திருவாதிரை தினத்தன்று விரதம் இருந்து வழிபட்டால் வாழ்வில் பல அற்புதங்கள் நடக்கும். முன்வினைப் பயன்கள் அனைத்தும் விலகி வாழ்வு வெளிச்சமாகும். அத்தகைய விரத வழிபாட்டை எப்படி மேற்கொள்ளுவது என்று விவரமாகப் பார்க்கலாம்.
ஆருத்ரா தினத்தன்று பிரம்ம முஹூர்த்தம் என்று சொல்லப்படும் அதிகாலையில் எழுந்து நீராடி நீறு பூச வேண்டும். பஞ்சாட்சர மந்திரத்தை நெஞ்சில் பதித்து ஓதவேண்டும். வீட்டில் நெய் விளக்கேற்றி கடவுள் படங்களுக்கு பூ வைத்து, தெரிந்து சிவ துதிகளைச் சொல்ல வேண்டும். களியும், காய்கறிக்குழம்பும் செய்து இறைவனுக்குப் படைக்கவேண்டும். பக்கத்தில் இருக்கும் சிவாலயத்துக்குச் சென்று அங்கு நடைபெறும் அபிஷேக, ஆராதனைகளில் கலந்து கொண்டு ஈசனை மனதார வணங்க வேண்டும். பிறகு வீட்டுக்கு வந்து நிவேதனம் செய்து களியை உண்ணலாம். அன்று முழுவதும் வேறு எதுவும் அருந்தாமல் விரதம் காக்கவேண்டும். எப்போதும் ஈசனையே மனதில் நினைத்தபடி தியானிக்க வேண்டும். மறுநாள் காலை நீராடி ஈசனை வணங்கி இயன்ற அளவு ஏழைகளுக்கு உணவளித்துப் பின்னர் வழக்கமான உணவு வகைகளை உண்ணலாம். அதிலும் அசைவ உணவுகளை விலக்கிவிட வேண்டும்.
விரத மகிமை: இந்த விரதத்தை அனுஷ்டித்ததால்தான் வியாக்கிரபாத முனிவருக்கு பாற்கடலையே பரிசாகப் பெற்று உபமன்யு என்ற மகன் கிடைத்தான். கார்க்கோடகன் என்ற பாம்பு இந்த விரதத்தை அனுஷ்டித்ததால் வானுலகம் செல்லும் பேறு பெற்றது. அந்தணர் ஒருவர் இந்த விரதத்தை முறைப்படி அனுசரித்ததால் மனித உடலுடனே வானுலகம் சென்று மீண்டும் திரும்ப வரும் பேறு பெற்றார். ஆருத்ரா தரிசனம் அன்று விரதமிருந்து ஆடல்வல்லானை வணங்கி ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்றையும் அறுத்து இவ்வையகத்தில் வாழ்வாங்கு வாழ்வோம்.