம்மன் கோவிலில், இன்று காலை, 7:30 மணிக்கு கோ பூஜை, தொடர்ந்து லட்சார்ச்சனை நடக்கிறது. நாளை, மாலை, 7:00 மணிக்கு அம்மனுக்கு வளையல் அலங்காரத்துடன், ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.
குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவிலில், ஆடிப்பூர உற்சவம் இன்றும், நாளையும் (ஆக., 2 மற்றும் 3ல்) நடக்கிறது. இன்று (ஆக., 2ல்) காலை, 7:00 மணிக்கு குபேர லட்சுமி ஹோமம், பூமிலட்சுமி அம்மனுக்கு அபிஷேக ஆராதனையுடன் சிறப்பு அலங்காரம் நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு ஆண்டாள் நாச்சியார் ரங்கமன்னார் சுவாமிகளின் திருக்கல்யாண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (ஆக., 3ல்) காலை, 7:00 மணிக்கு கோ பூஜை நடக்கிறது. காலை, 8:00 மணிக்கு, சிறப்பு அலங்காரத்துடன், ஆண்டாள் நாச்சியார், ரங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
இரவு, 8:30 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.உடுமலை, பிரசன்ன விநாயகர் கோவில், கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், நவநீத கிருஷ்ண பெருமாள் கோவில்களிலும் ஆடிப்பூர விழா மற்றும் சுற்றுப்பகுதி கோவில்களில் ஆடிபெருக்கு விழா சிறப்பு பூஜைகள் நாளை, காலை, 7:00 மணி முதல் நடக்கிறது.நீர்நிலை வழிபாடு: உடுமலை பகுதி கிராங்களில் நாளை ஆடிப்பெருக்கு விழாவையொட்டி நீர்நிலைகளில் சிறப்பு வழிபாடுகள் நடக்கும். அதன்படி அமராவதி ஆற்று நீரில் முளைப்பாரி விட்டு வழிபாடு நடத்துவார்கள். மேலும் கிராமங்களில் மரங்களில் துாரி கட்டி பெண்கள் குழந்தைகள் விளையாடுவதும் பாரம்பரியமாக நடக்கிறது.