ராமர் போர் புரிய இலங்கைக்கு புறப்படும் முன், வானரப்படையை திரட்டிக் கொண்டிருந்தார். வானரங்களில் பல வகை உண்டு. அதில் சிங்கலிகா என்று அழைக்கப்படும் குள்ளமான வானரங்கள் கொண்ட ஒரு படை இருந்தது. இதில் ஆயிரம் வானரங்கள் உண்டு. இவை கூட்டமாக சென்று எதிரியின் படைவீரர்கள் மேல் விழுந்து பற்களால் கடித்துக் குதறியும் நகங்களால் பிராண்டியும் போரிடும். போருக்குப் புறப்படும் வீரர்களை வழியனுப்பும்போது, அவர்கள் குடும்பத்தார்களின் கண்களில் கண்ணீருடன் உயிருடன் பத்திரமாக திரும்பி வரவேண்டுமே என்ற கவலையில் இருந்தனர். அதைக் கவனித்த ராமன், யாரும் கவலைப்பட வேண்டாம், என் படை வீரர்களை பத்திரமாக திருப்பிக் கொண்டு வந்து சேர்ப்பது என் பொறுப்பு" என்றார்.
போர் ஆரம்பமானது. ராவணனின் படையில் பல முக்கியமான வீரர்கள் மடிந்தனர். தூங்கிக் கொண்டிருந்த தன் தம்பி கும்பகர்ணனை எழுப்பி போரிடச்சொன்னான் ராவணன். கும்பகர்ணன், "இந்த போர் வேண்டாம் நீங்கள் சீதாதேவியைக் கடத்தியதற்காக ராமனிடம் மன்னிப்பு கேளுங்கள்" என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ராவணன் கேட்கவில்லை. வேறு வழியின்றி அண்ணனின் ஆணைப்படி போருக்குப் புறப்பட்டான் கும்பகர்ணன். அவனின் ராட்சத உருவத்திற்கேற்ப கும்பகர்ணன் தேரும் மிகப்பெரியதாக இருந்தது. தேரின் முன்புறம் பெரிய பெரிய மணிகள் தொங்கிக்கொண்டிருந்தன. போர் தொடங்கி சிறிது நேரத்தில் ராமபாணத்திற்கு பலியானான் கும்பகர்ணன். தேரிலிருந்து சாயும்போது கும்பகர்ணனின் கை பட்டு ஒரு மணி கழன்று கீழே விழந்தது. கீழே விழுந்த மிக பெரிய மணியானது, போரிட ஒன்றாக ஓடிக்கொண்டிருந்த ஆயிரம் வானரங்கள் மேல் விழுந்து அவர்களை மூடிவிட்டது. திடீரென்று தங்கள் மேல் எதையோ வைத்து மூடிவிட்டதை உணர்ந்த வானரங்கள் பயந்து காப்பாற்ற வேண்டி ராமனை மனதில் ஜெபம் செய்தனர். போர் முடிந்து. சீதாப்பிராட்டியை மீட்டு அயோத்திக்கு திரும்ப ஆயுத்தமானார்கள். சுக்ரீவன் நம் படையில் ஆயிரம் சிங்கலிகர்கள் மட்டும் காணவில்லை" என்றான் .
அப்போது ஸ்ரீராமன் சொன்னார் " சுக்ரீவா நம் படையில் எல்லோரும் பத்திரமாக இருக்கிறார்களா. எண்ணிக்கொண்டு வா". பிரபு! எண்ணிவிட்டேன். ஆயிரம் சிங்கலிகர்கள் மட்டும் காணவில்லை" என்றான் சுக்ரீவன். அனுமனும் ஸ்ரீராமனும் வானர்களைத்தேடி போர்க்களத்தில் நடந்தார்கள். திடீரென்று ஸ்ரீராமன் ஒரு இடத்தில் நின்றார். அனுமா! அங்கே பார். ஒரு பெரிய மணி தெரிகிறது. என்றார். புரிந்து கொண்ட அனுமன் தன் வாலின் நுனியை அந்த மணியின் வளையத்தில் நுழைத்து தூக்கினார். அதன் கீழ் ஆயிரம் சிங்கலிகர்கள் கண்களை மூடிக்கொண்டு கைகூப்பியபடி ராமநாமம் ஜபித்துக்கொண்டிருந்தன. பல மணி நேரத்திற்குப்பின் வெளிச்சமும் காற்றும் பட்டதும் கண்களைத் திறந்தன வானரங்கள். எதிரே ஸ்ரீராமனும் அனுமனும் நின்றுகொண்டிருந்தனர். வரிசையாக கை கூப்பியவாறு நின்று கொண்டிருந்த வானரங்கள் ஸ்ரீராமனின் பாதங்களில் விழுந்து வணங்கின. அப்போது ஸ்ரீராமன் அனுமனைப் பார்த்து அனுமா! வாலில் பளபளக்கும் மணியுடன் நீ இப்படி நிற்கும் காட்சி சுந்தரமாக இருக்கிறது. இந்தக் கோலத்தில் உன்னை தரிசிப்பவர்களுக்கு பக்தி, ஞானம், வைராக்கியம் கிட்டும் " என்று வாழ்த்தினார்.