ராஜராஜ சோழனை ’மன்னர் மன்னன்’ அதாவது ராஜாவுக்கெல்லாம் ராஜா என கொண்டாடுகிறோம். அவர் தன்னை சிவ தொண்டர் என்னும் விதத்தில் ’சிவபாத சேசகரன்’ என பெயர் சூட்டிக் கொண்டார். ’சிவனின் திருவடியைத் தலையில் தாங்குபவர்’ என்பது இதன் பொருள். ஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் பாடிய தேவாரப் பாடல்கள் ஓலைச் சுவடியாக சிதம்பரம் நடராஜர் கோயிலில் செல்லரித்துக் கிடந்தன. அந்த நம்பியாண்டார் நம்பி மூலம் பன்னிரண்டு திருமுறைகளாக் தொகுத்தவர் ராஜராஜன். இதனால் ’திருமுறை கண்ட சோழன்’ என பெயர் பெற்றார். சிதம்பரம் நடராஜருக்கு தஞ்சாவூர் பெரியகோவிலில் ’ஆடல்வல்லான்’ சன்னதி அமைத்து வழிபட்டார்.