பதிவு செய்த நாள்
24
அக்
2022
05:10
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், வரும், 26ம் தேதி கந்த சஷ்டி விழா துவங்குகிறது.
முருகனின் ஏழாம் படை வீடாக, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில், ஆண்டுதோறும் வைகாசி விசாகம், தைப்பூசம் மற்றும் கந்த சஷ்டி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்தாண்டு கந்த சஷ்டி விழா, வரும், 26ம் தேதி துவங்குகிறது. வரும், 26ம் தேதி அதிகாலை, 5:00 மணிக்கு, நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடைபெறும். அதனை தொடர்ந்து காலை, 7:00 மணிக்கு, விநாயகர் பூஜையும், காலை, 9:00 மணிக்கு, கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு விரதம் இருக்கும் பக்தர்களுக்கு, காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடக்கிறது. வரும், 30ம் தேதி, கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரமும், 31ம் தேதி, திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது.