திருக்கடையூர் கோவிலில் அஷ்டபந்தன மருந்து சாத்துதல் பணி தொடக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மார் 2022 08:03
மயிலாடுதுறை : திருக்கடையூர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சுவாமி விக்ரகங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தேவாரப்பாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. சுவாமி காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயனுக்காக எமனை வதம் செய்ததால் அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்றாக இத்தலம் விளங்கி வருகிறது. இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் கும்பாபிஷேகம் வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் வளாகத்தில் 72 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 8 கால பூஜைகள் நேற்று மாலை தொடங்கியது. இன்று காலை ஏழு முப்பது மணிக்கு விசேஷ சாந்தியுடன், 2ம் கால யாகசாலை பூஜையும், மாலை 3ம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் பூர்ணாஹூதி மகாதீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து குருமகாசந்நிதானம் முனையில் ராஜகோபுரம், விநாயகர், சுவாமி, அம்பாள், காலசம்ஹாரமூர்த்தி மற்றும் பரிவார மூர்த்திகளின் சன்னதி விமானங்களில் கோபுர கலசங்கள் பொருத்தும் பணியும், சுவாமி விக்ரகங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றும் பணியும் தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதில் திருநாவுக்கரசு தம்பிரான், திருஞானசம்பந்த தம்பிரான், மாணிக்கவாசக தம்பிரான் மற்றும் ஆதீன கோவில்களின் மேலாளர் மணி, கோவில் கேசியர் ஸ்ரீராம் மற்றும் சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.