பதிவு செய்த நாள்
27
டிச
2024
03:12
எளிமையாக வாழ்ந்து காட்டியும், நியாய, தர்மத்தை எடுத்துச் சொல்லியும் மக்களை தன்பால் ஈர்த்த துறவி காஞ்சி மகாபெரியவர். எதிர்பார்ப்பு இல்லாத பக்தி, மனத்துாய்மை, எளிமை, ஒழுக்கம், நேர்மை இவையே ஆன்மிக வாழ்வின் அடிப்படை என்பது இவரது கோட்பாடு. எளிய மனிதரான இவர் பெரும்பாலும் தென்னங்கீற்று வேய்ந்த குடிசையில் தங்கினார். நாடு முழுவதும் பாதயாத்திரை சென்று மக்களை சந்தித்தார். சமகாலத்தில் வாழ்ந்த துறவியர் மீது மதிப்பு கொண்டிருந்தார் என்பதற்கு பல சம்பவம் உண்டு. பால்பிரண்டன் என்னும் வெளிநாட்டவர், தனக்கு உபதேசம் அளிக்கும்படி பெரியவரை வேண்டினார். வெளிநாட்டவருக்கு உபதேசிக்க மடத்துவிதிகள் அனுமதிக்காது என்பதால் திருவண்ணாமலை ரமணரிடம் செல்லும்படி வழிகாட்டினார்.
யோகி ராம்சுரத் குமாரின் ராமபக்தி பற்றி அறிந்த மகாபெரியவர், அவரை சந்திக்க அழைத்தார். மவுன மொழியில் ஒருவருக்கொருவர் பேசிய பின் யோகி ராம்சுரத்குமாரை சந்திக்க திருவண்ணாமலைக்கு சென்றார். இது குறித்து யோகி,‘இருபத்து நான்கு மணிநேரமும் ராம நாமம் ஒலிக்கும் கோவிந்தாபுரத்திற்கு செல்லலாமே என மகாபெரியவர் கேட்டதாகவும், தற்போது நான் இருக்கும் திருவண்ணாமலையை விட்டுச் செல்ல விரும்பவில்லை என்று மறுக்கவே, நல்லது....திருவண்ணாமலையிலேயே இருந்து விடுங்கள்’ என்று கூறியதாக தெரிவித்தார். கிறிஸ்தவர், முஸ்லிம் மதத்தினரும் பெரியவரை மதித்தனர். மடத்திற்கு அருகிலுள்ள மசூதியில் ஒலிபெருக்கியின் ஒலியைக் குறைக்கச் சொல்லலாமா என சீடர்கள் கேட்ட போது, ‘ இறைவனை நினைவுபடுத்துவதால், அந்த ஒலிபெருக்கி இருக்கட்டும்’ என தெரிவித்தார் மகாபெரியவர். நீதிபதி மு.மு. இஸ்மாயில் போன்ற தமிழ் அறிஞர்கள் பெரியவர் மீது மதிப்பு கொண்டிருந்தனர். நாத்திகராக இருந்து பின் ஆத்திகராக மாறிய கவிஞர் கண்ணதாசன், ‘அர்த்தமுள்ள இந்துமதம்’என்ற நுாலை எழுத காரணமாக இருந்தார். பொதுவுடைமை எழுத்தாளர் ஜெயகாந்தன் ‘மகாசுவாமிகளின் கண்களில் நான் கடவுளைக் கண்டேன்!’ என வியந்தார். சிறுகதை, நாவல் வரலாற்றை எழுதிய சிட்டி பி.ஜி. சுந்தரராஜன், பெரியவர் குறித்து ஆங்கில நுால் எழுதியுள்ளார். மெரினா என்ற பெயரில் நாடகங்களும், ஸ்ரீதர் என்ற பெயரில் கார்ட்டூன்களும் படைத்த ஆன்மிக எழுத்தாளர் பரணீதரன் பெரியவரின் பக்தர் என்பது குறிப்பிடத்தக்கது. பெரியவர் எழுதிய ‘மைத்ரீம் பஜதாம்’ என்னும் பாடலை இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமி ஐக்கியநாடுகள் சபையில் பாடினார். உலக சமாதானத்தை வலியுறுத்தும் பாடல் இது. தமிழ்ப்பற்று மிக்க பெரியவர், ‘அவ்வையாரை விடத் தமிழ்நாட்டுக்கு உபகாரம் செய்தவர் யாருமில்லை. பல்லாயிரம் ஆண்டுகளாக நம் நாட்டில் ஒழுக்கமும் பக்தியும் இருக்கிறது என்றால் அதற்கு காரணம் அவ்வையாரே. நாம் படிக்க ஆரம்பிக்கிற போதே அவ்வையின் ஆத்திசூடி தானே முதலில் வருகிறது!’ என்று குறிப்பிட்டார்.
வேதம், உபநிடதம் மட்டுமல்லாமல் வடமொழி இலக்கியத்திலும் புலமை மிக்கவராக இருந்தார். நீலகண்ட தீட்சிதரின் சிவ லீலார்ணவம், ஆதிசங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரம், காளிதாசரின் ரகுவம்சம், சாகுந்தலம் போன்ற காவியங்களில் மேற்கோள் காட்டியும், இலக்கிய நயம் குறித்தும் பலமுறை பேசியிருக்கிறார். பணக்காரர், ஏழை என்ற பேதமின்றி எல்லோருக்கும் ஆசி வழங்கினார். அவரைச் சந்திக்க பிரதமர் முதல் சாமானியர்கள் வரை அனைவரும் வந்தனர். ஒருமுறை பார்வையற்ற மாணவர்கள் மடத்திற்கு வந்த போது, மவுன விரதம் இருந்த போதும், அதைக் கைவிட்டார். பார்வையற்றவர்களுக்கு குரல் தானே முக்கியம். அவர்களை மகிழ்விக்க பேசுவதை விடவும், விரதம் முக்கியமல்ல என விளக்கம் அளித்தார். .
வரதட்சணை பழக்கத்தை எதிர்த்த அவர், ‘‘வரதட்சணை வாங்கும் திருமணங்களில் ‘பரமாச்சாரியாரின் அருளாசியோடு’ என்று ஏன் அச்சிடுகிறீர்கள்?’’ என்று கடிந்தார். பட்டுப்புழுக்களைக் கொன்று நெய்யும் பட்டுத் துணியை பயன்படுத்தக் கூடாது என்றும் வலியுறுத்தினார். சைவ, வைணவ பேதம் இல்லாமல் `நாராயண நாராயண!` என்று திருமால் நாமம் சொல்லி பேச்சை நிறைவு செய்யும் பழக்கத்தை கொண்டிருந்தார். ஆண்டாளின் திருப்பாவையின் புகழ் பரப்பியதில் பெரியவருக்கு பங்குண்டு. ஆண்டாளின் பக்தி மயமான வாழ்வை பேச்சில் அடிக்கடி குறிப்பிடுவார்.
ஜகத்குரு என்று பக்தர்கள் போற்றிய போது, ‘உலகம் முழுவதற்கும் இவர் எப்படி குருவாக முடியும்’ என்று கேள்வி எழுப்பினர் சிலர். ‘‘உலகத்திலுள்ள ஒவ்வொருவரிடமும் ஒவ்வொன்றைக் கற்கிறேன். இந்த அடிப்படையிலேயே ‘ ஜகத்குரு’ என்ற சொற்றொடரை எடுத்துக் கொள்கிறேன்’ என்று அடக்கமுடன் தெரிவித்தார் மகாபெரியவர். நுாறாண்டு வாழ்ந்த அவர் ஆன்மரூபமாக இன்றும் வாழ்கிறார். கருணைக்கடலான மகாபெரியவரின் பாதம் சரணடைவோம்.