நாடாளும் மன்னன் ஆணையிடுவது போல ’சத்தியம் பேசு’ ’தர்மத்தைப் பின்பற்று’ என நீதிகளை சொல்கிறது வேதம். இதற்கு ’பிரபு ஸம்மிதை’ என்று பெயர். ரிக், யஜுர், சாம வேதங்கள் இந்த வகையைச் சேர்ந்தவை. வேதம் கூறும் கருத்துக்களை எளிமைப்படுத்தி கதைகளின் மூலம் நீதி சொல்பவை புராணங்கள். இதற்கு ’ஸுஹ்ருத் ஸம்மிதை’ என பெயர். பதினெட்டு புராணங்களும் இதில் அடங்கும். இதை விட எளிமையாக, சர்க்கரையில் தோய்த்த மாத்திரை போல இருப்பவை இதிகாசங்கள். இதைப் படிப்பவர்கள் காவியத்தின் வர்ணனையில் ஈடுபட்டு தன்னை மறந்து மகிழ்வர். இதனை ’காந்தா ஸம்மிதை’ என்பர். அதாவது ’மனைவியின் வாக்கு போன்றது’. இனிப்பு மருந்து நாக்கில் ருசித்தாலும், வயிற்றுக்குள் சென்றதும், நோயைக் குணப்படுத்துவது போல சிந்தனையைத் தூண்டி நம்மை வாழச் செய்கின்றன இதிகாசங்கள். ராமாயணம், மகாபாரதம் சிறப்பானவை.