பதிவு செய்த நாள்
09
அக்
2019
12:10
விருத்தாசலம்: விஜயதசமியை முன்னிட்டு, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், தல விருட்சமான வன்னி மரத்திற்கு சிறப்பு வழிபாடு நடந்தது. வனவாசம் சென்ற பஞ்சபாண்டவர்கள், விஜய தசமி நாளன்று, அவர்களது ஆயுதங்களை வன்னி மரத்தில் வைத்து வழிபட்டு வந்ததாக வரலாறு உண்டு. அதற்கேற்ப, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தல விருட்சமாக வன்னி மரம் இருப்பதால், இங்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டால் சலக பாவங்களும் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.
அதன்படி, நேற்று விஜய தசமியை முன்னிட்டு, வன்னி மரத்திற்கு சிவாச்சாரியார்கள் மாலை அணிவித்து, சிறப்பு பூஜை செய்தனர். பக்தர்கள் அர்ச்சனை செய்து, 21 முறை வன்னி மரத்தை சுற்றி வந்து வழிபட்டனர். முன்னதாக, ஆழத்து விநாயகர், விருத்தகிரீஸ்வரர், அம்பாள், சண்முக சுப்ரமணியர்,சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைசெய்யப்பட்டது. சுவாமி சன்னதியில் புனிதநீர் கலசங்கள் வைத்து, உலக நன்மை வேண்டி, குழந்தைகள் கல்வியறிவு பெற சிறப்பு வேள்வி பூஜை நடந்தது.