பதிவு செய்த நாள்
29
மார்
2012
11:03
கரூர்: கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கரூரில் அலங்காரவல்லி, சவுந்திரநாயகி உடனுறை கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். நடப்பாண்டு பங்குனி திருவிழா நேற்று காலை 10.45 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு கிராம சாந்தி நடந்தது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நந்தி, பூதம், ரிஷபம், கயிலாயம் போன்ற வாகனத்தில் ஸ்வாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். ஏப்., 2ம் தேதி பல்லக்கு உற்சவமும், 3ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், 5ம் தேதி தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. 6ம் தேதி நடராஜமூர்த்திக்கு அபிஷேகம், தீர்த்தவாரியும், 7ம் தேதி விடையாற்றி உற்சவம் ஆளும் பல்லாக்கும், 8ம் தேதி ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது. 9ம் தேதி பிராயச்சித்த அபிஷேகம், சண்டிகேஸ்வரர் வீதி உலாவுடன் நிறைவடைகிறது. நாள் தோறும் காலை 8.30 மணியிலிருந்து இரவு 7 மணி வரை ஸ்வாமி வீதி உலாவும், விழா தினங்களில் மாலை திருமுறைப் பாராயணமும், சொற்பொழிவும், இசை நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் சிவாஜி, முல்லை ஆகியோர் செய்து வருகின்றனர்.