சபரிமலை ஐயப்பசுவாமிக்கு இணையாக பக்தர்களால் போற்றப்படுவது பதினெட்டுப்படிகளாகும். இப்படிகள் ஒரே கல்லால் செதுக்கப்பட்டவை. மனிதவாழ்வின் குறிக்கோளை அடைவது தான். அக்குறிக்கோளை அடைய பாதையும் மிகமுக்கியமானது என்ற தத்துவத்தை இப்படிகள் நமக்கு உணர்த்துகின்றன. ஒவ்வொரு படியும் ஐந்துஅடி நீளம் கொண்டது. இவ்வாறு அமைக்க காரணம் உண்டு. ஆகாயம், நீர், காற்று, மண், நெருப்பு ஆகியபஞ்சபூதங்களின் உயர்வைக்காட்டுவதாக உள்ளது. நம் உடலும் பஞ்சபூதங்களின் சேர்க்கையே என்பதை இது உணர்த்துகிறது. அதாவது, நமது உடலில் காதில் இருக்கும் வெட்டவெளியை சிதாஹாசம் என்பர். இதற்கு அறிவுள்ள வெட்டவெளி என்று பெயர். இதுவே ஆகாயத்தத்துவம். எனவே தான் தீட்சை பெறுபவர்களின் காதில் ரகசியமாக மந்திரங்கள் ஓதப்படுகிறது. நமது உடலிலுள்ள ரத்தம், திரவங்கள் உள்ளிட்டவை நீர் தத்துவம். நாம் விடும் மூச்சே காற்று. நம் உடலிலுள்ள சதையை மண் என்பர். அடிவயிற்றிலுள்ள ஜடராக்னி பசியைத் தூண்டுகிறது. இதுவே நெருப்பு. இதையெல்லாம் தெரிந்து கொண்டு ஐந்தடி நீளமுள்ள படியில் கால் வைத்தால் பக்திபெருக்கெடுக்காதா என்ன!