சபரிமலை: சபரிமலையில் பத்து நாட்கள் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழா பம்பையில் ஆராட்டுடன் நிறைவு பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா கடந்த மாதம் 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தந்திரி கண்டரரு மகேஸ்வரரு கொடியேற்றினார். தொடர்ந்து தினமும் மதியம் உற்சவபலியும், இரவில் சுவாமி யானை மீது எழுந்தருளும் ஸ்ரீபூதபலி நிகழ்ச்சியும் நடைபெற்றது. நான்காம் தேதி ஒன்பதாம் நாள் விழாவில் இரவில் சுவாமி சரங்குத்தியில் பள்ளி வேட்டைக்காக எழுந்தருளினார். பத்தாம் நாள் விழாவான நேற்று காலை உஷபூஜைக்கு பின்னர் சுவாமி ஆராட்டுக்காக பம்பைக்கு எழுந்தருளினார். காலை பத்து மணிக்கு யானை மீது புறப்பட்ட இந்த பவனி பகல் 12 மணிக்கு பம்பை வந்ததது. இங்கு தேவசம்போர்டு சார்பில் வரவேற்பு கொடுக்கப் பட்ட பின்னர் பம்பையில் ஆராட்டுக்குளத்துக்கு விக்ரகம் கொண்டு வரப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஸ்வரரு, மேல்சாந்தி பாலமுரளி நம்பூதிரி ஆகியோர் பால், பன்னீர், தேன், களபம், சந்தனம், குங்குமம், மஞ்சள், பஞ்சாமிர்தம் போன்றவற்றால் அபிஷேகம் செய்த பின்னர் மேல்சாந்தி ஆராட்டு விக்ரகத்துடன் மூன்று முறை கோயில் குளத்தில் மூழ்கி எழுந்த போது பக்தர்கள் சரணகோஷம் முழக்கினர். பின்னர் பம்பை கணபதி கோயில் முன்புறம் பக்தர்கள் தரிசனத்துக்காக விக்ரகம் வைக்கப் பட்டிருந்தது. தொடர்ந்து மாலை மூன்று மணிக்கு ஆராட்டு பவனி சன்னிதானத்துக்கு புறப்பட்டது. சன்னிதானம் வந்ததும் திருக்கொடி இறக்கப்பட்டு பூஜைகள் முடித்து நடை அடைக்கப்பட்டது.