திருமலை திருப்பதியில் ஜேஷ்டாபிஷேகம் துவக்கம்; ஏழுமலையானுக்கு சிறப்பு திருமஞ்சனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூன் 2025 11:06
திருமலையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட்டிருக்கும் தங்க கவசம் ஆண்டிற்கு ஒருமுறை களையப்பட்டு திருமஞ்சனம் நடத்தப்பட்டு வருகிறது. திருமஞ்சனம் முடிந்த பின் முதல் நாள் வைர கவசமும், 2ம் நாள் முத்து கவசமும் உற்சவமூர்த்திகளுக்கு அணிவிக்கப்படும். நிறைவு நாள் திருமஞ்சனம் முடிந்த பின் களையப்பட்ட தங்க கவசம் செப்பணிடப்பட்டு மீண்டும் அணிவிக்கப்படும். இந்த உற்சவத்தை தேவஸ்தானம் ஜேஷ்டாபிஷேகம் என்று குறிப்பிட்டு வருகிறது.
09, 10, 11 ஆகிய மூன்று நாட்களும் திருப்பதியில் வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் ஜேஷ்டாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த உற்சவத்தால் உற்சவமூர்த்திக்கும் அவர்களுக்கு அணிவிக்கப்பட்டுள்ள கவசத்திற்கும் ஏற்பட்டுள்ள சேதங்கள் கண்டறியப்பட்டு செப்பணிடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (9ம் தேதி) திருமலையில் வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் துவங்கியது. உற்சவருக்கு அணிவிக்கப்பட்ட தங்கக் கவசம் அகற்றப்பட்டு யாகம், அபிஷேகம் மற்றும் பஞ்சா மிருதம் ஆகியவற்றால் திருமஞ்சனம் செய்யப்பட்டது. நாளை (10ம் தேதி) 2ம் நாள் திருமஞ்சனம் நடைபெறும். பின் உற்சவமூர்த்திகளுக்கு முத்து கவசம் சாற்றப்பட்டு அருள்பாலித்தார். முன்னதாக காலை 6.30 மணிக்கு ஸ்ரீ மலையப்பசுவாமி உபயநஞ்சாருடன் ஸ்ரீவாரி கோயிலின் சம்பங்கி பிரகாரத்தை வலம் வருவார். 2வது நாளில் முத்து கவசமும், 3வது நாளில் திருமஞ்சனங்கள் முடிந்த பின்னர் மீண்டும் தங்கக் கவசம் அணிவிக்கப்படும்.