பதிவு செய்த நாள்
16
ஆக
2019
11:08
காஞ்சிபுரம்: அத்தி வரதர் வைபவத்தில் நிறைவு நாளான இன்று அத்தி வரதரை வழியனுப்ப ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து சுவாமியை தரிசனம் செய்தனர். வரதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
காஞ்சி அத்தி வரதர் வைபவத்தில், விஐபி, விவிஐபி தரிசனம் நேற்றோடு முடிந்தது. பொது தரிசனம் இன்றுடன் நிறைவடைவதாகவும், நாளை எந்த விதமான தரிசனமும் கிடையாது என, கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில், வசந்த மண்டபத்தில், அத்தி வரதர் வைபவம், ஜூலை 1 முதல், 46 நாட்களாக, வெகு விமரிசையாக நடைபெற்று வந்தது.இந்நிலையில், நேற்று முன்தினம், இரவு, 11:30 மணியளவில், துணை முதல்வர் பன்னீர்செல்வம், காஞ்சிபுரம் வந்து, அத்தி வரதரை தரிசனம் செய்தார். விஐபி மற்றும் விவிஐபி தரிசனம், ஆக.15ம் தேதியோடு முடிவடைவதாக, கலெக்டர் பொன்னையா ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதன்படி, விஐபி மற்றும் விவிஐபி தரிசனம் நேற்று இரவோடு முடிந்தது.
இன்று, விஐபி, விவிஐபி தரிசனம் கிடையாது; பொது தரிசனம் மட்டுமே அனுமதிக்கப்படும் என, கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார். ஆடி கருடசேவையை முன்னிட்டு, நேற்று, மதியம் 12:00 மணியளவில், கிழக்கு கோபுர கதவுகள் மூடப்பட்டன. பொது தரிசன வரிசையில், கோவில் உள்ளே இருந்த பக்தர்கள் மட்டும், மாலை 5:00 மணி வரை, அத்தி வரதரை தரிசனம் செய்தனர்.இதேபோல், விஐபி, விவிஐபி வரிசையும், மதியம் 1:00 மணிக்கு மூடப்பட்டது. இரவு 8:00 மணிக்கு பின், விஐபி, விவிஐபி தரிசனம் அனுமதிக்கப்பட்டது. கடைசி நாள் என்பதால், விஐபி, விவிஐபி வரிசையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
அத்தி வரதர் வைபவம் இன்று நிறைவு பெறுவதால், இரு நாட்களாகவே கடும் பக்தர்கள் கூட்டம் உள்ளது. செவிலிமேடு, கீழ்கதிர்பூர் ஆகிய இடங்களில் உள்ள தங்குமிடங்கள் நிறைந்து, பக்தர்கள் அதிகளவில் பஸ்கள் மூலம், காஞ்சிபுரம் நகருக்கு அழைத்து வந்தனர்.அண்ணா அவென்யூ, வாழைத்தோப்பு ஆகிய இடங்களில் உள்ள பந்தல்களில் போதிய அளவில் இடமில்லாத காரணத்தால், டிகே நம்பித் தெரு, ரங்கசாமி குளம், காந்தி ரோடு என, சாலை நெடுக, பக்தர்களை காத்திருக்க செய்து, விட்டு விட்டு போலீசார் அனுப்பினர்.காந்தி ரோடு, டி.கே., நம்பி தெரு முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் காத்திருந்தனர். நீண்ட நேரம் பக்தர்கள் சாலையில் காத்திருப்பதால், ஏராளமானோர் சாலையிலேயே அமர்ந்தனர்.
அத்தி வரதர் வைபவம் துவங்கி, நேற்று முன்தினம் வரை, 94 லட்சம் பேர், அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளனர். நேற்று மட்டும், 3.5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.கடும் கூட்ட நெரிசலில் சிக்கி, வழக்கம்போல், நேற்றும் பலர் மயங்கி விழுந்தனர். கோவிலில் உள்ள மருத்துவ முகாமிற்கு அழைத்து சென்று, பக்தர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.இன்று, பொது தரிசனம் மட்டுமே அனுமதிக்கப்படும் என. தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று, கோவிலை நோக்கி வரும் பக்தர்கள் அனைவரும், நாளை அதிகாலை வரை அத்தி வரதரை தரிசிக்க அனுமதிக்கப்படுவர் என. மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாளை காலை தரிசனம் முடிந்த பின், அத்தி வரதர், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, அனந்தசரஸ் குளத்தில், மாலை அல்லது இரவில் வைக்கப்படுவார்.