பதிவு செய்த நாள்
11
ஏப்
2012
11:04
தூத்துக்குடி : தூத்துக்குடி சிவன் கோயில் சித்திரை தேரோட்ட திருவிழாவை இந்த ஆண்டு மிக விமரிசையாக நடத்த 15 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. தேருக்கு முன்பாக பல தரப்பட்ட மேளங்கள், யானை, குதிரை என்று அணிவகுத்து செல்லவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற சங்கரராமேஸ்வரர் (சிவன் கோயில்) கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பத்து நாள் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இருப்பினும் கடந்த ஆண்டில் இருந்து இந்த திருவிழாவிற்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து விழா நிகழ்ச்சிகள் பிரமாண்டமான முறையில் நடத்தப்பட்டு வருகிறது. சித்திரை தேரோட்ட திருவிழா சம்பந்தமாக முன்னேற்பாடு கூட்டம் சிவன் கோயில் வளாகத்தில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் தேரோட்ட பவனிவிழா நடத்துவதற்கு சந்திரசேகர் தலைமையில் 15 பேர் கொண்ட குழு தேர்வு செய்யப்பட்டது. கூட்டத்தில் டி.ஏ தெய்வநாயகம், அபிராமி சந்திரசேகர், உழவாரப்பணிக்குழு தலைவர் முனியசாமி, ராஜ்பட்டர், சிவன் கோயில் தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர், முன்னாள் பிரதோஷ கமிட்டி தலைவர் பி.எஸ்.கே ஆறுமுகம், மாநகராட்சி கவுன்சிலர் வீரபாகு, முன்னாள் கவுன்சிலர் கந்தசாமி, முன்னாள் டிரஸ்டி ஆறுமுகம், சிவன் கோயில் கணக்கர் சண்முகசுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சித்திரை திருவிழாவை வரும் 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி மே 4ம் தேதி வரை பத்து நாட்கள் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. கொடியேற்றத்தில் இருந்து பத்து நாட்களும் ஒவ்வொரு நாளும் சங்கரராமேஸ்வரர், பாகம்பிரியாள் அம்மன் இருவரும் பல்வேறு வாகனங்களில் ரதவீதி உலா வருதல், சுவாமி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடக்கிறது. திருவிழாவை ஒட்டி கோயில் கலையரங்கில் ஒவ்வொரு நாளும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆன்மிக சொற்பொழிவு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடக்க உள்ளதாக கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன. சித்திரை திருவிழாவின் மிக முக்கிய அம்சமான தேரோட்டம் மே மாதம் 4ம் தேதி நடக்கிறது. கடந்த ஆண்டை விட தேரோட்டத்தை மிக சிறப்பாக நடத்தும் வகையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தேருக்கு முன்பாக யானை, குதிரை அணி வகுப்பு, களியல் ஆட்டம், அதிக எண்ணிக்கை கொண்ட கேரள செண்டை மேளம், நையாண்டிமேளம், வாடிப்பட்டி மேளம், புதுச்சேரி, விழுப்புரம், விருத்தாச்சலம், கரூர் ஆகிய இடங்களில் இருந்து 200 சிவ தொண்டர்கள் சிவ பெருமானுக்கு உகந்த மேளம் அடித்து வருதல், மகளிர் கோலாட்டம், தேவார இன்னிசை, சிலம்பாட்டம் உள்ளிட்டவை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர், கோயில் நிர்வாகத்தினர் இணைந்து மேற்கொள்ள உள்ளதாக சிவன் கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன.