பதிவு செய்த நாள்
17
ஆக
2019
04:08
சேலம்: ஆடி கடைசி வெள்ளியில், அம்மனுக்கு, விதவித அலங்காரம் செய்யப்பட்டது. ஆடி கடைசி வெள்ளியையொட்டி, சேலம், கோட்டை பெரிய மாரியம்மனுக்கு, நேற்று (ஆக., 16ல்) காலை, 6:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்து, நவரத்தின அங்கி சூடி, பக்தர் களுக்கு அருள்பாலித்தார். திரளான பெண்கள், குடும்பம் சகிதமாக, நீண்ட வரிசையில் நின்று, தரிசனம் செய்தனர்.
மாவிளக்கு தீபம், எலுமிச்சை தீபமேற்றி வழிபட்டனர். அம்மனுக்கு கூழ் ஊற்றி, நேர்த்திக் கடன் செலுத்தினர். மேலும், கோவில் வளாகத்தில் வைக்கப்பட்ட, தற்காலிக உண்டியல் ஏழு, நிரந்தர உண்டியல் ஐந்திலுள்ள காணிக்கை, வரும், 22ல், எண்ணப்படும்.
திருவிழாவால், தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கோவில் திருப்பணி, விரைவில் தொடங்கி, தொடர்ந்து நடக்கும் என, செயல் அலுவலர் ராஜாராம் தெரிவித்தார். அதேபோல், அஸ்தம் பட்டி மாரியம்மன், ரூபாய் நோட்டு அலங்காரம்; அணைமேடு அருகே, சாரதாம்பிகை தாயார், வளையல் அலங்காரத்தில் காட்சியளித்தனர். திரளான பக்தர்கள், அம்மனை வழிபட்டனர்.
திருவிளக்கு பூஜை: ஆத்தூர், கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவிலில், விஷ்ணு துர்க்கை அம்மன் சன்னதி முன், திருவிளக்கு பூஜை நடந்தது. இதில், உலக நன்மை, மழை பெய்ய வேண்டி, 200 சுமங்கலி பெண்கள், பூஜை செய்தனர். பின், பெண்களுக்கு, ஒரு கிராம் வெள்ளி காசு, வளையல், குங்குமம், மஞ்சள், ஜாக்கெட், பிரசாதம் வழங்கப்பட்டது. இதையொட்டி, துர்க்கையம்மன், வெள்ளி கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
அதேபோல், ஆத்தூர், கடைவீதியைச் சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட பெண்கள் பால் குடம் எடுத்துச்சென்று, பெரிய மாரியம்மன் கோவிலில், அபிஷேகம் செய்து வழிபட்டனர். ஏத்தாப்பூர் சமயபுரம் மாரியம்மன் கோவிலில், மூலவர் அம்மனுக்கு, கேரட், பீட்ரூட், பீன்ஸ் உள்பட, 50 கிலோ காய்கறியால், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதேபோல், பழமையான அம்மன் சிலைக்கும், 10 கிலோ தயிர் சாதத்தால், அலங்காரம் செய்து, பூஜை நடந்தது. இதுதவிர, ஆத்தூர், கோட்டை சம்போடை வன மதுரகாளியம்மன், கைலாசநாதர் கோவில் ஆதிபராசக்தி உள்பட மாவட்டத்திலுள்ள பல்வேறு கோவில்களில் நடந்த சிறப்பு பூஜையில், திரளானோர் தரிசனம் செய்தனர்.