பதிவு செய்த நாள்
13
அக்
2019
04:10
பழநி: புரட்டாசி கடைசி சனியை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. பழநி மேற்குரதவீதி லட்சுமி நாராயணப்பெருமாள் கோயிலில் காலையில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மலர் அலங்காரத்தில் கருடவாகனத்தில் காட்சியளித்தார். ஆஞ்சநேயர் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதியில் சிறப்பு அலங்காரம் செய்தனர். பக்தர்களுக்கு தீர்த்தம், துளசி, கற்கண்டு, பொரி, அவில் பிரசாதமாக வழங்கப்பட்டது. காந்தி மார்க்கெட் வேணுகோபால சுவாமிகோயில் அறுசுவை உணவுடன் அன்னதனம் நடந்தது.
பாலசமுத்திரம் வீரஆஞ்சநேயர்கோயிலில் காய்கறிகளால் அலங்காரம் செய்தனர். அகோபில வரதராஜப்பெருமாள், தானாக வளர்ந்த கண்ணாடி பெருமாள் கோயில், ராமநாதநகர் லட்சுமி நரசிம்மப்பெருமாள் கோயில், பாலாறு-பொருந்தலாறு வீர ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் சுவாமிக்கு ராமர் திருக்கோல அலங்காரம் செய்யப்பட்டு திரவிய அபிஷேகங்கள் நடந்தன. வடமதுரை மங்கம்மாள்கேணி பக்த ஆஞ்சநேயர் கோயிலில் புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. எரியோடு சுந்தரவரத பெருமாள் கோயிலிலும் காலை முதல் பக்தர்கள் அதிகளவில் தரிசனம் செய்தனர்.
எரியோடு திருவருள் பேரவை தொண்டர்கள் 4வது சனி வார ஆன்மிக ஸ்தல யாத்திரையாக தாடிகொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலுக்கு சென்றனர். பஜனை, பக்தி இன்னிசையும், பக்தி, கூட்டு வழிபாடு தலைப்புகளில் பக்தி சொற்பொழிவும், நாமாவளிப் பாராயணம், தியானம் அபிஷேக, ஆராதனை நடந்தன. பேரவை தலைவர் என்.ராமகிருஷ்ணன், செயலாளர் எம்.பழனிச்சாமி, ஓய்வு துணை கலெக்டர் மாரிமுத்து உள்பட பலர் பங்கேற்றனர். ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே காளாஞ்சிபட்டி ஸ்ரீரங்கநாதர் கோயிலில் புரட்டாசி கடைசி சனியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. நேற்று முன்தினம் உற்ஸவருடன் சப்பர ஊர்வலம் நடந்தது. ரங்கநாதர் மலையை சுற்றி அமைந்துள்ள காளாஞ்சிபட்டி, கேதையுறும்பு, சட்டையப்பனுார், மூலச்சத்திரம், லெக்கையன்கோட்டை, சாலைப்புதுார், ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட், அத்திக்கோம்பை வழியாக ஊர்வலம் சென்றது. சிறப்பு வழிபாட்டில் ரங்கநாதருக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு ரங்கநாதரை வழிபட்டனர்.