திருப்புவனம்: திருப்புவனம் வைகை ஆற்றங்கரை திதி பொட்டலில் அடிப்படை வசதி இன்றி பக்தர்கள் வெயிலிலும் மழையிலும் தவித்து வருகின்றனர்.
புஷ்பவனத்து காசி எனப்படும் திருப்புவனம் நகர் வைகை ஆற்றங்கரையில் மறைந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்தால் மிகவும் புண்ணியம் என இந்துக்கள் கருதுகின்றனர். திருப்புவனம் வைகை ஆற்றில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க தினமும் பலர் வந்து செல்கின்றனர். நுாறு ஆண்டுகளுக்கும் மேலாக வணங்கப்பட்டு வரும் திதி பொட்டலில் எந்த வித அடிப்படை வசதியும் இல்லை. வெயிலிலும் மழையிலும் பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். வைகை ஆற்றங்கரையில் உள்ள திதி பொட்டலில் குளிக்கவோ தாகம் தீர்க்க குடிநீர் வசதியோ கிடையாது. வைகை ஆற்றில் இறங்கும் படித்துறை சேதமடைந்து பல ஆண்டுகளாகியும் இன்று வரை சரி செய்யப்படவில்லை. மக்கள் அமர இடவசதி இல்லை. அருகில் உள்ள கடை வாசலில் அமர வேண்டியுள்ளது. மாவட்ட நிர்வாகம் திதி பொட்டலில் போதிய வசதி செய்துதர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.