பதிவு செய்த நாள்
31
ஜூலை
2022
09:07
ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது தேவிக்குரிய திருநாளாகும். இந்த நாளில் தான் உமாதேவியும் தோன்றியதாக கூறப்படுவதுண்டு. உலக மக்களை காக்க சக்தியாக அம்பாள் உருவெடுத்தாள். சித்தர்களும், யோகிகளும் இந்த நாளில் தவத்தை துவக்குவதாக புராணங்கள் கூறுகின்றன.
அனைத்து உலகத்தையும் படைத்தும் காத்தும் கரந்தும் விளையாடும் அகிலாண்ட கோடி அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக்காப்பு, நடத்துவார்கள். அந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகிக்கு வளை காப்பு நடக்கும் நாள் தான் ஆடிப்பூரம். அன்னை உளம் மகிழ்ந்து மாந்தர்கள் அனைவருக்கும் தன் அருளை வழங்கும் நாள். பல்வேறு விதங்களில் அன்னையைக் கொண்டாடும் நாள் திருவாடிப்பூரம். சைவத்தலங்களில் உற்சவ அம்மனின் திருநாமம் பெரும்பாலான இடங்களில் சுக்கிரவார அம்மனாக தனக்கு உகந்த வெள்ளிக்கிழமையின் பெயரைக் கொண்டு அருள் பாலிக்கும் அம்மன் அதற்கு அடுத்து ஆடிப்பூர அம்மனாக அதிகமாக எழுந்தருளியுள்ளாள். இதிலிருந்தே ஆடிப்பூரத்தின் சிறப்பை அறிந்து கொள்ளலாம்.
ஆடி மாதம் என்பது தக்ஷிணாயன காலத்தின் தொடக்க காலம். இது வரை வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்த சூரியன் தனது தெற்கு நோக்கிய பயணத்தை தொடங்கும் மாதம். நம்முடைய ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள். அவர்களது இரவுக்காலமே இந்த தக்ஷிணாயன காலம் ஆகும். உத்தராயணக்காலம் சிவபெருமானை வழிபட உகந்தது என்றால் தக்ஷிணாயனம் அவரது வாம பாகத்தில் வீற்றிருக்கும் அம்பிகைக்கு உரிய காலம் ஆகும். அம்மனுக்கு உகந்த ஆடி மாதம், நவராத்திரி ஆகிய பண்டிகைகள் வரும் காலம். இவ்வாறு இது வரை பகல் காலம் அதிகமாக வெப்பமாக இருந்த நிலை மாறி இரவு அதிகமாகவும், வெப்பம் குறையும் காலம் ஆரம்பிப்பதால்தான் ஆடி மாதங்களில் எளிய உணவான கூழ் சாப்பிட்டால் உடம்பிற்கு நல்லது என்று ஜகன் மாதாவிற்கு கூழ் வார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்தினர் நமது முன்னோர்கள். இந்த ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய் , ஞாயிறுகளில் அன்னையை வழிபட எல்லா நலன்களும் தந்து அருளுவாள் அந்த தயாபரி. இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஆடி மாதத்தில் வரும் பூர நாள் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள்.
தாய்மை என்பது பெண்களுக்கே உரித்தான ஒரு தனி சிறப்பு. உள்ளே உயிர் வளர்த்து உதிரத்தால் பால் கொடுக்க ஒரு தாயால்தான் முடியும். நம்முடைய மானிட வழக்கமான சூல் கொண்ட பெண்ணுக்கு வளை காப்பு நடத்துவது போல படைக்கும் அன்னையாய் இருந்தும் கன்னி என்று மறைகள் பேசும் அம்பிகைக்கு நாம் வளைகாப்பு நடத்தி கண்டு களித்திடும் நாள். மாலை நேரங்களில் அன்னைக்கு வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டு அந்த வளையள்கள் பெண்மணிகளுக்கு பிரசாதமாக வழங்கப்படுகின்றன.
காந்திமதியம்மனுக்கு வளைகாப்பு: திருநெல்வேலி காந்திமதியம்மனுக்கு, ஆடிப்பூர விழாவின் நான்காம் நாளன்று, ஊஞ்சல் மண்டபத்தில் வளைகாப்பு விழா நடைபெறும். இந்த வளைகாப்பு விழாவில் பக்தர்களுக்கு வளையல் பிரசாதமாகத் தரப்படும். இந்த வளையலை வாங்கி அணிந்து கொள்ளும் பெண்களுக்கு விரைவில் வளைகாப்பு வைபவம் நடப்பது உறுதி என்பது நம்பிக்கை.
சில இடங்களில் ஆடிப்பூரம் முளைப்பாலிகை திருவிழாவாகவும் கொண்டாடபடுகின்றன. ஒரு வாரத்திற்கு முன்னரே அவரவர் இல்லங்களில் நவதான்யங்களை விதைத்து முளைப்பாலிகையை தயார் செய்கின்றனர். திருஆடிப்பூரத்தன்று அவை அம்மன் சன்னதியில் சேர்க்கப்படுகின்றன. முளை வளர்ந்துள்ள விதத்தில் இருந்து வருடம் எவ்வளவு செழிப்பாக இருக்கும் என்பதை உணர்த்துகின்றது என்பது ஐதீகம்.
பல்வேறு ஆலயங்களில் ஆடிப்பூரம் அம்மனுக்குரிய பிரம்மோற்சவமாக பத்து நாள் திருவிழாவாக வாகன சேவையுடன் சிறப்பாக நடைபெறுகின்றது. இவ்வாறு பத்துநாள் பிரம்மோற்சவம் நடைபெறும் சில தலங்கள், திருவாரூரில் கமலாம்பாளுக்கு, திருநாகையில் நீலாயதாக்ஷி அம்மனுக்கு, திருக்கருகாவூரில் கர்ப்பரட்சாம்பிகைக்கு. திருமயிலை கற்பகவல்லிக்கு ஆடிப்பூரத்தன்று மதியம் சந்தனக்காப்பு அலங்காரம், இரவு விரைமலர் குழல் வல்லி, மறைமலர் பதவல்லி, கற்பகவல்லிக்கு வளை காப்பு உற்சவம். மேல் மருவத்தூரில் ஆதிபராசக்திக்கு ஆடிப்பூரம் மிகப்பெரிய பண்டிகையாக அம்மனுக்கு கூழ் வார்க்கும் பண்டிகையாக சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. ஆடிப்பூரத்தன்று அம்பிகைக்கு சிறப்பு வழிபாடு நடக்காத கோவிலே இல்லை.
சாதனை பெண்மணி: இந்து மதத்தில், எத்தனையோ தெய்வப் பெண்களைப் பற்றி படித்திருப்போம். உலக நன்மைக்காக லட்சுமி தாயாரே சீதா, ருக்மணி என்ற அவதாரங்களை எடுத்து பூமிக்கு வந்த போது, பகவான் விஷ்ணுவும் ராமனாக, கிருஷ்ணனாக மனித அவதாரமெடுத்து பூமிக்கு வந்தார். இவர்களும் தங்கள் பக்தியின் காரணமாக ராம, கிருஷ்ணரை கணவராக அடைந்தனர். ஆனால், பூமாதேவி, ஆண்டாளாகப் பூமியில் பிறந்த போது, அவளுக்காக, பகவான் பூமியில் பிறக்கவில்லை. கோவிலிலே அர்ச்சாவதாரமாக (சிலை வடிவில்) சயனம் கொண்டிருந்த பெருமாளை, கணவனாக அடைய வேண்டும் என, மனதிற்குள் உறுதி பூண்டாள் ஆண்டாள். மகளின் இந்த விசித்திரமான ஆசையை அறிந்த பெரியாழ்வார், மானிடப் பெண் ஒருத்தி, கோவிலில் சிலையாக இருக்கும் கடவுளை எவ்வாறு கணவனாக அடைய முடியும்... என, நினைத்து வேதனைப்பட்டார். ஆனால், ஆண்டாள் அதை பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. அவள் மனதில், பெருமாள் மட்டுமே நீக்கமற நிறைந்திருந்ததால், கண்ணன் சிலையாக இருந்தால் என்ன, அவன் தான் தன் கணவன் என்பதில் உறுதியாக இருந்தாள்.
பெரியாழ்வார், தினமும் பூமாலை கட்டி பெருமாளுக்கு சூட எடுத்துச் செல்வார். அதை யாருக்கும் தெரியாமல் எடுத்து, அந்த மாலை, பெருமாளுக்கு பொருத்தமாக இருக்குமா என, தன் கழுத்தில் அணிந்து அழகு பார்ப்பாள் ஆண்டாள். ஒருசமயம், அவள் அவ்வாறு அழகு பார்த்த போது, அவளது கூந்தல் முடி ஒன்று அதில் ஒட்டிக்கொள்ள, குட்டு உடைந்து போனது. பெரியாழ்வார் அவளை கண்டித்து, வேறு ஒரு மாலை கட்டி எடுத்துச் சென்றார். ஆனால், பெருமாளோ, பக்தை அணிந்து தரும் மாலை தான் வேண்டும்... எனச் சொல்லி, ஆண்டாளின் காதலை ஏற்றுக் கொண்டார். கடவுள் மேல் அவள் கொண்ட ஆத்மார்த்தமான பக்தியும், காதலும், சிலையாக இருந்த தெய்வத்தையும், மனம் உருக வைத்து, அவளை ஏற்றுக் கொள்ள வைத்தது. தான் நினைத்த திருமாலையே கணவனாக அடைந்து, எந்த மானிட பெண்ணும் செய்யாத சாதனையைச் செய்தாள் ஆண்டாள். அந்த தெய்வமும், அவள் வாழும் காலத்திலேயே அவளுக்கு அனுக்கிரகம் செய்தது. தன் மனதையே யாக குண்டலமாக்கி, தன்னுடைய பக்தியையும், காதலையும் நெருப்பாக்கி, தன் ஆன்மாவையே ஹவிசாக இட்டு, திருப்பாவை என்னும் மந்திரத்தால் அவனைத் துதித்து, தான் நினைத்ததை சாதித்தாள் ஆண்டாள். இத்தகைய வைராக்கிய உணர்வு கொண்ட இந்த சாதனைப் பெண்மணி, ஆடிமாதம் பூரம் நட்சத்திரத்தில் அவதரித்தாள். தங்கள் லட்சியத்தில் ஒருமித்த ஈடுபாடும், அதை அடைய வேண்டும் என்ற வைராக்கிய உணர்வும் இருந்தால், நினைத்ததை சாதிக்கலாம் என்பதற்கு, ஆண்டாளே வாழ்ந்து காட்டியுள்ளாள்!