திருப்பதியில் வைகுண்ட துவாதசி; சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி.. பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜன 2025 10:01
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட துவாதசியையொட்டி இன்று காலை திருமலையில் தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஆயிரகணக்கான பக்தர்கள் புனித நீராடினர். வைகுண்ட ஏகாதசி நேற்று அதிகாலை 1.30 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை 60 ஆயிரத்து 94 பக்தர்கள் ஏழுமலையானைத் தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கையாக ரூ.2.45 கோடி செலுத்தினர். 14 ஆயிரத்து 906 பேர் மொட்டையடித்து தலைமுடி காணிக்கை செலுத்தினர்.
திருப்பதியில் வழங்கப்பட்டு வரும் இலவச சர்வ தரிசன டோக்கன்கள் 12ம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளதால் 13 ம் தேதி முதல் 19 ம் தேதி வரையிலான சொர்க்கவாசல் வழியாக செல்லும் தரிசனத்திற்கான டோக்கன்கள் அந்தந்த நாட்களுக்கு உண்டான டோக்கன் அந்த நாள் காலை 2 மணி அளவில் திருப்பதி பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள சீனிவாசம், ரயில்வே ஸ்டேஷன் எதிரே உள்ள விஷ்ணுநிவாசம், அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய இடங்களில் வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட ரூ.300 டிக்கெட் ஆன்லைனில் பெற்ற பக்தர்கள் திருப்பதியில் வழங்கப்பட்ட சர்வ தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள் மட்டும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.