பதிவு செய்த நாள்
23
ஜூலை
2022
08:07
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை திருவிழா முன்னிட்டு ஜூலை 25 முதல் 30 வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுபவர்கள் என கலெக்டர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.
சதுரகிரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை நேரில் ஆய்வு செய்த அவர் கூறியதாவது; ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு ஜூலை 25 முதல் 30 வரை தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து பங்கேற்பார்கள். பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் போதிய பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவும், கூட்ட நெரிசலை காவல்துறையினர் ஒழுங்கு படுத்துவார்கள். தரிசனம் செய்ய வருகின்ற பொதுமக்கள் காலை 5:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்களுக்கு தேவையான குடிநீர், சுகாதார வசதிகள், எந்த நேரத்திலும் முதல் உதவி சிகிச்சை அளித்து மருத்துவ வசதிகள், ஆம்புலன்ஸ் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்கள், போதை வஸ்து கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத துணி பைகள் வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. வெளியூர் பஸ்கள், தனிநபர்கள் வாகனங்கள் நிறுத்த தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில், சாமி தரிசனம் செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என தெரிவித்தார். ஆய்வின் போது எஸ்.பி. மனோகர், திட்ட இயக்குனர் திலகவதி, சப் கலெக்டர் பிரித்திவிராஜ், புலிகள் காப்பக துணை இயக்குனர் திலிப் குமார், டி.எஸ். பி சபரிநாதன் மற்றும் வத்திராயிருப்பு அனைத்து அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.