பதிவு செய்த நாள்
11
ஏப்
2012
11:04
அம்பாசமுத்திரம் : கல்லிடைக்குறிச்சி அகஸ்தீஸ்வரர் கோயில் பங்குனி 7ம் திருநாளான நேற்று பக்தர்கள் கொளுத்தும் வெயிலில் "தெட்சிணாமூர்த்தி, பொதிகாசலம் பக்தி கோஷம் முழங்க அங்கப்பிரதட்சணம் செய்தனர். கல்லிடைக்குறிச்சி உலோபாமுத்திரை அம்பாள் சமேத அகஸ்தீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய திருநாளான 7ம் திருநாள் நேற்று அதிகாலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமியும், அம்பாளும் பச்சை சாத்தி சப்பரத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து தாமிரபரணி ஆற்றின் தளச்சேரி பகுதியிலிருந்து பக்தர்கள் விரதமிருந்து, வேண்டுதலை நிறைவேற்றும் முகமாக "தெட்சிணாமூர்த்தி, பொதிகாசலம் பக்தி கோஷம் முழங்க தீர்த்தகுடம், பால்குடம் எடுத்தனர். கொளுத்தும் வெயிலில் கும்பிடுநமஸ்காரம், அங்கப்பிரதட்சணம் செய்தனர். மாலையில் அகஸ்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகளை தொடர்ந்து அன்னம் சொரிதல் நடந்தது. இரவில் சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளினர். குமாரகோயில் தெற்கு ரத வீதியில் அகஸ்தியருக்கு, முருகப்பெருமான் உபதேசம் செய்யும் வைபவம் நடந்தது. திரளான பக்தர்கள் இவ்வைபவத்தை பயபக்தியுடன் கண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கல்லிடைக்குறிச்சி டவுன் பஞ்., தலைவர் இசக்கிபாண்டியன், அறங்காவலர் குழுவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.