திருப்புவனம்:-சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடக்கும் 5ம் கட்ட அகழாய்வில் மூடியுடன் கூடிய பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அகழாய்வில் இதுவரை வட்டப்பானை, இரட்டைச்சுவர், உறைகிணறுகள், தண்ணீர் தொட்டி, பானை ஓடுகள் உள்ளிட்ட 700க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன. இதுவரை கிடைத்த பானைகள் அனைத்தும் சிதிலமடைந்தும் மூடியின்றியும் கிடைத்தன.
தற்போது தரை தளமும் அருகில் மேலும் ஒரு தளமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில், பானை முழுமையாகவும் மூடி மட்டும் சிதிலமடைந்த நிலையிலும் கிடைத்துள்ளன. இந்த தளம் சமையலறையாக பயன்படுத்தியிருக்க வாய்ப்புள்ளதாக கருதுகின்றனர்.
அகழாய்வை தொடர்ந்தால் முழு கட்டடம் வெளியே தெரிய வாய்ப்புள்ளது. மற்றொரு இடத்தில் புதிதாக தோண்டப்பட்ட குழியில் சிறிய அளவிலான இரண்டிற்கும் மேற்பட்ட பானைகள் ஒரே இடத்தில் கிடைத்துள்ளன. அகழாய்வு இம்மாத இறுதிக்குள் முடிவடைய உள்ள நிலையில் தொடர்ந்து பல்வேறு பானைகள் கிடைத்து வருவது ஆய்வாளர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.