பதிவு செய்த நாள்
24
அக்
2022
05:10
பழநி: பழநி மலைக் கோயிலில் நாளை கந்த சஷ்டி விழா தொடங்குகிறது.
பழநி மலைக்கோயில் உச்சி காலத்தில் காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி திருவிழா நாளை (அக்.25) துவங்க உள்ளது. சூரிய கிரகணம் காரணமாக மதியம் 2:30 மணிக்கு மேல் அனைத்து கோயில்களும் திருக்காப்பிடப்படும். இரவு 7:00 மணிக்கு மேல் சம்ரோட்சனபூஜை, சாயரட்சை பூஜை ஆகியவை நடைபெறும். அக்.26 முதல் அக்.,29, வரை சுவாமி புறப்பாடு நடைபெறும்.
கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் அக்., 30, ஆம் தேதி நடைபெறும். அன்று மலைக்கோயிலில் மதியம் 1:30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறும். அக்.30., மதியம் 2: 45 மணிக்கு மேல் சின்ன குமாரசுவாமி மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்குதல் நடைபெற்ற பின் சன்னதி திருக்காப்பிடப்படும். பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து வள்ளி, தேவசேனா சமேத முத்துக்குமார சுவாமி, மயில்வாகனத்தில் அடிவாரம் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருள்வார். அதன்பின் மாலையில் 6:00 மணிக்கு மேல் வடக்கு கிரி வீதியில் தாரகாசுரன், கிழக்கு கிரிவிதியில் பானு கோபன், தெற்கு தெரு வீதியில் சிங்கமுகாசூரன், மேற்கு கிரிவீதியில் சூர பத்மன் என நான்கு சூரன் வதம் நடைபெறும். அதன் பின் ஆரியர் மண்டபத்தில் வெற்றி விழா நடைபெறும் இரவு 9:00 மணிக்கு மேல் சம்ரோட்சன பூஜைக்கு பின் அர்த்த ஜாம பூஜை நடைபெறும். ஏழாம் நாளான அக்.,31 , அன்று மலைக் கோயிலில் காலை 9.30 மணிக்கு மேல் வள்ளி, தேவசேனா சமேத சண்முகருக்கு திருக்கல்யாணம், மாலை 7:00 மணிக்கு மேல் பெரிய நாயகி அம்மன் கோவிலில் வள்ளி, தேவசேனா சமேத முத்துக்குமார் சாமிக்கும் திருக்கல்யாணம் நடைபெறும். நிகழ்ச்சி ஏற்பாட்டினை கோயில் இணை கமிஷனர் நடராஜன் தலைமையில் கோயில் நிர்வாகம் செய்து வருகிறது. பக்தர்கள் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு ஆறு நாட்கள் சக்தி விரதம் இருந்து முருகனை வழிபடுவர்.