பதிவு செய்த நாள்
05
நவ
2019
10:11
திருநெல்வேலி: தாமிரபரணி மகா புஷ்கர விழாவின் நிறைவாக தாமிரபரணி அன்னையின் உருவம் ஆற்றில் விஜர்சனம் மேற்கொள்ளப்பட்டது. தாமிரபரணி மகாபுஷ்கர விழா, கடந்த ஆண்டு அக்.11 முதல் 23 வரையிலும் நடந்தது. தாமிரபரணி துவங்கும் நெல்லை மாவட்டம், பாபநாசம் முதல், கடலில் கலக்கும், துாத்துக்குடி மாவட்டம், புன்னக்காயல் வரை, பல்வேறு படித்துறைகள், கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. புஷ்கர விழாவின் ஒரு ஆண்டின் நிறைவு விழா, நவ., முதல் தேதியன்று துவங்கியது.
காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர், திருநெல்வேலி மாவட்டம் திருப்புடைமருதுாரில் தங்கியிருந்து விழாக்களில் பங்கேற்றார். தாமிரபரணி ஆற்றில் குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில், உள்ளிட்ட பல்வேறு தீர்த்தங்களிலும் ஆரத்தி நடந்தது. நான்காவது நாளான நேற்று மகாபுஷ்கரத்தின் நிறைவு விழா திருநெல்வேலி ஜங்ஷன் தைப்பூச மண்டபத்தில் நடந்தது. விழாவில், வேளாக்குறிச்சி ஆதினம், செங்கோல் ஆதினம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நேற்று இரவு தாமிரபரணிக்கு ஆரத்தி நடந்தது. தொடர்ந்து ஒரு ஆண்டாக வழிபாடு நடத்தப்பட்ட தாமிரபரணி அன்னை சிலை தாமிரபரணி ஆற்றில் விஜர்சனம் செய்யப்பட்டது.