பதிவு செய்த நாள்
11
ஜன
2025
10:01
புதுச்சேரி; புதுச்சேரி பெருமாள் கோவில்களில் நடந்த சொர்க்க வாசல் திறப்பு விழா வெகு விமர்சையாக நடந்தது.
மார்கழி உற்சவத்தில், பெருமாள் கோவில்களில் நடக்கும் முக்கிய விழா வைகுண்ட ஏகாதசி. ஆண்டுதோறும் மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி திதியன்று, ‘சொர்க்காவாசல்’ என்று அழைக்கப்படும், பரமபத வாசல் திறக்கப்படும். இந்த சொர்க்கவாசல் வழியே, பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இந்தாண்டிற்கான வைகுண்ட ஏகாதசி விழா, புதுச்சேரியில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலையில் காந்தி வீதி, வரதராஜ பெருமாள் கோவிலில் சுவாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி உற்சவ மூர்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திருப்பாவை பாடல்கள் பாடப்பட்டு, விசேஷ பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, காலை 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வரதராஜ பெருமாள், பரமபத வாசல் வழியாக கொண்டு வரப்பட்டார். அப்போது கூடியிருந்த பக்தர்கள் ‘கோவிந்தா.. கோவிந்தா..’ என பக்தி பரவசத்துடன் கோஷம் எழுப்பினர்.
அங்கு பக்தர்களுக்கு அருள்பாலித்த பெருமாள், கோவிலின் கிழக்கு வாசல் வழியாக மீண்டும் கோவிலுக்குள் சென்று உற்சவ மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவில், அமைச்சர் லட்சுமி நாராயணன் உள்ளிட்ட ஏராளமானோர் தரிசனம் செய்தனர். அதேபோல முத்தியால்பேட்டை – தென்கலை சீனிவாச பெருமாள் மற்றும் லட்சுமி ஹயக்ரீவர்; எம்.எஸ் அக்ரஹாரம் – வீர ஆஞ்சநேயர் கோதண்டராமர் ; வில்லியனுார் – தென்கலை வரதராஜ பெருமாள், கொம்பாக்கம் – வெங்கடாஜலபதி பெருமாள், வடுக்குப்பம் – வெங்கடேச பெருமாள் கோவில்; தேங்காய்த்திட்டு – வரசித்தி விநாயகர் கோவிலில் அமைந்துள்ள பாலாஜி வெங்கடேச பெருமாள் உள்ளிட்ட கோவில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு விழா, வெகு விமர்சையாக நடந்தது.