பதிவு செய்த நாள்
27
மார்
2012
11:03
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வெளியே பக்தர்களை சோதனையிடுதல், கோயில் மேற்பகுதியில் போலீஸ் கண்காணிப்பு போன்ற பாதுகாப்பு திட்டங்கள் ஓராண்டாக செயல்படுத்தப்படாமல் உள்ளது. இக்கோயிலுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதால், மத்திய உளவுத்துறை அறிக்கைபடி, பாதுகாப்பு பலப்படுத் தப்பட்டுள்ளது. எனவே கோயில் வாசலில் பக்தர்களை சோதனையிட்டு பின் அனுமதிக்கின்றனர். சோதனையிடும்போதே, அசம்பாவிதம் ஏற்பட்டால், அது கோயிலுக்குள் நடந்ததாக கருதப்படுவதுடன், பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கும் என்பதால், காலணிகள் பாதுகாக்கும் இடம் அருகே சோதனையிடும் திட்டம் கடந்த ஆண்டு மார்ச்சில் செயல்படுத்தப்பட்டது. பின் நிர்வாக காரணங்களுக்காக இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அதேபோல், கோயிலின் மேற்பகுதியில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீஸ் கண்காணிக்கும் திட்டமும் கிடப்பில் உள்ளது. போலீசார் கூறுகையில், ""கோயில் நிர்வாகம் சார்பில், சோதனையிடும் அறை அமைத்துத்தர காலதாமதம் ஆவதால், இத்திட்டம் கிடப்பில் உள்ளது, என்றனர். கோயில் நிர்வாகத்திடம் கேட்டபோது, ""போலீசாருடன் ஆலோசித்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும், என்றனர்.