பதிவு செய்த நாள்
18
செப்
2022
09:09
தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள பெருமாள் கோவில்களில், புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.
புரட்டாசி மாத சனிக்கிழமைகளில், பெருமாள் கோவில்களில், சிறப்பு பூஜை செய்து பெருமாளை வழிபடுவது வழக்கம். புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான நேற்று, பரமேஸ்வரன்பாளையத்தில் உள்ள ஆயிரம் ஆண்டு பழமையான கொங்கு திருப்பதி கோவிலில், அதிகாலை, 5:00 மணிக்கு கோ பூஜை செய்து நடை திறக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, திருமஞ்சனம், அபிஷேக ஆராதனை நடந்தது. காலை, 10:30 மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் எழுந்தருளி, கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இரவு, 8:00 மணிக்கு பால் பூஜை, பள்ளி கொள்ளுதல் நிகழ்ச்சி நடந்தது. அதேபோல, புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை ஒட்டி, தொண்டாமுத்தூர் அரங்கநாதர் கோவில், வடவள்ளி கரிவரதராஜபெருமாள் கோவில், மாதம்பட்டி ஸ்ரீதேவி பூதேவி சமேத திம்மராய பெருமாள் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜை நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, பெருமாளை தரிசனம் செய்தனர்.