பதிவு செய்த நாள்
23
ஜூலை
2022
08:07
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், இன்று ஆடிக்கிருத்திகை விழா மற்றும் முதல் நாள் தெப்பம் நடக்கிறது.நேற்று ஆடி பரணி என்பதால், தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் மற்றும் புதுச்சேரி உட்பட, அண்டை மாநிலங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் திருத்தணியில் குவிந்தனர்.
திருத்தணி முருகன் கோவிலில், நேற்று ஆடி பரணியில், ஒன்றரை லட்சம் பக்தர்கள் காவடிகளுடன் மலைக்கோவிலுக்கு வந்து, ஆறு மணி நேரம் காத்திருந்து மூலவரை வழிபட்டனர். சில பக்தர்கள் அலகு குத்தியும், தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். திருத்தணி முருகன் கோவிலில், ஆடிக்கிருத்திகை விழா நேற்று முன்தினம் ஆடி அஸ்வினியுடன் துவங்கியது.நேற்று ஆடிப்பரணியை முன்னிட்டு, அதிகாலை 3:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கீரிடம், தங்க வேல், பச்சைமாணிக்க மரகத கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது.அதே நேரத்தில், காவடி மண்டபத்தில், உற்சவர் முருகப்பெருமானுக்கும், சண்முகப்பெருமானுக்கும் சிறப்பு மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
ஆடிக்கிருத்திகை: திருத்தணி முருகன் கோவிலில், இன்று ஆடிக்கிருத்திகை விழா மற்றும் முதல் நாள் தெப்பம் நடக்கிறது.நேற்று ஆடி பரணி என்பதால், தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் மற்றும் புதுச்சேரி உட்பட, அண்டை மாநிலங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் திருத்தணியில் குவிந்தனர். மலையடிவாரத்தில் உள்ள சரவணபொய்கை மற்றும் மேல்திருத்தணியில் உள்ள நல்லாங்குளம் ஆகிய இடங்களில், பக்தர்கள் புனித நீராடி, மலர், மயில், பால் மற்றும் பன்னீர் காவடிகளுடன், மலைக்கோவிலுக்கு சென்று மூலவரை தரிசித்தனர்.சில பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற, மொட்டை அடித்தும், அலகு குத்தியும் முருகப்பெருமானை தரிசித்தனர். நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று இரவு வரை, ஒரு லட்சம் பக்தர்கள் காவடி எடுத்து வந்து தரிசித்தனர்.
6 மணி நேரம் காத்திருப்பு: மலைக்கோவிலில் அதிகளவில் பக்தர்கள் குவிந்ததால், பொது வழியில், பக்தர்கள் 6 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவரை வழிபட்டனர். சில பக்தர்கள் காவடிகளுடன் பம்பை, உடுக்கை மற்றும் சிலம்பாட்டத்துடன் வந்து வழிபட்டனர். மாலை 6:30 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமான் மலைப்படிகள் வழியாக, சரவணபொய்கைக்கு வந்து, குளத்தை ஒருமுறை வலம் வந்து, மீண்டும் மலைக்கோவிலை சென்றடைந்தனர். ஆடிக் கிருத்திகை விழாவை முன்னிட்டு, மலைக்கோவில் வளாகம் முழுதும் வண்ண விளக்குகள் மற்றும் உட்புறத்தில், பெங்களூரில் இருந்து வரவழைக்கப்பட்ட புதிய ரக மலர்களால், அனைத்து சன்னிதிகளிலும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன.
பாதுகாப்பு: மாவட்ட எஸ்.பி., சீபாஸ் கல்யாண் தலைமையில், 1,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம், மலைக்கோவில், மலைப்பாதை கார்த்திகேயன் குடில், தணிகை இல்லம், சரவண பொய்கை மற்றும் மேல்திருத்தணி நல்லாங்குளம் ஆகிய இடங்களில் எல்.இ.டி., வாயிலாக காவடி மண்டபத்தில் உள்ள உற்சவர் முருகப்பெருமான் மற்றும் அங்கு நடக்கும் சிறப்பு பூஜைகள், காவடிகளுடன் வரும் பக்தர்கள் போன்ற காட்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
பக்தர்கள் அவதி : முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழாவை ஒட்டி நேற்று முன்தினம் மாலை முதல் வெளியூர் பேருந்துகள், திருத்தணி நகருக்கு வெளியே 2, 3 கி.மீ., துாரத்தில் நிறுத்தப்பட்டன.இதனால், வயதான பக்தர்கள் மலையடிவாரம் மற்றும் மலைக்கோவிலுக்கு செல்வதற்கு கடும் சிரமப்பட்டனர். சிலர் அதிக கட்டணம் கொடுத்து, ஆட்டோக்கள் மூலம் மலைக்கோவிலுக்கு சென்றனர். கார் பாஸ் வைத்துள்ள வாகனங்களை மட்டும் நகருக்குள் லெ்ல போலீசாரால் அனுமதிக்கப்பட்டன.
இருசக்கர வாகனங்களுக்கு தடை : வெளியூர்களில் இருந்து பெரும்பாலான பக்தர்கள் இரு சக்கர வாகனங்களில், காவடிகளுடன் மலைக்கோவிலுக்கு செல்ல வந்தனர். ஆனால், காட்ரோட்டில், இருந்து மலைக்கு செல்லும் பாதையில், பாஸ் வைத்திருந்த, நான்கு சக்கர வாகனங்களை மட்டுமே போலீசார் அனுமதித்தனர். இரு சக்கர வாகனங்களை மலைக்கோவிலுக்கு செல்ல போலீசார் அனுமதி மறுத்து தடை விதித்ததால், இரு சக்கர வாகன ஓட்டிகள் நிறுத்துவதற்கு போதிய இடமில்லாமல் சிரமப்பட்டனர். சிலர், மலைக்கு செல்லாமல், கோவிலின் நுழைவு பாதையிலேயே காவடிகளை செலுத்திவிட்டு சென்றனர்.