காட்டுப் பகுதியில் முனிவர் ஒருவர் தியானம் செய்து கொண்டிருந்தார். அவரது ஆஸ்ரமத்தைச் சேர்ந்த பசுவும், கன்றும் அருகில் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது கன்றின் முதுகில் அம்பு துளைக்கவே துடிதுடித்து இறந்தது. கன்றின் மரண ஓலம் கேட்ட முனிவருக்கு தியானம் கலைந்தது. வாயில்லா ஜீவனான கன்றின் மீது அம்பு தொடுத்தது யார் எனத் தேடினார். சற்று துாரத்தில் வில்லுடன் வீரன் ஒருவன் நிற்பதைக் கண்டார். அவனே காரணம் என்பதை அறிந்து, ‘‘கன்றைக் கொன்ற பாவி! உனக்கு முடிவு நேரும் காலத்தில் போர்க்களத்தில் தேர்ச் சக்கரங்கள் மண்ணுக்குள் புதைந்து போகும்’’ என்று சாபமிட்டார் . அந்த வீரன் வேறு யாருமல்ல. சூரிய புத்திரனான கர்ணன் தான். வருந்திய அவன் ‘ எல்லாம் விதியின் விளையாட்டு’ என மனதை தேற்றிக் கொண்டான். என்றாலும் முனிவரின் சாபப்படியே போர்க்களத்தில் கர்ணனின் முடிவும் அமைந்தது.