சென்னிமலை: சென்னிமலை, முருகன் கோவில் உண்டியல் நேற்று காலை திறக்கப்பட்டது இதில், ரூ.41.50 லட்சத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
சென்னிமலை, முருகன் கோவில் உண்டியலில், 160 நாட்களுக்கு பின், நேற்று காலை பக்தர்கள் காணிக்கை செலுத்தி இருந்ததை திறந்து எண்ணினர். அதில் நிரந்தர உண்டியல் எட்டு, திருப்பணி உண்டியல் ஒன்று என ஒன்பது உண்டியல் திறந்தனர். நிரந்தர உண்டியலில், 40 லட்சத்து, 62 ஆயிரத்து, 876 ரூபாய், தங்கம், 243 கிராம், வெள்ளி இரண்டு கிலோ, 280 கிராம் இருந்தது. திருப்பணி உண்டியலில், 93 ஆயிரத்து, 982 ரூபாய் இருந்தது. மொத்தமாக, 41 லட்சத்து, 56 ஆயிரத்து, 858 ரூபாய் இருந்தது. உண்டியல் திறப்பில் பவானி சங்கமேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் சபர்மதி, தக்கார் நந்தகுமார், ஆய்வாளர் ஆதிரை, செயல் அலுவலர் அருள்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள், சென்னிமலை கைத்தறி கூட்டுறவு சங்க பணியாளர்கள், எம்.பி.என்.எம்.ஜெ., கல்லூரி மாணவர்கள் பணம் எண்ணிக்கையில் உதவி புரிந்தனர்.