பதிவு செய்த நாள்
06
ஏப்
2012
10:04
பழநி:பழநி பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. மார்ச் 30 ல், கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. நேற்று முன்தினம் இரவு திருக்கல்யாணம், வெள்ளித் தேரோட்டம் நடந்தது. நேற்று முத்துக்குமார சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் அதிகாலை 5 மணிக்கு தீர்த்தவாரிக்கு எழுந்தருளினார். பிற்பகல் 12 மணிக்கு, சுவாமி திருத்தேரில் ஏற்றம் நடந்தது. மாலை 4.40 க்கு வடக்கு கிரிவீதியில் இருந்து தேர் புறப்பட்டது. பக்தர்கள் பழம், நவதானியம், நாணயங்களை தேர் மீது வீசினர். விடலைத் தேங்காய் உடைத்தனர். மாலை 6.40 க்கு தேர் நிலையை அடைந்தது.பக்தர்கள் கொடுமுடி தீர்த்தக்காவடி, ஆறுமுக மயில் பீலி, சர்க்கரை, பால், கரும்பு, காவடிகளுடன், கரகாட்டம் எடுத்தனர். ஏப்., 8 இரவு 7 மணிக்கு தங்கக் குதிரை வாகனத்தில் சன்னதி, கிரிவீதிகளில் சுவாமி வலம் வருவார். பின், கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கும். இரவு 11 மணிக்கு சுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் ஊர்க்கோயிலில் எழுந்தருள்வார். இத்துடன் விழா நிறைவு பெறும். கோயில் இணை கமிஷனர் பாஸ்கரன், துணை கமிஷனர் மங்கையர்க்கரசி ஏற்பாடுகளை செய்தனர்.