பதிவு செய்த நாள்
19
ஆக
2019
03:08
சாயல்குடி : சாயல்குடி அருகே எஸ்.தரைக்குடியில் பழமையும், புரதான சிறப்பினையும் பெற்ற உமையநாயகி அம்மன் கோயில் உள்ளது.
இங்குள்ள மூலவர் உமையநாயகி அம்மன் மேற்கூரை இன்றி, வெயிலிலும், மழையிலும் திருமேனி படும் வண்ணம், பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் முழுவதும் மூலஸ்தான கருவறை மண்டபம் அடைக்கப்படுவது வழக்கமாக நிகழ்ந்து வருகிறது. நேற்று 18ல் ஆவணி மாதம் முதல் நாளன்று (ஞாயிறு) காலை6:00 மணி முதல் இரவு 7:00 மணிவரை முதல் பார்வை தரிசனம் நிகழ்ச்சி நடந்தது. உமையநாயகி அம்மனின் முதல் பார்வை தரிசனத்திற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனம் செய்தனர்.
அதிகாலை 5:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேக ஆராதனைகள் நடந்தது.பெண்கள் பொங்கலிட்டனர். அன்னதானம் நடந்தது. கோயில் நிர்வாகிகள் கூறியதாவது; ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பிருந்தே இந்நிகழ்வு கோயிலில் நிகழ்த்தப்படுகிறது. ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு விஷேச பூஜைகளும், கூழ் காய்ச்சி ஊற்றுதல், முளைப்பாரி உள்ளிட்ட விஷேசங்கள் நடக்கும். விதிவிலக்காக, இங்குள்ள மூலவருக்கு நடைசாத்தப்படுகிறது.
உமையநாயகி அம்மன் இங்கிருந்து ராமேஸ்வரத்தில் உள்ள தீர்த்தங்களில் புனித நீராடு வதற்காக செல்வதாக ஐதீகம் உள்ளது. அதுவரை ஆடி மாதம் முழுவதும் கோயில் கதவு பூட்டியே வைக்கப்பட்டிருக்கும். காலங்காலமாக நிலவும் நடைமுறையை கடைப்பிடித்து வருவதை பெருமையாக கருதுகிறோம், என்றனர். ஏற்பாடுகளை கோயில் விழாக்குழுவை சேர்ந்த பொன்னுப்பெருமாள், ராஜாராம், செந்துார் பாண்டியன், வக்கீல் அழகுராஜா செய்திருந்தனர்.