பதிவு செய்த நாள்
15
நவ
2020
07:11
மிருகசீரிடம் 3, 4ம் பாதம்
ராசிநாதன் புதனின் சஞ்சாரம் சிந்தனையில் மாற்றத்தை தோற்றுவிக்கும். எதிர்கால முன்னேற்றம் பற்றிய எண்ணங்கள் மனதை ஆக்கிரமிக்கும். சுற்றியுள்ளோரிடமிருந்து உங்களுக்குரிய கவுரவத்தினை எதிர்பார்ப்பீர்கள். குடும்பத்தில் சலசலப்பும், கலகலப்பும் இணைந்திருக்கும். எதிர்த்து பேசுவோரிடம் விவாதம் செய்யாமல் ஒதுங்கிப் போவீர்கள். பணவரவு சிறப்பாக உள்ளதால் சேமிப்பு உயரும். புதிய சொத்து சேரும். தங்கம், வெள்ளி பொருட்கள் வாங்க கால நேரம் கூடி வரும். குடும்பத்தோடு உல்லாசப் பயணம் செல்ல வாய்ப்புண்டு. உடன்பிறந்தோருடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும்.வாகன பயணத்தில் கவனம் தேவை. தொழில்முறை ஓட்டுநர்களைத் தவிர மற்றவர்கள் இரவு நேரத்தில் வாகனங்களை இயக்குவதை தவிர்க்க வேண்டியது அவசியம். பிள்ளைகளின் செயல்களைக் கண்டு பெருமிதம் கொள்வீர்கள். கண் சம்பந்தப்பட்ட கோளாறுகளுக்கு உடனுக்குடன் மருத்துவரை அணுகுவது நல்லது. வாழ்க்கைத்துணையின் ஆலோசனைகள் உங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும். குடும்பப் பெரியவர்களுக்கு பணிவிடை செய்வதில் மன நிறைவு காண்பீர்கள். பணிக்குச் செல்வோர் அலுவல் கோப்புகளைக் கையாளும்போது அதிக கவனம் கொள்ள வேண்டியது அவசியம். சுயதொழில் செய்வோர் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் மொழிப்பாடத்தில் நல்ல முன்னேற்றம் காண்பர். நற்பலனைத் தரும் மாதம் இது.
பரிகாரம் : கருப்பண்ண சுவாமியை வணங்கி வாருங்கள்.
சந்திராஷ்டமம் : நவ. 20
திருவாதிரை
ராசிநாதன் புதனின் சாதகதத்தால் முன்யோசனையுடன் செயல்படுவீர்கள். நட்சத்திர அதிபதி ராகுவின் திருப்தியற்ற நிலை அலைச்சல் தரும். நவம்பர் மாதம் சற்று சமாளிக்க இயலும் என்றாலும் டிசம்பர் மாத கிரக நிலை சிரமத்திற்கு ஆளாக்கும். ஆறாம் இடத்தின் வலிமை வீண் பிரச்னையைத் தோற்றுவிக்கும். சம்பந்தமில்லாத விவகாரத்தில் வீண்பழி சுமப்பீர்கள். உங்கள் பெயரைப் பயன்படுத்தி சிலர் ஆதாயம் பெற முயற்சிப்பர். எந்த விஷயத்தையும் எச்சரிக்கையுடன் அணுகுவது நல்லது. குடும்பத்தினர் ஆளுக்கொரு திசையில் பயணிப்பதாக உணர்வீர்கள். அவர்களை ஒருங்கிணைப்பதில் உங்களின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறும். பண விஷயத்தில் கவனம் தேவை. எலக்ட்ரானிக் சாதனங்கள் புதிதாக சேரும். அண்டை வீட்டாருடன் கருத்து வேறுபாடு வரலாம். அடுத்தவருக்கு உதவி செய்து சங்கடத்திற்கு ஆளாவீர்கள். பயணத்தின் போது பொருளிழப்பு வரலாம். உறவினரால் குடும்பத்தில் கலகம் தோன்றும். பிள்ளைகளின் செயல்பாடு எதிர்பார்ப்பை நிறைவேற்றும். வயிற்று வலியால் சிரமப்பட வாய்ப்புண்டு. தம்பதியருக்குள் கருத்து வேறுபாடு தோன்றி மறையும். தத்துவ சிந்தனை மனதில் அடிக்கடி உருவாகும். வயதானவருக்கு உதவி செய்து நிம்மதியடைவீர்கள். அலுவலகத்தில் பேச்சுத்திறமையால் வெற்றி கிடைக்கும். தொழிலில் எதிர்பார்க்கும் லாபத்தை அடைய காத்திருக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் போட்டிகளில் முதலிடம் வகிப்பர். எச்சரிக்கையோடு செயல்பட வேண்டிய மாதம் இது.
பரிகாரம் : வாராகி அம்மனை வணங்கி வாருங்கள்.
சந்திராஷ்டமம் : நவ. 20, 21
புனர்பூசம் 1, 2, 3ம் பாதம் :
ஜென்ம நட்சத்திர அதிபதி குருவின் நீச பலமும் அஷ்டம ஸ்தான சஞ்சாரமும் தடைகளை உருவாக்கும். ஆறாம் இடத்தின் வலிமையும் பிரச்னையை ஏற்படுத்தும். எடுத்த காரியத்தை முடிக்க இருமடங்கு பணியாற்ற வேண்டியிருக்கும். உங்கள் நடவடிக்கைகளில் குற்றம் காண சிலர் காத்திருப்பர். நீங்கள் நம்பிய நபரே எதிராக செயல்படுவர். குடும்பத்தில் சில சலசலப்பிற்கு பின், கலகலப்பான நிலை உருவாகும். எதிர்பாராத இடத்திலிருந்து வருமானம் கிடைக்கும். அதே நேரத்தில் நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த பணம் வராமல் இழுபறி தொடரும். முக்கிய பணிகளுக்கு அடுத்தவர்களை நம்பாது நீங்களே களத்தில் இறங்க வேண்டியிருக்கும். நீங்கள் நல்லது சொல்லப் போக மற்றவர் பார்வையில் தவறான கருத்தை உருவாக்கும். பிள்ளைகளின் செயல்பாடு எதிர்பார்ப்பை நிறைவேற்றும். இந்த மாதத்தில் பிறருக்கு செய்யும் கடனுதவி திரும்ப கிடைக்காது. தர்மம் என நினைத்து உதவி செய்யலாம். அஜீரணக் கோளாறால் சிரமப்படுவீர்கள். வீண் வாதத்தின் காரணமாக தம்பதியருக்குள் கருத்து வேறுபாடு தோன்றி மறையும். பணியாளர்கள் கீழ்நிலை பணியாட்களின் துணையோடு மேன்மை அடைவர். சுயதொழில் செய்வோர் தாங்கள் அடையும் லாபத்தை மீண்டும் தொழிலில் முதலீடு செய்ய வேண்டிய சூழல் உருவாகும். மாணவர்கள் கூட்டுப்பயிற்சியின் மூலம் தெளிவு பெறுவர். போராடி வெற்றி காணும் மாதம் இது.
பரிகாரம் : பிரதோஷ நாளில் அன்னதானம் செய்யுங்கள்.
சந்திராஷ்டமம் : நவ. 21