Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஐந்தாம் திருமுறையில் பாடிய பாடல் ...
முதல் பக்கம் » ஐந்தாம் திருமறை
ஐந்தாம் திருமுறையில் பாடிய பாடல் (பகுதி-2) | தேவாரம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

08 செப்
2011
04:09

52. திருநாகேச்சரம் (அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில், திருநாகேஸ்வரம், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

520. நல்லர் நல்லதோர் நாகம்கொண்டு ஆட்டுவர்
வல்லர் வல்வினை தீர்க்கும் மருந்துகள்
பல்லில் ஓடுகை யேந்திப் பலிதிரி
செல்வர் போல்திரு நாகேச் சரவரே.

தெளிவுரை : சிவபெருமான், யாவர்க்கும் நல்லவற்றையே புரிபவர்; நல்ல தன்மையுடைய நாகத்தைக் கையில் பற்றி ஆட்டுபவர்; பேராற்றல் மிக்கவர்; தீயவினைகளைத் தீர்த்து அருள் புரியும் நன் மருந்தாகுபவர்; மண்டையோட்டைக் கையில் ஏந்திப் பலியேற்றுத் திரிபவர். அத்தகையவராகிய பெருமான், திருநாகேச்சரத்தில் மேவும் செல்வர் ஆவர்.

521. நாவலம் பெருந் தீவினில் வாழ்பவர்
மேவி வந்து வணங்கி வினையொடு
பாவ மாயின பற்றறு வித்திடும்
தேவர் போல்திரு நாகேச் சரவரே.

தெளிவுரை : இப் பாரத நாட்டில் வாழ்பவர்கள் சிந்தித்து வணங்கி யேத்திட, வினையும் பாவமும் பற்றாதவாறு அருள் புரிபவர் திருநாகேச்சரத்தில் வீற்றிருக்கும் ஈசனேயாவர்.

522. ஓத மார்கட லின்விடம் உண்டவர்
ஆதி யார்அய னோடு அமரர்க்கெலாம்
மாதொர் கூறர் மழுவலன் ஏந்திய
நாதர் போல் திரு நாகேச் சரவரே.

தெளிவுரை : சிவபெருமான், கடலில் தோன்றிய விடத்தை உட்கொண்டு, தேவர்களைக் காத்தருள் புரிந்தவர்; ஆதிப் பொருளாக விளங்குபவர்; பிரமன் முதலான தேவர்களுக்கெல்லாம் தலைவர்; உமாதேவியைத் திருமேனியில் அங்கமாகக் கொண்டு, அம்மையப்பராக விளங்குபவர்; மழுப்படை ஏந்தியவர். அப்பெருமான், திருநாகேச்சரத்தில் மேவும் நாதர் ஆவார்.

523. சந்தி ரன்னொடு சூரியர் தாமுடன்
வந்து சீர்வழி பாடுகள் செய்தபின்
ஐந்த லையர வின்பணி கொண்டருள்
மைந்தர் போல்மணி நாகேச் சரவரே.

தெளிவுரை : சந்திரனும் சூரியனும் சேர்ந்து வந்து சிறப்பான வழிபாடுகள் செய்து பூசிக்க அருள் புரிந்த சிவபெருமான், ஐந்தலை நாகம் பூசித்து ஏத்த விளங்கிப் பணி கொண்டு அருள் புரிந்தவர். அவர், திருநாகேச் சரத்தில் மேவும் ஈசன் ஆவர்.

524. பண்டோர் நாள்இகழ் வான்பழித் தக்கனார்
கொண்ட வேள்விக் குமண்டை யதுகெடத்
தண்ட மாவிதா தாவின் தலைகொண்ட
செண்டர் போல்திரு நாகேச் சரவரே.

தெளிவுரை : சிவபெருமான், தக்கன் செய்த தீய கொள்கையுடைய வேள்வியை அழித்து, அவனது தலையை அறுத்து வேள்வித் தீயில் எரித்தவர்; பிரமனின் தலையைக் கொய்து கையில் கபாலமாக ஏற்றவர்; செண்டு என்னும் ஆயுதத்தைப் படையாகக் கொண்டுள்ளவர். அப்பரமன், திருநாகேச்சரத்தில் மேவும் ஈசனே ஆவர்.

525. வம்பு பூங்குழல் மாது மறுகவோர்
கம்ப யானை யுரித்த கரத்தினர்
செம்பொ னார்இதழிம் மலர்ச் செஞ்சடை
நம்பர்போல் திரு நாகேச் சரவரே.

தெளிவுரை : சிவபெருமான், நறுமணம் கமழும் மென்மையான கூந்தலையுடை உமாதேவி அதிர்ச்சி கொள்ளுமாறு, பேராற்றலுடன் திகழ்ந்து, யானையின் தோலை உரித்தவர்; செம்பொன் போன்ற அழகிய கொன்றை மலரைச் செஞ்சடையில் சூடி விளங்குபவர். அத்தகைய விரும்பத்தக்க பெருமான், நாகேச்சரத்தில் வீற்றிருக்கும் ஈசனே ஆவார்.

526. மானை யேந்திய கையினர் மையறு
ஞானச் சோதியர் ஆதியர் நாமந்தான்
ஆன அஞ்செழுத்து ஓதவந்து அண்ணிக்கும்
தேனர் போல்திரு நாகேச் சரவரே.

தெளிவுரை : சிவபெருமான், மானைக் கையில் ஏந்தியவர் மன்னுயிரின் குற்றங்களை நீக்குகின்ற ஞானமாக விளங்குபவர்; சோதி வடிவாகவும், ஆதிப் பொருளாகவும் மேவுபவர். அப்பெருமானுடைய திருப்பெயராகிய ஐந்தொழிலை ஆக்கும் திருவைந்தெழுத்தினை ஓதுபவர்களுக்கு, அண்மையாய் இருந்து தேனாய் இனிக்கச் செய்பவர். அவர் திரு நாகேச்சரத்தில் வீற்றிருக்கும் இறைவரே ஆவார்.

527. கழல்கொள் காலினர் காலனைக் காய்ந்தவர்
தழல்கொள் மேனியர் சாந்தவெண் ணீறணி
அழகர்ஆல் நிழற் கீழ்அறம் ஓதிய
குழகர் போல்குளிர் நாகேச் சரவரே.

தெளிவுரை : சிவபெருமான், திருப்பாதத்தில் வீரக்கழல் அணிந்தவர்; காலனை உதைத்து அழித்தவர் நெருப்பின் வண்ணம் போன்ற சிவந்த திருமேனியர்; சாந்தத்தை நல்கும் திருவெண்ணீற்றினைத் திருமேனியில் குழையப் பூசி விளங்குபவர்; அழகிய வடிவத்தை உடையவர்; ஆல் நிழற்கீழ் இருந்து அருமறைப் பொருள்களை உணர்த்திக் குருவடிவாகத் திகழ்பவர். அப்பெருமான், திருநாகேச்சரத்தில் மேவும் பரமன் ஆவார்.

528. வட்ட மாமதில் மூன்றுடன் வல்லரண்
சுட்ட செய்கையர் ஆகிலும் சூழ்ந்தவர்
குட்ட வல்வினை தீர்த்துக் குளிர்விக்கும்
சிட்டர் போல்திரு நாகேச் சரவரே.

தெளிவுரை : சிவபெருமான், தேவர்களைச் சூழ்ந்து துன்புறுத்திய அசுரர்களின் வட்ட வடிவமாக அமைக்கப்பெற்ற மூன்று வலிமையான கோட்டைகளையும் எரித்துச் சாம்பலாக்கியவர். அப் பெருமான், மன்னுயிர்களை நற்கதி ஆளாக்காது குறையுடையதாகவும் கீழ்மையில் தள்ளுவதும் ஆகிய கொடிய வினைகளைத் தீர்த்துக் குளிர்விக்கும் பரமனார். அவர், திருநாகேச்சரத்தில் மேவும் ஈசன் ஆவார்.

529. தூர்த்தன் தோள்முடி தாளும் தொலையவே
சேர்த்தி னார்திருப் பாதத்து ஒருவிரல்
ஆர்த்து வந்துஉல கத்தவர் ஆடிடும்
தீர்த்தர் போல்திரு நாகேச் சரவரே.

தெளிவுரை : நன்னெறி அற்றவனாகிய இராவணனுடைய தோளும் முடியும் தாளும் நெரியுமாறு திருப்பாத விரலால் அடர்த்திய சிவபெருமான், உலகத்தவரால் ஏத்திப் பூசித்து வழிபடப் பெறுபவராகவும், தீய வினைகளைத் தீர்த்து அருள்பவராகவும் விளங்குபவர். அவர், திருநாகேச்சரத்தில் மேவும் இறைவனே ஆவார்.

திருச்சிற்றம்பலம்

53. திருவதிகை வீரட்டம் (அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், திருவதிகை,கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

530. கோணல் மாமதி சூடியோர் கோவணம்
நாணில் வாழ்க்கை நயந்தும் பயனிலை
பாணில் வீணை பயின்றவன் வீரட்டம்
காணில் அல்லதுஎன் கண்துயில் கொள்ளுமே.

தெளிவுரை : சிவபெருமான், வளைந்து பெருமை கொண்டு மேவும் சந்திரனைச் சடையில் சூடிக் கோவணத்தை உடுத்தி இருப்பவர். அத்தகைய திருக்கோலமானது நாணத்தை நீக்கிய தன்மையுடையது என்றாலும், வாழ்க்கையின் பயனை நிலைப்படுத்தி, உயிர்களுக்கு அருள் புரிபவர் அவர். அப் பரமன், கையில் வீணையை ஏந்தி வீரட்டானத்தில் வீற்றிருப்பவர். அப்பெருமானைக் காணின் அல்லாது, எனக்கு உறக்கம் கொள்ளுமோ !

531. பண்ணி னைப்பவ ளத்திரள் மாமணி
அண்ண லைஅம ரர்தொழும் ஆதியைச்
சுண்ண வெண்பொடி யான்திரு வீரட்டம்
நண்ணில் அல்லது என்கண்துயில் கொள்ளுமே.

தெளிவுரை : சிவபெருமான், பண்ணின் இசை போன்று மனத்தில் மகிழ்ச்சியை விளைவிப்பவர்; பவளத்தின் திரட்சியைப் போன்று சிவந்த திருமேனி உடையவர்; தேவர்கள் தொழும் ஆதிதேவர்; திருவெண்ணீறு தரித்து விளங்குபவர். அப் பெருமான் வீற்றிருக்கும் திருவதிகை வீரட்டானத்தை நண்ணி ஏத்துதல் அல்லாது என் கண் துயிலாது.

532. உற்ற வர்தம் உறுநோய் களைபவர்
பெற்றம் ஏறும் பிறங்கு சடையினர்
சுற்றும் பாய்புனல் சூழ்திரு வீரட்டம்
கற்கில் அல்லதுஎன் கண்துயில் கொள்ளுமே.

தெளிவுரை : சிவபெருமான், தன்னை அடைக்கலமாக உற்ற அடியவர்கள் உறுகின்ற வினையால் ஏற்படும் துன்பங்களையும் இடர்களையும், பிணி முதலானவற்றையும் களைபவர்; இடபத்தை வாகனமாக உடையவர்; ஒளி திகழும் சடை முடியுடையவர். அப்பெருமான், நீர் வளம் சூழ்ந்த அதிகை வீரட்டானத்தில் வீற்றிருக்க, அப் பெருமானைத் துதி செய்து ஏத்தாது என் கண் துயில் கொள்ளாது.

533. முற்றா வெண்மதி சூடும் முதல்வனார்
செற்றார் வாழுந் திரிபுரந் தீயெழ
விற்றான் கொண்டுஎயில் எய்தவர் வீரட்டம்
கற்றால் அல்லதுஎன் கண்துயில் கொள்ளுமே.

தெளிவுரை : சிவபெருமான், இளமை தவழும் பிறைச் சந்திரனைச் சூடியவர்; யாவர்க்கும் முதற் பொருளாக விளங்குபவர்; பகை கொண்டு போர் செய்த அசுரர்களின் முப்புரக் கோட்டைகளை, மேரு மலையை வில்லாகக் கொண்டு ஏந்தி அழித்தவர். அதிகை வீரட்டநாதரைத் தியானித்து ஏத்தித் துதியாது, என் கண் உறங்காது.

534. பல்லா ரும்பல தேவர் பணிபவர்
நல்லா ருந்நயந் தேத்தப் படுபவன்
வில்லால் மூவெயில் எய்தவன் வீரட்டம்
கல்லேன் ஆகில்என் கண்துயில் கொள்ளுமே.

தெளிவுரை : சிவபெருமனை எல்லாத் தேவர்களும் பணிவார்கள். சிவஞானிகள், அப் பெருமானை விரும்பி ஏத்துவார்கள். மூன்று அசுரர் கோட்டைகளையும் வில் கொண்டு எரித்து அழித்த அப்பெருமான் வீற்றிருக்கும் வீரட்டானத்தை எண்ணி ஏத்தாது, என் கண் துயில் கொள்ளாது.

535. வண்டார் கொன்றையும் மத்தம் வளர்சடைக்
கொண்டான் கோல மதியோடு அரவமும்
விண்டார் மும்மதில் எய்தவன் வீரட்டம்
கண்டால் அல்லதுஎன் கண்துயில் கொள்ளுமே.

தெளிவுரை : கொன்றை மலரும், ஊமத்த மலரும் சடை முடியில் கொண்டு, அதனுடன் அழகிய சந்திரனும் அரவமும் பொருந்தத் தரித்து, மும்மதில்களை எய்த சிவபெருமான் வீற்றிருக்கும் அதிகை வீரட்டானத்தைக் கண்டால் அன்றி, என் கண் துயிலாது.

536. அரையார் கோவண ஆடையன் ஆறுஎலாம்
திரையார் ஒண்புனல் பாய்கெடி லக்கரை
விரையார் நீற்றன் விளங்கு வீரட்டன்பால்
கரையே னாகில்என் கண்துயில் கொள்ளுமே.

தெளிவுரை : அரையில் கோவண ஆடையுடைய சிவபெருமான், கெடில நதிக்கரையில் விளங்குகின்ற அதிகை வீரட்டானத்தில், திருநீற்றுத் திருமேனியராகத் திகழ, அப் பெருமானை மனம் கரைந்து ஏத்தாது, என் கண் துயிலாது.

537. நீறுடைத் தடந் தோறுடை நின்மலன்
ஆறு டைப்புனல் பாய்கெடி லக்கரை
ஏறு டைக்கொடி யான்திரு வீரட்டம்
கூறில் அல்லதுஎன் கண்துயில் கொள்ளுமே.

தெளிவுரை : சிவபெருமான், திருநீற்று மேனியராகவும் முமமலங்களாகிய ஆணவம், கன்மம், மாயை ஆகியன அற்றவராகவும் விளங்குபவர். அவர் கெடில நதிக்கரையில் உள்ள அதிகை வீரட்டானத்தில் இடபக் கொடி ஏந்தி விளங்குபவர். அப் பெருமானுடைய புகழைக் கூறின் அல்லாது, என் கண் துயிலாது.

538. செங்கண் மால்விடை யேறிய செல்வனார்
பைங்கண் ஆனையின் ஈர்உரி போர்த்தவர்
அங்கண் ஞாலம தாகிய வீரட்டம்
கங்கு லாகஎன் கண்துயில் கொள்ளுமே.

தெளிவுரை : இடப வாகனத்தையுடைய சிவபெருமான் யானையின் தோலை உரித்துப் போர்த்தவர். அப் பெருமான், உலகம் முழுவதும் தனது அருள் நோக்கினால் காத்தருள்பவராகி, வீரட்டானத்தில் வீற்றிருக்க, அவரைக் காணாது என் கண் எக்காலத்திலும் உறங்காது.

539. பூணாண் ஆரம் பொருந்த உடையவர்
நாணா கவ்வரை வில்லிடை அம்பினால்
பேணார் மும்மதில் எய்தவன் வீரட்டம்
காணேன் ஆகில் என் கண்துயில் கொள்ளுமே.

தெளிவுரை : ஈசன், நல்லணியும் மாலையும் பொருந்த உடையவர். அவர் மேரு மலையை வில்லாக ஏந்தி, அரவமாகிய வாசுகியை நாணாகக் கொண்டு, முப்புரங்களை எரித்து அழித்தவர். அப் பரமன் மேவும் வீரட்டனாத்தைக் காணாது, என் கண் உறங்காது.

540. வரையார்ந் தவயி ரத்திரள் மாணிக்கம்
திரையார்ந் தபுனல் பாய்கெடி லக்கரை
விரையார் நீற்றன் விளங்கிய வீரட்டம்
உரையே னாகில்என் கண்துயில் கொள்ளுமே.

தெளிவுரை : மலைகளில் மேவி விளங்கும் வயிரமும் மாணிக்கமும் நீர் அலைகளின் வாயிலாகக் கொண்டு விளங்கும் கெடில நதிக்கரையில், நறுமணம் கமழும் திருநீற்றுத் திருமேனியராக வீரட்டானத்தில் மேவும் சிவபெருமானைப் போற்றி உரைக்கிலேன். ஆகில், என் கண் உறங்காது.

541. உலந்தார் வெண்தலை உண்கல னாகவே
வல்நதான் மிக்கஅவ் வாளரக் கன்றனைச்
சிலம்பார் சேவடி யூன்றினான் வீரட்டம்
புலம்பேன் ஆகில்என் கண்துயில் கொள்ளுமே.

தெளிவுரை : இறந்தவர்களின் மண்டை ஓடுகளை உண்ணும் கலனாக உடைய சிவபெருமான், வலிமை மிக்க இராவணனுடைய தோளும் முடியும் நெரியுமாறு, சிலம்பு கொண்டு மேவும் செவ்விய அடியால் ஊன்றியவர். அப்பெருமான் வீற்றிருக்கும் வீரட்டானத்தை ஏத்திப் பக்தியால் தொழாது, என் கண் துயிலாது.

திருச்சிற்றம்பலம்

54. திருவதிகை வீரட்டம் (அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், திருவதிகை, கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

542. எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடி
மட்ட லர்இடு வார்வினை மாயுமால்
கட்டித் தேன்கலந் தன்ன கெடிலவீ
ரட்ட னார்அடி சேரும் அவருக்கே.

தெளிவுரை : கெடில வீரட்டானத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானை (அக மலராகிய) எட்டு புட்பங்கள் எனப்படும் கொல்லாமை. அருள், ஐம்பொறி அடக்கல், பொறை, தவம், வாய்மை, அன்பு, அறிவு ஆகியன கொண்டு தியானித்து ஏத்தியும்; தேன் வெள்ளெருக்கு, செண்பகம் நந்தியாவர்த்தம், நீலோத்பலம் (குவளை), பாதிரி, அலரி, செந்தாமரை ஆகிய கொண்டு அருச்சித்தும் விளங்கும் அன்பர்களுக்குக் கரும்புக் கட்டியுடன் தேன் கலந்ததைப் போல வளங்கி இனிமை தரும்.

543. நீள மாநினைந்து எண்மலர் இட்டவர்
கோள வல்வினையும் குறை விப்பரால்
வாள மாலிழி யும்கெடில விப்பரால்
வாள மாலிழி யும்கெடில லக்கரை
வேளி சூழ்ந்தடி காயவீ ரட்டரே.

தெளிவுரை : கெடில நதிக்கரையில் மேவும் அழகு மிகுந்த வீரட்டநாதரை இடைவிடாது நினைந்து ஏத்தி அட்ட மலர்களால் தூவி நின்று வழிபடும் அடியவர்களுடைய கொடிய வினை தீரும்.

544. கள்ளி னாண்மல ரோர்இரு நான்குகொண்டு
உள்கு வார்அவர் வல்வினை யோட்டுவார்
தெள்ளு நீர்வயல் பாய்கெடி லக்கரை
வெள்ளை நீறணி மேனிவீ ரட்டரே.

தெளிவுரை : தேன் விளங்கும், அன்று மலர்ந்த அட்டமலர்கள் கொண்டு ஏத்தி நினைத்து வழிபடுபவர்களுக்கு, வலிமை மிக்கதாய் இருந்து கொடுமைகளைப் புரியும் தீயவிகைள் யாவும் தீரும்படி செய்பவர், சிவபெருமான். அவர், தெளிந்த நீர் கொண்டு வயலில் பாயும் கெடில நதிக்கரையில், திருவெண்ணீற்று மேனியராகத் திகழும் வீரட்டநாதரே ஆவார்.

545. பூங்கொத் தாயின மூன்றொடடோர் ஐந்திட்டு
வாங்கி நின்றவர் வல்வினை யோட்டுவார்
வீங்கு தண்புனல் பாய்கெடி லக்கரை
வேங்கைத் தோலுடை யாடைவீ ரட்டரே.

தெளிவுரை : அட்ட மலர்கள் கொண்டு ஏத்தி நிற்கும் அடியவர்களுடைய தீய வினையானது, விரைந்து ஓடிச் செல்லுமாறு செய்பவர், சிவபெருமான். அவர், பெருகி வரும் குளிர்ந்த நீர் கொண்டு விளங்கும் கெடில நதிக்கரையில் புலித்தோலை உடையாகக் கொண்டு மேவும் வீரட்டநாதர் ஆவார்.

546. தேனப் போதுகள் மூன்றொடோர் ஐந்துடன்
தானப் போதுஇடு வார்வினை தீர்ப்பவர்
மீனத் தண்புனல் பாய்கெடி லக்கரை
வேன லானை யுரித்தவீ ரட்டரே.

தெளிவுரை : தேன் துளிர்க்கும் எட்டு மலர்களைக் கொண்டு தானே பூசித்து அருச்சனை செய்து வழிபடும் அடியவர்களுக்கு, வினை தீர்த்து அருள் புரிபவர் சிவபெருமான். அப்பெருமான் மீன்கள் விளங்கும் குளிர்ந்த நீர் பாயும் கெடில நதிக்கரையில்  யானையின் தோலை உரித்தவராகிய வீரட்டநாதர் ஆவார்.

547. ஏழித் தொன்மலர் கொண்டு பணிந்தவர்
ஊழித் தொல் வினை யோட அகற்றுவார்
பாழித் தண்புனல் பாய்கெடி லக்கரை
வேழத் தின்னுரி போர்த்தவீ ரட்டரே.

தெளிவுரை : அட்ட மலர் கொண்டு பணியும் அடியவர்களின் ஊழிதோறும் மேவிய தீவினைகளை ஓடுமாறு செய்து அகற்றுபவர் சிவபெருமான். அவர், குளிர்ந்த நீர் பாயும் கெடில நதிக்கரையில் யானையின் தோலைப் போர்த்தவராகிய வீரட்டநாதரே ஆவார்.

548. உரைசெய் நூல்வழி ஒண்மலர் எட்டிடத்
திரைகள் போல்வரு வல்வினை தீர்ப்பரால்
வரைகள் வந்திழி யும்கெடி லக்கரை
விரைகள் சூழ்ந்தழ காயவீ ரட்டரே.

தெளிவுரை : சிவாகம விதியில் உள்ளவாறு அட்ட புட்பங்களைக் கொண்டு பூசிக்கும் அடியவர்களுக்குக் கடல் அலைகள் போன்று அடுக்கடுக்காகச் சென்று வரும் தீயவினையைத் தீர்ப்பவர் சிவபெருமான். அவர், மலைகளிலிருந்து வாசனைப் பொருள்கள் நீரில் அடித்துக்கொண்டு வரும் நறுமணம் கமழும் கெடில நதிக்கரையில் மேவும் வீரட்டநாதரே ஆவார்.

549. ஒலிவண் டறைஒண் மலர் எட்டினால்
காலை யேத்த வினையைக் கழிப்பரால்
ஆலி வந்திழி யுங்கெடி லக்கரை
வேலி சூழ்ந்தழ காயவீ ரட்டரே.

தெளிவுரை : வண்டுகள் ரீங்காரம் செய்யும் எட்டு மலர் கொண்டு, காலையில் ஏத்தும் அடியவர்களின் வினையைத் தீர்ப்பவர், சிவபெருமான். அவர், ஆரவாரம் செய்து ஒலித்து முழங்கும் கெடில நதிக்கரையில், அழகாக மேவும் வீரட்டாநாதம் ஆவார்.

550. தாரித் துள்ளித் தடமலர் எட்டினால்
பாரித் தேத்தவல் லார்வினை பாற்றுவார்
மூரித் தெண்திரை பாய்கெடி லக்கரை
வேரிச் செஞ்சடை வேய்ந்தவீ ரட்டரே.

தெளிவுரை : மனத்தில் பூரிப்புடன் எட்டு மலர்கள் கொண்டு போற்றி ஏத்தும் அடியவர்களின் வினையைத் தீர்ப்பவர். சிவபெருமான். அவர், அலைகள் மிகுந்த கெடில நதியின் கரையில் செஞ்சடையின் தேன் மலர்களைச் சூடி மேவும் வீரட்டநாதர் ஆவார்.

551. அட்ட புட்பம் அவைகொளு மாறுகொண்டு
அட்ட மூர்த்தி அனதிதன் பாலணைந்து
அட்டு மாறுசெய் கிற்பஅ திகைவீ
ரட்ட னார்அடி சேரும் அவர்களே.

தெளிவுரை : ஈசனுக்கு உகந்ததாகிய சிறப்பு மிக்க அட்ட புட்பங்கள் கொண்டு, அட்ட மூர்த்தியாகவும் அனாதியாகவும் விளங்கும் இறைவனை நண்ணிப்  பிரியமுடன் பூசித்து வணங்குகின்ற அடியவர்கள், அதிகை வீரட்டநாதரின் திருவடி மலரில் சேர்ந்து மகிழ்பவர்கள் ஆவார்கள்.

திருச்சிற்றம்பலம்

55. திருநாரையூர் (அருள்மிகு சவுந்தர்யேஸ்வரர் திருக்கோயில், திருநாரையூர், கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

552. வீறு தானுடை வெற்பன் மடந்தையோர்
கூற னாகிலும் கூன்பிறை சூடிலும்
நாறு பூம்பொழில் நாரையூர் நம்பனுக்கு
ஆறு சூடலும் அம்ம அழகிதே.

தெளிவுரை : நறுமணம் கமழும் பூம்பொழில் சூழ்ந்த நாரையூரில் வீற்றிருக்கும் சிவபெருமான், வீரமிக்க இமாசல மன்னனின் புதல்வியாகிய உமாதேவியைத் தனது திருமேனியில் ஒரு கூறாகக் கொண்டு விளங்கியும், வளைந்து மேவும் பிறைச் சந்திரனையும் கங்கையையும் சடை முடியில் சூடியும் மிகுந்த அழகுடன் விளங்குபவர்.

553. புள்ளி கொண்ட புலியரி யாடையும்
வெள்ளி கொண்டவெண்பூதி மெய்யாடலும்
நள்ளி தெண்டிரை நாரையூ ரான்நஞ்சை
அள்ளி யுண்டலும் அம்ம அழகிதே.

தெளிவுரை : தெளிந்த நீர்வளம் கொண்ட நாரையூரில் மேவும் சிவபெருமான், புலித்தோலை ஆடையாகக் கொண்டும், வெண்மை திகழ விளங்குகின்ற திருநீற்றைத் திருமேனியில் குழையப் பூசியும், நஞ்சினை எடுத்து உண்டு கண்டத்தில் தேக்கியும், திருவிளையாடல் புரிந்து, மிகுந்த அழகு உடையவராகக் காட்சி நல்குபவர்.

554. வேடு தங்கிய வேடமும் வெண்தலை
ஓடு தங்கிய உண்பலி கொள்கையும்
நாடு தங்கிய நாரை யூரான் நடம்
ஆடு பைங்கழல் அம்ம அழகிதே.

தெளிவுரை : நாடு என்று சிறப்பாகக் கூறப்படும் தன்மைக்கு ஏற்றவாறு, எல்லா வளங்களையும் தன்னகத்தே கொண்டு விளங்குகின்ற நாரையூரில் வீற்றிருக்கும் சிவபெருமான், வேடுவனாகத் திருக்கோலம் தாங்கியவர்; பிரம கபாலத்தை ஏந்தி, உண்பதற்காகப் பலி ஏற்றவர்; திரு நடனம் புரியும் தன்மையில் அழகிய கழலை அணிந்து மேவுபவர். அப்பெருமான் வீற்றிருந்து காட்சி நல்கும் திருவழகுதான் என்னே !

555. கொக்கின் தூவலும் கூவிளங் கண்ணியும்
மிக்க வெண்டலை மாலை விரிசடை
நக்க னாகிலும் நாரையூர் நம்பனுக்கு
அக்கின் ஆரமும் அம்ம அழகிதே.

தெளிவுரை : நாரையூரில் வீற்றிருக்கின்ற சிவபெருமான், கொக்கு வடிவம் தாங்கிய அசுரனை வெற்றி கொண்ட செயலைக் காட்டும தன்மையில் கொக்கிறகைச் சூடி விளங்குபவர்; வில்வ இதழை மாலையாகக் கொண்டு விளங்குபவர்; மண்டை ஓடுகளை மாலையாகக் கொண்டு அணிந்திருப்பவர்; சடை முடியை விரித்தவராகித் திகம்பர ஆடையுடையவராகத் திகழ்பவர். எலும்பு மாலையணிந்தவர். அப்பெருமான் வீற்றிருக்கும் திருக்கோலம்தான் எத்தகைய அழகுடைத்து! இத் திருக்கோலமானது ஈசனின் அழகை நன்கு வெளிப்படுத்துவதாயிற்று என்பது குறிப்பு.

556. வடிகொள் வெண்மழு மான்அமர் கைகளும்
பொடிகொள் செம்பவ ளம்புரை மேனியும்
நடிகொள் நன்மயில் சேர்திரு நாரையூர்
அடிகள் தம் வடிவுஅம்ம அழகிதே.

தெளிவுரை : மயிலானது தோகையை விரித்து அழகாக நடனம் புரியுமாறு குளிர்ந்த சோலைகள் திகழும் திருநாரையூரில் மேவும் சிவபெருமான், வடித்ö தடுக்கப் பெற்ற ஒளிமிக்க கூரிய மழுவை உடையவர்; மானைக் கரத்தில் ஏந்தியர்; செம்பவளம் போன்ற திருமேனியின் திருவெண்ணீறு பூசி விளங்குபவர். அப் பெருமானின் திருக்கோலம்தான் எத்தனை அழகுடையது !

557. சூலம் மல்கிய கையும் சுடரொடு
பாலும் நெய்தயி ராடிய பான்மையும்
ஞாலம் மல்கிய நாரையூர் நம்பனுக்கு
ஆல நீழலும் அம்ம அழகிதே.

தெளிவுரை : உலகத்தில் எல்லா வளங்களும் பெருகி மேவும் நாரையூர் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் சிவபெருமான், சுடர் விடும் சூலத்தைக் கையில் ஏந்தியவர்; நெய்யும் பாலும் ஆகிய பஞ்ச கௌவியத்தால் அபிடேகம் கொண்டு பூசிக்கப் பெறுபவர்; ஆல் நிழலில் வீற்றிருந்து அறப் பொருளைச் சனகாதி முனிவர்களுக்கு உபதேசித்து அருளியவர். அப் பெருமான், விளங்குகின்ற திருக்காட்சியினை நல்கும் அழகுதான் என்னே !

558. பண்ணி ணால்மறை பாடலோடு ஆடலும்
எண்ணி லார்புரம் மூன்றெரி செய்ததும்
நண்ணி னார்துயர் தீர்த்தலும் நாரையூர்
அண்ண லார்செய்கை அம்ம அழகிதே.

தெளிவுரை : நாரையூர் மேவி வீற்றிருக்கும் சிவ பெருமான், பண்ணின் இசை விளங்க நான்கு வேதங்களைப் பாடியும் திரு நடனம் ஆடியும் உகப்பவர்; சிவத் தியானத்தை மேவாத அசுரர்களின் மூன்று புரங்களை எரித்துச் சாம்பலாக்கியவர்; நண்ணி ஏத்தும் அடியவர்களுடைய துயரைத் தீர்த்தருள் புரிபவர். அண்ணலாகிய அப்பெருமானுடைய அருள் வண்ணம்தான் என்னே அழகுடைத்து !

559. என்பு பூண்டெருது ஏறி இளம்பிறை
மின்பு ரிந்த சடைமேல் விளங்கவே
நன்ப கற்பலி தேரினும் நாரையூர்
அன்ப னுக்குஅது அம்ம அழகிதே.

தெளிவுரை : நாரையூரில் மேவும் சிவபெருமான, எலும்பு மாலை பூண்டு, மின்னல் போன்று ஒளிரும் சடை முடியில் இளமையான பிறைச் சந்திரனைச் சூடி, இடபத்தின் ஏறி விளங்கி, நல்ல பகல் நேரத்தில் பலி ஏற்றுத் திரிபவர். அப்பெருமானுக்கு, அத்தகைய செயலானது மிகுந்த அழகினைத் தோற்றுவித்தது. இது, சிவபெருமான் அன்பின் வயத்தராய் விளங்கி, மன்னுயிர்களை மகிழ்வித்தலைப் புரியும் அன்பின் அழகினை வியந்து ஏத்துதலாயிற்று.

560. முரலும் கின்னரம் மொந்தை முழங்கவே
இரவில் நின்று எரியாடலும் நீடுலாம்
நரலும் வாரிநல் நாரையூர் நம்பனுக்கு
அரவும் பூணுதல் அம்ம அழகிதே.

தெளிவுரை : கடலின் ஒலி போன்று நன்று ஆர்த்தல் ஒலியுடைய நாரையூரில் மேவும் சிவபெருமான், கின்னரத்தின் இசையும் மொந்தையின் முழக்கமும் திகழ, இரவில் நெருப்பினைக் கையில் ஏந்தி நின்று, நடனம் புரிபவர். அப்பெருமான், அரவத்தை ஆபரணமாகக் கொண்டு மேவும் அழகுதான் என்னே !

561. கடுக்கை அம்சடை யன்கயி லைம்மலை
எடுத்த வாளரக் கன்தலை யீரைஞ்சும்
நடுக்கம் வந்திற நாரையூ ரான்விரல்
அடுத்த தன்மையும் அம்ம அழகிதே.

தெளிவுரை : ஈசன், கயிலைமலையை எடுத்த இராவணனுடைய பத்துத் தலையும் நடுக்கம் கொண்டு நையுமாறு திருப்பாத விரலை ஊன்றி நெரித்தவர். அப்பெருமான், சடைமுடியில் கொன்றை மாலை புனைந்த தன்மையும், திருவிரலைக் கொண்டு ஆண்ட திறமும், மிக்க பெருமையுடையது.

திருச்சிற்றம்பலம்

56. திருக்கோளிலி (அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

562. மைக்கொள் கண்ணுமை பங்கினன் மான்மழுத்
தொக்க கையினன் செய்யதோர் சோதியன்
கொக்க மர்பொழில் சூழ்தரு கோளிலி
நக்க னைத்தொழ நம்வினை நாசமே.

தெளிவுரை : சிவபெருமான், மை திகழும் கண்ணுடைய உமா தேவியைப் பாகமாகக் கொண்டு விளங்குபவர்; மானும் மழுவும் கையில் ஏந்தி இருப்பவர்; சிவந்த வண்ணத்தில் மேவும் ஒளி வடிவானவர்; மாமரங்கள் நிறைந்த பொழில் சூழ்ந்த கோளிலி என்னும் நகரில் வீற்றிருக்கும் நக்கர். அப் பெருமானைக் கைதொழுது ஏத்த, நமது வினை யாவும் கெடும்.

563.  முத்தி னைமுத லாகிய மூர்த்தியை
வித்தி னைவிளை வாய விகிர்தனைக்
கொத்த லர்பொழில் சூழ்தரு கோளிலி
அத்த னைத்தொழ நீங்கும் நம் அல்லலே.

தெளிவுரை : சிவபெருமான், திரண்டு எழும் முத்துப் போன்றவர்; உலகத்தின் முதலாகத் திகழும் மூர்த்தியானவர்; யாவற்றுக்கும் வித்தாகவும், அது பெருகி மேவி விளங்குகின்ற விளைவாகவும் மேவும் விகிர்தன்; கொத்தாகப் பூக்கும் பொழில் சூழ்ந்த கோளிலியில் வீற்றிருப்பவர். அப்பெருமான், அத்தனாகி விளங்க, அவரைத் தொழுது ஏத்த நம் அல்லல் யாவும் நீங்கும்.

564. வெண்தி ரைப்பர வைவிடம் உண்ட தோர்
கண்ட னைக்கலந் தார்தமக்கு அன்பனைக்
கொண்ட லம்பொழிற் கோளிலி மேவிய
அண்ட னைத்தொழு வார்க்கு அல்லல் இல்லையே.

தெளிவுரை : சிவபெருமான், வெண்மையான அலைகளையுடைய பாற்கடலைக் கடைந்தபோது முதற்கண் வெளிப்பட்ட விடத்தை உண்டு, கரிய கண்டத்தினராக விளங்கியவர்; உள்ளம் ஒன்றி ஏத்தித் தொழுகின்ற அன்பர்களுக்கு அன்புடையவர்; மேகம் சூழ்ந்த அழகிய பொழில் கொண்ட கோளிலியில் வீற்றிருப்பவர். அப்பெருமானைத் தொழுபவர்களுக்கு அல்லல் என்பது இல்லை.

565. பலவும் வல்வினை பாறும் பரிசினால்
உலவும் கங்கையும் திங்களும் ஒண்சடை
குலவி னான்குளி ரும்பொழிற் கோளிலி
நிலவி னான்றனை நித்தல் நினைமினே.

தெளிவுரை : சிவபெருமான், மன்னுயிர்களின் கொடிய வினைகள் பலவற்றையும் தீர்த்தருளும் கருத்தின் வழியாகக் கங்கையையும், சந்திரனையும் ஒளிமிக்க தனது சடை முடியில் தரித்து விளங்குபவர். அப் பெருமான், குளிர்ச்சியுடன் மேவும் பொழில் சூழ்ந்த கோளிலியில் வீற்றிருப்பவர். அப் பரமனைத் தினந்தோறும் நினைத்து ஏத்துவீராக.

566. அல்ல லாயின தீரும் அழகிய
முல்லை வெண்முறு வல்உமை அஞ்சவே
கொல்லை யானை உரித்தவன் கோளிலிச்
செல்வன் சேவடி சென்று தொழுமினே.

தெளிவுரை : உமாதேவி அச்சம் கொண்டு அயர்ந்து நிற்குமாறு, கொலைத் தன்மையுடைய யானையின் தோலை உரித்து அழித்து, அதன் தோலைப் போர்த்திக் கொண்டவர், சிவபெருமான். அப்பெருமான் வீற்றிருக்கும் கோளிலி என்னும் நகரைச் சென்றடைந்து அச்செல்வனின் செம்மையுடைய திருவடியைக் கைதொழுது ஏத்துக. உமது அல்லல் யாவும் தீரும்.

567. ஆவின் பால்கண் டளவில் அருந்தவப்
பாலன் வேண்டலும் செல்லென்று பாற்கடல்
கூவி னான்குளி ரும்பொழிற் கோளிலி
மேவி னானைத் தொழவினை வீடுமே.

தெளிவுரை : உபமன்யு முனிவர் குழந்தையாக இருந்தகாலை, காமதேனுவின் பால் உண்டு மகிழப் பின்னும் பால் வேண்டி அழுதிடப் பாற்கடலைத் தந்தருளியவர் சிவபெருமான். அப் பெருமான் வீற்றிருக்கும் குளிர்ந்த பொழில் விளங்கும் கோளிலியைச் சென்றடைந்து அப்பரமனைத் தொழ, வினை வீழ்ச்சியுறும்.

568. சீர்த்த நன்மனை யாளும் சிறுவரும்
ஆர்த்த சுற்றமும் பற்றிலை யாதலால்
கூத்த னார்உறை யும்திருக் கோளிலி
ஏத்தி நீர்தொழு மின்இடம் தீருமே.

தெளிவுரை : நெஞ்சமே ! சிறப்புடன் அன்பு காத்து விளங்கும் மனைவியும், மக்களும் மற்றும் குழுமியிருந்து பொருந்தும் சுற்றத்தினரும், இந்த உயிரைப் பற்றி நிற்பதில்லை. திருநடனம் புரியும் சிவபெருமான் உறையும் திருக்கோளிலி சென்று ஏத்திக் கைதொழுது வணங்குக. அதுதான் இடரைத் தீர்க்கவல்ல செயலாகும்.

569. மால தாகி மயங்கும் மனிதர்காள்
காலம் வந்து கடைமுடியா முனம்
கோல வார் பொழில் கோளிலி மேவிய
நீல கண்டனை நின்று நினைமினே.

தெளிவுரை : உலகியலில் பற்றுகொண்டு மேவி அதில் மயங்குகின்ற மனிதர்காள் ? இச் சரீரத்தினைக் கொண்டு வாழும் வாழ்க்கையானது இறுதி யடைவதற்கு முன்னால், அழகிய நீண்ட பொழில் சூழ்ந்த கோளிலியில் மேவும் நீலகண்டப் பெருமானாகிய ஈசனை நெஞ்சில் நிலை நிறுத்தி ஏத்துவீராக.

570. கேடு மூடிக் கிடந்து ண்ணு நாடது
தேடி நீர்திரி யாதே சிவகதி
கூட லாம்திருக் கோளிலி யீசனைப்
பாடு மின்இர வோடு பகலுமே.

தெளிவுரை : உலகில் தீய வினைகளும் கேடுகளும் சூழக் கிடந்து அவற்றில் முழுகித் திரியாதும் உண்ணும் உணவையே குறியாகக் கொள்ளாதும் திருக்கோளிலியில் வீற்றிருக்கும் சிவபெருமானை, இரவும் பகலும் ஏத்திப் பாடுவீராக.

571. மடுத்து மாமலை யேந்தலுற் றான்றனை
அடர்த்துப் பின்னும் இரங்கி அவற்கருள்
கொடுத்த வன்உறை கோளிலி யேதொழ
விடுத்து நீங்கிடும் மேலை வினைகளே.

தெளிவுரை : பெருமை மிகுந்த கயிலை மலையை ஏந்திய இராவணனைத் திருப்பாதத்தால் அடர்த்துப் பின்னர் இரக்கம் கொண்டு அருள் செய்து, வாழும் வாழ்நாளும் வழங்கியவர், சிவபெருமான். அப்பெருமான் உறைகின்ற கோளிலியைக் கை தொழுது ஏத்த, மேலை வினைகளாகிய சஞ்சித வினைகள் யாவும் தீரும்.

திருச்சிற்றம்பலம்

57. திருக்கோளிலி (அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

572.  முன்ன மேநினை யாதொழிந் தேன்உனை
இன்னம் நானுன சேவடி யேத்திலேன்
செந்நெல் ஆர்வயல் சூழ்திருக் கோளிலி
மன்னனேஅடி யேனை மறவலே.

தெளிவுரை : செந்நெல் விளங்கும் வயல் சூழ்ந்த திருக்கோளிலியில் வீற்றிருக்கும் இறைவனே ! நான், தேவரீரை முன்னரே நினைந்து ஏத்தாதவனானேன். இன்னமும் திருவடியை ஏத்திலேன். ஆயினும், பெருமானே ! அடியேனை மறவாது காத்தருள் புரிவீராக.

573. விண்ணு ளார்தொழுது ஏத்தும் விளக்கினை
மண்ணு ளார்வினை தீர்க்கும் மருந்தினைப்
பண்ணு ளார்பயிலுந்திருக் கோளிலி
அண்ண லார்அடி யேதொழுது உய்ம்மினே.

தெளிவுரை : சிவபெருமான், தேவர்கள் தொழுது ஏத்தும் ஒளி வடிவானவர்; மண்ணுலகத்து மாந்தர் தம் வினையைத் தீர்க்கும் மருந்தாக விளங்குபவர்; பண்ணின் இசை பெருகப் பாடும் அடியவர்கள் திகழும் திருக்கோளிலியில் வீற்றிருக்கும் அண்ணல் ஆவார். அப் பெருமானின் திருவடியைத் தொழுது உய்ம்மின்.

574. நாளும் நம்முடை நாள்கள் அறிகிலோம்
ஆளும் நோய்கள்ஓர் ஐம்பதோடு ஆறெட்டும்
ஏழைமைப்பட் டிருந்துநீர் நையாதே
கோளிலி அரன் பாதமே கூறுமே.

தெளிவுரை : நெஞ்சமே ! நம்முடைய வாழ்நாட்களை எத்துணைத்து என அறியும் அறிவு. நமக்கு இல்லை. நம்மை நெருங்கி வருத்தி, அடிமையாக்கித் துன்புறுத்தும் நோய்களும் பலவாகும். இத்தகைய அறியாமை கொண்டு நீ நைந்து வருந்தாது. கோளிலியில் மேவும் சிவபெருமானின் திருப்பாத மலரை ஏத்துக.

575. விழவின் ஓசை ஒலி யறாத் தண்பொழில்
பழகி னார்வினை தீர்க்கும் பழம்பதி
அழல்கை யான்அமரும் திருக் கோளிலிக்
குழக னார்தருப் பாதமே கூறுமே.

தெளிவுரை : திருக்கோளிலி என்னும் பழைமைமிக்க பதியானது, விழாக்களின் ஆரவாரம் ஓய்வின்றி விளங்கும் தன்மையுடையது. குளிர்ந்த பொழில்கள் சூழ விளங்குவது. அத்தலத்தில் நிலவுகின்றவர்களுடைய வினையைத் தீர்த்து அருள் செய்யும் ஆற்றல் உடையது. நெருப்பைக் கையில் ஏந்திய சிவபெருமான் ஆங்கு வீற்றிருக்க, அவருடைய திருப்பாதத்தை ஏத்தி உரைப்பீராக.

576. மூல மாகிய மூவர்க்கும் மூர்த்தியைக்
கால னாகிய காவற்கும் காலனைக்
கோல மாம்பொழில் சூழ்திருக் கோளிலிச்
சூல பாணிதால் பாதம் தொழுமினே.

தெளிவுரை : சிவபெருமான், மூவர்களுக்கும் மூலமாகியும் மூர்த்தியாகவும் விளங்குபவர்; உயிர்கள் யாவற்றையும் கவர்ந்து செல்லும் காலனுக்கும் காலனாகுபவர், அப்பெருமான், அழகிய பொழில் சூழ்ந்த திருக்கோளிலியில் சூலத்தைக் கையில் தரித்து விளங்குபவர், அப்பரமனுடைய திருப்பாத மலரøக் கை தொழுது ஏத்துக. இதுவே உய்யும் வழி என்பது குறிப்பு.

577. காற்ற னைக்கடல் நஞ்சமுத உண்டவெண்
நீற்ற னைநிமிர் புன்சடை அண்ணலை
ஆற்ற னைஅம ருத்திருக் கோயில்
ஏற்ற னார்அடி யேதொழுது ஏத்துமே.

தெளிவுரை : சிவபெருமான், அட்ட மூர்த்தங்களுள் ஒன்றாகிய காற்று வடிவானவர்; கடலில் தோன்றி நஞ்சினைத் தனக்கு அமுதம் எனக் கொண்டு உண்டவர்; திருவெண்ணீறு பூசி விளங்குபவர். மெல்லிய சடையுடைய அண்ணல், கங்கையைத் என்னும் தலத்தில் இடப வாகனத்தை உடையவராகி வீற்றிருப்பவர். அவருடைய திருவடியைத் தொழுது ஏத்துவீராக.

578. வேத மாயவிண் ணோர்கள் லைவனை
ஓதி மான்னுயிர் ஏத்தும் ஒருவனைக்
கோதி வண்டறை யும்திருக் கோளிலி
வேத நாயகன் பாதம் வரும்புமே.

தெளிவுரை : சிவபெருமான், வேதமாகத் திகழ்பவர்; தேவர்களின் தலைவராகித் காத்தருள்பவர்; உலகத்தில் உள்ள உயிர்களால் ஏத்தி வழிபடப் பெறுபவர்; வண்டுகள் ரீங்காரம் செய்யும் சோலைகள் திகழும் திருக்கோளிலியில் வீற்றிருக்கும் வேத நாயகர். அப் பரமனுடைய திருப்பாத மலரை ஏத்தி விரும்பித் தொழுவீராக.

579. நீதியால் தொழு வார்கள் தலைவனை
வாதை யான விடுக்கும் மணியினைக்
கோதி வண்டிறை யும்திருக் கோளிலி
வேத நாயகன் பாதம் விரும்புமே.

தெளிவுரை : சிவபெருமான், சிவாகமத்தில் விதித்தவாறு தொழுது ஏத்தும் அடியவர்கள் துன்புறாதபடி. காத்து விளங்கும் மணி போன்றவர். அவர் வண்டுகள் ஒலிக்குக விளங்கும் சோலைகள் உடைய திருக்கோளிலியில் வேத நாயகராகத் திகழ்பவர். அப் பரமனுடைய திருப்பாத மலரை விரும்பி ஏத்துவீராக.

580. மாலும் நான்முக னாலும் அறிவொணாப்
பாலின் மென்மொழி யாள்ஒரு பங்கனைக்
கோல மாம்பொழில்  சூழ்திருக் கோளிலி
நீல கண்டனை நித்தல் நினைமினே.

தெளிவுரை : திருமாலும் நான்முகனும் தேடி அலைவதற்கு அரியவராக விளங்குபவர் சிவபெருமான். அப்பரமன், பாலினும் மென்மையான மொழியுடைய உமாதேவியைத் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு அம்மையப்பராக விளங்குபவர். அவர், அழகிய பொழில் சூழ்ந்த திருக்கோளிலியில் வீற்றிருப்பவர். அப்பரமன், கருணைக் கடலாகிய வண்ணம் திகழும் நீலகண்டத்தினராக விளங்க, நாள்தோறும் நினைந்து ஏத்துவீராக

581. அரக்க னாய இலங்கையர் மன்னனை
நெருக்கி அம்முடி பத்திறுத் தான்அவற்கு
இரக்க மாகிய வன்திருக் கோளிலி
அருத்தி யாய்அடி யேதொழுது உய்ம்மினே.

தெளிவுரை : அரக்கனாகிய இராவணனைத் திருப்பாதத்தால் கயிலையை ஊன்றி நெருக்கி, அவனுடைய பத்து முடிகளும் நலியுமா செய்து, பின்னர் அவன் ஏத்திப் பாடிப் போற்ற, இரக்கம் கொண்டு அருள் செய்த சிவபெருமான், திருக்கோளிலியில் வீற்றிருப்பவர். அப்பெருமானை அன்பினால் தொழுது, திருவடியை வணங்கி உய்வீராக.

திருச்சிற்றம்பலம்

58. திருப்பழையாறை வடதளி (அருள்மிகு சோமேசர் திருக்கோயில், கீழ்பழையாறை வடதளி,தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

582. தலையெ லாம்பறிக் கும்சமண் கையருள்
நிலையி னான்மறைத் தான்மறைக் கொண்ணுமே
அலையி னார்பொழிலாறை வடதளி
நிலையி னான்அடியே நினைந்து உய்ம்மினே.

தெளிவுரை : சமணர்கள் சூழ்ச்சி கொண்டு பழையாறை வடதளியில் நிலைத்து மேவும் பெருமானை மறைத்து வைத்து ஒல்லுமோ ! ஆங்கு வீற்றிருக்கும் ஈசனை, ஏத்தி உய்வு பெறுவாயாக.

583. மூக்கி னால்முரன்று ஓதியக் குண்டிகை
தூக்கி னார்குலம் தூரறுத் தேதனக்கு
ஆக்கி னான்அணி யாறை வடதளி
நோக்கி னார்க்குஇல்லை யால்அரு நோய்ளே.

தெளிவுரை : சமணர்களால் தூர்த்து மூடப்பெற்ற தனியைத் தனக்கு உரித்தாக்கி, மீண்டும் விளங்கச் செய்து மேவிய ஈசனின் பழøயாறை வடதளியைத் தரிசித்தவர்களுக்குத் துன்பம் தருகின்ற நோய் எதுவும் அணுகாது.

584. குண்டரைக் குண மில் லரைக் கூறையில்
மிண்ட ரைத் துரந்த விமலன்றனை
அண்ட ரைப் பழை யாறை வடதளிக்
கண்ட ரைத் தொழுது உய்ந்தன கைகளே.

தெளிவுரை : சமணர்கள் சிவ வழிபாடு செய்யாத தன்மையால் சிவபெருமானைத் தொழாது நீங்கியவர்களாயினர். தேவர் தலைவராகவும், நீலகண்டராகவும் விளங்குகின்ற அப் பரமனைப் பழையாறை வடதளியில் கண்டு தரிசித்துக் கைதொழுது ஏத்திய கைகள் உய்ந்தன.

585. முடைய ரைத்தலை முண்டிக்கும் மொட்டரைக்
கடைய ரைக்கடிந் தார்கனல் வெண்மழுப்
படைய ரைப்பழை யாறை வடதளி
உடைய ரைக்குளிர்ந் துள்கும்என் உள்ளமே.

தெளிவுரை : சைவத்திற்குப் புறம்பாகிய சமணரை நீக்கியவர் சிவபெருமான். அவர், ஒளிர் தரும் மழுப்படையுடையவர்; பழையாறை வடதளியில் வீற்றிருப்பவர். அப் பெருமானை எனது உள்ளமானது குளிர்ந்து ஏத்தும்.

586. ஒள்ள ரிக்கணார் முன்னமண் நின்றுணும்
கள்ள ரைக்கடிந்தகருப் பூறலை
அள்ளல் அம்புனல் ஆறை வடதளி
வள்ள லைப் புகழத்துயர் வாடுமே.

தெளிவுரை : சிவபெருமான், தன்னைக் கருதாத சமணர்களை நீக்கியவர். அவர், கரும்பின் சாறு பெருகிச் சேறாகி நீரில் வளமும் கொண்டு மேவும் பழையாறை வடதளியில் வள்ளலாக வீற்றிருப்பவர். அப் பெருமானைப் புகழ்ந்து ஏத்த, எல்லாத் துயரும் தீரும்.

587. நீதி யைக்கெட நின்றம ணேயுணும்
சாதி யைக்கெடு மாசெய்த சங்கரன்
ஆதி யைப்பழை யாறை வடதளிச்
சோதி யைத்தொழு வார்துயர் தீருமே.

தெளிவுரை : சிவாகம முறையில் சாராது நீதியற்றவராக உள்ளவர்களை நீங்கி மேவும் சிவபெருமான், உயிர்களுக்கு இன்பம் வழங்குபவராகவும், ஆதி மூர்த்தியாகவும், பழையாறை வட தளியின் சோதியாகவும் ஒளிர்பவர். அப்பெருமானைத் தொழுபவர்களுடைய துயர் யாவும் தீரும்.

588. திரட்டி ரைக்க வளந்திணிக் கும்சமண்
பிரட்ட ரைப்பிரித் தபெரு மான்றனை
அருட் டிறத்தணி யாறை வடதளித்
தெருட்ட ரைத்தொழத் தீவினை தீருமே.

தெளிவுரை : உணவின் மீது பற்றுக் கொண்டு அக் கவளத்தை உண்டு களிக்கும் சமணரை நீங்குமாறு செய்த சிவபெருமான், அருள் திறத்தினை அணியெனப் பழையாறை வடதளியில் மெய்க்கடவுளாக வீற்றிருப்பவர். அப்பரமனைக் கைதொழுது ஏத்த தீவினை யாவும் தீரும்.

589. ஓதி னத்தெழுத்து அஞ்சு உண ராச்சமண்
வேதி னைப்படுத் தானைவெங் கூற்றுதை
பாத னைப்பழை யாறை வடதளி
நாத னைத்தொழ நம்வினை நாசமே.

தெளிவுரை : ஓதும் திருவைந்தெழுத்தினை உணராத சமணரை வெம்மையுறச் செய்த சிவபெருமான், கொடிய கூற்றுவளை உதைத்து அழித்தவர்; பழையாறை வடதளியில் வீற்றிருக்கும் நாதர். அப் பரமனின் திருவடிøய் தொழுது ஏத்த, நம் வினை யாவும் நீங்கும்.

590. வாயி ருந்தமி ழேபடித் தாளுறா
ஆயி ரம்சம ணும்அழி வாக்கினான்
பாயி ரும்புனல் ஆறை வடதளி
மேய வன்னென வல்வினை வீடுமே.

தெளிவுரை : சொல்லச் சொல்லத் தேன் போன்று இனிமை தரும் தமிழ் மொழியைக் கற்று, அதற்குரியவராகிய சிவபெருமானுக்கு ஆளாகி நில்லாத சமணர்கள், உய்வு கொள்ளாதவராயினர். அத்தகைய பெருமையுடைய ஈசன், நீர் வளம் பெருகும் பழையாறை வடதளியில் வீற்றிருப்பவர். அப் பரமனை ஏத்தி நிற்கக் கொடிய வினை யாவும் தீரும்.

591. செருத்த னைச்செயும் சேணரக் கன்னுடல்
எருத்தி றவிர லால்இறை ஊன்றிய
அருத்த னைப்பழை யாறை வடதளித்
திருத்த னைத் தொழு வார்வினை தேயுமே.

தெளிவுரை : போர் செய்யும் இயல்புடைய அரக்கனாகிய இராவணனுடைய தலையும் தோளும் நலியுமாறு, தனது திருப்பாத விராலால் ஊன்றிய சிவபெருமான், பழையாறை வடதளியில் மன்னுயிர்களை பக்குவ நெறியில் சேர்த்து இன்னருள் புரிபவராக விளங்குபவர். அப்பரமனைத் தொழுபவர்களுக்கு, எல்லா வினையும் தேய்ந்து இல்லாமையாகும்.

திருச்சிற்றம்பலம்

59. திருமாற்பேறு (அருள்மிகு மணிகண்டீஸ்வரர் திருக்கோயில், திருமால்பூர், வேலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

592. பொருமாற் றின்படை வேண்டிநற் பூம்புனல்
வருமாற் றின்மலர் கொண்டு வழிபடும்
கரு மாற்குஇன்னருள் செய்தவன் காண்தகு
திரு மாற்பேறு தொழவினை தேயுமே.

தெளிவுரை : உலகத்தைக் காத்தருளும் தன்மையில், அதற்கு இடர் செய்பவர்களைப் போர் புரிந்து அழிக்கும் ஆற்றல் உடையதாகிய சக்கரப் படையைப் பெற வேண்டும் என்னும் நோக்கத்தில், நல்ல நெறி முறையின்படி தாமரை மலர் கொண்டு, ஈசனை வழிபாடு செய்தவர் திருமால். அவருக்கு இனிய அருள்புரிந்த சிவபெருமான், திருகாட்சி நல்கி மேவும் திருமாற்பேறு என்னும் தலத்தைத் தொழுது ஏத்த, நம் வினையானது தேய்ந்து அழியும்.

593. ஆலத் தார்நிழலில் அறம் நால்வர்க்குக்
கோலத் தால்உரை செய்தவன் குற்றமில்
மாலுக்கு ஆர்அருள் செய்தவன் மாற்பேறு
ஏலத் தான்தொழு வார்க்குஇடர் இல்லையே.

தெளிவுரை : சிவபெருமான், ஆல மரத்தின் நிழலில் வீற்றிருந்து, சனகாதி முனிவர்களாகிய நால்வர்க்கு அறப் பொருளைத் தட்சிணாமூர்த்தியின் திருக்கோலம் தாங்கி, உணர்த்தியருளியவர். அப்பெருமான், குற்றம் இல்லாத திருமாலுக்குச் சிறந்த அருள் செய்வராய்த் திருமாற் பேற்றில் வீற்றிருக்க, இருகரம் கூப்பிக் கைதொழும் அடியவர்களுக்கு, உலகில் இடர் இல்லை.

594. துணிவண் ணச்சுடர் ஆழிகொள் வான்எண்ணி
அணிவண் ணத்துஅலர் கொண்டுஅடி அர்ச்சித்த
மணிவண் ணற்கருள் செய்தவன் மாற்பேறு
பணிவண் ணத்தவர்க்கு இல்லையாம் பாவமே.

தெளிவுரை : உலகினைக் காத்தருளும் தன்மையில், இடர் செய்யும் தீயவர்களை அழிக்கும் ஆற்றலுடைய சுடர் மிகும் ஆழிப்படையைப் பெறுகின்ற நோக்கத்துடன், தாமரை மலர்களால் சிவபெருமானின் திருவடியை அருச்சித்து ஏத்தியவர், திருமால். அவருக்கு அருள் செய்த ஈசன் மேவும் மாற்பேறு என்னும் திருத்தலத்தைப் பணிந்து ஏத்துபவர்களுக்குப் பாவம் அணுகாது.

595. தீதவை செய்து தீவினை வீழாதே
காதல் செய்து கருத்தினில் நின்றநன்
மாத வர்பயில் மாற்பேறு கைதொழப்
பேஆது மின்வினை யாயின் போகுமே.

தெளிவுரை : நெஞ்சமே ! பாவம் தரும் தீய செயல்களைச் செய்து, தீய வினையை ஏற்றுத் துன்பத்தில் வீழ்ந்து உழலாதே. பெருமைமிக்க தவத்தை மேற்கொண்ட தவச் சீலர்கள், அன்புடன் மேவி, நெஞ்சம் பொருந்தி ஒன்றுமாறு வணங்கி நிற்க, அருள் வழங்கும் சிவ பெருமான் வீற்றிருக்கும் திருமாற்பேற்றைத் தொழுது ஏத்துக. அதுவே வினை தீர்வதற்கு உரிய வழி.

596. வார்கொள் மென்முலை மங்கையொர் பங்கினன்
வார்கொள் நன்முர சம்அறை யவ்வறை
வார்கொள் பைம்பொழில் மாற்பேறு கைதொழு
வார்கள் மன்னுவர் பொன்னுல கத்திலே.

தெளிவுரை : கச்சு அணிந்து மேவும் உமாதேவியாரைத் திருமேனியில் பாகமாகக் கொண்டு, நல்ல முரசொலியும் அழகிய பொழிலில் வண்டுகளின் ரீங்காரமும் ஒலிக்க விளங்கும் மாற்பேற்றில் வீற்றிருக்கும் சிவபெருமானைக் கைதொழுது ஏத்தும் அடியவர்கள், தேவர் உலகத்தில் சிறப்புடன் விளங்குவார்கள்.

597. பண்டை வல்வினை பற்றறுக் கும்வகை
உண்டு சொல்லுவன் கேண்மின் ஒளிகிளர்
வண்டு சேர்பொழில் சூழ்திரு மாற்பேறு
கண்டு கைதொழத் தீருங் கவலையே.

தெளிவுரை : நெஞ்சமே ! முற்பிறவிகளில் செய்த கொடிய வினையாகிய சஞ்சித கன்மத்தின் பிடியிலிருந்து விடுபடும் வழியினைக் கூறுகின்றேன், கேட்பாயாக ! ஒளி திகழும் மலர்களில் வண்டுகள் ரீங்காரம் செய்து விளங்குகின்ற பொழில் சூழ்ந்த திருமாற்பேறு என்னும் திருத்தலத்தைச் சென்றடைந்து கைதொழுது ஏத்துவாயாக ! எல்லாக் கவலையும் தீரும்.

598. மழுவ லான்திரு நாமம் மகிழ்ந்துரைத்து
அழவ லார்களுக்கு அன்புசெய்து இன்பொடும்
வழுவி லாஅருள் செய்தவன் மாற்பேறு
தொழவ லாரதமக்கு இல்லை துயரமே.

தெளிவுரை : சிவபெருமான், வலிமையுடைய மழுப் படையுடையவர்; திருவைந்தெழுத்தை மகிழ்ந்து உரைத்து, அன்பின் மிக்கவராகிக் கசிந்து கண்ணீர் மல்கி உருகி ஏத்தும் அடியவர்களுக்கு, அன்புடன் விளங்கிப் பேரின்பத்தை அளிப்பவர்; அத்தகைய அடியவர்கள் துயரம் கொள்ளாதவாறு, குறைவற்ற அருள் புரிபவர். அப்பரமன் வீற்றிருக்கும் திருமாற் பேற்றைத் தொழ வல்லவர்களுக்குத் துயரம் இல்லை.

599. முன்ன வன்உல குக்கு முழுமணிப்
பொன்ன வன்திகழ் முத்தொடு போகமாம்
மன்ன வன்திரு மாற்பேறு கைதொழும்
அன்ன வர்எமை யாளுடை யார்களே.

தெளிவுரை : சிவபெருமான், ஆதிமூர்த்தியாகவும் உலகில் மணியொளியாகவும், அழகுடன் ஒளிரும் பொன்னாகவும், திகழும் திரண்ட முத்தாகவும், உயிர்களுக்குப் போகம் தரும் தலைவனாகவும் விளங்குபவர். அப்பெருமான் வீற்றிருக்கும் திருமாற்பேற்றைக் கைதொழுது ஏத்தும் அடியவர்கள், எம்மை ஆளாக உடைய பெருமக்கள் ஆவர்.

600. வேட னாய்விச யன்னொடும் எய்துவெம்
காடு நீடுகந்து ஆடிய கண்ணுதல்
மாட நீடுய ருந்திரு மாற்பேறு
பாடு வார்பெறு வார்பர லோகமே.

தெளிவுரை : சிவபெருமான், வேட்டுவத் திருக்கோலம் கொண்டு, வெம்மை மிகுந்த காட்டில் விசயன்பால் பெரும் மகிழ்வுடன் நின்று போர் செய்து திருவிளையாடல் புரிந்தவர். அப் பெருமான், மாட மாளிகைகள் திகழும் திருமாற்பேற்றில் வீற்றிருக்க, அப்பரமனைத் துதி செய்து பாடிப் போற்றுகின்றவர்களுக்குத் தனது உலகினை அளித்து உய்விப்பவராவர்.

601. கருத்த னாய்க் கயி லாய மலைதனைத்
தருக்கி னால்எடுத் தானைத் தகரவே
வருத்தி யாரருள் செய்தவன் மாற்பேறு
அருத்தி யால்தொழு வார்க்குஇல்லை அல்லலே.

தெளிவுரை : திருக்கயிலை மலையைச் செருக்குடன் எடுத்த அரக்கனாகிய இராவணன் அலறுமாறு நெரித்து, பின்னர் அவன் ஏத்திப் போற்ற அருள் புரிந்தவர், திருமாற்பேற்றில் வீற்றிருக்கும் சிவ பெருமான். அப் பரமனை, அன்புடன் தொழுபவர்களுக்கு அல்லல் இல்லை.

திருச்சிற்றம்பலம்

60. திருமாற்பேறு (அருள்மிகு மணிகண்டீஸ்வரர் திருக்கோயில், திருமால்பூர், வேலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

602. ஏதும் ஒன்றும் அறிவிலர் ஆயினும்
ஓதி அஞ்செழுத்தும் உணர் வார்கட்குப்
பேதம் இன்றி அவரவர் உள்ளத்தே
மாதும் தாமும் மகிழ்வர்மாற் பேறரே.

தெளிவுரை : சிவாகம நூல்களை அறியாது இருப்பினும், திருவைந்தெழுத்தினை ஓதித் திருவடியைச் சிந்தித்தவாறு இருக்கும் திருத்தொண்டர்களுக்கும் அடியவர்களுக்கும், பக்தர்களுக்கும் வேறுபாடு இல்லாது, அவரவர்தம் உள்ளத்தில் உமாதேவியுடன் அம்மை யப்பராக வீற்றிருந்து மகிழ்வினைத் தருபவர், திருமாற்பேற்றில் வீற்றிருக்கும் சிவபெருமானே ஆவார்.

603. அச்சம் இல்லைநெஞ் சேஅரன் நாமங்கள்
நிச்ச லும்நினை யாய்வினை போய்அறக்
கச்ச மாவிடம் உண்டகண் டாஎன
வைச்ச மாநிதி யாவர்மாற் பேறரே.

தெளிவுரை : நெஞ்சமே ! சிவபெருமானுடைய திருநாமங்களை நாள்தோறும் ஓதுவாயாக. வினையானது தொலையும். உலகிடையே வருத்தும் துன்பங்களைக் கண்டு அச்சம் கொள்ள வேண்டாம். அப்பெருமான் கைப்புத் தன்மையுடைய கொடிய விடத்தை உட்கொண்டவர். அவருடைய திருநாமமானது, சிறப்புப் பெயராக உள்ள பாங்கினை உணர்ந்து ஓத, சேமித்து வைக்கப்பெறும் நிதியைப் போன்று அவர் அருள் புரிபவர். அவ்விறைவன் திருமாற்பேற்றில் மேவும் ஈசனே ஆவார்.

604. சாத்தி ரம்பல பேசும் சழக்கர்காள்
கோத்தி ரமும் குலமும் கொண்டு என்செய்வீர்
பாத்தி ரம்சிவம் என்று பணிதிரேல்
மாத்தி ரைக்குள் அருளு ம்மாற் பேறரே.

தெளிவுரை : சம்பிரதாயச் சடங்குகள், தமது குலங்களுக்கு ஏற்ற மரபுகள் போன்றவற்றை மட்டும் பெரிதாகக் கொண்டு அதன் வழியே நிற்பவர்களே ! சிவபெருமானே பாவற்றினையும் பாத்திரமாகக் கொண்டு இருந்து செய்பவர் எனக் கருதுவீராக ! அவ்வாறு ஏத்தி வழிபடும் அத்தருணத்திலேயே திருமாற்பேற்றில் மேவும் சிவபெருமான் முன்னின்ற அருள் புரிபவர் என்று அறிவீராக.

605. இருந்து சொல்லுவன் கேண்மின்கள் ஏழைகாள்
அருந்த வந்தரும் அஞ்செழுத்து ஓதினால்
பொருந்து நோய்பிணி போகத் துரப்பதோர்
மருந்தும் ஆகுவர் மன்னுமாற் பேறரே.

தெளிவுரை : அறியாமையால் நையும் மாந்தர்காள் ! நான் நன்கு தெளிந்து சொல்கின்றேன் கேட்பீர்ளாக. திருவைந்தெழுத்தானது அரிய தவத்திற்குரிய பயனைத் தரவல்லது. அதனை ஓதினால், உம்மைப் பிணித்து மேவும் வினையாகிய நோயானது விலகிச் சென்றழியும். திருமாற்பேற்றில் விளங்குகின்ற பெருமான் அத்தகைய நோய்க்கு மருந்தும் ஆகி அருள் புரிபவர். இது, ஈசன் திவைந்தெழுத்தாகிய மந்திரமாகத் திகழ்வதோடு, மருந்தும் ஆகி இரு நிலைகளில் இருந்து அருள் செய்பவர் என உணர்த்துதலாயிற்று.

606. சாற்றிச் சொல்லுவன் கேண்மின் தரணியீர்
ஏற்றின் மேல்வரு வான்கழல் ஏத்தினால்
கூற்றை நீக்கிக் குறைவறுத்து ஆள்வதோர்
மாற்றி லாச்செம்பொன் ஆவர் மாற் பேறரே.

தெளிவுரை : இவ்வுலகில் உள்ளவர்களே ! பலரும் அறியுமாறு உறுதியாகச் சொல்கிறேன். கேட்பீராக ! இடப வாகனத்தில் மேவிக் காட்சி நல்கும் சிவ பெருமானுடைய திருக்கழலை ஏத்தினால், கூற்றுவனுடைய அச்சப் பிடியிலிருந்து விடுபடலாம். அவ்வாறு அவ்வச்சத்தை நீக்குபவர், மாற்று இல்லாத செம்பொன் போன்று விளங்கும் திருமாற் பேற்றில் விளங்கும் ஈசனே ஆவார்.

607. ஈட்டும் மாநிதி சால இழக்கினும்
வீட்டும் காலன் விரைய அழைக்கினும்
காட்டில் மாநடம் ஆடுவாய் காஎனில்
வாட்டம் தீர்க்கவும் வல்லர்மாற் பேறரே.

தெளிவுரை : வாழ்நாளில் ஈட்டிய பெருஞ் செல்வமானது, வினை வசத்தால் இழக்குமாறு நேர்ந்தாலும், உயிர்களை வீழ்த்திக் கவர்ந்து செல்லக்கூடிய காலன், விரைந்து வந்து ஆருயிரைக் கவர்ந்து செல்ல முற்பட்டாலும், சுடுகாட்டில் சிறப்பான நடனம் புரியும் சிவபெருமானே ! காத்தருள் புரிவீராக ! என ஏத்திய அளவில், உடனே வாட்டத்தைத் தீர்க்க வல்லவர், திருமாற்பேற்றில், மேவும் ஈசனே ஆவர்.

608. ஐயனேஅர னேயென்று அரற்றினால்
உய்ய லாம்உல கத்தவர் பேணுவர்
செய்ய பாதம் இரண்டும் நினையவே
வையம் ஆளவும் வைப்பர்மாற் பேறரே.

தெளிவுரை : சிவபெருமானே ! தலைவனே ! என்று வாய் விட்டு ஏத்தி அரற்றினால் உலகத்தவர் உய்வு பெறலாம். ஈசன், அனைவரையும் பேணிக் காப்பவராவர். அப்பெருமானுடைய செம்மையான பாத மலர்கள் இரண்டினையும் நினைந்து ஏத்த, இவ்வுலகத்தினை ஆளும் பேற்றினையும் திருமாற் பேற்றில் மேவும் ஈசன் அருளிச் செய்வர்.

609. உந்திச் சென்று மலையை எடுத்தவன்
சந்து தோளொடு தாளிற ஊன்றினான்
மந்தி பாய் பொழில் சூழுமாற் பேறுஎன
அந்தம் இல்லாதோர் இன்பம் அணுகுமே.

தெளிவுரை : கயிலை மலையை எடுத்த இராவணனுடைய தோளும் நலியுமாறு ஊன்றியவராகிய ஈசனின் பொழில் சூழ்ந்த பதியாகிய திருமாற் பேற்றினை உரைக்க, முடிவு இல்லாத பேரின்பம் நம்மை வந்து சாரும்.

திருச்சிற்றம்பலம்

61. திருஅரிசிற்கரைப்புத்தூர் (அருள்மிகு படிக்காசுநாதர் திருக்கோயில், அழகாபுத்தூர், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

610. முத்தூ ரும்புனல் மொய்யரி சிற்கரைப்
புத்தூ ரன்அடி போற்றிஎன் பார்எலாம்
பொய்த்தூ ரும்புலன் ஐந்தொடு புல்கிய
மைத்தூ ரும்வினை மாற்றவும் வல்லரே.

தெளிவுரை : முத்துக்களை ஈனுக் சிப்பிகள் நிறைந்த நீர்ப்பெருக்கம் உடைய அரிசில் ஆற்றின் கரையில் உள்ள புத்தூரில் வீற்றிருக்கும் சிவபெருமானுடைய திருவடியைப் போற்றி வணங்கும் அன்பர்களுக்குப் பொய்ந் நெறியில் சேர்த்து இவ்வுயிரை வருத்தும் ஐம்புலன்களின் வஞ்சகமானது கெடும்; இருள் என்னும் அஞ்ஞானத்தில் செலுத்தித் துன்புறுத்தும் தீவினை யாவும் அழியும். இது, அப் பெருமானின் கருணையால் நிகழ வல்லது.

611. பிறைக்க ணிச்சடை எம்பெரு மான்என்று
கறைக்க ணித்தவர் கண்ட வணக்கத்தாய்
உறக்க ணித்துரு காமனத் தார்களைப்
புறக்க ணித்திடும் புத்தூர்ப் புனிதரே.

தெளிவுரை : நெஞ்சமே ! சிவபெருமான், பிறைச் சந்திரனைச் சடையில் அணிந்து விளங்குபவர்; கறை பெரும் நஞ்சைக் கண்டத்தில் தேக்கி வைத்துக் காத்து, அண்டமெல்லாம் வணங்கிப் போற்றுமாறு அருள் புரிந்தவர். அப்பெருமான் தம்மை மனம் கசிந்து ஏத்தாதவர்களைப் புறக்கணிக்கும் தன்மையுடைய பக்தர்களையுடைய புத்தூரில் விளங்கும் புனிதர் ஆவார்.

612. அரிசி லின்கரை மேலணி யார்தரு
புரிசை நந்திருப் புத்தூர்ப் புனிதனைப்
பரிசொ டும்பரவிப் பணி வார்க்கெல்லாம்
துரிசில் நன்னெறி தோன்றிடும் காண்மினே.

தெளிவுரை : ஈசன், அரிசில் ஆற்றங்கரையில் அழகிய மதில்களையுடைய செல்வராய்ப் புத்தூரில் மேவும் புனிதர். அப்பெருமானை, நிவேதனப் பொருள் கொண்டு ஆராதித்து ஏத்திப் பணிந்து நிற்கத் துன்பம் இல்லாத வாழ்வும், அதற்குரிய நல்ல வழியும் வாய்க்கப் பெறும்.

613. வேத னைமிகு வீணையில் மேவிய
கீத னைக்கிள ருந்நறுங் கொன்றையம்
போத னைப்புனல் சூழ்ந்தபுத் தூரனை
நாத னைநினைந்து என்மனம் நையுமே.

தெளிவுரை : சிவபெருமான், வேதமாகத் திகழ்பவர்; வீணையில் மேவும் கீதமாக விளங்குபவர்; அழகிய நறுமணம் கமழும் கொன்றை மலரைத் தரித்துள்ளவர்; நீர் வளம் சூழ்ந்த புத்தூரில் வீற்றிருப்பவர். என் நாதனாகிய அப்பரமனை நினைந்து மனம் கசிந்து உருகும்.

614. அருப்புப் போல்முலை யார்அல்லல் வாழ்க்கைமேல்
விருப்புச் சேர்நிலை விட்டுநல் இட்டமாய்த்
திருப்புத் தூரனைச் சிந்தைசெயச் செயக்
கருப்புச் சாற்றிலும் அண்ணிக்கும் காண்மினே.

தெளிவுரை : மகளிர்பால் விழைந்து மேவும் துன்பம் தரும் வாழ்க்கையை விரும்பி இருக்கும் நிலையை விட்டுத் திருப்புத்தூரில் மேவும் சிவபெருமான் விருப்பத்துடன் சிந்தனை செய்து ஏத்தி வழிபட, அப்பரமன், கரும்பின் சாறு போன்று இனிமையுடையவராகி மகிழ்ச்சியை அளிப்பர்.

615. பூம்பொடுமதி யும்படர் புன்சடைப்
பூம்புன லும்பொ திந்தபுத் தூருளான்
நாம்ப ணிந்துஅடி போற்றிட நாள்தொறும்
சாம்பல் என்பு தனக்குஅணி யாகுமே.

தெளிவுரை : புத்தூரில் வீற்றிருக்கும் சிவபெருமான், சடை முடியின்கண் பாம்பும் சந்திரனும் ஆபரணமாகக் கொண்டு விளங்குபவர்; கங்கையைத் தரித்து இருப்பவர்; சாம்பலும் எலும்பும் அழகுடன் தரித்துத் திகழ்பவர். அப்பரமனை, நாள்தோறும் போற்றிப் பணிந்து ஏத்துவோமாக.

616. கனல்அங் கைதனில் ஏந்திவெங் காட்டிடை
அனல்அங்கு எய்திநின்று ஆடுவர் பாடுவர்
பினல்அம் செஞ்சடை மேற்பிறை யும்தரு
புனலும் சூடுவர் போலும்புத் தூரரே.

தெளிவுரை : சிவபெருமான், அழகிய கையில் எரியும் நெருப்பினை ஏந்தி, மயானத்தின் இடையில் வெம்மை பரவ நின்று நடனம் ஆடுபவர்; பாடுபவர். அப் பரமன், அழகுடன் பின்னி முறுக்கிய சிவந்த சடைமுடியில் மீதுப் பிறைச்சந்திரனும், கங்கையும் சூடிப் புத்தூரில் வீற்றிருப்பவர்.

617. காற்றி னும்கடி தாகி நடப்பதோர்
ஏற்றி னும்இசைந்து ஏறுவர் என்பொடு
நீற்றி னைஅணிவர்நினை வாய்த்தமைப்
போற்றி என்பவர்க்கு அன்பர்புத் தூரரே.

தெளிவுரை : சிவபெருமான், காற்றினும் வேகமாக நடந்து செல்லும் இடபத்தின்மீது விழைந்து ஏறுபவர்; எலும்பினை மாலையாகத் தரித்துள்ளவர்; திருநீற்றினைத் திருமேனியில் குழையப் பூசுபவர். அவர் தன்னை நினைத்துத் திருவடியைப் போற்றித் துதிக்கும் அன்பர்களுக்கு அருள் புரியும் அன்பராக விளங்குபவர். அவர், புத்தூரில் மேவும் ஈசன் ஆவார்.

618. முன்னும் முப்புரம் செற்றனர் ஆயினும்
அன்னம் ஒப்பர் அலந்துஅடைந் தார்க்கெலாம்
மின்னும் ஒப்பர் விரிசடை மேனிசெம்
பொன்னும் ஒப்பர்புத் தூர்எம் புனிதரே.

தெளிவுரை : புத்தூரில் வீற்றிருக்கும் சிவபெருமான், முப்புரங்களை எரித்துச் சாம்பலாக்கிய பேராற்றல் உடையவரானாலும், தம்மைச் சரணமாக அடைந்து அடியவர்களுக்கு நல்லுணவுபோல் விளங்கி, மகிழ்ச்சியையும் சக்தியையும் அருளிச் செய்பவர். அப்பெருமானுடைய விரிந்த சடையானது, மின்னலைப் போன்றும், திருமேனியானது, செம் பொன்னைப் போன்றும் ஒளிர்ந்து மேவும் இயல்புடையது.

619. செருத்த னால்தன தேர்செல வுய்த்திடும்
கருத்த னாய்க்கயி லைஎடுத் தான்உடல்
பருத்த தோள்கெடப் பாதத் தொருவிரல்
பொருத்தி னார்பொழில் ஆர்ந்தபுத் தூரரே.

தெளிவுரை : தனது தேரமானது (புட்பக விமானம்) கயிலையைத் தாண்டிச் செல்ல இயலாத தன்மையில், அம்மலையைப் பெயர்த்த இராவணனுடைய உடலும் தோளும் நலியுமாறு, திருப்பாத விரல் ஒன்றினால் அடர்த்தியவர், சிவபெருமான். அப்பெருமான் வீற்றிருப்பது, பொழில்கள் சூழ்ந்த புத்தூர் ஆகும். ஆங்குப் போந்து இறைவனை ஏத்துக.

திருச்சிற்றம்பலம்

62. திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் (அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், ஆண்டான்கோவில், திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

620. ஒருத்த னைமூ வுலகொடு தேவர்க்கும்
அருத்த னைஅடி யேன்மனத் துள்ளமர்
கருத்த னைக்கடு வாய்ப்புனல் ஆடிய
திருத்த னைப்புத்தூர்ச் சென்றுகண்டு உய்ந்தெனே.

தெளிவுரை : சிவபெருமான், ஒப்பற்ற ஒருவராகவும், மூவுலகமும் தேவர்களும் ஏத்தும் ஒண்பொருளாகவும் விளங்குபவர்; அடியவனின் மனத்துள் நிலவும் கருத்தாவர். அப்பெருமான் கடுவாய் எனப்படும் குடமுருட்டி ஆற்றின் புனலாய் விளங்கிப் பூசித்து ஏத்தப் பெறுபவர். அவர், மன்னுயிர்களை நற்கதிக்கு ஆளாக்கித் திருத்தம் செய்பவராகிப் புத்தூரில் வீற்றிருப்பவர். அவரை நான் கண்டு தரிசித்து உய்ந்தேன்.

621. யாவ ரும்அறி தற்குஅரி யான்றனை
மூவ ரின்முத லாகிய மூர்த்தியை
நாவில் நல்லுரை யாகிய நாதனைத்
தேவ னைப்புத்தூர்ச் சென்றுகண்டு உய்ந்தெனே.

தெளிவுரை : சிவபெருமான் எத்தன்மையோராலும் அறிவதற்கு அரியவர்; மும்மூர்த்திகளுக்கும் முதற்பொருளாய் விளங்குபவர். நாவின்கண் விளங்கி நல்லுரையாகி விளங்கும் நாதன். அப்பரமனைப் புத்தூரில் கண்டு தரிசித்து உய்ந்தேன்.

622. அன்பனைஅடி யார்இடர் நீக்கியைச்
செம்பொ னைத்திக ழும்திருக் கச்சியே
கம்ப னைக்கடு வாய்க் கரைத் தென்புத்தூர்
நம்ப னைக்கண்டு நானுய்யப் பெற்றெனே.

தெளிவுரை : சிவபெருமான், அன்பின் வடிவானவர்; அடியவர்களின் இடர்களை நீக்கி அருள்பவர்; செம்மை திகழும் பொன் போன்றவர்; திருக் கச்சியில் மேவும் திருவேகம்பத்தில் வீற்றிருப்பவர்; கடுவாய் என்னும் ஆற்றின் கரையில் மேவும் அழகிய புத்தூரில் கோயில் கொண்டு விளங்குபவர். அப்பரமனைக் கண்டு நான் உய்யப் பெற்றேன்.

623. மாத னத்தைமா தேவனை மாறிலாக்
கோத னத்தின்ஐந்தாடியை வெண்குழைக்
காத னைக்கடு வாய்க்கரைத் தென்புத்தூர்
நாத னைக்கண்டு நானுய்யப் பெற்றெனே.

தெளிவுரை : சிவபெருமான், சிறந்த செல்வமாகத்  திகழ்பவர்; மகாதேவராகத் திகழ்பவர்; மாற்றம் கொள்ளாத பெருஞ்சிறப்புடன் யாண்டும் திகழும் பசுவின் செல்வமாகிய பஞ்சகவ்வியத்தால் பூசிக்கப் படுபவர்; காதில் வெண்குழையணிந்தவர்; கடுவாய் என்னும் ஆற்றின் கரையில் அழகுடன் மேவும் புத்தூரில் விளங்கும் தலைவர். அப் பரமனைக் கண்டு நான் உய்யப் பெற்றேன்.

624. குண்டு பட்டகுற் றம்தவிர்த்து என்னையாட்
கொண்டு நற்றிறம் காட்டிய கூத்தனைக்
கண்ட னைக்கடு வாய்க்கரைத் தென்புத்தூர்
அண்ட னைக்கண்டு அருவினை அற்றெனே.

தெளிவுரை : சிவபெருமான், சமணத்தில் சார்ந்து மேவிய குற்றத்தை நீக்கி, என்னை ஆட்கொண்டு, நல்லருளின் திறத்தைக் காட்டிய கூத்தப் பெருமான் ஆவார். நீலகண்டப் பெருமானாகிய அவர், கடுவாய் என்னும் ஆற்றின் கரையில் உள்ள அழகிய புத்தூரில் மேவும் தேவர் தலைவர். அவரைக் கண்டு அருவாகிய வினைகளை நீக்கி நான் உய்ந்தேன்.

625. பந்த பாசம் அறுத்துஎனை ஆட்கொண்ட
மைந்த னைம் மண வாளனை மாமலர்க்
கந்த நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர்
எந்தை ஈசனைக் கண்டுஇனிது ஆயிற்றே.

தெளிவுரை : சிவபெருமான், உலகப் பொருள்களில் உள்ள பாசமாகிய பந்தங்களிலிருந்து என்னை விடுபடுமாறு செய்து, ஆட்கொண்டவர்; மணவாளத் திருக்கோலத்தில் அம்மையப்பராகத் திகழ்பவர்; நறுமலர்களின் மணம் கமழும் நீர் பெருகும் கடுவாய் என்னும் ஆற்றில் கரையில் மேவும் அழகிய புத்தூரில் வீற்றிருக்கும் எந்தை பெருமான் ஆவார். அப்பரமனைக் கண்டு தரிசிக்க, அடியேனுக்கு எல்லா இனிமையும் கைவரப் பெற்றது.

626. உம்ப ரானை உருத்தி மூர்த்தியை
அம்ப ரானை அமலனை ஆதியைக்
கம்பு நீர்க்கடு வாய்க் கரைத் தென்புத்தூர்
எம்பி ரானைக் கண்டு இன்பமது ஆயிற்றே.

தெளிவுரை : சிவபெருமான் தேவர்களின் தலைவர்; உருத்திரமூர்த்தியாய்த் திகழ்பவர்; அம்பர் என்னும் தலத்தில் விளங்குபவர்; மலத்தொகுதி இல்லாது மேவும் ஆதிமூர்த்தியாய் விளங்குபவர்; சங்குகள் விளங்கி மேவும் நீர்வளம் கொண்டு கடுவாய் என்னும் ஆற்றங்கரையில் மீது அழகுடன் பொலியும் புத்தூரில் வீற்றிருப்பவர். எம்பெருமானாகிய அவ்விறைவனைக் கண்டு என் மனம், பேரின்பத்தை அடைந்தது.

627. மாசார் பாச மயக்கறு வித்தெனுள்
நேச மாகிய நித்த மணாளனைப்
பூச நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர்
ஈச னேஎன இன்பம தாயிற்றே.

தெளிவுரை : சிவபெருமான், குற்றத்திற்கு இடமாகும் பாச மயக்கத்தை நீக்கி, என் உள்ளத்துள் நேசம் மிகுந்தவராய் உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குபவர். அவர், நீர்வளம் மல்கும் கடுவாய் என்னும் ஆற்றங்கரையில் அழகுடன் மேவும் புத்தூரில் வீற்றிருப்பவர். அப்பரமனைப் பூசத்திருநாளில் ஏத்தி வழிபடு மனமானது  பேரின்பத்தை அடைந்தது.

628. இடுவார் இட்ட கவளம் கவர்ந்திரு
கடுவாய் இட்டவர் கட்டுரை கொள்ளாதே
கடுவாய்த் தென்கரைப் புத்தூர் அடிகட்காட்
படவே பெற்றுநான் பாக்கியம் செய்தெனே.

தெளிவுரை : சமணர்கள் கூறும் உரைகளைக் கொள்ளாது, கடுவாய் ஆற்றின் தென்கரையில் மேவும் புத்தூரில் வீற்றிருக்கும் சிவபெருமானைத் தலைவராகக் கொண்டு, அப்பெருமானைத் தலைவராகக் கொண்டு, அப்பெருமானுக்கு ஆட்பட்டு அடிமையான தன்மையினால் நான் பாக்கியம் செய்தவனானேன்.

629. அரக்கன் ஆற்றல் அழித்தவன் பாடல்கேட்டு
இரக்கம்ஆகி அருள்புரி ஈசனைத்
திரைக்கொள் நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர்
இருக்கு நாதனைக் காணப்பெறற உய்ந்தெனே.

தெளிவுரை : இராவணனுடைய ஆற்றலை அழித்த சிவபெருமான், அவ்வரக்கனுடைய பாடலைக் கேட்டு இரக்கம் கொண்டு அருள் புரிந்தவர். அவர் அலைகள் கொண்டு நீர் வளம் பெருகி ஓங்கும் கடுவாய் என்னும் ஆற்றின் கரையில் மேவும் அழகிய புத்தூரில் வீற்றிருக்கும் தலைவர் ஆவார். நான் அப் பரமனைக் கண்டு உய்ந்தேன்.

திருச்சிற்றம்பலம்

63. தென்குரங்காடுதுறை (அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், ஆடுதுறை, தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

630. இரங்கா வன்மனத் தார்கள் இயங்குமுப்
புரங்கா வல்அழி யப்பொடி யாக்கினான்
தரங்கா டுந்தட நீர்ப்பொன்னித் தென்கரைக்
குரங்காடு துறைக் கோலக்க பாலியே.

தெளிவுரை : வன்மையுடைய கொடிய மனம் உடையவராகி, மண்ணுலகத்திலும் தேவர் உலகத்திலும் அழிவை உண்டாக்கிய அசுரர்கள் மூவரையும், அவர்களுடைய வலிமையான கோட்டைகளையும் எரித்துச் சாம்பலாக்கிய சிவபெருமான், அலைகள் கொண்டு மேவும் நீர்ப் பெருக்குடைய காவிரித் தென்கரையில் திகழும் குரங்காடு துறையில் வீற்றிருக்கும் கபாலி ஆவர்.

631. முத்தி னைமணி யைப்பவ ளத்தொளிர்
தொத்தி னைச்சுடர்ச் சோதியைச் சோலைசூழ்
கொத்த லர்குரங் காடு துறையுறை
அத்தன் என்னஅண் ணித்திட்டு இருந்ததே.

தெளிவுரை : சிவபெருமான், முத்தும் மணியும் போன்று சுயஞ் சோதியாய் விளங்கும் உயர்ந்த பொருளாகுபவர்; பவளக் கொத்துப் போன்று ஒளிர்பவர்; சுடர்மிகும் சோதியானவர்; கொத்தாகப் பூக்கும் சோலை சூழ்ந்த குரங்காடு துறையில் வீற்றிருக்கும் அன்புக்குரியவர். அவர் திருநாமத்தை ஓத, அப் பரமன் என் உள்ளத்தில் நெருக்கமாக விளங்கிப் பேரின்பத்தை நல்குபவராயினர்.

632. குளிர்பு னற்குரங் காடுது றையனைத்
தளிர்நி றத்தையல் பங்கனைத் தண்மதி
ஒளிய னைந்நினைத் தேனுக்குஎன் னுள்ளமும்
தெளிவி னைத்தெளி யத்தெளிந் திட்டதே.

தெளிவுரை : குளிர்ச்சியான நீர்வளம் மல்கும் குரங்காடு துறையில் வீற்றிருக்கும் சிவபெருமான், மாந்தளிர் போன்ற வண்ணம் உடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு விளங்குபவர்; குளுமை தரும் சந்திரனைப் போன்று ஒளியுடையவர். அப்பெருமானை நினைத்த அளவில், என்னுள்ளமானது தெளிவு பெற அது, பூரண ஞானமாகத் திகழும் பரம்பொருளை உணர்த்தி அருளியது.

633. மணவன் காண்மலை யாள்நெடு மங்கலக்
கணவன் காண்கலை ஞானிகள் காதல்எண்
குணவன் காண்குரங் காடு துறைதனில்
அணவன் காண் அன்பு செய்யும் அடியர்க்கே.

தெளிவுரை : சிவபெருமான், மலை மகளாகிய உமாதேவியை உடனாகக் கொண்டு, எக்காலத்திலும் மணவாளத் திருக்கோலத்தில் விளங்குபவர். வேதங்களை ஓதும் ஞானிகளால் அன்புடன் ஏத்தப் பெறுபவர்; தன் வயத்தனாதல், தூய உடம்பினன் ஆதல். இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதல், பேரருள் உடைமை, முடிவில் (முடிவு இல்லாத) ஆற்றல் உடைமை, வரம்பில்லாத இன்பம் உடைமை ஆகிய எட்டுக் குணங்களை உடையவர். அப்பரமன், விளங்குபவராய் உள்ளத்தில் திகழ்ந்து, தென் குரங்காடு துறையில் வீற்றிருப்பவர் ஆவார்.

634. ஞாலத் தார்தொழுது ஏத்திய நன்மையன்
காலத் தான்உயிர் போக்கிய காலினன்
நீலத் தார்மிடற் றான்வெள்ளை நீறணி
கோலத் தான்குரங் காடு துறையனே.

தெளிவுரை : திருவெண்ணீற்றைத் திருமேனியில் கொண்டு அழகுடன் அணிந்து குரங்காடு துறையில் வீற்றிருக்கும் சிவபெருமான், உலகத்தவர்களால் ஏத்தப்பெறும் ஒண்பொருளாய் மேவி நன்மை புரிபவர்; காலனைத் திருப் பாதத்தால் உதைத்து அழித்தவர்; நீலவண்ணம் உடைய நஞ்சினைக் கண்டத்தில் தேக்கி அருளொடும் திகழ்பவர். அப்பரமனை ஏத்துவீராக என்பது குறிப்பு.

635. ஆட்டி னான்முன் அமணரோடு என்றனைப்
பாட்டி னன்றன் பொன்னடிக்கு இன்னிசை
வீட்டி னான்வினை மெய்யடி யாரொடும்
கூட்டி னான்குரங் காடு துறையனே.

தெளிவுரை : சிவபெருமான், முன்பு என்னைச் சமணர்களுடன் சேர்ந்து இருக்குமாறு செய்து ஆட்டுவித்தவர்; என்னை இசைப்பட்டால் பாடிப் போற்றுமாறு அருள் செய்தவர்; என்னுடைய வினை யாவும் அழிந்து ஒழியுமாறு செய்தவர். அப்பரமன் குரங்காடு துறையில் வீற்றிருக்கும்  ஈசனே ஆவார்.

636. மாத்தன் தான்மறை யார்முறை யான்மறை
ஒத்தன் தாருகன் றன்னுயிர் உண்டபெண்
போத்தன் தானவன் பொங்கு சினந்தணி
கூத்தன் தான்குரங் காடு துறையனே.

தெளிவுரை : சிவபெருமான், எல்லாப் பெருமைகளையும் தன்னிடத்தே கொண்டு விளங்குபவர்; தாருகாசூரனை அழித்த காளி தேவியைத் திருநடனம் புரிந்து வென்று, அசுரனாகிய முயலகனின் சினத்தைத் தணித்தவர். அவீர் குரங்காடு துறையில் வீற்றிருக்கும் இறைவன் ஆவார்.

637. நாடி நந்தம ராயின தொண்டர்கள்
ஆடு மின்அழு மின்தொழு மின்னடி
பாடு மின்பர மன்பயி லும்மிடம்
கூடு மின்குரங் காடு துறையையே.

தெளிவுரை : திருக்கோயிலுக்கு நாடிச்சென்று ஏத்தி வழிபடும் நம் அன்புக்கும் தோழமைக்கும் உரிய தொண்டர்களே ! ஈசனைத் திருமனத்தில் இருத்தி, மகிழ்ச்சியுடன் ஆடுவீர்களாக ! பக்தியால் கசிந்து உருகிக் கண்ணீர் மல்கி, ஆனந்தத்தால் ஏத்துவீர்களாக ! கைதொழுது வணங்குவீர்களாக ! திருவடியைப் போற்றிப் பாடுவீர்களாக ! அப்பரமன் வீற்றிருக்கும் இடமாகிய குரங்காடுதுறையைச் சென்றடைந்து கூடிப் பேரின்பத்தில் திளைப்பீர்களாக.

638.தென்றல் நன்னெடுந் தேருடை யான்உடல்
பொன்ற வெங்கனல் பொங்க விழித்தவன்
அன்ற வந்தகனை அயிற் சூலத்தால்
கொன்ற வன்குரங் காடு துறையனே.

தெளிவுரை : தென்றலைத் தேராகக் கொண்டு மேவும் மன்மதனைத் தனது நெற்றிக்கண்ணால் விழித்து நோக்கி அழித்த சிவபெருமான், அந்தகாசூரனைச் சூலத்தால் அழித்து வீரச்செயலை நிகழத்தியவர். அப்பரமன் வீற்றிருப்பது, தென் குரங்காடு துறையாகும். ஆங்குச் சென்று, இறைவனை ஏத்துவீராக என்பது குறிப்பு.

639. நற்ற வம்செய்த நால்வர்க்கு நல்லறம்
உற்ற நன்மொழி யால்அருள் செய்தநல்
கொற்ற வன்குரங் காடு துறைதொழப்
பற்றும் தீவினை யாயின பாறுமே.

தெளிவுரை : நல்ல தவத்தின் சீலர்களாகிய சனகாதி முனிவர் நால்வர்க்கு உரிய வகையால் உபதேசித்து அருளிச் செய்த சிவபெருமான், குரங்காடு துறையில் வீற்றிருப்பவர். அப்பரமனைத் தொழுது ஏத்த, உயிரைப் பற்றி நின்று துன்புறுத்தும் தீயவினை யாவும் தாமே அழியும்.

640. கடுத்த தோர்அரக் கன்கயி லைம்மலை
எடுத்த தோள்தலை இற்றுஅலற அவ்விரல்
அடுத்த லும்அவன் இன்னிசை கேட்டருள்
கொடுத்த வன்குரங் காடு துறையனே.

தெளிவுரை : இராவணன் சினங்கொண்டு கயிலை மலையைப் பெயர்த்து எடுக்க, அவ்வரக்கனுடைய தோளும் தலையும் தனது விரலை ஊன்றி நலியுமாறு செய்த சிவபெருமான், அவன் இசைத்த இனிய இசை கேட்டு அருள் புரிந்தவர். அவர், குரங்காடு துறையில் வீற்றிருப்பவர்.

திருச்சிற்றம்பலம்

64. திருக்கோழம்பம் (அருள்மிகு கோகிலேஸ்வரர் திருக்கோயில், திருக்கோழம்பியம், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

641. வேழம் பத்தைவர் வேண்டிற்று வேண்டிப் போய்
ஆழம் பற்றிவீழ் வார்பல வாதர்கள்
கோழம் பத்துறை கூத்தன் குரைகழல்
தாழும் பத்தர்கள் சாலச் சதுரரே.

தெளிவுரை : கீழ்மக்களானவர், புலன்கள் புரியும் வஞ்சணையால் தாக்குண்டு, அதற்குரிய வேட்கையுடன் செயல்களைப் புரிந்து, வினைகளைப் பெருக்கி, நரகத்திலும் பிறவிப் பணியிலும் ஆழ்ந்து துன்பத்தில் உழல்வார்கள். கோழம்பம் என்னும் திருத்தலத்தில் மேவும் சிவபெருமானை ஏத்தி வழிபடுகின்ற பக்தர்கள் பெரிதும் அருளாற்றல் உடையவர்களாகியும், எல்லாத் துறையிலும் மேம்பட்டும் விளங்குபவர்களாகி மகிழ்ச்சியில் திளைத்து இருப்பார்கள்.

642. கயிலை நன்மலை யாளும் கபாலியை
மயிலி யல்மலை மாதின் மணாளனைக்
குயில்ப யில்பொழிற் கோழம்பம் மேயஎன்
உயிரினை நினைந்து உள்ளம் உருகுமே.

தெளிவுரை : கயிலை மலையின் நாயகனாகிய சிவபெருமான், கபாலம் ஏந்தியவர்; மயிலின் சாயலைப் போன்ற உமாதேவியின் மணவாளர். அப்பரமன், குயில் பாடும் பொழில் உடைய கோழம்பத்தில் மேவி என் உயிராக வீற்றிருப்பவர். அப்பெருமானை நினைந்து என் உள்ளமானது கசிந்து உருகி ஏத்தும்.

643. வாழும் பான்மையர் ஆகிய வான்செல்வம்
தாழும் பான்மையர் ஆகித்தம் வாயினால்
தாழம் பூமணம் நாறிய தாழ்பொழில்
கோழம் பாஎனக் கூடிய செல்வமே.

தெளிவுரை : ஒருவர், எக்காலத்திலும் வாழும் தன்மையுடையவர் ஆகியும், பெருஞ் செல்வத்தை உடையவர் ஆகியும் விளங்குவதற்குக் காரணமாகத் திகழ்வது தாழம்பூவின் நறுமணம் கமழும் பொழில் சூழ்ந்த கோழம்ப நாதனே என ஏத்திக் கூறியதே ஆகும்.

644. பாடலாக் கிடும் பண்ணொடு பெண்ணிவள்
கூட லாக்கிடும் குன்றின் மணற்கொடு
கோடல் பூத்தலர் கோழம்பத் துள்மகிழ்ந்து
ஆடும் கூத்தனுக்கு அன்புபட் டாள்அன்றே.

தெளிவுரை : இந் நங்கையானவள், கோடல் மலர்கள் பூத்துக் குலுங்கும் கோழம்பத்தில் மேவும் ஈசன்பால் மகிழ்ந்து அவரால் ஆட்கொள்ளப் பட்டுப் பண்ணொடு பயிலும் பாடலைப் பாடுபவள் ஆயினள். இது, ஆன்மாவைப் பெண்ணாகப் பாவித்து, அகத் துறையின்கண் ஏற்றி உரைப்பதாயிற்று.

645. தளிர்கொள் மேனியள் தான்மிக அஞ்சவோர்
பிளிறு வாரணத்து ஈர்உரி போர்த்தவன்
குளிர்கொள் நீர்வயற் கோழம்பம் மேவினான்
நளிர்கொள் நீர்சடை மேலு நயந்ததே.

தெளிவுரை : ஈசன், தளிர் போன்ற மென்மையான உமாதேவி அஞ்சி வெருவுமாறு, யானையின் தோலை உரித்துப் போர்த்தியவர். அவர், குளிர்ச்சி பொருந்திய நீர் கொண்ட வயல் வளம் பெருக மேவும் கோழம்பம் என்னும் தலத்தில் வீற்றிருப்பவர். அப் பெருமான் தெளிந்த கங்கையைச் சடை முடியில் வைத்து விளங்கும் தன்மைதான் என்னே !

646. நாத ராவர் நமக்கும் பிறர்க்கும் தாம்
வேத நாவர் விடைக்கொடி யார்வெற்பில்
கோதை மாதொடும் கோழம்பங் கோயில் கொண்டு
ஆதி பாதம் அடையவல் லார்களே.

தெளிவுரை : சிவபெருமான், இம்மண்ணுலகத்தில் விளங்கும் திருத்தொண்டர்களுக்கு மட்டும் அல்லாது, ஏனைய யாவர்க்கும் தலைவர் ஆகுபவர்; வேதங்களை விரித்து ஓதியவர்; இடபத்தைக் கொடியாக உடையவர். அப்பரமன், இமாசல மன்னனின் மகளாகிய உமாதேவியை உடனாகக் கொண்டு, கோழம்பத்தில் கோயில் கொண்டு வீற்றிருக்க, அவருடைய ஆதியாகிய பாதத்தை ஏத்தி வழிபடும் அன்பர்கள் வல்லவர் ஆவர். இது, ஆதியாகிய கோழம்ப நாதனின் திருப்பாதத்தைச் சரணடைபவர்கள், நமக்கு மட்டும் இன்றி பிறர்க்கும் நாதராக விளங்குபவர் என் உரைத்தலும் அமையும்.

647. முன்னை நான்செய்த பாவம் முதலறப்
பின்னை நாபெரி தும்அருள் பெற்றதும்
அன்ன மார்வயற் கோழம்பத் துள்அமர்
பின்னர் வார்சடை யானைப் பிதற்றியே.

தெளிவுரை : முற்பிறவியில் செய்த பாவம் காரணமாக இப் பிறவியில் சமணத்தைப் பற்றி இருக்கப் பின்னர், அதனின்று மீண்டு, அருள் பெற்றதன் காரணமாவது அன்னப்பறவைகள் விளங்கும் வயல்களையுடைய கோழம்பத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானுடைய திருநாமத்தை ஓதியதே ஆகும்.

648. ஏழை மாரிடம் நின்திரு கைக்கொடுண்
கோழை மாரொடும் கூடிய குற்றமாங்
கூழை பாய்வயற் கோழம்பத் தான்அடி
ஏழை யேன்முன் மறந்துஅங்கு இருந்ததே.

தெளிவுரை : இருகைகளும் ஏந்திப் பெண்பாலரிடம் உணவு கொண்டு உட்கொண்ட சமணர்பால் சேர்ந்து இருந்த குற்றமானது, சேறு விளங்கும் வயல்களையுடைய கோழம்பத்தில் மேவும் பெருமானுடைய திருவடியை, ஏழையேன் முன்னம் மறந்தமையால் ஆயிற்று.

649. அரவ ணைப்பில் மாலயன் வந்தடி
பரவ னைப்பர மாம்பரஞ் சோதியைக்
குரவ னைக்குர வார்பொழிற் கோழம்பத்து
உரவ னைஒரு வர்க்குஉணர் வொண்ணுமே.

தெளிவுரை : அரவத்தைப் படுக்கையாகக் கொண்டுள்ள திருமாலும், மலரின் மீது விளங்குகின்ற நான்முகனும் திருவடியை ஏத்தி நிற்கப் பெரும் சோதியாகத் திகழ்ந்தவர் சிவபெருமான். அவர், தட்சிணாமூர்த்தி வடிவத்தில், குருமூர்த்தமாக விளங்கியவர். அப்பெருமான் நறுமணம் கமழும் குராமலர்ப் பொழில் விளங்கும் கோழம்பத்தில் வீற்றிருக்க, அருளாற்றல் மிக்க அப்பரமனை ஒருவர் முற்றம் உணர்ந்து அறிவதற்கு இயலுமோ !

650. சமர சூரபன் மாவைத் தடிந்த வேற்
குமரன் தாதைநற் கோழம்பம் மேவிய
அமரர் கோவினுக்கு அன்புடைத் தொண்டர்கள்
அமர லோகமது ஆளுட யார்களே.

தெளிவுரை : சூரபத்மனைப் போர் புரிந்து வெற்றி கொண்டு தண்டித்த வேற்படைக்குரிய குமாரக் கடவுளின் தந்தையாக விளங்குபவர், கோழம்பம் மேவித் தேவர் தலைவராக விளங்கும் சிவபெருமான். அப்பரமனுடைய அன்புடைத் தொண்டர்கள், அமரர்களுடைய உலகத்தை ஆள்பவர்கள் ஆவார்கள்.

651. துட்ட னாகி மலைஎடுத்த அஃதின்கீழ்ப்
பட்டு வீழ்ந்து படர்ந்துய்யப் போயினான்
கொட்டம் நாறிய கோழம்பத்து ஈசன்என்று
இட்ட கீதம் இசைத்த அரக்கனே.

தெளிவுரை : நறுமணம் கமழும் சிறப்புடைய கோழம்பத்தில் மேவும் ஈசனே என்று ஏத்தி, இனிய கீதத்தை அரக்கனாகிய இராவணன், இசைத்துப்பாட, மலையை எடுத்ததால் நெரிந்து அழிவதிலிருந்து உய்யும் தன்மையில் விளங்க வல்லவன் ஆனான்.

திருச்சிற்றம்பலம்

65. திருப்பூவனூர் (அருள்மிகு சதுரங்க வல்லபநாதர் திருக்கோயில், பூவனூர், திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

652. பூவ னூர்ப்புனி தன்திரு நாமம்தான்
நாவில் நூறுநூ றாயிரம் நண்ணினார்
பாவ மாயின பாறிப் பறையவே
தேவர் கோவினும் செல்வரகள் ஆவரே.

தெளிவுரை : பூவனூரில் மேவும் புனிதனாகிய ஈசனின் திருநாமத்தை இடைவிடாது நாவினால் செபித்துக் கொண்டு, அப்பெருமானின் திருவடியைப் பரவி இருப்பவர்கள், பாவம் யாவற்றிலும் இருந்து விடுபட்டவர்கள் ஆவார்கள். அவர்கள், தேவர்களின் தலைவனாகிய இந்திரனைவிடச் செல்வரந்தராகத் திகழ்வார்கள்.

653. என்னன் என்மனை எந்தைஎன் ஆருயிர்
தன்னன் தன்னடி யேன்தன மாகிய
பொன்னன் பூவனூர் மேவிய புண்ணியன்
இன்னன் என்றறி வொண்ணான் இயற்கையே.

தெளிவுரை : ஈசன், யானாகி விளங்குபவர்; மனையாய் திகழ்பவர்; எந்தையாகவும் உயிராகவும், தானாகவும் விளங்குபவர். அவர், அடியேனுக்குரிய பெருஞ் செல்வமாகவும், பொன்னாகவும் விளங்குபவர்; பூவனூர் மேவும் புண்ணியன் எனவும், இத் தன்மையுடையவர் எனவும் சொல்லுவதற்கு அரியவராக விளங்குபவர். இது, அப்பரமனின் இயல்பாயிற்று.

654. குற்றம் கூடிக் குணம்பல கூடாதீர்
மற்றும் தீவினை செய்தன மாய்க்கலாம்
புற்ற ராவினன் பூவனூர் ஈசன்பேர்
கற்று வாழ்த்துங் கழிவதன் முன்னமே.

தெளிவுரை : குற்றத்தையே பெருக்கி, நல்ல புண்ணியங்களைச் செய்யும் ஆற்றல் இல்லாதவர்களே ! எல்லாத் தீய வினைகளையும் மாய்ப்பதற்கு உரிய வழியானது உள்ளது. அரவத்தை அணிந்துள்ள சிவபெருமான் மேவும் பூவனூரில் வீற்றிருக்கும் ஈசனின் திரு நாமத்தை ஓதி, வழிபடுவீராக. உமது வாழ்நாளின் இறுதி நெருங்கும் முன்னர் இதனைச் செய்வீராக. அதுவே உய்விக்க வல்லது.

655. ஆவின் மேவிய ஐந்தமர்ந்து ஆடுவான்
தூவெண் ணீறு துதைந்தசெம் மேனியான்
மேவ நூல்விரி வெண்ணியின் தென்கரைப்
பூவ னூர்புகு வார்வினை போகுமே.

தெளிவுரை : சிவபெருமான், பசுவிலிருந்து பெறப்படும் பஞ்சகவ்வியத்தால் அபிடேகம் செய்யப் படுபவர்; தூய திருவெண்ணீறு பூசிய செம்மேனி யுடையவர்; முப்புரி நூல் தரித்து வெண்ணாற்றின் கரையில் விளங்கும் பூவனூரில் வீற்றிருப்பவர். அப்பரமன் வீற்றிருக்கும் இத் திருத்தலத்தைச் சார்ந்து, தல வாசம் செய்ய வினை யாவும் தீரும்.

656. புல்லம் ஊர்தி யூர் பூவனூர் பூம்புனல்
நல்லம் ஊர்திநல் லூர்நனி பள்ளியூர்
தில்லை யூர்திரு வாரூர்சீர் காழிநல்
வல்லம் ஊர்என வல்வினை மாயுமே.

தெளிவுரை : சிவபெருமானுக்கு எருது வாகனமாகும். ஊரானது, பூவனூர் ஆகும். மற்றும் அப்பெருமான் மேவும் திருத்தலங்களாகிய நீர்வளம் மல்கும் நல்லம், நல்லூர், திருநனிபள்ளி, தில்லை, திருவாரூர், சீர்காழி, வல்லம் என உரைத்த அளவில் கொடிய வினையானது விலகி அழியும்.

657. அனுச யப்பட்டது இது என்னாதே
கனிம னத்தொடு கண்களும் நீர்மல்கிப்
புனித னைப்பூவ னூரனைப் போற்றுவார்
மனித ரில்தலை யான மனிதரே.

தெளிவுரை : மனிதராகப் பிறந்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் மாறுபாடு கொண்டு, பகைமை பாராட்டிச் சொற் போர்களைப் புரியாது, கனிந்த மனத்தினராகிப் பத்தி பூண்டு பூவனூரில் மேவும் புனிதனைக் கசிந்துருகிக் கண்கள் நீர் மல்கப் போற்றுவீராக. அத்தகைய தன்மையில் மேவும் மனிதர்களே, தலையான மனிதர்கள் எனப்படுவர்.

658. ஆதி நாதன் அமரர்கள் அர்ச்சிதன்
வேத நாவன்வெற் பின்மடப் பாவையோர்
பாதி யானான் பரந்த பெரும்படைப்
பூத நாதன்தென் பூவனூர் நாதனே.

தெளிவுரை : சிவபெருமான், ஆதிப் பரம்பொருளானவர்; தேவர்களால் அருச்சித்து ஏத்தப்படுபவர்; வேதங்களை விரித்து ஓதியவர்; இமாசல நங்கையாகிய உமாதேவியைத் தனது திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டுள்ளவர்; பரந்து மேவும் பூத கணங்களைப் படையாகக் கொண்டவர். அப்பரமன் பூவனூரில் மேவும் நாதனே.

659. பூவ னூர்தண் புறம்பயம் பூம்பொழில்
நாவ லூர்நள் ளாறொடு நன்னிலங்
கோவ லூர்குட வாயில் கொடுமுடி
மூவ லூருமுக் கண்ணன்ஊர் காண்மினே.

தெளிவுரை : சிவபெருமான் வீற்றிருக்கும் ஊர்களானவை, பூவனூர், புறம்பயம், பொழில் சூழ்ந்த திருநாவலூர், திருநள்ளாறு, நன்னிலம், திருக்கோவலூர், குடவாயில், கொடுமுடி, மூவலூர் ஆகும். இத் திருத்தலங்களில் ஈசன் எழுந்தருளியிருக்க, ஆங்குச் சென்று தரிசித்து ஏத்துக.

660. ஏவம் ஏதும் இலாஅம ணேதலர்
பாவ காரிகள் சொல்வலைப் பட்டுநான்
தேவ தேவன் திருநெறி யாகிய
பூவ னூர்புகு தப்பெற்ற நாளின்றே.

தெளிவுரை : சமணர்களின் வசீகரமாகிய சொற்களால் பாவம் தோய, வலைப்பட்ட நான், இன்று அவ்வலையிலிருந்து விடுபட்டுத் தேவ தேவனாகிய பூவனூரில் மேவும் ஈசன்பால் சரணம் அடைந்த இந்த நாளே, செம்மையுடைய நாள் ஆயிற்று.

661. நார ணன்னொடு நான்முகன் இந்திரன்
வார ணன்கும ரன் வணங்கும்கழல்
பூர ணன்திருப் பூவனூர் மேவிய
கார ணன்எனை ஆளுடைக் காளையே.

தெளிவுரை : திருமால், நான்முகன், இந்திரன், விநாயகர், குமாரக் கடவுள் ஆகியோர் வணங்கும் திருக்கழலையுடையவராகிய பெருமான், பூரணனாகிப் பூவனூரில் மேவும் இறைவன் ஆவார். அப்பரமன் என்னை ஆளுடைய பெருமான்.

662. மைக்க டுத்த நிறத்தரக் கன்வரை
புக்கெ டுத்தலும் பூவனூ ரன்னடி
மிக்க டுத்த விரல்சிறிது ஊன்றலும்
பக்க டுத்தபின் பாடியுந் தானன்றே.

தெளிவுரை : கரிய நிறத்து அரக்கனாகிய இராவணன், கயிலை மலையை எடுத்தபோது, பூவனூரில் மேவும் ஈசன் விரலால் சிறிது ஊன்ற நலிந்தான். பின்னர், அவ்வரக்கன் போற்றிப் பாடி உய்ந்தான் அல்லவா ! இது, ஈசனின் கருணையை வியந்து ஏத்துதலாயிற்று.

திருச்சிற்றம்பலம்

66. திருவலஞ்சுழி (அருள்மிகு திருவலஞ்சுழிநாதர் திருக்கோயில், திருவலஞ்சுழி, தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

663. ஓத மார்கடலின் விடம் உண்டவன்
பூத நாயகன் பொற்கயி லைக்கிறை
மாதொர் பாகன் வலஞ்சுழி யீசனைப்
பாதம் ஏத்தப் பறையும்நம் பாவமே.

தெளிவுரை : சிவபெருமான், பாற்கடலில் தோன்றிய விடத்தை உட்கொண்டு, யாவரையும் காத்தருளியவர்; ஐம்பூதங்களாகிய நாதனாகுபவர்; கயிலை மலையின் நாயகர்; உமாதேவியைத் திருமேனியில் பாகமாகக் கொண்டுள்ளவர். அப்பரமன், வலஞ்சுழியில் மேவும் ஈசனாக வீற்றிருக்க அவ்விறைவனின் திருவடியை ஏத்தி வழிபட நமது பாவம் யாவும் கெடும்.

664. கயிலை நாதன் கறுத்தவர் முப்புரம்
எயில்கள் தீயெழ வெல்வல வித்தகன்
மயில்கள் ஆலும் வலஞ்சுழி யீசனைப்
பயில்கி லார்சிலர் பாவித் தொழும்பரே.

தெளிவுரை : கயிலையின் நாதனாகிய சிவபெருமான், பகைமை கொண்டு முப்புர அசுரர்களின் கோட்டைகளை எரித்துச் சாம்பலாக்கி வெற்றி கொண்டவர். அப்பெருமான், மயில்கள் ஆடும் வலஞ்சுழியில் மேவும் ஈசன். அப்பரமனுடைய திருவடியைத் தொழுது ஏத்தாதவர், பாவத்தால் வாதைப்படும் இழிந்தவர் ஆவர்.

665. இளைய காலம்எம் மானை அடைகிலாத்
துளையி லாச்செவித் தொண்டர்காள் நும்முடல்
வளையும் காலம் வலஞ்சுழி ஈசனைக்
களைக ணாகக் கருதிநீர் உய்ம்மினே.

தெளிவுரை : இளமைக் காலத்தில் எம் தலைவனாகிய சிவபெருமானை வணங்காதும் ஈசனின் நறும் புகழைச் செவிமடுத்துச் கேள்விச் செல்வத்தால் திளைக்காதும் மேவும் இயல்பினை உடையவர்களே ! உமது உடலானது வளைந்து முதுமைப் பருவம் கொள்ளும் முன்னர், வலஞ்சுழியில் வீற்றிருக்கும் ஈசனை உறுதியாகப் பற்றி நிற்பீராக. அப்பெருமான் உய்வு பெறச் செய்வார்.

666. நறைகொள் பூம்புனல் கொண்டெழு மாணிக்காய்க்
குறைவி லாக்கொடுங் கூற்றுதைத் திட்டவன்
மறைகொள் நாவன் வலஞ்சுழி மேவிய
இறைவ னைஇனி என்றுகொல் காண்பதே.

தெளிவுரை : சிவபெருமான், தேன் விளங்கும் நறுமலர் கொண்டும், தூய நீர்கொண்டும் பூசித்து வழிபட்ட மார்க்கண்டேயருக்காக, ஆற்றலில் எத்தகைய குறைவும் இல்லாத கூற்றுவனை உதைத்தவர்; வேதங்களை விரித்து ஓதியவர். வலஞ்சுழியில் வீற்றிருக்கும் அவ்விறைவனை, மீண்டும் கண்டு தரிசித்து மகிழ்வது என்று கொல் !

667. விண்ட வர்புர மூன்றும் எரிகொளத்
திண்தி றற்சிலை யால்எரி செய்தவன்
வண்டு பண்முர லும்தண் வலஞ்சுழி
அண்ட னுக்குஅடி மைத்திறத்து ஆவனே.

தெளிவுரை :  ஈசன், அறநெறியிலிருந்து விலகிய மூன்று அசுரர்களின் கோட்டைகளை, உறுதிமிக்க மேருமாலையை வில்லாகக் கொண்டு எரித்துச் சாம்பலாக்கியவர்; வண்டு, பண்ணின் இசை பயிலும் குளிர்ச்சி மிக்க வலஞ்சுழியில் வீற்றிருப்பவர். அனைத்து உலகமும் ஆகும் அண்டவாணனாகிய அப்பரமனுக்கு, நான் என்றென்றும் அடிமையாக விளங்குவேன்.

668. படங்கொள் பாம்பொடு பால்மதி யம்சடை
அடங்க வாழவல் லான்உம்பர் தம்பிரான்
மடந்தை பாகன் வலஞ்சுழி யான்அடி
அடைந்த வர்க்குஅடி மைத்திறந்து ஆவனே.

தெளிவுரை : சிவபெருமான், பாம்பும் பிறைச் சந்திரனும் சடை முடியில் அடங்கி வாழுமாறு செய்யும் வல்லமை யுடையவர்; தேவர்களின் தலைவர்; உமா தேவியை ஒரு பாகமாகத் திருமேனியில் கொண்டு விளங்குபவர். அப்பரமன், வலஞ்சுழியில் வீற்றிருப்பவர். அவருடைய திருவடியை அடைந்து ஏத்தும் அடியவர் பெருமக்களுக்கு நான் அடிமை பூண்டு அருளாற்றலைப் பெறுபவன் ஆவேன்.

669. நாக்கொண் டுபர வும்அடி யார்வினை
போக்க வல்ல புரிசடைப் புண்ணியன்
மாக்கொள் சோலை வலஞ்சுழி ஈசன்றன்
ஏக்கொ ளப்புர மூன்றுஎரி யானவே.

தெளிவுரை : நாவினால் திருவைந்தெழுத்தினை ஓதி உள்ளமானது பரவசம் கொண்டு மனம் ஒன்றி, ஏத்துகின்ற அடியவர் பெருமக்களின் வினையை நீக்கி, அருள் வழங்கும் புண்ணிய மூர்த்தியாக விளங்குபவர். சிவபெருமான். அவர், சடை முடியுடையவராகிப் பெருமை மிகுந்த சோலை விளங்கும் வலஞ்சுழியில் வீற்றிருக்கும் இறைவன் ஆவர். அப்பெருமான், ஒரே அம்பினைக் கொண்டு முப்புரங்களை எரித்துச் சாம்பலாக்கியவர். அப்பரமனை ஏத்தி உய்வீராக என்பது குறிப்பு.

670. தேடு வார்பிர மான்திரு மாலவர்
ஆடு பாதம் அவரும் அறிகிலார்
மாட வீதி வலஞ்சுழி ஈசனைத்
தேடு வான்உறு கின்றதுஎன் சிந்தையே.

தெளிவுரை : பிரமனும் திருமாலும் ஈசனின் திருவடியைத் தேடிச் சென்றும் அறிகிலர், அத்தகைய பெருமான் வலஞ்சுழியில் வீற்றிருக்க என் சிந்தையானது தேடிக்கொண்டு அதனை உறுகின்றது.

671. கண்ப னிக்குங்கை கூப்பும்கண் மூன்றுடை
நண்ப னுக்குஎனை நான்கொடுப் பேன்எனும்
வண்பொன்னித்தென் வலஞ்சுழி மேவிய
பண்பன்இப் பொனைச் செய்த பரிசிதே.

தெளிவுரை : கண்கள் ஆனந்தக் கண்ணீரைத் துளிர்க்கச் செய்ய கைகள் கூப்பி முக்கண்ணுடைய ஈசனுக்கு, நான் மகிழ்ச்சியுடன் அடிமை பூண்பேன் என, ஒரு நங்கை சொல்லுகின்றாள். இது, வளமை மிக்க காவிரித் தென்கரைத் தலமாகிய வலஞ்சுழியில் மேவும் நற்பண்புடைய சிவபெருமான், இந்த நங்கையின் பால் அருள்தன்மையுடன் செய்த பரிசாகும்.

672. இலங்கை வேந்தன் இருபது தோளிற
நலங்கொள் பாதத்து ஒருவிரல் ஊன்றினான்
மலங்கு பாய்வயல் சூழ்ந்த வலஞ்சுழி
வலங்கொள் வார்அடி என்தலை மேலவே.

தெளிவுரை : இராவணனுடைய இருபது தோளும் நலியுமாறு, நலம்தரும் திருப்பாத விரலால் ஊன்றியவர் சிவபெருமான். அவர், வயல் சூழ்ந்த வலஞ்சுழியில் வீற்றிருக்க அதனை வலம் செய்பவர் திருவடியானது, என் தலையின் மேலானவாகும்.

திருச்சிற்றம்பலம்

67. திருவாஞ்சியம் (அருள்மிகு வாஞ்சிநாதர் திருக்கோயில், ஸ்ரீவாஞ்சியம், திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

673. படையும் பூதமும் பாம்பும்புல் வாய்அதள்
உடையும் தாங்கிய உத்தம னார்க்குஇடம்
புடைநி லாவிய பூம்பொழில் வாஞ்சியும்
அடைய வல்லவர்க்கு அல்லல்ஒன்று இல்லையே.

தெளிவுரை : சிவபெருமான், மழு, சூலம் ஆகிய படைகளும், பூத கணங்களும், பாம்பும், மான்தோல் உடையும் கொண்டு விளங்குபவர். அவர் மேவும் இடமாவது பூம்பொழில் சூழ்ந்த வாஞ்சியம் ஆகும். அத்தலத்தை அடைந்து ஈசனை ஏத்துபவர்களுக்கு அல்லல் ஏதும் இல்லை.

674. பறப்பை யும்பசு வும்படுத் துப்பல
திறத்த வும்முடை யோர்திக ழும்பதி
கறைப்பி றைச்சடைக் கண்ணுதல் சேர்தரு
சிறப்பு டைத்திரு வாஞ்சியம் சேர்மினே.

தெளிவுரை : பல வண்ணமுடைய வேள்விச் சாலைகளைக் கொண்டு, நெய் சொரிந்தும், பசுவுக்கு வாயுறை கொடுத்தும், ஆராதித்தும் விளங்கும் சிறப்புடைய அந்தணர்கள் வாழும் பதியாவது திருவாஞ்சியம் ஆகும். ஆங்கு ஈசன் கண்டத்தில் கறையுடையவராகி மேவும் நீல கண்டத்தவராகவும், பிறைச் சந்திரனைச் சடை முடியில் தரித்தவராகவும், நெற்றியில் கண்ணுடையவராகவும் விளங்குபவர். அப் பரமனை ஏத்துக என்பது குறிப்பு.

675. புற்றில் ஆடர வோடு புனல்மதி
தெற்று செஞ்சடைத் தேவர்பி ரான்பதி
சுற்று மாடங்கள் சூழ்திரு வாஞ்சியம்
பற்றிப் பாடுவார்க் குப்பாவம் இல்லையே.

தெளிவுரை : சிவபெருமான், புற்றில் விளங்கும் பாம்புடன் கங்கையும், சந்திரனும் சேர்ந்து விளங்குமாறு சிவந்த சடைமுடியில் தரித்த தேவர்பிரான் ஆவார். அவர் மாட மாளிகைகள் சூழ விளங்கும் திருவாஞ்சியத்தில் வீற்றிருப்பவர். அப்பரமனை ஏத்திப் பாடும் அடியவர்களுக்குப் பாவம் அணுகாது.

676. அங்கம் ஆறும் அருமறை நான்குடன்
தங்கு வேள்வியர் தாம்பயிலும் நகர்
செங்கண் மால்இட மார்திரு வாஞ்சியம்
தங்கு வார்தாம் அமரர்க்கு அமரரே.

தெளிவுரை : நான்கு வேதங்களும் அதன் ஆறு அங்கங்களும் கொண்டு வேள்வி புரியும் அந்தணர்கள் விளங்குகின்ற நகரானது, செங்கண்ணுடைய திருமால் பூசித்து மகிழ்ந்த திருவாஞ்சியம் என்பதாகும். ஆங்குத் திருத்தல வாசம் செய்து, சிவபெருமானை ஏத்தி வணங்குபவர்கள், தேவர்களுக்குத் தலைவராகும் பேற்றினை அடைவார்கள்.

677. நீறு பூசி நிமிர்சடை மேற்பிறை
ஆறு சூடும் அடிகள் உறைபதி
மாறு தான் ஒருங்கும் வயல் வாஞ்சியம்
தேறி வாழ்பவர்க்குச் செல்வம் ஆகுமே.

தெளிவுரை : சிவபெருமான், திருநீறு பூசி விளங்குபவர்; சடைமுடியின் மீது பிறைச்சந்திரனும் கங்கையும் சூடி மேவுபவர். அப்பரமன் உறையும் பதியாவது, வளமான நெற்பயிருக்கு மாறாக உடைய கோரை, பூச்சி, நீர்இன்மை, பருவநிலை பாதிப்பு, வெள்ளம், சாரமற்ற மண் முதலானவற்றை அழித்து மேவும் வயல்களின் சிறப்புடைய  வாஞ்சியம் ஆகும். அப்பதியைச் சார்ந்து ஈசனை ஏத்துபவர்கள் செல்வ வளத்தைப் பெறுவர்.

678. அற்றுப் பற்றின்றி யாரையும் இல்லவர்க்கு
உற்ற நற்றுணை யாவன் உறைபதி
தெற்று மாடங்கள் சூழ்திரு வாஞ்சியம்
கற்றுச் சேர்பவர்க் குக்கருத்து ஆவதே.

தெளிவுரை : மாயும் உலகப் பொருளின் மீது பற்று கொள்ளாது, வறியவனாகிய தனக்குத் துணையாக யாரும் இல்லையே என்னும் குறையில்லாத அடியவர்களுக்கு நல்ல துணையாகிய சிவபெருமான் உறையும் பதியாவது, மாடமாளிகைகள் மிகுந்த திருவாஞ்சியம் என்னும் நகர் ஆகும். அப்பரமனின் திருநாமத்தை ஓதி ஏத்தும் அன்பர்களுக்கு, அவர் உள்ளத்தின் கருத்தாய் விளங்கி, மகிழ்விப்பவர் ஆவர்.

679. அருக்கன் அங்கி யமனொடு தேவர்கள்
திருத்தும் சேவடி யான்திக ழும்நகர்
ஒருத்தி பாகம் உகந்தவன் வாஞ்சியம்
அருத்தி யால்அடை வார்க்கு இல்லை அல்லலே.

தெளிவுரை : சூரியன், அக்கினி, இயமன் மற்றும் தேவர்கள் தவறு செய்த காலத்தில் அவர்களைத் திருத்தம் செய்து அருள் புரிபவர், சிவபெருமான். அப்பரமன் திகழும் நகரானது, உமா தேவியை ஒரு பாகமாகக் கொண்டு உகந்து மேவும் திருவாஞ்சியம் ஆகும். இத் திருத்தலத்தை விருப்பம் கொண்டு ஏத்தும் அடியவர்களுக்கு, அல்லல் யாவும் விலகிச் செல்லும்.

திருச்சிற்றம்பலம்

68. திருநள்ளாறு (அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருநள்ளாறு, காரைக்கால்,புதுச்சேரி மாநிலம்)

திருச்சிற்றம்பலம்

680. உள்ளா றாததோர் புண்டரி கத்திரள்
தெள்ளா றாச்சிவ சோதித் திரளினைக்
கள்ளா றாதபொற் கொன்றை கமழ்சடை
நள்ளா றாஎன நம்வினை நாசமே.

தெளிவுரை : புற இதழும் அக இதழும் கொண்டு விளங்கும் தாமரையின் தெளிவான வண்ணமிகு சிவசோதியின் திரட்சியாக விளங்குபவர் சிவ பெருமான். அப்பரமனைத் தேன் துளிர்க்கும் பொன் போன்ற கொன்றை மலரின் நறுமணத்துடன் கமழ்கின்ற சடையுடைய திருநாள்ளாற்றீசனே என்று ஏத்திப் போற்ற, நம்முடைய வினை யாவும் கெடும்.

681. ஆர ணப்பொரு ளாம்அரு ளாளனார்
வார ணத்துஉரி போர்த்த மணாளனார்
நார ணன் நண்ணி யேத்துநள் ளாறனார்.
கார ணத்தலை ஞானக் கடவுளே.

தெளிவுரை : ஈசன், வேதத்தின் பொருளாகவும், அருளாளராகவும், யானையின் தோலை உரித்துப் போர்த்தியவராகவும், உமா தேவியாரை உடனாகக் கொண்டு மணவாளத் திருக்கோலத்தில் வீற்றிருப்பவர். திருமால் நண்ணி ஏத்த நள்ளாற்றில் மேவும் அப் பரமன், எல்லாவற்றுக்கும் கலைஞானக் கடவுளாக விளங்குபவர், ஆவார்.

682. மேகம் பூண்டதோர் மேருவிற் கொண்டெயில்
சோகம் பூண்டழல் சோரத்தொட் டான்அவன்
பாகம் பூண்டமால் பங்கயத் தானொடு
நாகம் பூண்டுகூத் தாடுநள் ளாறனே.

தெளிவுரை : சிவபெருமான், மேரு மலையை வில்லாகக் கொண்டு முப்புரக் கோட்டைகளை எரித்துச் சாம்பலாக்கியவர். அப்பெருமான், திருமேனியில் பாகமாகக் கொண்டு விளங்குகின்ற திருமாலும், நான்முகனும் காண நாகத்தை அணியாகக் கொண்டு நடனம் புரிந்து நள்ளாற்றில் வீற்றிருப்பவர். இது விடங்கரைக் குறிப்பால் உணர்த்திற்று.

683. மலியும் செஞ்சடை வாளர வம்மொடு
பொலியும் பூம்புனல் வைத்த புனிதனார்
நலியும் கூற்றை நலிந்தநள் ளாறர்தம்
வலியும் கண்டுஇறு மாந்து மகிழ்வனே.

தெளிவுரை : திருநள்ளாற்றீசர் செஞ்சடையில் பாம்பும் கங்கையும் திகழும் புனிதராய் விளங்குபவர். அப்பெருமான், எல்லாரையும் நலியச் செய்யும் கூற்றுவனை உதைத்து அழித்த ஆற்றலை எண்ணி, நான் பெருமிதத்துடன் மகிழ்கின்றேன்.

684. உறவ னாய்நிறைந்து உள்ளம் குளிர்ப்பவன்
இறைவ னாகிநின்று எண்ணிறைந் தானவன்
நறவ நாறும் பொழில்திரு நள்ளாறன்
மறவ னாய்ப் பன்றிப்பின் சென்ற மாயமே.

தெளிவுரை : சிவபெருமான், அன்பின் உறவு கொண்டவராகி உள்ளத்தில் இனிமையைத் தருபவர்; இறைவனாகி எண்ணத்தில் நிறைந்து விளங்குபவர்; நறுமணம் கமழும் பொழில் சூழ்ந்த நள்ளாற்றீசனாக விளங்கி அருள் புரிபவர். அப்பெருமான், அருச்சுனனுக்கு அருள் செய்யும் தன்மையில், வேட்டுவ வீரனாகத் திருக்கோலம் தாங்கிப் பன்றியின் பின் சென்ற மாயம்தான் என்னே !

685. செக்கர் அங்கழி செஞ்சுடர்ச் சோதியார்
நக்கர் அங்குஅரவார்த்தநள் ளாறானர்
வக்க ரன்னுயிர் வவ்விய மாயற்குச்
சக்க ரம்அருள் செய்த சதுரரே.

தெளிவுரை : சிவபெருமான், சிவந்த வானமும் விஞ்சுமாறு செஞ்சுடர் வண்ணத்தவர்; திகம்பரராய், ஆடையின்றி விளங்கி, அரவத்தை ஆர்த்துக் கட்டி விளங்குபவர். அப்பெருமான், வக்கராசூரனை வெற்றி கொண்ட திருமாலுக்குச் சக்கரப்படையை அருள் செய்த சதுரர்.

686. வஞ்ச நஞ்சிற் பொலிகின்ற கண்டத்தர்
விஞ்சை யிற்செல்வப் பாவைக்கு வேந்தனார்
வஞ்ச நெஞ்சத் தவர்க்கு வழிகொடார்
நஞ்ச நெஞ்சர்க்கு அருளுநள் ளாறரே.

தெளிவுரை : சிவபெருமான், கொல்லும் வஞ்சத்தையுடைய நஞ்சினைக் கண்டத்தில் பொருத்தியவர்; எல்லாச் செல்வங்களும் பொருந்திய ஞானாம்பிகையாக விளங்கும் உமாதேவியின் நாயகர்; அப்பெருமான், வஞ்சம் உடைய தீய நெஞ்சினர்க்குத் துணை சாராது அவர்களுக்குக் கரவுடைவராகியும், மனம் நைந்து கசிந்து உருகும் அன்புடையவர்களுக்கு அருள் புரிபவராகியும் விளங்குபவர். அவர் நள்ளாற்றீசரே.

687. அல்லன் என்றும் அலர்க்குஅரு ளாயின
சொல்லன் என்று சொல்லா மறைச் சோதியான்
வல்லன் என்றும்வல் லார்வளம் மிக்கவர்
நல்லன் என்றும்நல் லார்க்கு நள்ளாறனே.

தெளிவுரை : திருநள்ளாற்றில் வீற்றிருக்கும் ஈசன் தன்னை இல்லை என்னும் சொல்லை உரைப்பவர்களுக்கு இல்லாதவராகவும்; அருள் என்னும் சொல்லுக்கு உரியவராகவும் விளங்குபவர். அப்பெருமான், சொல்லா மறையாக விளங்கும் மந்திரமாகவும், சோதியாகவும், யாவற்றிலும் வல்லவர் என்னும் விளங்குபவர். அவர், தன்னை நற்குணத்தவராய் நின்ற ஏத்தும் நல்லோர்களுக்கு வளம் மிகுந்த நல்லோராகவும் திகழ்பவர்.

688. பாம்ப ணைப்பள்ளி கொண்ட பரமனும்
பூம்ப ணைப்பொலி கின்ற புராணனும்
தாம்ப ணிந்தளப்பு ஒண்ணாத் தனித்தழல்
நாம்ப ணிந்துஅடி போற்றுநள் ளாறனே.

தெளிவுரை : சிவபெருமான், பாம்பணையில் பள்ளி கொண்ட திருமாலும், தாமரையில் வீற்றிருக்கும் நான்முகனும் அளக்க ஒண்ணாத பெருஞ் சோதி வடிவமாக உயர்ந்தவர். அப் பரமன், நாம் பணிந்து திருவடியைப் போற்றுகின்ற நள்ளாற்று நாதர் ஆவர்.

689.இலங்கை மன்னன் இருபது தோளிற
மலங்க மால்வரை மேல்விரல் வைத்தவர்
நலங்கொள் நீற்றர்நள் ளாறரை நாள்தொறும்
வலங்கொள் வார்வினை யாயின மாயுமே.

தெளிவுரை : இலங்கை வேந்தனாகிய இராவணனுடைய இருபது தோளும் நலியுமாறு பெருமையுடைய கயிலை மலையின்மீது திருவிரலை வைத்தவர், நலம் தரும் திருநீற்றுத் திருமேனியராகிய நள்ளாற்று நாதம் ஆவார். நாள்தோறும் அப்பரமனை வலம் வந்து ஏத்தி வழிபடும் பக்தர்களின் வினை யாவும் மாயும்.

திருச்சிற்றம்பலம்

69. திருக்கருவிலிக் கொட்டிட்டை (அருள்மிகு சற்குணேஸ்வரர் திருக்கோயில், கருவேலி, திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

690. மட்டிட் டகுழலார் சுழ வில்வலைப்
பட்டிட் டுமயங்கிப்பரி யாதுநீர்
கட்டிட் டவினை போகக் கருவிலிக்
கொட்டிட் டையுறை வான்கழல் கூடுமே.

தெளிவுரை : தேனையுடைய மலர்களைச் சூடிய கூந்தலை உடைய மங்கையர்பால் மயக்கம் கொண்டு காலத்தைப் போக்காது உமது பந்தப்பட்ட வினையை நீக்குவதற்குக் கருவிலியில் மேவும் கொட்டிட்டையில் உறையும் ஈசனின் திருக்கழலை ஏத்துவீராக.

691. ஞாலம் மல்கு மனிதர்காள் நாள்தொறும்
ஏல மாமல ரோடுஇலை கொண்டுநீர்
கால னார்வரு தன்முன் கருவிலிக்
கோல வார்பொழிற் கொட்டிட்டை சேர்மினே.

தெளிவுரை : உலகில் நன்கு மேவும் மனிதர்காள் ! நாள்தோறும், நறுமண மலர்களும் பத்திரங்களும் கொண்டு காலன் வந்து உயிரைக் கவர்வதன் முன்னர், கருவிலியில் அழகுடன் மிளிரும் பொழில் திகழும் கொட்டிட்டை சேர்ந்து ஈசனை வழிபடுவீராக.

692. பங்க மாயின பேசப் பறைந்துநீர்
மங்கு மாநினை யாதே மலர்கொடு
கங்கை சேர்சடை யான்றன் கருவிலிக்
கொங்கு வார்பொழிற் கொட்டிட்டை சேர்மினே.

தெளிவுரை : தீய வினைகளைப் பெருக்கிப் பங்கப்படுத்தி, அழிவைத் தரும் சொற்களைப் பேசாதீர்கள். நறுமலர்கள் கொண்டு, கங்கை தரித்த சடை முடியுடைய சிவபெருமானை ஏத்துவீராக ! அவர் கருவிலியில் தேன் மணம் கமழும் பொழில் சேர்ந்த கொட்டிட்டையில் வீற்றிருக்க, அவரை அடைவீராக.

693. வாடி நீர்வருந் தாதே மனிதர்காள்
வேட னாய் விசயற்கருள் செய்தவெண்
காட னார்உறை கின்ற கருவிலிக்
கோடு நீள்பொழிற் கொட்டிட்டை சேர்மினே.

தெளிவுரை : மனிதர்களே ! நீங்கள் துன்பத்தால் மனம் வருத்த வேண்டாம். அர்ச்சுனருக்கு வேடனாக வந்து அருள் செய்த சிவபெருமான், திருவெண்காட்டில் உறைபவர். அவர் கருவிலியில் மேவும் பொழில் திகழும் கொட்டிட்டையில் வீற்றிருப்பவர். ஆங்குச் சென்றடைவீராக. உமது துன்பம் யாவும் தீரும் என்பது குறிப்பு.

694. உய்யு மாறுஇது கேண்மின் உலகத்தீர்
பைகொள் பாம்பரை யான்படை யார்மழுக்
கையி னான்உறை கின்ற கருவிலிக்
கொய்கொள் பூம்பொழிற் கொட்டிட்டை சேர்மினே.

தெளிவுரை : உலகத்தவர்களே ! நீங்கள் உய்யுமாறு கூறுகின்றேன். கேட்பீராக. பாம்பை அரையில் கட்டி, மழுப்படையைக் கையில் ஏந்திய சிவபெருமான், உறைகின்ற கருவிலியில் மேவும் பூம்பொழில் திகழும் கொட்டிட்டையைச் சென்றடைவீராக. ஆங்குச் சென்று ஈசனை ஏத்துவீராக.

695. ஆற்ற வும்அவ லத்தழுந் தாதுநீர்
தோற்றும் தீயொடு நீர்நிலந் தூவெளி
காற்றும் ஆகிநின் றான்றன் கருவிலிக்
கூற்றங் காய்ந்தவன் கொட்டிட்டை சேர்மினே.

தெளிவுரை : அவலமாகிய துன்பத்தில் அழுந்தி வாட வேண்டாம். சிவபெருமான், நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகாயம் என ஐம்பூதங்களாகி விளங்குபவர். அவர் கருவிலிக் கொட்டிட்டையில் வீற்றிருப்பவர்; கூற்றுவனை அழித்தவர். அப்பரமனைச் சார்ந்து இருப்பீராக. உமது அவலம் யாவும் நீங்கி அழியும் என்பது குறிப்பு.

696. நில்லா வாழ்வு நிலைபெறும் என்றெண்ணிப்
பொல்லா வாறு செயப்புரி யாதுநீர்
கல்லா ரும்மதில் சூழ்தண் கருவிலிக்
கொல்லேறு ஊர்பவன் கொட்டிட்டை சேர்மினே.

தெளிவுரை : இந்த வாழ்க்கையானது நிலையற்றது. இதனை நிலைப்படுத்த வேண்டும் என்று எண்ணித் தீமையான செயல்களைப் புரியாதீர். உறுதியான கற்களால் ஆன மதில் சூழ்ந்த குளிர்ச்சி மிக்க கருவிலிக் கொட்டிட்டையில் இடப வாகனத்தில் மேவும் ஈசனின் பாதமலரை ஏத்தி மகிழ்வீராக.

697. பிணித்த நோய்ப்பிற விப்பிரி வெய்துமாறு
உணர்த்த லாம்இது கேண்மின் உருத்திர
கணத்தி னார்தொழுது ஏத்தும் கருவிலிக்
குணத்தி னான்உறை கொட்டிட்டை சேர்மினே.

தெளிவுரை : உமது தேகத்தில் உள்ள பிணியும், பிறவியாகிய நோயும் நீங்குவதற்கு உரிய வழியைக் கூறக் கேண்மின். உருத்திர கணத்தினர் தொழுது ஏத்திய ஈசன் எண் குணத்தினராய்க் கருவிலிக் கொட்டிட்டையில் வீற்றிருக்க, அவர்பால் சென்றடைந்து உய்வீராக.

698. நம்பு வீர்இது கேண்மின் கள்நாள்தொறும்
எம்பி ரான்என்று இமையவர் ஏத்துமே
கம்ப னார்உறை கின்ற கருவிலிக்
கொம்ப னார்பயில் கொட்டிட்டை சேர்மினே.

தெளிவுரை : நான் சொல்வதை உறுதியாகக் கொள்வீராக. தேவர்கள் எல்லாம் எமது தலைவர் என்று நாள்தோறும் ஏத்தும் கச்சித் திருவேகம்பத்தில் மேவும் சிவபெருமான் உறைகின்ற இடம் கருவிலிக் கொட்டிடையாகும். ஆங்குச் சென்றடைந்து ஏத்துவீராக. இது முந்தையத் திருப்பாட்டில் உணர்த்தியவாறு உடற்பிணியும் பிறவிப் பிணியும் நீக்கும் என்பது குறிப்பு ஆயிற்று.

699. பாருளீர்இது கேண்மின் பருவரை
பேரு மாறுஎடுத் தானை அடர்த்தவன்
கார்கொள்  நீர்வயல் சூழ்தண் கருவிலிக்
கூர்கொள் வேலினன் கொட்டிட்டை சேர்மினே.

தெளிவுரை : உலகத்தோரே ! இதனைக் கேட்பீராக. பெரிய கயிலை மலையை, எடுத்த இராவணனை அடர்த்த ஈசன் நீர்வளம் மிக்க வயல் சூழ்ந்த கருவிலிக் கொட்டிட்டையில் சூலப்படை கொண்டு வீற்றிருக்க, அப்பெருமானைச் சார்ந்து நற்கதி பெறுவீராக.

திருச்சிற்றம்பலம்

70. திருக்கொண்டீச்சரம் (அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், திருக்கொண்டீஸ்வரம், திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

700. கண்ட பேச்சினிற் காளையர் தங்கள்பால்
மண்டி யேச்சுணும் மாதரைச் சேராதே
சண்டி யீச்சுர வர்க்கருள் செய்தஅக்
கொண்டி யீச்சுர வன்கழல் கூறுமே.

தெளிவுரை : நெஞ்சமே ! இழிந்த தன்மையுடைய காமத்தில் வயப்பட்டு நிந்தைக்கு உரியவர்களாகிக் காலத்தை வீணாகக் கழிக்காதே. சிவபெருமான், சண்டேஸ்வர நாயனாருக்கு அருள் செய்த பரமர், அவர் கொண்டீச்சரத்தில் வீற்றிருப்பவர். அப்பெருமானுடைய திருக்கழலை ஏத்தி மகிழ்க.

701. சுற்றமும் துணை நன்மட வாளொடு
பெற்ற மக்களும் பேணல் ஒழிந்தனர்
குற்ற மில்புகழ்க் கொண்டீச் சுரவனார்
பற்ற லால்ஒரு பற்றுமற்று இல்லையே.

தெளிவுரை : உறுதுணையாய் விளங்கும் சுற்றத்தினரும், மனைவி, மக்கள் ஆகியோரும் அந்திமக் காலத்தில் உற்ற துணையாக இருந்து  பேணுதலைத் தவிர்த்தனர். நெஞ்சமே ! குற்றமில்லாத புகழுடைய கொண்டீச் சுரத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானைப் பற்றுவதைத் தவிர வேறு எதனைப் பற்றினாலும் பயனில்லை.

702. மாடு தானது இல்லெனில் மாநுடர்
பாடு தான் செல்வார் இல்லைபன் மாலையாற்
கூட நீர்சென்று கொண்டீச் சுரவனைப்
பாடு மின்பர லோகத்து இருத்துமே.

தெளிவுரை : செல்வம் இல்லை என்றால், மானுடர் நெருங்கிச் சார்ந்து இருக்க மாட்டார்கள். தோத்திரப் பாமாலை கொண்டு திருக்கொண்டீச்சரத்துள் மேவும் சிவபெருமானைப் பாடுவீராக. அப்பரமன், உம்மைத் தனது உலகில் இருத்தி மகிழுமாறு செய்வார்.

703. தந்தை தாயொடு தாரம் என்னும் தளைப்
பந்தம் ஆங்குஅறுத் துப்பயில் வெய்திய
கொந்த விழ் பொழிற் கொண்டீசர் சுரவனைச்
சிந்தை செய்மின் அவனடி சேரவே.

தெளிவுரை : தந்தை, தாய், தாரம் என்று பந்தப்படுத்துகின்ற தளையை அறுத்துப் பூங்கொத்துகள் விளங்கும் பொழில் உடைய கொண்டீச்சரத்தில் மேவும் சிவபெருமானைச் சிந்தை செய்வீராக. அது, அப்பரமனுடைய திருவடியைச் சென்றடைவதற்குரிய வழியாகும்.

704. கேளுமின்இள மைய்யது கேடுவந்து
ஈளை யோடுஇரு மல்லது எய்தன்முன்
கோர ராஅணி கொண்டீச் சுரவனை
நாளும் ஏத்தித் தொழுமின் நன்காகுமே.

தெளிவுரை : மாந்தர்காள் ! கேட்பீர்களாக ! இளமையானது ஒரு கால கட்டத்தில் அழியக்கூடியது. உடலானது, கேட்டினை அடைந்து ஈளையும் இருமலும் கொள்ளும். அத்தகைய இடர் நேருவதன் முன்பாக, பாம்பினை அணிகலனாகக் கொண்டு விளங்குகின்ற கொண்டீச்சரத்தில் வீற்றிருக்கும் சிவ பெருமானை நாள்தோறும் ஏத்தித் தொழுவீராக. அதுவே நற்கதியைத் தந்து எழில்பெறச் செய்யும்.

705. வெம்பு நோயும் இடரும் வெறுமையும்
துன்ப மும்துய ரும்எனும் சூழ்வினை
கொம்ப னார்பயில் கொண்டீச் சுரவனை
எம்பி ரான்என வல்லவர்க்கு இல்லையே.

தெளிவுரை : பூங்கொம்பு அனைய மங்கையர்கள் இறைத் தொண்டு ஆற்றும் கொண்டீச்சுரத்தில் மேவும் எம் சிவபெருமானை ஏத்தி வணங்கும் அன்பர்களுக்கு வெம்பும் தன்மையில் உள்ள பிணி, இடர், பயனற்ற தன்மை, உடல் துன்பம், மனத்துயர் முதலானவை சேர்க்கும் தீய வினையானது இல்லை.

706. அல்ல லோடுஅரு நோயில் அழுந்திநீர்
செல்லு மாநினை யாதே கனைகுரல்
கொல்லை யேறுடைக் கொண்டீச்சுரவனை
வல்ல வாறு தொழவினை மாயுமே.

தெளிவுரை : நெஞ்சமே ! இப் பிறவியில் உற்ற அல்லல்களும் பிணிகளும் நீங்குவதற்கு உரிய வழி யாது என்று தேவி நினைத்துக்கொண்டு இருக்க வேண்டாம். இடப வாகனத்தையுடைய சிவபெருமான் கொண்டீச்சுரத்தில் வீற்றிருக்க, அப் பரமனை வல்லவாறு தொழுமின், வினை யாவும் தீரும்.

707. நாறு சாந்தணி நன்முலை மென்மொழி
மாறிலா மலை மங்கையொர் பாகமாக்
கூற னார்உறை கொண்டீச் சுரநினைத்து
ஊறு வார்தமக்கு ஊனம்ஒன்று இல்லையே.

தெளிவுரை : நறுமணம் கமழும் திருமேனியுடைய மென்மையான மொழிகளாகிய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு, கொண்டீச்சுரத்தில் மேவும் சிவபெருமானை நினைந்து, ஏத்திக் கசிந்துருகிப் போற்றும் அன்பர்களுக்கு, எத்தகைய குறைபாடும் இல்லை. இத் திருத்தலத்தில் மேவும் தேவியின் திருப்பெயரானது, மென் மொழி மாறிலா மலை மங்கை எனக் குறிப்பால் உணர்த்துவதாயிற்று. தேவியின் பெயர் சாந்தநாயகி என்பதனைக் காண்க.

708. அயிலார் அம்பெரி மேருவில் லாகவே
எயிலா ரும்பொடி யாய்விழ எய்தவன்
குயிலா ரும்பொழிற் கொண்டீச் சுரவனைப்
பயில்வா ரும்பெரு மைபெறும் பாலரே.

தெளிவுரை : சிவபெருமான், மேருமலையை வில்லாக ஏந்தி, அக்கினித் தேவனை கூர்மையுடைய அம்பாகக் கொண்டு முப்புரங்களை எரித்துச் சாம்பலாக்கியவர். அவர் குயில்கள் மகிழ்ந்து பாடும் பொழில் விளங்கும் கொண்டீச்சரத்தில் வீற்றிருப்பவர். அப் பெருமானை ஏத்தி வணங்குபவர்கள் பெருமை மிக்கவர்களாவர். இது, இறைவனை ஏத்தும் அடியவர்கள் புகழ் பெற்று விளங்கும் தன்மையினர் ஆவர் என, உணர்த்துதலாயிற்று.

709. நிலையி னார்வரை நின்றெடுத் தான்றனை
மலையி னால்அடர்த் துவிறல் வாட்டினான்
குலையி னார்பொழில் கொண்டீச் சுரவனைத்
தலையி னால்வணங் கத்தவம் ஆகுமே.

தெளிவுரை : கயிலையைப் பெயர்த்தெடுத்த இராவணனுடைய வலிமையை அழித்த சிவபெருமான், பொழில் விளங்கும் கொண்டீச்சரத்தில் வீற்றிருப்பவர். அப்பரமனைத் தலையால் வணங்கத் தவப்பயன் ஆகும்.

திருச்சிற்றம்பலம்

71. திருவிசய மங்கை (அருள்மிகு விஜயநாதேஸ்வரர் திருக்கோயில், திருவிஜயமங்கை, தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

710. குசையும் அங்கையிற் கோசமுங் கொண்டஅவ்
வசையின் மங்கல வாசகர் வாழ்த்தவே
இசைய மங்கையும் தானும்ஒன் றாயினான்
விசைய மங்கையுள் வேதியன் காண்மினே.

தெளிவுரை : அழகிய கையில் தருப்பை ஏந்தி வேத நூலில் விதித்தவாறு மந்திரங்களை ஓதிக் குற்றமற்ற மங்கலவாசகம் உரைக்கும் அந்தணர்கள் வாழ்த்த, உமாதேவியும் தானும் ஓருருவாகி, அர்த்தநாரியாகத் திகழ்பவர், சிவபெருமான். அவர், விசய மங்கையில் வேத நாயகனாக வீற்றிருப்பவர். அப் பரமனைக் கண்டு தரிசிப்பீராக. இது  உய்தலைநல்கும் என்பது குறிப்பு.

711. ஆதி நாதன் அடல்விடை மேலமர்
பூத நாதன் புலியதள் ஆடையன்
வேத நாதன் விசயமங் கையுளான்
பாதம் ஓதவல் லார்க்கு இல்லை பாவமே.

தெளிவுரை : சிவபெருமான், ஆதி நாதனாகவும், இடப வாகனத்தில் உள்ளவராகவும், ஐம்பூதங்களின் தலைவராகவும், புலித்தோலை உடுத்தியவராகவும், வேதத்தின் தலைவராகவும் விளங்குபவர். அவர் விசய மங்கையுள் வீற்றிருக்க, அவருடைய திருப்பாதத்தைத் திருவைந்தெழுத்தால் ஓதி ஏத்த வல்லவர்களுக்குப் பாவம் என்பது அணுகாது.

712. கொள்ளி டக்கரைக் கோவந்த புத்தூரில்
வெள்வி டைக்கருள் செய்விச யமங்கை
உள்ளி டத்துறை கின்ற உருத்திரன்
கிள்ளி டத்தலை அற்றது அயனுக்கே,

தெளிவுரை : சிவபெருமான் கொள்ளிடக் கரையில் உள்ள கோவந்தபுத்தூரில் வெள்ளை இடபத்திற்கு அருள் செய்தவர்; விசய மங்கையில் வீற்றிருப்பவர். அப்பெருமான், பிரமனின் ஐந்து தலைகளுள் ஒன்றினைக் கொய்தவர் ஆவார்.

713. திசையும் எங்கும் குலுங்கத் திரிபுரம்
அசைய அங்கெய்திட் டார்அழல் ஊட்டினான்
விசைய மங்கை விருத்தன் புறத்தடி
விசையின் மங்கி விழுந்தனன் காலனே.

தெளிவுரை : தொன்மைப் பொருளாக விளங்குகின்ற சிவபெருமான், முப்புரங்களின் தீயானது திசையெங்கும் பரவிக் குலங்குமாறு செய்து சாம்பலாக்கி அழித்தவர். விசய மங்கையில் வீற்றிருக்கும் அப்பெருமான், உதைத்த அத் தருணத்திலேயே காலன் மாயுமாறு செய்த ஆற்றல் உடையவர் ஆவார்.

714. பொள்ளல் ஆக்கை அகத்தில்ஐம் பூதங்கள்
கள்ளம் ஆக்கிக் கலக்கிய காரிருள்
விள்ளல் ஆக்கி விசயமங் கைப்பிரான்
உள்ளல் நோக்கிஎன் னுள்ளுள் உறையுமே.

தெளிவுரை : ஒன்பது துவாரங்களையுடையது இவ்வுடம்பு. இதனுள் ஐம்புலன்கள் இருந்து வஞ்சகத்தைப் புரிகின்றன. இருள் சூழ்ந்து மேவும் இத் தன்மையினை வெருட்டும் பாங்கில், விசய மங்கையில் மேவும் சிவபெருமான், அப்பெருமானை நினைத்து ஏத்துமாறு, என்னுள்ளத்தில் உறைகின்றனர்.

715. கொல்லை யேற்றுக் கொடியொடு பொன்மலை
வில்லை யேற்றுடை யான்விச யமங்கைச்
செல்வ போற்றிஎன் பாருகுத் தென்திசை
எல்லை ஏற்றலும் இன்சொலும் ஆகுமே.

தெளிவுரை : இடபத்தைக் கொடியாகவும் மேரு மலையை வில்லாகவும் கொண்டு விளங்கும் சிவபெருமானை, விசய மங்கையில் மேவும் செல்வா போற்றி என, ஏத்தி நிற்கும் அன்பர்களைத் தென்திசைக்குரிய காலன், இனிய வார்த்தை கூறி மகிழ்விப்பான்.

716. கண்பல் உக்க கபாலம்அங் கைக்கொண்டு
உண்ப லிக்குழல் உத்தமன் உள்ளொளி
வெண்பி றைக்கண்ணி யான்விச யமங்கை
நண்ப னைத்தொழப் பெற்றது நன்மையே.

தெளிவுரை : கண்ணும் பல்லும் உதிர்ந்த மண்டையோட்டைக் கையில் ஏந்திக் கொண்டு உணவு கொண்டு பிச்சைக்குத் திரியும் உத்தமன், ஒளி திகழும் வெண் பிறைச் சந்திரனைச் சூடி விசய மங்கையில் மேவும் அன்பர்களுக்கு அன்பனாகிய சிவபெருமான் ஆவார். அப்பெருமானைக் கைதொழுது ஏத்தியதும் எல்லா நன்மைகளும் கைவரப் பெற்றதே. அப்பரமனின் அருள்தான் என்னே !

717. பாண்டு வின்மகன் பார்த்தன் பணிசெய்து
வேண்டும் நல்வரம் கொள்விச யமங்கை
ஆண்ட வன்அடி யேநினைந்து ஆசையால்
காண்ட லேகருத் தாகி இருப்பனே.

தெளிவுரை : பாண்டு மன்னனின் புதல்வனாகிய பார்த்தன் பணி செய்து, ஈசனை வணங்கி ஏத்த, வேண்டிய வரங்களை அருளிச் செய்தவர், விசய மங்கையில் மேவும் நாதன் ஆவார். அப்பரமனின் திருவடியே நினைந்து, ஆசையுடன் தரிசிப்பதே கருத்தாகக் கொண்டு இருப்பேன்.

718. வந்து கேண்மின் மயல்தீர் மனிதர்காள்
வெந்த நீற்றன் விசயமங் கைப்பிரான்
சிந்தை யால்நினை வார்களைச் சிக்கெனப்
பந்து வாக்கி உய்யக்கொளும் காண்மினே.

தெளிவுரை : மயல் தீர்ந்த மனிதர்காள் ! வந்து கேண்மின். திருநீறு அணிந்த திருமேனியராகிய விசய மங்கையில் மேவும் பெருமானைச் சிந்தை செய்வீர்களாக. அப்பெருமான் தன்னை நினைத்து ஏத்தும் அன்பர்களைச் சிக்கெனப் பிடித்த உறவாக்கிக் கொள்பவர். அவர் உங்களை உய்யுமாறு செய்பவர். இதனை, விரைவில் கண்டு நற்கதி அடைவீராக.

719. இலங்கை வேந்தன் இருபது தோளிற
விலங்கல் சேர்விர லான்விச யமங்கை
வலஞ்செய் வார்களும் வாழ்த்திசைப் பார்களும்
நலம்செய் வார்அவர் நன்னெறி நாடியே.

தெளிவுரை : இலங்கையின் வேந்தனாகிய இராவணனுடைய இருபது தோளும் நெரியுமாறு கயிலையைத் திருவிரலால் ஊன்றியவர் விசய மங்கையில் மேவும் ஈசன் ஆவர். அப்பெருமானை வலம் வந்து வாழ்த்திப் போற்றி வணங்குபவர்கள், நன்னெறியின் அருள்வாய்க்கப் பெற்றுத் தம் உயிர்க்கு நலம் செய்தவர் ஆவார்.

திருச்சிற்றம்பலம்

72. திருநீலக்குடி (அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில், திருநீலக்குடி, தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

720. வைத்த மாடும் மனைவியும் மக்கள்நீர்
செத்த போது செறியார் பிரிவதே
நித்த நீலக் குடியர னைந்நினை
சித்த மாகிற் சிவகதி சேர்திரே.

தெளிவுரை : சேமித்து வைத்த பொருட்செல்வமும், மற்றும் மனைவி மக்களும், இவ்வுயிர் பிரியும்போது உடன் வருவதன்று, நீலக்குடியில் வீற்றிருக்கும் சிவ பெருமானை நாள்தோறும் நினைத்து ஏத்துமின். அப் பரமனைச் சித்தத்தில் பதிக்கச் சிவகதி வாய்க்கும்.

721. செய்ய மேனியன் தேனனொடு பால்தயிர்
நெய்யது ஆடிய நீலக் குடிஅரன்
மைய லாய்மற வாமனத் தார்க்கெல்லாம்
கையில் ஆமலகக் கனி ஒக்குமே.

தெளிவுரை : சிவபெருமான், சிவந்த திருமேனியுடையவர்; தேன், பால், தயிர், நெய் ஆகியவற்றைப் பூசைப் பொருளாகக் கொண்டு அபிடேகம் பெறுபவர்; நீலக்குடியில் வீற்றிருப்பவர். அப்பெருமானை, மறவாத மனத்தினராகி, ஏத்துபவர்களுக்கு, அவர் உள்ளங்கையில் நெல்லிக்கனி போன்று விளங்கி அருள்புரிபவர் ஆவார்.

722. ஆற்றல நீள்சடை ஆயிழை யாள்ஒரு
கூற்றன் மேனியிற் கோலம தாகிய
நீற்றன் நீலக் குடியுடை யான்அடி
போற்றி னார்இடர் போக்கும் புநிதனே.

தெளிவுரை : நீலக்குடியில் மேவும் சிவபெருமான், கங்கையை நீண்ட சடை முடியில் கொண்டுள்ளவர்; உமாதேவியைத் திருமேனியில் ஒரு பாகமாக உடையவர்; அழகிய திருநீற்றினைத் திருமேனியில் பூசி விளங்குபவர். அப்பரமன், தனது திருவடியைப் போற்றி வணங்கும் பக்தர்களுக்கு எத்தகைய இடரும் வாராதவாறு காக்கும் புனிதர் ஆவர்.

723. நாலு வேதியர்க்கு இன்னருள் நன்னிழல்
ஆலன் ஆலநஞ்சு உண்டகண் டத்தமர்
நீலன் நீலக் குடியுறை நின்மலன்
காலன் ஆருயிர் போக்கிய காலனே.

தெளிவுரை : நீலக்குடியில் மேவும் நின்மலனாகிய சிவபெருமான், வேதங்களை உணர்ந்த சனகாதி முனிவர்களாகிய நால்வர்க்கு, ஆல மரத்தின் நிழலில் இருந்து தட்சிணாமூர்த்தித் திருக்கோலம் தாங்கி, அறப்பொருளை உணர்த்தியவர்; ஆலகால விடத்தை உட்கொண்டு கண்டத்தில் தேக்கி, நீலகண்டராக விளங்கியவர். அவர், மார்க்கண்டேயருக்காகக் காலனுடைய உயிரைப் போக்கிய காலன் ஆவார்.

724. நேச நீலக்குடி யரனே எனா
நீசராய் நெடு மால்செய்த மாயத்தால்
ஈசன் ஓர்சரம் எய்ய எரிந்து போய்
நாச மானார் திரிபுர நாதரே.

தெளிவுரை : நீலக்குடியரனே என அன்புடன் ஏத்தி வணங்காத முப்புர அசுரர்கள், சிவபெருமானுடைய ஓர் அம்புக்கு இலக்காகி, எரிந்து சாம்பலானார்கள். இதற்குக் காரணம் திருமால் செய்த மாயையாகும். முப்புர அசுரர்கள் மூன்று பறக்கும் கோட்டைகளைக் கொண்டு இடர் விளைவித்துவர அவர்களை அடக்குவதற்கு வேறு உபாயம் இன்றி, திருமால், நாரதர் வாயிலாகச் சிவபெருமானைப் பகை கொள்ளுமாறு செய்வித்தார். இது மால் செய்த மாயம் என சுட்டப் பெற்றது.

725. கொன்றை சூடியைக் குன்ற மகமொடும்
நின்ற நீலக் குடியரனே வாரீர்
என்றும் வாழ்வுகந் தேயிறு மாக்குநீர்
பொன்றும் போது நுமக்குஅறி வொண்ணுமே.

தெளிவுரை : சிவபெருமான், கொன்றை மலர் தரித்துள்ளவர்; உமாதேவியை உடனாகக் கொண்டு நீலக்குடியில் வீற்றிருப்பவர். இவ்வுயிரானது பிரிந்து செல்லும்போது, பொன் பொருள் போகத்தால் இறுமாந்து இருக்கும் நீவிர் அறிய முடியுமா ! திருநீலக்குடியில் மேவும் அரனின் திருநாமத்தை ஓதி உரைப்பீராக. அது உம்மை உய்விக்க வல்லது.

726. கல்லி னோடுஎனைப் பூட்டி அமண்கையர்
ஒல்லை நீர்புக நூக்கஎன் வாக்கினால்
நெல்லு நீள்வயல் நீலக்குடியரன்
நல்ல நாகம் நவிற்றி உய்நதேனன்றே.

தெளிவுரை : சமணர்கள் என்னைக் கல்லுடன் சேர்த்துக் கட்டி விரைவில் நீரில் மூழ்கி அழிய வேண்டும் என்னும் நோக்கத்தில் கடலில் எறிய என் வாக்கினால், வயல் சூழ்ந்த நீலக்குடியில் மேவும் அரனின் நல்ல நாமமாகிய திருவைந்தெழுத்தை நாவினால் ஓதி அன்றே உய்ந்தேன்.

727. அழகி யோம்இளை யோம்எனும் ஆசையால்
ஒழுகி ஆவி உடல்விடு முன்னமே
நிழல தார்பொழில் நீலக்குடி யரன்
கழல் கொள் சேவடி கைதொழுது உய்ம்மினே.

தெளிவுரை : நெஞ்சமே ! அழகிய அவயவங்களையுடைய நல்ல மேனியும், இளமையின் ஊக்கம் கொண்ட சக்தியுடன் கூடிய ஆற்றலையும், இறைவனை வணங்குவதற்காகவே இறைவனால் வழங்கப்பெற்றது எனத் தெளிக. மிக்க விருப்பத்துடன் இவ்வுயிரானது உடலை விட்டுச் செல்லும் முன்னர், பொழில் திகழும் நீலக் குடியில் மேவும் சிவ பெருமானின் வீரக்கழல் அணிந்த சேவடியைக் கைதொழுது ஏத்தி உய்க.

728. கற்றைச் செஞ்சடைக் காய்கதிர் வெண்திங்கள்
பற்றிப் பாம்புடன் வைத்த பராபரன்
நெற்றிக் கண்ணுடைய நீலக் குடியரன்
சுற்றித் தேவர் தொழுங்கழற் சோதியே.

தெளிவுரை : சிவபெருமான், கற்றையாக விளங்கி ஒளிமிகும் சிவந்த சடை முடியின்மீது குளிர்ந்த கதிர்களைக் கொண்ட திங்களும், பாம்பும் வைத்தவர்; நெற்றியில் கண்ணுடையவர். அப்பரமன், நீலக் குடியின்கண் தேவர்கள் எல்லாரும் தொழுமாறு வீற்றிருப்பவர். நீவிரும் தொழுது உய்வீராக என்பது குறிப்பு.

729. தருக்கி வெற்பது தாங்கிய வீங்குதோள்
அரக்க னார்உட லாங்கொர் விரலினால்
நெரித்து நீலக் குடியரன் பின்னையும்
இரக்க மாய்அருள் செய்தனன் என்பரே.

தெளிவுரை : செருக்குடைமையால் இராவணன் கயிலை மலையைத் தூக்கித் தாங்க அவனுடைய தோளையும் உடலையும் திரு விரலால் நெரித்தவர் நீலக்குடியில் மேவும் சிவபெருமான். பின்னர் அவ்வரக்கனானவன் ஏத்திப் பாட, இரக்கம் கொண்டு, அப்பெருமான் அருள் செய்தவர் ஆவர்.

திருச்சிற்றம்பலம்

73. திருமங்கலக்குடி (அருள்மிகு பிராணநாதேஸ்வரர் திருக்கோயில், திருமங்கலக்குடி, தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

730. தங்க லப்பிய தக்கன் பெருவேள்வி
அங்க லக்கழித் தாரருள் செய்தவன்
கொங்க லர்க்குழல் கொன்பனை யாளொடு
மங்க லக்குடி மேய மணாளனே.

தெளிவுரை : தன்னைக் கலக்கம் கொள்ளுமாறும், தாக்கும் தன்மையிலும், தீய நோக்கத்திலும் செய்த தக்கனின் வேள்வியை அழித்த சிவபெருமான், தேன் விளங்கும் மலர் போன்ற நறுமணம் கமழும் கூந்தலையுடைய உமா தேவியை உடனாகக் கொண்டு மங்கலக் குடியில் மேவும் மணாளர் ஆவர்.

731. காவிரியின் வடகரைக் காண்தகு
மாவி ரியும் பொழில்மங் கலக்குடித்
தேவ ரியும்பி ரமனும் தேடொணாத்
தூவெ ரிச்சுடர்ச் சோதியுட் சோதியே.

தெளிவுரை : காவிரியின் வடகரையில் பெருமை மிக்க பொழில் விளங்கும் மங்கலக் குடியில், திருமாலும் பிரமனும் தேடியும் காண்பதற்கு அரியவராகிய சிவபெருமான், தூய சுடராகவும், சோதியின் உள்ளே திகழும் ஆதார சோதிப் பொருளாகவும் மேவுபவர்.

732. மங்கலக்குடி ஈசனை மாகாளி
வெங்க திர்ச்செல்வன் விண்ணொடு மன்னும்நேர்
சங்கு சக்கர தாரி சதுர்முகன்
அங்க கத்திய னும்அர்ச் சித்தார் அன்றே.

தெளிவுரை : திருமங்கலக்குடியில் மேவும் சிவபெருமானை பெருமை மிக்க காளி தேவியும், சூரியனும், திருமாலும், பிரமனும், அகத்திய முனிவரும் பூசித்து ஏத்தி வழிபட்டனர். இது இத்தலத்தில், ஈசனை வழிபட்ட சிறப்பினை உணர்த்தியதாயிற்று.

733. மஞ்சன் வார்கடல் சூழ்மங் கலக்குடி
நஞ்சம் ஆரமு தாக நயந்த கொண்டு
அஞ்சும் ஆடல் அமர்ந்துஅடி யேனுடை
நெஞ்சம் ஆலய மாக்கொண்டு நின்றதே.

தெளிவுரை : சிவபெருமான், கடலில் தோன்றிய நஞ்சினை அமுதம் என விரும்பி ஏற்று அருந்திய நீலகண்டராகி மங்கலக் குடியில் மேவி, பஞ்ச கவ்வியத்தை அபிடேகமாகக் கொண்டு விளங்குபவர். அப்பரமன், என் நெஞ்சினை ஆலயமாகக் கொண்டு வீற்றிருப்பவர் ஆயினார்.

734. செல்வம் மல்கு திருமங் கலக்குடிய
செல்வம் மல்கு சிவநிய மத்தராய்ச்
செல்வம் மல்கு செழுமறை யோர்தொழச்
செல்வன் தேவி யொடும்திகழ் கோயிலே.

தெளிவுரை : எல்லாச் செல்வமும் மல்கிப் பெருகும் திருமங்கலக்குடியில், சிவாகம நியமம் தவறாது ஒழுகும் சீலர்களாகிய, செல்வம் நிறைந்த மறையவர்கள் செழுமை விளங்கும் வேதத்தை ஓதித் தொழுது போற்றச் செல்வனாகிய சிவபெருமான், உமாதேவியோடு கோயில் கொண்டு இருப்பவர் ஆவர்.

735. மன்னுசீர் மங் கலக்குடி மன்னிய
பின்னு வார்சடைப் பிஞ்ஞகன் தன்பெயர்
உன்னு வாரும் உரைக்கவல் லார்களும்
துன்னு வார்நன்னெறி தொடர் வெய்தவே.

தெளிவுரை : செழிப்புடன் மேவும் சிறப்புடைய மங்கலக்குடியில், ஒளிமிக்கதாகவும், பின்னப் பெற்று முறுக்கேறியதாகவும் உள்ள சடைமுடியுடைய ஈசன் வீற்றிருப்பவர். அவர்தம் திருப்பெயராகிய திருவைந்தெழுத்தை நினைத்துத் தியானம் செய்பவர்களும், ஓதி உரைப்பவர்களும், நன்னெறியாகிய சிவநெறியின் தொடர்பானது கைகூடும் தன்மையில் சிவபோதம் அடையப் பெற்றவர்களாகிச் சிவானந்தத் தேனைப் பருகிப் பேரின்பத்தை அடைவார்கள்.

736. மாத ரார்மரு வும்மங் கலக்குடி
ஆதி நாயகன் அண்டர்கள் நாயகன்
வேத நாயகன் வேதியர் நாயகன்
பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே.

தெளிவுரை : மகளிர் நன்கு மருவி, சைவத் தொண்டு ஆற்றும் மங்கலக் குடியில் மேவும் சிவபெருமான், ஆதி மூர்த்தியாகவும், தேவர்களின் தலைவராகவும், வேத நாயகராகவும், வேதம் வல்ல மறையோர்களின் தலைவ ராகவும், பூத நாயகனாக விளங்கி உயிர்களுக்கெல்லாம் தலைவராகவும், புண்ணிய மூர்த்தியாகவும் விளங்கு பவர்.

737. வண்டு சேர்பொழில் சூழ்மங் கலக்குடி
விண்ட தாதையைத் தாளற வீசிய
சண்ட நாயக னுக்கருள் செய்தவன்
துண்ட மாமதி சூடிய சோதியே.

தெளிவுரை : வண்டுகள் சேர்ந்து தேன் சுவைக்கும் பொழில் சூழ்ந்த மங்கலக் குடியில் மேவும் சிவபெருமான், சிவபூசைக்குக் குந்தகமாகிய தனது தந்தையில் தாளை வெட்டிய சண்டேஸ்வரருக்கு அருள் செய்தவர். அப்பரமன், சிறிய துண்டு போன்ற பெருமைமிக்க சந்திரனைச் சூடிய சோதி ஆவார்.

738. கூசு வாரலர் குண்டர் குணமிலர்
நேசம் ஏதும் இலாதவர் நீசர்கள்
மாசர் பால்மங் கலக்குடி மேவிய
ஈசன் வேறு படுக்கவுய்ந் தேனன்றே

தெளிவுரை : இறைவனை வணங்குவதற்குக் கூசுபவர்களாயும், பழியைச் செல்பவர்களாயும், அன்பற்றவர்களாயும் உள்ள சமணர்பால் மேவிய என்னை விடுவித்துக் காத்தருளியவர், மங்கலக் குடியில் வீற்றிருக்கும் சிவபெருமான். அவர், என்னை உய்வு பெறுமாறு செய்தவர் அல்லவா !

739. மங்க லக்குடி யான்கயி லைம்மலை
அங்க லைத்தெடுக் குற்ற அரக்கர்கேரன்
தன்க ரத்தொடு தாள்தலை தோள்தகர்ந்து
அங்க லைத்தழுது உய்ந்தனன் தானன்றே.

தெளிவுரை : கயிலையை எடுக்கலுற்ற இராவணனுடைய கரமும், தாளும், தலையும் தோளும் தகர்ந்து நெரியுமாறு செய்து, பின்னர் அவன் அழுது ஏத்த அருள் செய்த சிவபெருமான், மங்கலக் குடியில் வீற்றிருக்கும் பரமன் ஆவர்.

திருச்சிற்றம்பலம்

74. திருஎறும்பியூர் (அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில், திருவெறும்பூர், திருச்சி மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

740. விரும்பி யூறு விடேல்மட நெஞ்சமே
கரும்பின் ஊறல்கண் டாய்கலந் தார்க்கவன்
இரும்பின் ஊறல் அறாததோர் வெண்தலை
எறும்பி யூர்மலை யான்எங்கள் ஈசனே.

தெளிவுரை : நெஞ்சமே ! எறும்பியூர் என்னும் மலையில் வீற்றிருக்கும் எங்கள் ஈசன், இரும்பு போன்ற கெட்டியான மண்டையோட்டைக் கையில் ஏந்தியிருப்பவர்; மனம் ஒன்றக் கலந்து அன்புடன் ஏத்துபவர்களுக்குக் கரும்பின் சாறு போன்றவர். அப்பெருமானை அன்புடன் துதித்து ஏத்துவாயாக. இது, புலன்களால் திகைப்புக் கொண்டு, கேடு விளைவிக்கும் செயல்களில் மேவி, வாழ்நாட்களை வீணாக்க வேண்டாம் என்பது குறிப்பு ஆயிற்று.

741. பிறங்கு செஞ்சடைப் பிஞ்ஞகன் பேணுசீர்க்
கறங்கு பூத கண்முடைக் கண்ணுதல்
நறுங்கு ழல்மட வாளொடு நாள்தொறும்
எறும்பி யூர்மலை யான்எங்கள் ஈசனே.

தெளிவுரை : ஒளி திகழும் சிவந்த சடையுடைய பிஞ்ஞகனாகிய சிவபெருமான், பூத கணங்களைப் படையாகக் கொண்டுள்ளவர்; நெற்றியில் கண்ணுடையவர்; உமாதேவியை உடனாகக் கொண்டு எறும்பியூர் மலையில் நாள்தோறும் வழிபடும் அடியவர்களுக்கு அருள் புரிபவர்.

742. மருந்து வானவர் தானவர்க்கு இன்சுவை
புரிந்த புன்சடைப் புண்ணியன் கண்ணுதல்
பொருந்து பூண்முலை மங்கைநல் லாளொடும்
öறும்பி யூர்மலை யான்எங்கள் ஈசனே.

தெளிவுரை : பொருந்திய அணிகலன்களையுடைய மங்கை நல்லாளாகிய உமாதேவியை உடனாகக் கொண்டு எறும்பியூர் மலையில் மேவும் எங்கள் ஈசனாகிய சிவபெருமான், தேவர்களுக்கு நல்ல அமுதமாக இருப்பவர்; அசுரர்களுக்கு இனிய சுவையாக விளங்குபவர். அப்பரமன் சடை முடியுடையவராயும் எல்லாப் புண்ணியங்களுக்கும் உரிய நிலைக்களனாகவும் விளங்கி நெற்றியில் கண் கொண்டு திகழ்பவர்.

743. நிறங்கொள் கண்டத்து நின்மலன் எம்இறை
மறங்கொள் வேல்கண்ணி வாள்நுதல் பாகமாய்
அறம்பு ரிந்தருள் செய்தயும் அங்கணன்
எறும்பி யூர்மலை யான்எங்கள் ஈசனே.

தெளிவுரை : சிவபெருமான், நீலவண்ணம் உடைய கண்டத்தை உடைய நின்மலன்; எம் இறைவன்; வேல் போன்ற வீரம் திகழவும், வடிவழகு உடையதும் ஆகிய கண்ணுடைய உமாதேவியைப் பாகமாகக் கொண்டு விளங்குபவர். எல்லா அறங்களையும் ஆற்றும் நாயகராகிய அப்பரமன், எறும்பியூர் மலையில் வீற்றிருக்கும் எம் ஈசன் ஆவர்.

744. நறும்பொன் நாண்மலர்க் கொன்றையும் நாகமும்
துறும்பு செஞ்சடைத் தூமதி வைத்துவான்
உறும்பொன் மால்வரைப் பேதையோடு ஊர்தொறும்
எறும்பி யூர்மலை யான்எங்கள் ஈசனே.

தெளிவுரை : சிவபெருமான், நறுமணம் கமழும் பொன் போன்ற கொன்றை மலரும் நாகமும் செஞ் சடையில் நெருக்கமாகக் வைத்துத் தூய சந்திரனை உடன் பொருந்தியவர்; உமா தேவியை உடனாகக் கொண்டுள்ளவர்; ஊர்தொறும் திரிபவர். அவர், எறும்பியூரில் மேவும் எங்கள் ஈசன் ஆவார்.

745. கறும்பி யூர்வன ஐந்துள காயத்தில்
திறம்பி யூர்வன மற்றும் பலவுள
குறும்பி யூர்வதோர் கூட்டகத் திட்டுஎனை
எறும்பி யூரான் செய்த இயற்கையே.

தெளிவுரை : இத் தேகத்தில் துன்பம் கொள்ளுமாறு ஊர்ந்து இருப்பன, ஐம்புலன்கள் ஆகும். மனமும் ஒழுக்க நெறியும் திரிந்தும் பிறழ்ந்தும் செய்யும் தன்மையில், மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்னும் அந்தக் கரணங்கள் உள்ளன. இதனைத் தவிர மலம் சேரும் தன்மையும் உடையது இவ்வுடல். இத்தகைய தேகத்தில் என்னைக் கூட்டுவித்த செயலானது எறும்பியூரில் மேவும் ஈசன் செய்த இயல்பேயாகும்.

746. மறந்து மற்றிது பேரிடர் நாடொறும்
திறம்பி நீநினை யேல்மட நெஞ்சமே
புறஞ்செய் கோலக் குரம்பையில் இட்டுஎனை
எறும்பி யூர்அரன் செய்த இயற்கையே.

தெளிவுரை : நெஞ்சமே ! இவ்வுடலானது பெரிய இடரில் உழன்று ஐம்புலன்களால் துன்புறுத்தப் படுவதற்கு உரியது. இதனை மறந்து வேறு ஒன்றை நினைத்துத் துன்பத்தைப் பெருக்கிக் கொள்ளாதே. இத்தகைய கோலமானது எறும்பியூரில் மேவும் சிவபெருமான், எனக்கு இயல்பாய் அளித்த சரீரம் ஆகும். எக்காலமும் ஈசனை நினைத்து ஏத்தும் தன்மையை வலியுறுத்தியதாம்.

747. இன்பமும்பிறப் பும்இறப் பின்னொடு
துன்ப மும்உட னேவைத்த சோதியான்
அன்ப னேஅர னேஎன்று அரற்றுவார்க்கு
இன்பன் ஆகும் எறும்பியூர் ஈசனே.

தெளிவுரை : மனித வாழ்க்கையில், இன்பமும் துன்பமும் கலந்து, அதுபோலப் பிறப்பும் இறப்பும் வருமாறு வைத்தவர், சோதிச் சுடராய் விளங்கும் சிவபெருமான். அப்பெருமானை, அன்பனே எனவும், அரனே ! எனவும் மனம் கசிந்து உருகிப் போற்றும் அடியவர்களுக்கு, எறும்பியூரில் மேவும் ஈசன் இன்பனாக விளங்கி, இன்பத்தையே விளைவிப்பவர் ஆவார். இது, பிறவாமையாகிய பெருஞ் செல்வத்தையும் ஈசன் அளிப்பவர் ஆவார், எனக் குறிப்பால் உணர்த்துவதாயிற்று.

748. கண்நி றைந்த கனபவ னத்திரள்
விண்நி றைந்த விரிசுடர்ச் சோதியான்
உள்நி றைந்துரு வாய்உயி ராயவன்
எண்நி றைந்த எறும்பியூர் ஈசனே.

தெளிவுரை : சிவபெருமான், கண்ணுக்கு நிறைவு தருகின்ற பவளத்தின் திரட்சியைப் போன்ற செவ்வையான சுடர் மிகுந்த சோதியாய் விளங்குபவர். உள்ளத்தில் நிறைவைத் தருகின்ற வடிவமாகவும் உயிராகவும் திகழ்பவர். அப்பெருமான், என் எண்ணத்தில் நிறைந்த எறும்பியூரில் மேவும் ஈசனே ஆவர்.

749. நிறங்கொள் மால்வரை ஊன்றி எடுத்தலும்
நறுங்குழல் மட வாள்நடுக்கு எய்திட
மறங்கொள் வாளரக்கன் வலி வாட்டினான்
எறும்பி யூர்மலை எம்மிறை காண்மினே.

தெளிவுரை : கயிலையை எடுத்த இராவணன் நலியுமாறும், உமையின் அச்சம் போக்குமாறும் திருவிரலால் நெரித்த சிவபெருமான், எறும்பியூர் மலையில் மேவும் எமது கடவுளே ஆகும். அப்பரமனைக் கண்டு தரிசித்து உய்வீராக.

திருச்சிற்றம்பலம்

75. திருக்குரக்குக்கா (அருள்மிகு குந்தளேஸ்வரர் திருக்கோயில், திருக்குரக்கா, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

750. மரக்கொக் காம்என வாய்விட் டலறிநீர்
சரக்குக் காவித் திரிந்தய ராதுகால்
பரக்குங் காவிரி நீரலைக் குங்கரைக்
குரக்குக் காவுடை யக்கெடுங் குற்றமே.

தெளிவுரை : பலவாறான கால்வாய்கள் வழியாக நீரைக் கொண்டு வளம் சேர்க்கும் காவிரியின் கரையில் உள்ள குரக்குக்கா என்னும் தலத்தை அடைவீராக. மரக்கிளையில் அமர்ந்து ஒலித்து ஓலமிடும் கொக்கு போன்று, ஆங்கு ஈசனை ஏத்தி வணங்க, வினை யாவும் கெடும்.

751. கட்டா றேகழி காவிரி பாய்வயல்
கொட்டா றேபுனல் ஊறு குரக்குக்கா
முட்டா றாஅடி யேத்த முயல்பவர்க்கு
இட்டா றாஇட ரோட எடுக்குமே.

தெளிவுரை : வயல்களில் கட்டப்பட்டு நீர்வளம் பெருக விளங்குகின்ற குரக்குக்கா என்னும் தலத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானைத் தவறாது விருப்பத்துடன் ஏத்தும் அடியவர்களின் இடரானது, விலகிச் செல்லும்.

752. கைய னைத்தும் கலந்தெழு காவிரி
செய்ய னைத்திலும் சென்றிடும் செம்புனல்
கொய்ய னைத்தும் கொணரும் குரக்குக்கா
ஐயனைத் தொழு வார்க்குஅல்லல் இல்லையே.

தெளிவுரை : காவிரியானது தன் அகன்ற கைகளால் அரவணைத்துச் செல்லுதல் போன்று, வயல்கள் யாவும் சென்று வளம் சேர்த்திடும் அக் காவிரியின் கரையில் உள்ள குரக்குக்காவில் வீற்றிருக்கும் சிவபெருமான் தன்னைத் தொழுபவர்களை அரவணைத்து அல்லல் யாவும் தீர்ப்பவர்.

753. மிக்க னைத்துத் திசையும் அருவிகள்
புக்குக் காவிரி போந்த புனற்கரைக்
கொக்கி னம்பயில் சோலைக் குரக்குக்கா
நக்க னைநவில் வார்வினை நாசமே.

தெளிவுரை : எல்லாத் திசைகளும் மிகுதியான நீர் பெற்று விளங்கிச் செழிப்பினைத் தரும் காவிரியின் கரையில், கொக்கினம் பயில்கின்ற சோலையுடைய குரக்குக்காவில் வீற்றிருக்கும் சிவபெருமானை ஏத்தி வழிபட்டுத் திருவைந்தெழுத்தை ஓதுபவர்களுடைய வினை யாவும் கெடும்.

754. விட்டு வெள்ளம் விரிந்தெழு காவிரி
இட்ட நீர்வயல் எங்கும் பரந்திடக்
கொட்ட மாமுழ வோங்கு குரக்குக்கா
இட்ட மாயிருப் பார்க்குஇடர் இல்லையே.

தெளிவுரை : காவிரியின் வெள்ளமானது விரிந்து பரந்து வயல்கள் எங்கும் செல்ல, முழவு என்னும் வாத்தியம் முழங்க மேவும் குரக்குக்காவில் வீற்றிருக்கும் நாதனை, விருப்பத்துடன் ஏத்துபவர்களுக்கு எத்தகைய இடரும் இல்லை.

755. மேலை வானவ ரோடு விரிகடல்
மாலும் நான்முக னாலும் அளப்பொணாக்
கோல மாளிகைக் கோயில் குரக்குக்காப்
பால ராய்த்திரி வார்க்குஇல்லை பாவமே.

தெளிவுரை : தேவர்களோடு உடன் விளங்கிப் பாற்கடலில் பள்ளி கொண்ட திருமால், மற்றும் நான்முகனும் காண முடியாதவராகிய சிவபெருமானின் குரக்குக்காவில் வாழ்பவராய் விளங்குபவர்களுக்குப் பாவம் என்பது இல்லை.

756. ஆல நீழல் அமர்ந்த அழகனார்
கால னையுதை கொண்ட கருத்தனார்
கோல மஞ்ஞைகள் ஆலும் குரக்குக்காப்
பால ருக்கருள் செய்வர் பரிவொடே.

தெளிவுரை : சிவபெருமான், கல்லால் மரத்தின் நிழலில் அமர்ந்து சனகாதி முனிவர்களாகிய நால்வர்க்கு அறப்பொருள் உண்மைகளை உபதேசித்த அழகர்; மார்க்கண்டேய முனிவரின் உயிரைக் கவரவந்த காலனை உதைத்து அழித்தவர்; அவர், அழகிய மயில்கள் ஆடும் குரக்குக்காவில் வீற்றிருந்து, அன்பர்களுக்குப் பரிவுடன் கருணை புரிபவர் ஆவர்.

757. செக்கர் அங்கெழு செஞ்சுடர்ச் சோதியார்
அக்குஅ ரையர்எம் ஆதி புராணனார்
கொக்கி னம்வயல் சேரும் குரக்குக்கா
நக்க னைத்தொழ நம்வினை நாசமே.

தெளிவுரை : சிவபெருமான், செவ்வானம் போன்ற சுடர் மிகும் சோதியானவர்; எலும்பினை அரையில் கட்டியுள்ளவர்; எம் ஆதிபுராணர். அப்பெருமான், கொக்கினம் சேர்ந்து விளங்கும் வயல்கள் சூழ்ந்த குரக்குக்காவில் வீற்றிருப்பவர். அவரைக் கைதொழுது ஏத்த நம் வினை யாவும் நாசமுற்று அழியும்.

758. உருகி ஊன்குழைந்து ஏந்தி எழுமின்நீர்
கரிய கண்டன் கழலடி தன்னையே
குரவ னஞ்செழும் கோயில் குரக்குக்கா
இரவும் எல்லியும் ஏத்தித் தொழுமினே.

தெளிவுரை : நீலகண்டப் பெருமானாய் விளங்கும் சிவபெருமானுடைய திருவடியை நினைந்து உருகிக் குழைந்து அன்புடன் வணங்குவீராக. அப்பரமன், குராமலர்கள் செழுமையுடன் மேவும் கோயிலாகிய குரக்குக்காவில் வீற்றிருப்பவர். அப்பரமனை இரவும் பகலும் ஏத்தித் தொழுவீராக. இதுவே உய்யும் வழி என்பது குறிப்பு.

759. இரக்கம் இன்றி மலையெடுத் தான்முடி
உரத்தை ஒல்க அடர்த்தான் உறைவிடம்
குரக்கி னங்குதி கொள்ளுங் குரக்குக்கா
வரத்த னைப்பெற வானுலகு ஆள்வரே.

தெளிவுரை : இரக்கம் அற்ற இராவணன், கயிலை மலையை எடுக்க, அவனுடைய வலிமையை அடர்த்து நெரித்த சிவபெருமான் உறையும் இடமாவது, குரங்குகள் மகிழ்ச்சியுடன் குதித்து ஆடும் சோலைகளையுடைய குரக்குக்கா ஆகும். ஆங்கு எழுந்தருளியுள்ள வரம் அருளும் ஈசனைப் பணிந்து ஏத்துபவர்கள் வானுலகை ஆள்வார்கள்.

திருச்சிற்றம்பலம்

76. திருக்கானூர் (அருள்மிகு செம்மேனிநாதர் திருக்கோயில், திருக்கானூர், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

760. திருவின் நாதனும் செம்மலர் மேலுறை
உருவ னாய்உல கத்தின் உயிர்க்கெலாம்
கருவ னாகி முளைத்தவன் கானூரில்
பரம னாய பரஞ்சுடர் காண்மினே.

தெளிவுரை : திருவின் நாதனாகிய திருமாலும் தாமரை மலரின் மேல் உறையும் பிரமனாகவும் ஆகி உலகத்தைக் காக்கும் பொருளாகவும் படைக்கும் பொருளாகவும் ஆகும் முதற் பொருளாய் விளங்குபவர், சிவபெருமான். அவர் எல்லா உயிர்களுக்கும் கருப்பொருளாகத் தோன்றிக் கானூரின் மேவும் பரமன் ஆவார். பரஞ் சுடராகிய அப்பெருமானைக் கண்டு தொழுவீராக.

761. பெண்டிர் மக்கள் பெருந்துணை நன்னிதி
உண்டின் றேயென்று உகவன்மின் ஏழைகாள்
கண்டு கொண்மின்நீர் கானூர் முளையினைப்
புண்டரீகப் பொதும்பில் ஒதுங்கியே.

தெளிவுரை : மெய்ஞ்ஞானம் அற்றவர்களே ! பெண்டிர், மக்களாகிய பெருந்துணை, அளவற்ற பொருட்செல்வம் என, யாவும் குறைவின்றி இப்போது உள்ளது என்று பேருவுகையடையாதீர்கள். கானூரில் மேவும் சிவபெருமானை, இதயத் தாமரையில் வைத்து ஏத்துவீராக. அதுதான் உய்வதற்கு உரிய வழியாகும் என்பது குறிப்பு.

762. தாயத் தார்தமர் நல்நிதி என்னும்இம்
மாயத் தேகிடந் திட்டு மயங்கிடேல்
காயத் தேயுளன் கானூர் முளையினை
வாயத் தால்வணங் கீர்வினை மாயவே.

தெளிவுரை : தாயத்தார், சுற்றத்தார், பெருஞ்செல்வம் எனப்படும் இம்மாயத்தே கிடந்து, மையல் கொள்ளாதீர். கானூரில் வீற்றிருக்கும் சிவபெருமான், இத் தேகத்தில் இருந்து உயிர்க்கு உயிராக விளங்குபவர். அப்பரமனை வாயார வாழ்த்தி வணங்கி வினையாவும் மாயுமாறு ஏத்துவீராக.

763. குறியில் நின்றுண்டு கூறையிலாச்சமண்
நெறியை விட்டு நிறைகழல் பற்றினேன்
அறிய லுற்றிரேல் கானூர் முளையவன்
செறிவு செய்திட்டு இருப்பதென் சிந்தையே.

தெளிவுரை : மாந்தர்காள் ! நான் சமண நெறியிலிருந்து மீண்டு, வீரக் கழல் அணிந்திருக்கும் சிவபெருமானைப் பற்றியதற்குக் காரணமாவது யாது என அறிய விரும்பினீராயின், அது கானூரில் மேவும் ஈசன் என் சிந்தையின் புகுந்து எழுந்தருளி இருப்பதே ஆகும்.

764. பொத்தல் மண்சுவர்ப் பொல்லாக் குரம்பையை
மெய்த்தன் என்று வியந்திடல் ஏழைகாள்
சித்தர் பத்தர்கள் சேர்திருக் கானூரில்
அத்தன் பாதம் அடைதல் கருமமே.

தெளிவுரை : இவ்வுடம்பானது, ஒன்பது துவராங்களையுடையது; அழியக்கூடிய மண் சுவர் போன்றது. இதனை மெய்த்தன்மையுடையது என்று வியந்து பெருமை கொள்ள வேண்டாம். சித்தர்களும் பத்தர்களும் சேர்ந்து விளங்குகின்ற திருக்கானூரில் வீற்றிருக்கும் அன்புடையவராகிய சிவபெருமானின் திருப்பாத மலரை அடைதலைக் கடமையாகக் கொள்வீராக. அதுவே நற்கதியடையக் கூடியதாகும்.

765. கல்வி ஞானக் கலைப்பொருள் ஆயவன்
செல்வம் மல்கு திருக்கானூர் ஈசனை
எல்லி யும்பக லும்மிசவு ஆனவா
சொல்லி டீர்நும் துயரங் கள்தீரவே

தெளிவுரை : செல்வம் மிக்க திருக்கானூரில் மேவும் சிவபெருமான், கல்வியும் ஞானமும் கலைப் பொருள்களும் ஆகியவர். அப்பரமனை இரவும் பகலும் இசைவுடைய மனத்தினராகி மனம் மகிழ்வடையுமாறு பரவிப் பாடுவீராக. உமது துயரம் யாவும் தீரும்.

766. நீரும் பாரும் நெருப்பும் அருக்கனும்
காரும் மாருதம் கானூர் முளைத்தவன்
சேர்வும் ஒன்றிஅறி யாது திசைதிசை
ஓர்வும் என்றிலர் ஓடித் திரிவரே.

தெளிவுரை : கானூரில் மேவும் சிவபெருமான், நீர், நிலம், நெருப்பு, சூரியன், மேகம், காற்று என யாவும் ஆகி விளங்குபவர். அப்பரமன் இத்தகைய தன்மையில் உள்ளவர் எனவும் அறிய முடியாதவாறு, திசைதொறும் யாவரும் தேடித் திரியுமாறு விளங்குபவர்.

767. ஓமத் தோடுஅயன் மாலறி யாவணம்
வீமப் பேரொளி யாய விழுப்பொருள்
காமற் காய்ந்தவன் கானூர் முளைத்தவன்
சேமத் தால்இருப் பாவதுஎன் சிந்தையே.

தெளிவுரை : வேள்விக்கு உரிய வேதத்தை ஓத வல்லவனாகிய நான்முகனும், திருமாலும், காணுதற்கரிய பெருஞ்சோதி வடிவாகிய சிவபெருமான், மன்மதனை எரித்தவர். கானூரில் வீற்றிருப்பவர். அப்பரமனை நான் சிந்தையில் பதித்து விளங்க, அதுவே எனக்குப் பாதுகாப்பாக விளங்குகின்றது.

768. வன்னி கொன்றை எருக்கணிந் தான்மலை
உன்னி யேசென்று எடுத்தவன் ஒண்திறல்
தன்னை வீழத் தனிவிரல் வைத்தவன்
கன்னி மாமதிற் கானூர்க் கருத்தனே.

தெளிவுரை : சிவபெருமான், வன்னி, கொன்றை எருக்கு ஆகியனவற்றை அணிந்து விளங்குபவர்; கயிலை மலையை எடுத்த இராவணனுடைய திறல் அழியுமாறு ஒப்பற்ற திருவிரலால் ஊன்றியவர்; அவர், மதில் சூழ்ந்த கானூரில் கருத்தனாய்த் திகழும் ஈசன் ஆவார்.

திருச்சிற்றம்பலம்

77. திருச்சேறை (அருள்மிகு சாரபரமேஸ்வரர் திருக்கோயில், திருச்சேறை, தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

769. பூரி யாவரும் புண்ணியம் பொய்கெடும்
கூரி தாய அறிவுகை கூடிடும்
சீரி யார்பயில் சேறையுள் செந்நெறி
நாரி பாகன்றன் நாமம் நலிலவே.

தெளிவுரை : சீர்மேவும் நன்னெறியாளர்கள் விளங்குகின்ற சேறையுள், உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குகின்ற செந்நெறியப்பரின் திருநாமத்தை ஓதிய அளவில், எல்லாருக்கும் புண்ணியமானது பூரித்து வளரும்; அஞ்ஞானமும் பாவமும் தீய்ந்து சிவஞானம் கைகூடும்.

770. என்ன மாதவம் செய்தனை நெஞ்சமே
மின்னு வார்சடை வேத விழுப்பொருள்
செந்நெ லார்வயற் சேறையுட் செந்நெறி
மன்னு சோதிநம் பால்வந்து வைகவே.

தெளிவுரை : நெஞ்சமே ! மின்னலைப் போன்று ஒளியுடைய நீண்ட சடைமுடியுடைய ஈசன், வேதத்தின் விழுப்பொருளானவர். அவர், செந்நெல் வளப்பம் உடைய வயல்கள் விளங்குகின்ற சேறையுள் மேவிய செந்நெறியானவர். அப்பெருமானைக் கண்டு தரிசித்து மகிழும் தன்மையில் அவர் நம்மிடையே வீற்றிருக்க, என்ன மாதவம் செய்தனை ? ஈசனைச் சேவிக்கும் பேறானது புண்ணிய வசத்தால் வாய்க்கப்படுவதாகும் என, ஓதப் பெறுதலாயிற்று.

771. பிறப்பு மூப்புப் பெரும்பசி வான்பிணி
இறப்பு நீங்கி இங்கு இன்பம்வந்து எய்திடும்
சிறப்பர் சேறையுட் செந்நெறி யான்கழல்
மறப்ப தின்றி மனத்தினுள் வைக்கவே.

தெளிவுரை : நெஞ்சமே ! சேறையுள் வீற்றிருக்கும் சிவபெருமானுடைய திருக்கழலை மறவாது மனத்தில் கொண்டு ஏத்துக. பிறப்பு, முதுமை, பெரும்பசி, நோய், மரணம் என விளையும் துன்பம் யாவும் தீர்ந்து, இன்பம் வந்து அடையும்.

772. மாடு தேடி மயக்கினில் வீழ்ந்துநீர்
ஓடி யெய்த்தும் பயனிலை ஊமர்காள்
சேடர்வாழ் சேறைச் செந்நெறி மேவிய
ஆட லான்தன் அடியடைந்து உய்ம்மினே.

தெளிவுரை : பேசுவதற்கு உரிய உயர்ந்த சொற்களைப் பேசாதவர்களே ! பொருட் செல்வத்தைப் தேடி, அதனால் கவரப்பட்டு மயங்கிப் பாவக்குழியில் விழாதீர்கள். நீவிர் எவ்வளவு பாடுபட்டு இத்தன்மையில் உழைந்து இளைத்தாலும் பயல் இல்லை. பெருமைக்குரிய சேறையில் மேவும் செந்நெறியப்பர் ஆடுகின்ற திருநடனத்தைக் கண்டு, அப்பரமனின் திருவடியை ஏத்தி, உய்வீர்களாக.

773. எண்ணி நாளும் எரியயிற் கூற்றுவன்
துண்ணென் தோன்றிற் துரக்கும் வழிகண்டேன்
திண்ணென் சேறைத் திருச்செந்நெறி யுறை
அண்ண லாருளர் அஞ்சுவது என்னுக்கே.

தெளிவுரை : நெஞ்சமே ! நாள்தோறும் எண்ணி ஆராய்ந்து, எரியும் கூரிய படையும் உடைய கூற்றுவன் திடீரெனத் தோன்றினால், அவனை வெருட்டும் வழியைக் கண்டேன். திண்மையுடையவரும், திருச் செந்நெறியில் உறைபவரும் ஆகிய அண்ணலாகிய ஈசன் காத்தருள இருக்கும் தன்மையில் அச்சம் கொள்வது எதற்கு ?

774. தப்பி வானம் தரணிகம் பிக்கில்என்
ஒப்பில் வேந்தர் ஒருங்குடன் சீறில்என்
செப்ப மாஞ்சேறைச் செந்நெறி மேவிய
அப்ப னார்உளர் அஞ்சுவது என்னுக்கே.

தெளிவுரை : வானமும் பூமியும் தனது நிலை திரிந்து மாறித் துன்பத்தைக் கொடுக்க வேண்டும் என்று கருதினால் என்ன ! சீற்றம் கொண்டு அரசன் சீறினால் தான் என்ன ? சேறையில் மேவும் செந்நெறியப்பர் துணையிருக்க அச்சம் கொள்வதற்கு யாது உள்ளது !

775. வைத்த மாடும் மடந்தநல் லார்களும்
ஒத்தொவ் வாதவுற் றார்களும் என்செய்வார்
சித்தர் சேறைத் திருச்செந் நெறியுறை
அத்தர் தாம்உளர் அஞ்சுவது என்னுக்கே.

தெளிவுரை : சேமித்து வைத்த செல்வமும், விரும்பிய மங்கை நல்லார்களும், ஒத்தும், ஒவ்வாதும் மேவும் சுற்றத்தார்களும் என்ன செய்ய முடியும் ? எத்தகைய நன்மையும் அல்லது கெடுதியும் செய்ய முடியாது. சித்தர்கள் ஏத்தும் சேறையில் திருச்செந்நெறியில் மேவும் அன்புக்குரியவராகிய சிவபெருமான் துணையிருக்கும்போது அஞ்ச வேண்டியது இல்லை.

776. குலங்கள் என்செய்வ குற்றங்கள் என்செய்வ
துலங்கி நீநின்று சோர்ந்திடல் நெஞ்சமே
இலங்கு சேறையில் செந்நெறி மேவிய
அலங்க னார்உளர் அஞ்சுவது என்னுக்கே.

தெளிவுரை : நெஞ்சமே ! பிறந்த குலத்தின் தன்மையாலும், செய்யும் குற்றங்களாலும் தனக்குத் துன்பம் உண்டாகும் எனச் சோர்ந்து விடாதே. சேறையில் வீற்றிருக்கும் செந்நெறியப்பர், கொன்றை மாலை தரித்துத் துணை நிற்க, நீ அச்சம் கொள்வது எதற்கு ?

777. பழகி னால்வரும் பண்டுள் சுற்றமும்
விழவி டாவிடில் வேண்டிய எய்தொணா
திகழ்கொள் சேறையிற் செந்நெறி மேவிய
அழக னார்உளர் அஞ்சுவது என்னுக்கே.

தெளிவுரை : பழகிய சுற்றத்தினரும் மற்றும் தொன்மையான உறவினரும், இவனால் பயன் இல்லை என ஒதுக்கி விடுவார்களானால் தேவையானவற்றை எய்த அரிதாகும் எனக் கவலை கொள்ள வேண்டாம். பெருமையுடன் மேவும் சேறையில் செந்நெறி மேவிய அழகனாகிய சிவபெருமான் விளங்குகின்றார். அப்பரமன் துணையாய் விளங்க நீவிர் அஞ்சுவது எதற்கு !

778. பொருந்து நீண்மலை யைப்பிடித்து ஏந்தினான்
வருந்த வூன்றி மலரடி வாங்கி னான்
திருந்து சேறையிற் செந்நெறி மேவிஅங்கு
இருந்த சோதிஎன் பார்க்குஇடர் இல்லையே.

தெளிவுரை : நீண்டு விளங்கும் கயிலைமலையைப் பற்றிப் பெயர்த்து எடுத்த இராவணன் வருந்துமாறு திருவடி மலரால் ஊன்றிய சிவபெருமான், சேறையில் மேவும் செந்நெறியில் வீற்றிருப்பவர். அப் பரமனின் திருநாமத்தை உரைப்பவர்களுககு, இடர் என்பது இல்லை.

திருச்சிற்றம்பலம்

78. திருக்கோடிகா (அருள்மிகு கோடீஸ்வரர் திருக்கோயில், திருக்கோடிக்காவல், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

779. சங்கு லாமுன்கைத் தையலோர் பாகத்தன்
வெங்கு லாமத வேழம் வெகுண்டவன்
கொங்கு லாம்பொழிற் கோடிகா வாவென
எங்கி லாததோர் இன்பம்வந்து எய்துமே.

தெளிவுரை : சிவபெருமான், சங்குவளையலை அணிந்து விளங்குகின்ற உமாதேவியைத் திருமேனியில் பாகமாகக் கொண்டு திகழ்பவர்; வெம்மையுடைய யானையின் தோலை உரித்தவர். அப்பரமன், தேன் துளிர்க்கும் பொழில் திகழும் கோடிகாவில் வீற்றிருப்பவர். அப்பெருமானின் திருநாமத்தை ஓதிக் கோடிகாநாதனே ! காவாய் எனப் பக்தியுடன் அழைக்கப் பேரின்பம் வந்து எய்தும்.

780. வாடி வாழ்வதுஎன் னாவது மாதர்பால்
ஓடி வாழ்வினை யுள்கிநீர் நாடொறும்
கோடி காவனைக் கூறிரேற் கூறினேன்
பாடி காவலிற் பட்டுக் கழிதிரே.

தெளிவுரை : உலகில் பலவாறாக அலைந்தும், வருந்தியும் காமத்தின் வயத்தால் திரிந்தும், உழலும் வாழ்க்கையானது, ஒரு செம்மையுடைய வாழ்க்கை என ஆகுமா ! கோடிகாவில் மேவும் ஈசனைத் துதித்து, அப்பெருமானின் இனிய திருநாமத்தை ஓதி ஏத்துவீராக. அவ்வாறு உரைத்தால் உய்யலாம். அப்பரமனின் திருப்பெயரைக் கூறாது விடுவீராயின், தவறு செய்பவர்கள் பெறும் தண்டனைக்குரிய துன்பத்தை உடையவராகிக் காலத்தை வீணாகக் கழிப்பவர் ஆவீர் ! இது பிறவித் துன்பத்தை உணர்த்திற்று.

781. முல்லை நன்முறு வல்லுமை பங்கனார்
தில்லை யம்பலத் தில்உறை செல்வனார்
தொல்லை யேற்றினார் கோடிகா வா என்றுஅங்கு
ஒல்லை யேத்துவார்க்கு ஊனம்ஒன்று இல்லையே.

தெளிவுரை : சிவபெருமான், முல்லை போன்ற முறுவல் கொள்ளும் அழகிய பல்கொண்டு விளங்கும் உமாதேவியைத் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு விளங்குபவர்; தில்லையம்பலத்தில் மேவி விளங்கும் செல்வனார்; இடப வாகனத்தில் மீது வீற்றிருப்பவர். அப்பரமனைக் கோடிகா நாதனே என்று ஆவல் கூர்ந்து ஏத்தும் அடியவர்கள் எத்தகைய ஊனமும் இன்றி, இனிது வாழ்வார்கள். இத் திருப்பாட்டானது இறைவனின் திருநாமத்தை விருப்பத்துடன் ஓதும் பக்தர்களுக்கு, எத்தகைய துன்பமும் இல்லை என ஓதுதலாயிற்று.

782. நாவ ளம்பெறு மாறுமந் நன்னுதல்
ஆமளம் சொல்லி அன்புசெயில்அ லால்
கோம ளம்சடைக் கோடிகா வாவென
ஏவள் இன்றுஎனை ஏசும்அவ் வேழையே.

தெளிவுரை : நாவானது வளம் கொண்டு இன்பம் தருகின்ற வகையில், இப்பெண், எவ்வளவு இயலுமோ அவ்வளவுமுறை மனத்தில் அன்புடையவராகி, அழகிய சடையுடைய கோடிகா நாதனை ஏத்தாது, என்னை ஏசுவது எதற்கு ?

783. வீறு தானபெறு வார்சில ராகிலும்
நாறு பூங்கொன்றை தான்மிக நல்கானேல்
கூறு வேன்கோடி காவுளா என்றுமால்
ஏறு வேன்நும்மால் ஏசப் படுவனோ.

தெளிவுரை : சிவபெருமானே ! சிலர் ஆனந்தத்தால் பெருமை கொண்டு, தேவரீரையே சிந்தித்திருப்பர். அடியவளுக்குத் தேவரீரின் அன்பின் பிரசாதமாகக் கொன்றை மலர் மாலையை அருளிச் செய்யாவிட்டால், நான் மயங்கிய நிலையில், தேவரீரின் திருப்பெயரைக் கூறுவேன். கோடிகாநாதனே என்பேன். தேவரீரால் யான் ஏசப்படுவனோ !

784. நாடி நாரணன் நான்முகன் வானவர்
தேடி யேசற வுந்தெரி யாததோர்
கோடி காவனைக் கூறாத நாளெலாம்
பாடி காவலிற் பட்டுக் கழியுமே.

தெளிவுரை : திருமாலும், பிரமனும், வானவர்களும், தேடியும் அறிந்து கொள்ள இயலாத சோதியாகிய சிவபெருமான், கோடிகாநாதர். அப்பரமனின் திருநாமத்தை ஓதி உரைத்து எத்தாத காலம், பயனின்றித் துன்பத்தால் அழியும்.

785. வரங்க னால்வரை யைஎடுத் தான்றனை
அரங்க வூன்றி அருள்செய்த அப்பனூர்
குரங்கு சேர்பொழிற் கோடிகா வாஎன
இரங்கு வேன் மனத்து ஏதங்கள் தீரவே.

தெளிவுரை : இராவணன், வரபலத்தின் காரணமாகக் கயிலையை எடுத்தபோது அவனை அடர ஊன்றி நெரித்துப் பின்னர், அவ்வரக்கன் ஏத்த, அருள் செய்தவர் சிவபெருமான். அப்பரமனுடைய ஊரானது, பொழில் திகழும் கோடிகா ஆகும். அப்பெருமானுடைய திருநாமத்தை மனங்கசிந்து ஓதி, என்னுடைய மனத்தின்கண் உள்ள குற்றங்கள்  யாவும் நீங்குமாறு செய்வேன். இது, மனத்தில் மேவும் ஏதம் நீங்கப் பெறுதலுடன், வாக்கிலும், காயத்திலும் தூய்மை பெறச் செய்யும் என்பது குறிப்பால் உணர்த்திற்று.

திருச்சிற்றம்பலம்

79. திருப்புள்ளிருக்குவேளூர் (அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில், வைத்தீசுவரன்கோயில், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

786. வெள்ளெ ருக்கர வம்விர வும்சடைப்
புள்ளி ருக்குவே ளூரான் பொற்கழல்
உள்ளி ருக்கும் உணர்ச்சியில் லாதவர்
நள்ளி ருப்பர் நரகக் குழியிலே.

தெளிவுரை : புள்ளிருக்குவேளூரில் மேவும் சிவபெருமான், சடைமுடியின் மீது வெள்ளெருக்கும் பூ அணிந்து, அதனுடன் பாம்பினைக் கொண்டு விளங்குபவர். அப்பரமனின் திருவடியை உள்ளத்தில் பதித்துப் பத்தி உணர்வைக் கொள்ளாதவர் நரகக் குழியில் தள்ளப்படுபவர் ஆவர்.

787. மாற்றம் ஒன்றறி யீர்மனை வாழ்க்கைபோய்க்
கூற்றம் வந்துமைக் கொள்வதன் முன்னமே
போற்ற வல்லீரேற் புள்ளிருக்கு வேளூர்
சீற்ற மாயின தேய்ந்தனும் காண்மினே.

தெளிவுரை : இவ்வுலக பந்தத்தால் கட்டுண்டு உழல்கின்ற வாழ்க்கையானது முடிவுறுங்காலத்தில், சீறிவரும் கூற்றுவன் உம்மைக் கொண்டு செல்வதன் முன்பாகப் புள்ளிருக்கு வேளூரில் மேவும் பரமனை ஏத்துவீராக. அது சீறும் கூற்றுவனை அடக்குவித்துக் காக்க வல்லதாகும்.

788. அரும றையனை ஆணொடு பெண்ணனைக்
கருவி டம்மிக உண்டவெங் கண்டனைப்
புரிவெண் நூலனைப் புள்ளிருக்கு வேளூர்
உருகி நைபவர் உள்ளங் குளிருமே.

தெளிவுரை : சிவபெருமான், அரியதாகிய வேதம் ஆனவர்; ஆணாகவும் பெண்ணாகவும் மேவும் அம்மையப்பவராகியர்; கரிய விடத்தை உண்டு கண்டத்தில் தேக்கியவர்; முப்புரிநூல் அணிந்து விளங்குபவர். புள்ளிருக்கும் வேளூரில் மேவும் அப்பரமனை ஏத்தி, உள்ளம் கசிந்து உருகும் அடியவர்களுடைய மனம், மகிழ்ச்சியுடன் விளங்கும்.

789. தன்னு ருவை ஒரு ஒருவர்க்கு அறிவொணா
மின்னு ருவனை மேனிவெண் நீற்றனைப்
பொன்னு ருவனைப் புள்ளிருக்கு வேளூர்
என்ன ல்ல வார்க்கில்லை இடர்களே.

தெளிவுரை : சிவபெருமான் தனது வடிவத்தை ஒருவரும் அறியாதவாறு மேவி, மின்னல் போன்று திகழ்பவர், திருமேனியில் திருநீறு பூசி விளங்குபவர்; பொன் போன்று அழகுடையவர். அப்பெருமானைப் புள்ளிருக்கு வேளூர் நாதனே என ஏத்த வல்லவர்கள் இடம் இன்றி நன்கு விளங்குவார்கள்.

790. செங்கண் மால்பிர மற்கும் அறிவொணா
அங்கி யின்னுரு வாகி அழல்வதோர்
பொங்கு அரவனைப் புள்ளிருக்கு வேளூர்
மங்கை பாகனை வாழ்த்த வரும்இன்பே.

தெளிவுரை : சிவபெருமான், திருமால், பிரமன் ஆகியவர்களால் அறியப்படாதவராகி நெருப்பின் உருவாகி, ஓங்கி உயர்ந்தவர். சீறு அரவத்தை ஆபரணமாக உடையவர். அவர், புள்ளிருக்குவேளூரில் உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குபவர். அப்பெருமானை வாழ்த்தும் அடியவர்கள், இன்புற்று விளங்குவார்கள்.

791. குற்றம் இல்லியைக் கோலச் சிலையினால்
செற்ற வர்புரம் செந்தழல் ஆக்கியைப்
புற்ற ரவனைப் புள்ளிருக்கு வேளூர்
பற்ற வல்லவர் பாவம் பறையுமே.

தெளிவுரை : சிவபெருமான், எத்தகைய குற்றத்தாலும் ஆட்படாதவர்; அழகிய மேருவை வில்லாகக் கொண்டு, பகைத்து வந்த முப்புர அசுரர்களை நெருப்பில் வெந்து சாம்பலாகுமாறு கணை தொடுத்து அழித்தவர்; புற்றில் மேவும் பாம்பினை ஆபரணமாகப் பூண்டவர். புள்ளிருக்கு வேளூரில் மேவும் அப்பரமனை ஏத்தும் அன்பர்களின் பாவம் முற்றுமாய் விலகி அழியும்.

792. கையி னோடுகால் கட்டி யுமரெலாம்
ஐயன் வீடினன் என்பதன் முன்னனம்நீர்
பொய்யி லாஅரன் புள்ளிருக்கு வேளூர்
மையு லாவிய கண்டனை வாழ்த்துமே.

தெளிவுரை : இத்தேகத்திலிருந்து உயிர் பிரிந்த பின்னர், கைகளையும் கால்களையும் கட்டி, இவன் மறைந்தனன் என்று உறவினர்களால் உரைக்கப் படுவதன் முன்னர், பொய்யில்லாதவராய், மெய்ம்மையில் திகழும் புள்ளிருக்கு வேளூரில் மேவும் சிவபெருமானாகிய நீலகண்டப் பெருமானை ஏத்திப் போற்றுவீராக.

793. உள்ளம் உள்கி உகந்து சிவன்என்று
மெள்ள உள்க வினைகெடு மெய்ம்மையே
புள்ளி னார்பணி புள்ளிருக்கு வேளூர்
வள்ளல் பாதம் வணங்கித் தொழுமினே.

தெளிவுரை : உள்ளமானது கசிந்து உருகி சிவபெருமானே என்று மெள்ளத் திருவைந்தெழுத்தை மனத்தில் இருத்தி, ஏத்தி, வினை யாவும் தீரும். இதுவே மெய்ம்மையாகும். புள்ளரசாகிய சடாயு பணிந்து ஏத்திய புள்ளிருக்கு வேளூரில் மேவும், வள்ளலாகிய சிவ பெருமானின் திருப்பாத மலரை ஏத்தி வணங்குவீராக. இத் திருத்தலப் பெருமையாகிய சடாயு என்னும் புள்ளரசு பூசித்த குறிப்பானது, இத் திருப்பாட்டில் உணர்த்தப்பெற்றது.

794. அரக்க னார்தலை பத்தும் அழிதர
நெருக்கி மாமலர்ப் பாதம் நிறுவிய
பொருப்ப னார்உறை  புள்ளிருக்கு வேளூர்
விருப்பி னால்தொழு வார்வினை வீடுமே.

தெளிவுரை : இராவணனுடைய பத்துத் தலைகளும் நொறுங்குமாறு, திருப்பாத விரலை நிறுவி ஊன்றிய கயிலை நாதர் சிவபெருமான். அப்பரமன் உறையும் புள்ளிருக்குவேளூரை, விருப்பத்துடன் தொழுது வணங்குபவர்களுடைய வினை யாவும் கெடும்.

திருச்சிற்றம்பலம்

80. திருஅன்பில் ஆலந்துறை (அருள்மிகு சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில், அன்பில், திருச்சி மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

795. வானம் சேர்மதி சூடிய மைந்தனை
நீநெஞ் சேகெடு வாய்நினை கிற்கிலை
ஆனஞ் சாடியை அன்பில்ஆ லந்துறைக்
கோன்எம் செல்வனைக் கூறிட கிற்றியே.

தெளிவுரை : சிவபெருமான், வானத்தில் தவழும் சந்திரனைச் சடை முடியில் சூடியவர்; நெஞ்சமே ! அப்பெருமான், பஞ்சகவ்வியத்தை அபிடேகம் கொண்டு, அன்பில் ஆலந்துறையில் வீற்றிருக்கும் செல்வர். அப்பரமனை நினைத்து ஏத்தாது உள்ளனையே ! இது நன்மையில்லை. இவ்வாறு இருப்பின், கெடுவாய். எனவே, ஈசனின் திரு நாமத்தை ஓதி வழிபட, உடனே முனைந்து செயல் ஆற்றுவாயாக.

796. கார ணத்தர் கருத்தர் கபாலியார்
வார ணத்துரி போர்த்த மணாளனார்
ஆர ணப்பொருள் அன்பில்ஆ லந்துறை
நார ணற்குஅரி யான்ஒரு நம்பியே.

தெளிவுரை : சிவபெருமான், எல்லாச் செயல்களுக்கும் காரண கர்த்தராய் விளங்குபவர்; கருத்தில் நிறைந்தவர்; கபாலத்தைக் கையில் கொண்டுள்ளவர்; யானையின் தோலை உரித்துப் போர்த்தியவர்; உமாதேவியை உடனாகக் கொண்டு மணவாளத் திருக்கோலத்தில் விளங்குபவர்; வேதத்தின் பொருளாக விளங்குபவர். அப்பெருமான் அன்பில் ஆலந்துறையில் மேவித் திருமால் காண்பதற்கு அரும்பொருளாகிய நம்பியாவர்.

797. அன்பின் ஆனஞ்சம் ஐந்துடன் ஆடிய
என்பின் ஆனை யுரித்துக் களைந்தவன்
அன்பி லானை அம்மானை அள்ளூறிய
அன்பி னால் நினைந்தார் அறிந்தார்களே.

தெளிவுரை : சிவபெருமான், அன்புடன் சாத்தும் அடியவர்கள் அபிடேகம் செய்யப் பஞ்ச கவ்வியத்தை ஏற்று மகிழ்பவர்; யானையை அழித்து, அதன் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டவர்; அன்பில் என்னும் தலத்திற்கு உரியவர்; அன்புடன் அருள்பவர். அப்பெருமானை அள்ளூறிய அன்பினால் நினைத்து ஏத்தும் அடியவர்களே மெய்ம்மையை அறிந்தவர்கள் ஆவார்கள்.

798. சங்கை யுள்ளதும் சாவது மெய்யுமை
பங்க னார்அடி பாவியேன் நானுய்ய
அங்க ணன்எந்தை அன்பில் ஆலந்துறைச்
செங்க ணார்அடிச் சேரவும் வல்லனே.

தெளிவுரை : நெஞ்சமே ! இவ்வுலகத்தில் எக்காலமும் வாழ்ந்து மகிழ்தல் என்பது ஐயம் உடையது. ஆனால் ஒரு கால கட்டத்தில், மடிதல் என்பது மெய்ம்மையுடையது. உமாதேவியைப் பாகம் கொண்டுள்ள சிவபெருமானுடைய திருவடிக் கமலத்தை நான் சிந்தித்து ஏத்தாதவனானேன். இத்தன்மையில் எந்தையாகிய அன்பில் ஆலந்துறையில் மேவும் சிவபெருமான் திருவடியைச் சேர்ந்து, நான் உய்வு பெற வல்லவன் ஆவேனோ !

799. கொக்கி றகர் குளிர்மதிச் சென்னியர்
மிக்க ரக்கர் புரமெரி செய்தவர்
அக்க ரையினர் அன்பில் ஆலந்துறை
நக்குஉ ருவரும் நம்மை அறிவரே.

தெளிவுரை : சிவபெருமான், கொக்கிறகைச் சூடியுள்ளவர், குளிர்ச்சியான சந்திரனைத் திருமுடியில் சூடியவர்; அசுரரின் முப்புரக் கோட்டைகளை எரித்துச் சாம்பலாக்கியவர். எலும்பினை அரையில் கட்டி இருப்பவர். அப்பெருமான், அன்பில் ஆலந்துறையில் நகுதற்குரிய வடிவினராக வீற்றிருப்பவர். அவர் நம்மை நன்கு அறிபவர் ஆவர்.

800. வெள்ளம் உள்ள விரிசடை நந்தியைக்
களளம் உள்ள மனத்தவர் காண்கிலார்
அள்ளல் ஆர்வயல் அன்பில்ஆ லந்துறை
உள்ள வாறுஅறி யார்சிலர் ஊமரே.

தெளிவுரை : சிவபெருமான், கங்கையைச் சடை முடியில் அணிந்து விளங்குபவர். அப்பெருமானைப் பொய்த்தன்மையால் கைதொழும் மனத்தினரால் அறிதற்கு ஒண்ணாது. அவர், சேறு விளங்கும் வயல்கள் திகழும் அன்பில் ஆலந்துறையில் வீற்றிருப்பவர். சில ஊமர்கள் அப்பரமனை அறிய இயலாது.

801. பிறவி மாயப் பிணக்கில் அழுந்தினும்
உறவெ லாம்சிந்தித்து உன்னி உகவாதே
அறவன் எம்பிரான் அன்பில் ஆலந்துறை
மறவா தேதொழுது ஏத்தி வணங்குமே.

தெளிவுரை : நெஞ்சமே ! இப் பிறவியில் சூழ்ந்துள்ள உறவினர்களைச் சிந்தனை செய்து, அதனையே மகிழ்வாகக் கொண்டு, காலத்தை வீணாக்காதே. இப்பிறவி முடிந்து மீண்டும் பிறவி எடுக்கும் தன்மையில், பிணக்கு கொண்டு இருப்பினும், அன்பில் ஆலந்துறையில் வீற்றிருக்கும் பெருமானை மறவாது தொழுது ஏத்தி வணங்குவாயாக.

802. நுணங்கு நூலயன் மாலும் இருவரும்
பிணங்கி எங்கும் திரிந்தெய்த்தும் காண்கிலா
அணங்கன் எம்பிரான் அன்பில் ஆலந்துறை
வணங்கும் நும்வினை மாய்ந்தறும் வண்ணமே.

தெளிவுரை : திருமாலும், வேதத்தின் ஞானம் கொண்ட பிரமனும் ஆகிய இருவரும் தேடித் திரிந்தும், காண்பதற்கு அரியவராகிய சிவபெருமான், உமாதேவியை ஒரு பாகமாக உடையவர். அவர் அன்பில் ஆலந்துறையில் வீற்றிருக்கும் எம் தலைவர் ஆவார். அப் பெருமானை வணங்குவீராக. உமது வினையாவும் மாய்ந்து அழியும். வினை நீங்குவதால் அருள் வண்ணம் மேவிப் பிறவாமையாகிய பெருஞ் செல்வத்தைப் பெற்றவராவீர்கள்.

803. பொய்யெ லாம்உரைக் கும்சமண் சாக்கியக்
கையன் மாருரை கேளாது எழுமினோ
ஐயன் எம்பிரான் அன்பில் ஆலந்துறை
மெய்யன் சேவடி ஏத்துவார் மெய்யரே.

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் கூறும் பொய்யுரைகளை ஏற்காதீர்கள். எம் பெருமானாகிய ஐயன், அன்பில் ஆலந்துறையில் வீற்றிருக்க, மெய்ம்மையுடைய திருவடி மலர்களை ஏத்தி உய்பவர்கள் மெய்ம்மையுடைய அடியவர்கள் ஆவர்.

804. இலங்கை வேந்தன் இருபது தோளிற்று
மலங்க மாமலை மேல்விரல் வைத்தவன்
அலங்கல் எம்பிரான் அன்பில் ஆலந்துறை
வலங்கொள் வாரை வானோர் வலம் கொள்வரே.

தெளிவுரை : இலங்கையின் வேந்தனாகிய இராவணனுடைய இருபது தோளும் இற்று அழியுமாறு கயிலை மலையின்மீது திருவிரலை ஊன்றி வைத்தவர் சிவபெருமான். அவர், கொன்றை மாலையணிந்தவராய் அன்பில் ஆலந்துறையில் விளங்க, அப்பரமனை வலம் வந்து ஏத்தும் அடியவர்களைத் தேவர்கள் வரவேற்றுப் பெருமை செய்வார்கள்.

திருச்சிற்றம்பலம்

81. திருப்பாண்டிக் கொடுமுடி (அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில், கொடுமுடி, ஈரோடு மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

805. சிட்ட னைச்சிவ னைச்செழுஞ் சோதியை
அட்ட மூர்த்தியை ஆல நிழலமர்
பட்ட னைத்திருப் பாண்டிக் கொடுமுடி
நட்ட னைத்தொழு நம்வினை நாசமே.

தெளிவுரை : சிவபெருமான், தவத்தின் சீலம் உடையவர்; செழுமையான சோதியானவர்; அட்ட மூர்த்தியாய் விளங்குபவர்; கல்லால நிழலில் அமர்ந்து தட்சிணாமூர்த்தித் திருக்கோலத்தில் சனகாதி முனிவர்களுக்கு அறப்பொருள் உண்மைகளை உபதேசம் புரிந்தவர். அப்பெருமான், திருப்பாண்டிக் கொடுமுடியில் நடனம் புரிபவர். அவரைத் தொழுது ஏத்த நமது வினை யாவும் அழியும்.

806. பிரமன் மாலறி யாத பெருமையன்
தரும மாகிய தத்துவன் எம்பிரான்
பரம னார்உறை பாண்டிக் கொடுமுடி
கரும மாகத் தொழுமட நெஞ்சமே.

தெளிவுரை : நெஞ்சமே ! சிவபெருமான், பிரமனும் திருமாலும் அறிவதற்கு அரிய பெருமையானவர்; தருமமாக விளங்குபவர்; எமது பிரான் ஆகிப் பாண்டிக் கொடுமுடியில் வீற்றிருக்கும் பரமன் ஆவர். அப் பெருமானைத் தொழுதலைத் தனது பணியாகக் கொள்வாயாக.

807. ஊசல் ஆனல்வள் ஒண்கழ லாள்அல்லள்
தேச மாந்திருப் பாண்டிக் கொடுமுடி
ஈச னேயெனும் இத்தனை யல்லது
பேசு மாறறி யாள்ஒரு பேதையே.

தெளிவுரை : இப்பெண், திருப்பாண்டிக் கொடுமுடியில் மேவும் ஈசனை நினைத்து, அப்பெருமானின் திருநாமத்தை யன்றி வேறு எதனையும் ஓதிலள். உலகப்பாங்கில் தன் கருத்தைச் செலுத்தாதவளாய் மேவினள்.

808. தூண்டிய சுடர் போல்ஒக்கும் சோதியான்
காண்ட லும்எளியன் அடி யார்கட்குப்
பாண்டிக் கொடுமுடி மேய பரமனைக்
காண்டும் என்பவர்க்கு ஏதும் கருத்தொணான்.

தெளிவுரை : சிவபெருமான், தூண்டிய சுடர் போன்று நன்கு கொழுந்துவிட்டு ஒளிரும் சோதி வடிவானவர்; அடியவர் பெருமக்களின் காட்சிக்கு எளியவராக விளங்குபவர்; பாண்டிக் கொடுமுடியில் விளங்கும் பரமன் ஆவார். அவர், அடியவர் பெருமக்களையன்றி ஏனையோர்க்கு அரியவர்.

809. நெருக்கி அம்முடி நின்றிசை வானவர்
இருக்கொடும் பணிந்து ஏத்த இருந்தவன்
திருக்கொடும் முடி என்றலும் தீவினைக்
கருக்கெடும் இது கைக்கண்ட யோகமே.

தெளிவுரை : இராவணன் கயிலையைப் பெயர்த்து எடுக்க, அவனது முடியை நெருக்கியவர் சிவபெருமான். அப்பரமனைத் தேவர்கள் ரிக் வேதம் கொண்டு போற்றிப் பணிபவராயினர். அப்பெருமான் வீற்றிருக்கும் திருக் கொடுமுடி என ஓதிய அளவில், தீவினை யாவும் கெட்டு அழியும். இது உலகத்தவர்களுக்குக் கை கண்ட யோகம் ஆகும்.

திருச்சிற்றம்பலம்

82. திருவான்மியூர் (அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருவான்மியூர், சென்னை காஞ்சிபுரம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

810. விண்ட மாமலர் கொண்டு விரைந்து நீர்
அண்டர் நாயகன் தன்னடி சூழ்மின்கள்
பண்டுநீர் செய்த பாவம் பறைந்திடும்
வண்டு சேர்பொழில் வான்மியூர் ஈசனே.

தெளிவுரை : மாந்தர்காள் ! நன்கு மலர்ந்த செழுமையான மலர் கொண்டு தேவர்களுக்கெல்லாம் தலைவனாகிய சிவபெருமானுடைய திருவடியைச் சூழ்ந்து வழிபாடு செய்வீர்களாக. முற் பிறவிகளில் செய்த தீவினை யாவும் தீரும். அத்தகைய திருவருளைச் செய்பவர், வண்டு உலவும் பொழில் திகழும் வான்மியூரில் வீற்றிருக்கும் ஈசன் ஆவர்.

811. பொருளும் சுற்றமும் பொய்ம்மையும் விட்டுநீர்
மருளும் மாந்தரை மாற்றி மயக்கறுத்து
அருளு மாவல்ல ஆதியாய் என்றலும்
மருள் அறுத்திடும் வான்மியூர் ஈசனே.

தெளிவுரை : பொன் பொருள் ஆகியவற்றின் மீது உள்ள பற்றும், சுற்றியுள்ள உறவினரின் மீது காட்டும் பற்றும், பொய்ந் நெறியின்பால் பற்றுக் கொண்டு விளங்குவதும், ஆகியன நற்கதிக்கு இட்டுச் செல்லாதனவாகும். அஞ்ஞானத்தில் திளைத்து மயங்கிய மாந்தர்களை மீட்டுப் பெரு ஞானம்வழங்கவல்ல ஆதிக் கடவுளே ! அருள்வீராக ! என்று சிவபெருமானை ஏத்திப் போற்ற அவ்வாறே அருள் புரிந்து ஆட்கொள்பவர், வான்மியூரில் வீற்றிருக்கும் ஈசன் ஆவார்.

812. மந்த மாகிய சிந்தை மயக்கறுத்து
அந்த மில்குணத் தானை அடைந்துநின்று
எந்தை ஈசன்என்று ஏத்திட வல்லிரேல்
வந்து நின்றிடும் வான்மியூர் ஈசனே.

தெளிவுரை : சிரத்தை இன்றி மயங்கும் சிந்தையைத் தெளிவித்த சிவபெருமான், எண்குணத்தின் வயத்தவர். அப்பெருமானின் திருவடியை அடைந்து வணங்கித் திருநாமங்களால் ஏத்தி வழிபடுவீராக. அவர் நும் முன்தோன்றி அருள் புரிபவர் ஆவர். அவர், வான்மியூரில் மேவும் பரமனே.

813. உள்ள முள்கலந்து ஏத்தவல் லார்க்கலால்
கள்ளம்உள்ளவ ருக்கருள் வான்அலன்
வெள்ள மும்அர வும்விரவும் சடை
வள்ள லாகிய வான்மியூர் ஈசனே.

தெளிவுரை : சிவபெருமான், உள்ளம் கசிந்து உருகி ஏத்தும் மெய்யன்பர்களுக்கு அன்றிப் பொய்த் தன்மையால் மேவும் மாந்தர்கள்பால் இணங்கிக் கலவாதவர். அப்பெருமான், கங்கையும், அரவமும் சடை முடியில் திகழ விளங்கும் வள்ளலாகிய வான்மியூர் ஈசன் ஆவர்.

814. படங்கொள் பாம்பரைப் பால்மதி சூடியை
வடங்கொள் மென்முலை மாதொரு கூறனைத்
தொடர்ந்து நின்று தொழுதெழு வார்வினை
மடங்க நின்றிடும் வான்மியூர் ஈசனே.

தெளிவுரை : சிவபெருமான், படம் விரித்தாடும் பாம்பைத் தரித்தவர்; பால்போன்ற வெண்மையான சந்திரனைச் சூடியவர்; உமாதேவியைத் திருமேனியில் பெருமானை வழி அடியாராகத் தொடர்ந்து அன்பின் உறுதியோடு நின்று தொழுபவர்களுக்கு, வினையானது கெடும். அத்தகைய அருள் புரியும் பெருமான், வான்மியூரில் மேவும் ஈசன் ஆவார்.

815. நெஞ்சில் ஐவர் நினைக்க நினைக்குறார்
பஞ்சின் மெல்லடி யாள்உமை பங்கஎன்று
அஞ்சி நாள்மலர் தூவி அழுதிரேல்
வஞ்சம் தீர்த்திடும் வான்மியூர் ஈசனே.

தெளிவுரை : நெஞ்சமே ! ஐம்புலன்கள் என்னை ஆட்கொண்டு சிவபெருமானை நினைத்து ஏத்துமாறு புரியவில்லையே என வருந்த வேண்டாம். உமாதேவியாரைப் பாகம் கொண்டு மேவும் ஈசனை மலர்தூவிப் போற்றி, உள்ளம் கசிந்து உருகுமாறு அழுதால், அத்தகைய குற்றத்தைத் தீர்த்து அருள்புரிபவர். வான்மியூரில் மேவும் ஈசன் ஆவார்.

816. நுணங்கு நூலயன் மாலும் அறிகிலாக்
குணங்கள் தான்பர விக்குறைந் துக்கவர்
கணங்கு பூண்முலைத் தூமொழி யாரவர்
வணங்க நின்றிடும் வான்மியூர் ஈசனே.

தெளிவுரை : சிவபெருமான், நுண்மையான வேதஞானம் கொண்டு மேவும் பிரமனும், திருமாலும் அறிதற்கு அரியவராய் எண் குணங்கள் கொண்டு விளங்க, அனைவராலும் ஏத்தப்படுபவர். அப்பெருமான், தூய மொழியால் ஏத்தும் மகளிர் வணங்குகின்ற வான்மியூரில் வீற்றிருப்படவர் ஆவர். அப்பெருமானை ஏத்தி உய்வீராக என்பது குறிப்பு.

817. ஆதியும் அரனாய் அயன் மாலுமாய்ப்
பாதி பெண்ணுரு வாய பரமன்என்று
ஓதி யுள்குழைந்து ஏத்தவல் லார்அவர்
வாதை தீர்த்திடும் வான்மியூர் ஈசனே.

தெளிவுரை : சிவபெருமான், ஆதி மூர்த்தியாகவும், அரன், அயன், திருமால் என மூவருமாகவும், பாதிப் பெண்ணுருவாகிய அர்த்தநாரியாகவும், விளங்கும் பரமன் ஆவார். அப்பெருமானை, அன்புடன் குழைந்து ஏத்தித் திருநாமத்தை ஓதி வணங்குபவர்களுக்கு, இடர் யாவும் தீரும். அத்தகைய கருணையைப் புரிபவர் வான்மியூரில் வீற்றிருக்கும் ஈசன் ஆவர்.

818.  ஓட்டை மாடத்தில் ஒன்பது வாசலும்
காட்டில் வேவதன் முன்னம் கழலடி
நாட்டி நாண்மலர் தூவி வலஞ்செயில்
வாட்டம் தீர்த்திடும் வான்மியூர் ஈசனே.

தெளிவுரை : ஒன்பது வாயில்களையுடைய ஓட்டை மாடமாக இருப்பது இவ்வுடம்பு. இது நிலை இல்லாதது. இதனில் மேவும் உயிரானது நீங்கியதும், இதனைச் சுடுகாட்டில் சேர்த்துத் தீயிட்டு எரிப்பர். எனவே, அத்தகைய நிலையை இவ்வுடம்பானது அடையும் முன்னர், வான்மியூரில் வீற்றிருக்கும் சிவபெருமானின் திருவடியை அடைந்து மலர்தூவிப் போற்றி வணங்கித் திருக்கோயிலை வலம் வருவீராக. உமது துன்பத்தைத் தீர்ப்பவர் அப்பரமனே ஈசனே.

819. பார மாக மலையெடுத் தான்றனைச்
சீர மாகத் திருவிரல் ஊன்றினான்
ஆர்வ மாக அழைத்தவன் ஏத்தலும்
வாரம் ஆயினான் வான்மியூர் ஈசனே.

தெளிவுரை : சுமையுடைய மலையை எடுத்த இராவணனுக்கு, அம்மலையானது கனக்குமாறு திரு விரலால் ஊன்றியவர், சிவபெருமான். பின்னர் அவ்வரக்கன் அன்பு மேலிட்டு ஏத்திப் பேற்ற, அப் பெருமான் அருள் செய்தனர். அவர், வான்மியூரில் மேவும் ஈசன் ஆவார்.

திருச்சிற்றம்பலம்

83. திருநாகைக்காரோணம் (அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்)

திருச்சிற்றம்பலம்

820. பாணத் தால்மதில் மூன்றும் எரித்தவன்
பூரணத் தான்அரவு ஆமை பொறுத்தவன்
காணத் தான்இனி யான்கடல் நாøக்கா
ரோணத் தான்என நம்வினை ஓயுமே.

தெளிவுரை : சிவபெருமான், ஒரு அம்பு தொடுத்து அசுரர்களுடைய மூன்று கோட்டைகளை எரித்துச் சாம்பலாக்கியவர்; அரவும், ஆமையோடும், ஆபரணமாகப் பூண்டவர்; கண்டு தரிசிக்க இனிமை வழங்குபவர். அப்பெருமான், கடல் சூழ்ந்த நாகையில் மேவும் காரோணத்தில் வீற்றிருப்பவர். அவருடைய திருநாமத்தை ஓத, நம் வினை யாவும் ஓயும்.

821. வண்ட லம்பிய வார்சடை யீசனை
விண்த லம்பணிந்து ஏத்தும் விகிர்தனைக்
கண்டலங் கமழ் நாகைக்கா ரோணனைக்
கண்ட லும்வினை யான கழலுமே.

தெளிவுரை : ஈசன், வண்டு மொய்க்கும் மலர் தரித்த நீண்ட சடை முடியுடையவர். அப்பெருமான், தேவர்கள் எல்லாம் பணிந்து  ஏத்தித் தாழை மணம் கமழும் நாகைக் காரோணத்தில் வீற்றிருப்பவர். அவரைக் கண்டு வணங்க, வினை யாவும் விலகிச் செல்லும்.

822. புனையும் மாமலர் கொண்டு புரிசடை
நனையும் மாமலர் சூடிய நம்பனைக்
கனையும் வார்கடல் நாøக்கா ரோணனை
நினைய வேவினை யாயின நீங்குமே.

தெளிவுரை : பெருமை மிக்க மலர்கள் கொண்டு புனையப் பெற்ற மாலைகளைச் சடைமுடியில் தரித்த சிவபெருமான், தேன் செறிந்த மலர்களைச் சூடியவர். அப்பெருமான், ஒலித்து ஆரவாரிக்கும் கடல் சூழ்ந்த நாகையில் காரோணத்தில் விளங்குபவர். அவரை நினைத்து ஏத்தி வணங்க, வினை யாவும் நீங்கும்.

823. கொல்லை மால்விடை யேறிய கோவினை
எல்லி மாநடம் ஆடும் இறைவனைக்
கல்லி னார்மதில் நாøக்ககா ரோணனைச்
சொல்ல வேவினை யானவை சோருமே.

தெளிவுரை : சிவபெருமான், பெருமையுடைய இடபவாகனத்தை யுடையவர்; இருள் சூழ்ந்த மயானத்தில் நடனம் ஆடுபவர்; கல்லால் ஆன மதில் சூழ்ந்த நாகைக் காரோணத்தில் வீற்றிருப்பவர். அப்பெருமானுடைய திருநாமத்தை ஓத, வினை யாவும் விலகிச் செல்லும்.

824. மெய்ய னைவிடை யூர்தியை வெண்மழுக்
கைய னைக்கடல் நாகைக்கா ரோணனை
மைய னுக்கிய கண்டனை வானவர்
ஐய னைத்தொழு வார்க்கு அல்லல் இல்லையே.

தெளிவுரை : சிவபெருமான், மெய்ப்பொருளாக விளங்குபவர்; இடபத்தை வாகனமாக உடையவர்; மழுப்படையைக் கையில் ஏந்தியவர்; கடல் சூழ்ந்த நாகையில் மேவும காரோணத்தில் வீற்றிருப்பவர்; மை போன்ற கரிய நஞ்சினைக் கண்டத்தில் தேக்கி, நீல கண்டனாக விளங்குபவர், தேவர்களின் தலைவனாகிய அப்பெருமானைத் தொழுபவர்களுக்கு அல்லல் இல்லை.

825. அலங்கல் சேர்சடை ஆதி புராணனை
விலங்கல் மெல்லியல் பாகம் விருப்பனைக்
கலங்கள் சேர்கடல் நாகைக்கா ரோணனை
வலங்கொள் வார்வினை யாயின மாயுமே.

தெளிவுரை : சிவபெருமான், அழகிய மாலைகள் சூடிய சடையுடைய, ஆதிபுராணர் என்னும் திரு நாமத்துடன் திகழ்பவர்; மலை மகளாகிய உமா தேவியாரைத் திருமேனியில் பாகமாக விரும்பியேற்றவர். அவர் கப்பல்கள் சேரும் கடல் சூழ்ந்த நாகையில் மேவும் காரோணத்தில் வீற்றிருக்க, அப்பரமனை வலம் வந்து வணங்குபவர்களின் வினை யாவும் மாயும்.

826. சினங்கொள் மால்கரி சீறய ஏறினை
இனங்கொள் வானவர் ஏத்திய ஈசனைக்
கனங்கொள் மாமதில் நாøக்கா ரோணனை
மனங்கொள் வார்வினை யாயின மாயுமே.

தெளிவுரை : சிவபெருமான், சினங்கொண்டு வந்த பெரிய மத யானையைச் சீறி அழித்த சிங்க ஏறு போன்றவர்; வானவர்களால் ஏத்தப்படுபவர்; உறுதியான மதில் கொண்ட நாகைக் காரோணத்தில் வீற்றிருப்பவர். அப்பெருமானை மனத்தில் இருத்தி ஏத்தும் அடியவர்களின் வினை யாவும் மாயும்.

827. அந்தமில் புகழ் ஆயிழை யார்பணிந்து
எந்தை ஈசன்என்று ஏத்தும் இறைவனைக்
கந்த வார்பொழில் நாகைக்கா ரோணனைச்
சிந்தை செய்யக் கெடுந்துயர் திண்ணமே.

தெளிவுரை : அந்தமில்லாப் புகழ் மேவும் உமாதேவியார் பணிந்து ஏத்தும் எந்தை சிவபெருமான், நறுமணம் கமழும் பொழில் சூழ்ந்த நாகையில் திகழும் காரோணத்தில் வீற்றிருப்பவர். அப்பரமனைச் சிந்தித்து ஏத்தத் துயர் தீருவது உறுதி.

828. கருவ னைக்கடல் நாகைக்கா ரோணனை
இருவ ருக்கறி வொண்ணா இறைவனை
ஒருவ னைத்தொழத் தீவினை தீருமே.

தெளிவுறை : சிவபெருமான், யாவற்றுக்கும் மூலகாரணமாகி நாகைக் காரோணத்தில் விளங்குபவர்; திருமால் பிரமன் ஆகிய இருவருக்கும் அறிவரியவர்; நல்லுணர்வு நீங்கிய முப்புர அசுரர்களின் புரங்களை எரித்தவர். அப்பரமனைத் தொழத் தீவினை தீரும்.

829. கடல்கழிதழி நாகைக் காரோணன்றன்
வடவரை எடுத்து ஆர்த்த அரக்கனை
அடர வூன்றிய பாதம் அணைதரத்
தொடர அஞ்சும் துயக்கறும் காலனே.

தெளிவுரை : உப்பங்கழிகள் மேவும் நாகையில் விளங்கும் காரோணத்தில் வீற்றிருக்கும் ஈசனின் கயிலை மலையை எடுத்த இராவணனை அடர்த்து, ஊன்றிய திருவடியைச் சாரக் காலன் தொடர்வதற்கு அஞ்சி விலகிச் செல்வான். இது ஈசனடியார்கள்பால் இயமன் அஞ்ச, விலகுவான் என ஓதப் பெற்றது.

திருச்சிற்றம்பலம்

84. மேலைத் திருக்காட்டுப்பள்ளி (அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், திருக்காட்டுப்பள்ளி, தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

830. மாட்டுப் பள்ளி மகிழ்ந்துறை வீர்க்கெலாம்
கேட்டுப் பள்ளிகண் டீர்கெடு வீர்இது
ஓட்டுப் பள்ளிவிட்டு ஓடல் உறாமுனம்
காட்டுப் பள்ளியு ளான்கழல் சேர்மினே.

தெளிவுரை : செல்வம் பெருகும் வாழ்க்கையில் மகிழ்ந்து இருப்பவர்களே ! உண்மையில் இது, உயர்வைத் தருவது அல்ல. கேட்டினைத் தரும் எனக் காண்பீர். இவ்வுடம்பு ஓட்டை உடையது. இதிலிருந்து உயிரானது பிரிவதன் முன்பாகத் திருக்காட்டுப்பள்ளியில் வீற்றிருக்கும் ஈசனின் கழலை ஏத்தி உய்வீராக.

831. மாட்டைத் தேடி மகிழ்ந்து நீர்நும்முளே
நாட்டுப் பொய்யெலாம் பேசிடும் நாணிலீர்
கூட்டை விட்டுயிர் போவதன் முன்னமே
காட்டுப் பள்ளியு ளான்கழல் சேர்மினே.

தெளிவுரை : செல்வப் பெருக்கினைத் தேடி, அதன் பணியில் மகிழ்ச்சி கொண்டு, உள்ளத்தில் பொய்மையுடன் மேவுபவர்களே ! நாணவும் கொள்ளீர் ! இவ்வுடம்பை விட்டு உயிரானது பிரிந்து செல்வதன் முன்னம், காட்டுப்பள்ளியில் வீற்றிருக்கும் ஈசனின் கழலைப் பணிந்து ஏத்தி உய்வீராக.

832. தேனை வென்ற சொல்லாளொடு செல்வமும்
ஊனை விட்டுஉயிர் போவதன் முன்னமே
கான வேடர் கருதும் காட்டுப் பள்ளி
ஞான நாயக னைச்சென்று நண்ணுமே.

தெளிவுரை : காமத்தின் வயத்தராகித் தேனினும் இனிய சொல் பகரும் மங்கையர்பால் நயத்தலும், செல்வம் பேணுதலும், நற்கதிக்கு உரிய சாதனம் ஆகாது. ஊனை விட்டு உயிர் பிரிந்து செல்வதன் முன்னம், கானவேடர்கள் கருதி மேவும் காட்டுப் பள்ளியில் வீற்றிருக்கும் ஞான நாயகனாகிய ஈசனை ஏத்தி, வணங்கி, உய்வீராக.

833. அருத்த மும்மனை யாளொடு மக்களும்
பொருத்த மில்லைபொல் லாதது போக்கிடும்
கருத்தன் கண்ணுதல் அண்ணல் காட்டுப்பள்ளித்
திருத்தன் சேவடியைச் சென்று சேர்மினே.

தெளிவுரை : பொருட் செல்வமும், மனைவி, மக்கள் என்னும் பற்றும் பொருத்தம் அற்றது. பொல்லாமையைப் போக்கும் கருத்தனாகிய நெற்றிக் கண்ணுடைய அண்ணல் வீற்றிருக்கும் காட்டுப்பள்ளியை நாடி, அப் பெருமானுடைய திருவடி மலரை ஏத்தி உய்வீராக.

834. சுற்ற மும்துணை யும்மனை வாழ்க்கையும்
அற்ற போதுஅனை யார்அவர் என்றென்றே
கற்ற வர்கள் கருதும் காட்டுப்பள்ளிப்
பெற்றம் ஏறும் பிரான்அடி சேர்மினே.

தெளிவுரை : உலகில் சுற்றம், மனைவி, துணையாக விளங்கும் ஏனையோர் இவ்வுடலை விட்டு உயிர் பிரிகின்றபோது பொருந்திய வகையில் உதவி புரிய இயலாது என்று தேர்ந்து அறிந்த ஞானிகள் ஓம்புகின்ற தலம், காட்டுப்பள்ளியாகும். ஆங்கு இடபத்தின் மீது அமர்ந்து விளங்குகின்ற ஈசனின் திருவடியை ஏத்தி உய்வீராக.

835. அடும்பும் கொன்றையும் வன்னியும் மத்தமும்
துடும்பல் செய்சடைத் தூமணிச் சோதியான்
கடம்பன் தாதை கருதுங் காட்டுப்பள்ளி
உடம்பி னார்க்குஓர் உறுதுணை யாகுமே.

தெளிவுரை : ஈசன், அடும்பு, கொன்றை, வன்னி, ஊமத்தம் ஆகியன நிறைந்த சடைமுடியுடைய தூய சோதி வடிவானவர்; கடம்ப மாலை அணிந்த முருகப் பெருமானின் தந்தையானவர். அப்பெருமான் கருதுகின்ற காட்டுப்பள்ளியை ஏத்தி வழிபடுபவர்களுக்கு, எத்தகைய குறைபாடும் இல்லை. அவ்வடியவர்களுக்கு ஈசன் உறுதுணையாக விளங்குபவர் ஆவார்.

836. மெய்யின் மாசுடை யாருடல் மூடுவார்
பொய்யை மெய்யென்று புக்குடன் வீழன்மின்
கையின் மானுடை யான்காட்டுப் பள்ளியெம்
ஐயன் தன்னடி யேஅடைந்து உய்ம்மினே.

தெளிவுரை : சமணர்தம் பொய்யுரைகளை மெய்யென்று கருதி வினை பெருக்கிப் பாவத்தில் சேராதீர்கள். கையில் மான் ஏந்திய சிவபெருமான், காட்டுப்பள்ளியில் வீற்றிருக்கும் எம் தலைவர். அப் பரமனுடைய திருவடியை ஏத்தி உய்வீராக.

837. வேலைவென்ற கண் ணாரை விரும்பிநீர்
சீலம் கெட்டுத் திகையன்மின் பேதைகாள்
காலையே தொழும் காட்டுப் பள்ளிய்யுறை
நீல கண்டனை நித்தல் நினைமினே.

தெளிவுரை : காம வயத்தராகி, மாதர்பால் மனத்தினைச் செல்லவிட்டுச் சீலம் கெட்டுத் துன்பத்தைக் கொள்ளாதீர். காட்டுப்பள்ளியில் மேவும் ஈசன், நீலகண்டனாக விளங்கி அருள் புரிபவர். அப்பரமனை உரிய காலத்தில் தொழுது, நித்தமும் ஏத்தி நின்று நற்கதி அடைவதற்கு நினைவீராக.

838. இன்று ளார்நாளை இல்லை எனும்பொருள்
ஒன்றும் ஓராது உழிதரும் ஊமர்காள்
அன்று வானவர்க் காக விடம்உண்ட
கண்ட னார்கட்டுப் பள்ளிகண்டு உய்ம்மினே.

தெளிவுரை : இன்று இருப்பவர்கள் நாளை இல்லை என்னும் மெய்ம்மொழியை எண்ணிப் பாராது காலத்தை வீணாக்குபவர்களே ! தேவர்களைக் காக்கும் பொருட்டு ஆலகால விடத்தை உட்கொண்டு, கண்டத்தில் தேக்கி அருள் செய்த சிவபெருமான், காட்டுப்பள்ளியில் வீற்றிருப்பவர். அப்பரமனைத் தரிசித்து ஏத்தி உய்வீராக.

839. எண்ணிலா அரக்கன் மலை யேந்திட
எண்ணி நீண் முடி பத்தும் இறுத்தவன்
கண்ணு ளார்கரு துங்காட்டுப் பள்ளியை
நண்ணு வார்அவர் தம்வினை நாசமே.

தெளிவுரை : இறைவனை ஏத்தி வழிபடும் எண்ணம் இல்லாத இராவணன், கயிலை மலையை ஏத்த, அவனுடைய பத்துத் தலைகளும் நலியுமாறு செய்தவர், சிவபெருமான். அப்பரமனைத் தியானித்து ஞானத்தால் காண்பவர்கள் விளங்கும் காட்டுப் பள்ளியைச் சார்ந்து அன்பர்கள், வினை நீங்கப் பெறுவார்கள்.

திருச்சிற்றம்பலம்

85.  திருச்சிராப்பள்ளி (அருள்மிகு தாயுமானவர் திருக்கோயில், திருச்சி)

திருச்சிற்றம்பலம்

840. மட்டு வார்குழ லாளொடு மால்விடை
இட்ட மாவுகந்து ஏறும் இறைவனார்
கட்டு நீத்தவர்க்கு இன்னரு ளேசெயும்
சிட்டர் போலும் சிராப்பள்ளிச் செல்வரே.

தெளிவுரை : சிவபெருமான், மட்டுவார் குழலி என்னும் திருப்பெயருடைய உமாதேவியோடு இடப வாகனத்தில் உகந்து ஏறும் இறைவன் ஆவார். அப்பரமன், பந்த பாசம் நீங்கிய மெய்யடிவர்களுக்கு இனிய அருளைப் புரிபவர். அவர், சிராப்பள்ளியில் வீற்றிருக்கும் செல்வர்.

841. அரிய யன்தலை வெட்டிவட் டாடினார்
அரிய யன்தொழுது ஏத்தும் அரும்பொருள்
பெரிய வன்சிராப் பள்ளியைப் பேணுவார்
அரிய யன்தொழ அங்கிருப் பார்களே.

தெளிவுரை : ஈசன், அரியவராகிய பிரமனின் ஐந்து தலைகளுள் ஒன்றைக் கொய்தவர்; திருமாலும் நான்முகனும் தொழுது ஏத்த விளங்கும் அரும்பொருளானவர். அப்பரம்பொருள் விளங்கும் சிராப்பள்ளியைப் பேணுபவர்கள், திருமாலும் நான்முகனும் தொழுது ஏத்தும் தன்மையில் உயர்ந்து விளங்குவார்கள்.

842. அரிச்சி ராப்பகல் ஐவரால் ஆட்டுண்டு
சுரிச்சி ராதுநெஞ் சேயொன்று சொல்லக்கேள்
திருச்சி ராப்பள்ளி என்றலும் தீவினை
நரிச்சி ராது நடக்கும் நடக்குமே.

தெளிவுரை : நெஞ்சமே ! ஐம்புலன்கள் கொண்டு மனமானது அரித்துத் துன்புறுத்தலை நீக்குவதற்கு ஒன்று சொல்கின்றேன்; கேட்பாயாக. திருச்சிராப்பள்ளி என்று ஓதுக. தீவினையானது உன்னைத் துன்புறுத்தாது, உன்னை விட்டு விலகும். இத் திருப்பாட்டில், திருச்சிராப்பள்ளி என்பது சிவ மந்திரமாக உபதேசிக்கப்படுதலை ஓர்க.

843. தாயு மாய்எனக் கேதலை கண்ணுமாய்
பேய னேனையும் ஆண்ட பெருந்தகை
தேய நாதன் சிராப்பள்ளி மேவிய
நாய னார்என நம்வினை நாசமே,

தெளிவுரை : சிவபெருமான் தாயும் ஆகி, என்னுடைய தலையாய அறிவுச் சுடராகியவர்; பேயனாகிய அடியவனை ஆட்கொண்ட பெருந்தகை; உலகநாதனாக விளங்குபவர்; சிராப்பள்ளியில் மேவிய நாயகர். அப்பெருமானை நன்மொழிகளால் ஏத்திப் போற்ற நம் வினை யாவும் கெடும்.

திருச்சிற்றம்பலம்

86. திருவாட்போக்கி (அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில், அய்யர் மலை, கரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

844. கால பாசம் பிடித்தெழு தூதுவர்
பால கர்விருத் தர்பழை யார்எனார்
ஆல நீழல் அமர்ந்த வாட் போக்கியார்
சீலம் ஆர்ந்தவர் செம்மையுள் நிற்பரே.

தெளிவுரை : கால தூதுவர்கள், பாசக் கயிற்றை வீசி உயிரைக் கவரும்போது, பாலர்கள் என்றும், முதியவர்கள் என்றும் நல்லறச் செயல்களில் பழகியவர்கள் என்றும் பார்க்கமாட்டார்கள். ஆனால், ஆலமரத்தின் நிழலின்கீழ் அமர்ந்து அறப்பொருள் உண்மைகளை உபதேசித்த வாட்போக்கி என்னும் தலத்தில் மேவும் சிவபெருமானை மனத்தால் ஏத்திய சீலம் மிக்க அடியவர்கள், அத்தகைய கால தூதர்களால் கவரப் படாதவர்களாய்ச் செம்மையுடன் விளங்கிச் சிவகதியை பெறுவார்கள்.

845. விடுத்த தூதுவர் வந்து வினைக்குழிப்
படுத்த போது பயனிலை பாவிகாள்
அடுத்த கின்னரம் கேட்கும் வாட்போக்கியை
எடுத்தும் ஏத்தியும் இன்புறு மின்களே.

தெளிவுரை : நன்னெறிக்கண் சாராது பாவத்தைத் தரும் புன்செயலைப் புரிந்தவர்களே ! காலனுடைய தூதுவர்கள் வினைக்குழியில் தள்ளித் துன்புறுத்தும் போது புலம்பிப் பயன் இல்லை. கின்னரம் என்னும் இசைக் கருவியின் வழி இசை கேட்கும் சிவபெருமான் மேவும் வாட்போக்கியை ஏத்தி, இன்புறுவீராக. இத் தன்மையானது, வினையை நீங்கச் செய்யும் என்பது குறிப்பு.

846. வந்திவ் வாறு வளைத்தெழு தூதுவர்
உந்தி யோடி நரகத்து இடா முனம்
அந்தி யின்னொளி தாங்கும் வாட்போக்கியார்
சிந்தி யாஎழுவார் வினை தீர்ப்பரே.

தெளிவுரை : கால தூதுவர்கள் உயிர்களை வளைத்துப் பற்றி இழுத்துத் துன்பம் விளைவிக்கும் நரகத்தில் இடுவதன் முன்னர் செவ் வானத்தின் ஒளி போன்ற வண்ணம் உடைய வாட்போக்கியில் மேவும் சிவபெருமானைச் சிந்திப்பவர்களுக்கு எத்தகைய தீய வினையும் இல்லை.

847. கூற்றம் வந்து குமைத்திடும் போதினால்
தேற்றம் வந்து தெளிவுறல் ஆகுமே
ஆற்ற வும்அருள் செய்யும்வாட் போக்கிபால்
ஏற்று மின்விளக்கை இருள் நீங்கவே.

தெளிவுரை : கூற்றுவன் வந்து உயிரைக் கவர்ந்து துன்புறுத்தும்போது, தெளிவு பெற்று உய்வு பெறுதல் என்பது கூடுமோ ? அத்தகைய தன்மையானது நேரும் முன்னர், நன்கு அருள் புரியும் கருணை வள்ளலாகிய வாட்போக்கியில் மேவும் பெருமானை ஏத்தி வணங்குவீராக ! உமது அறியாமையாகிய இருள் விலக, ஞான தீபத்தை ஏற்றுவீராக.

848. மாறு கொண்டு வளைத்தெழு தூதுவர்
வேறு வேறு படுப்பதன் முன்னமே
ஆறு செஞ்சடை வைத்தவாட் போக்கியார்க்கு
ஊறி ஊறி உருகும்என் உள்ளமே.

தெளிவுரை : காலதூதுவர்கள், அந்திமக் காலத்தில் காத்திருந்து உயிரைக் கொண்டு சென்று துன்பக் குழியில் அழிப்பதன் முன்னர், கங்கை தரித்த செம்மையான சடைமுடியுடைய, வாட்போக்கியில் மேவும் சிவபெருமானை, என் உள்ளமானது கசிந்து உருகி ஏத்தும்.

849. கானம் ஓடிக் கடிதுஎழு தூதுவர்
தானம் ஓடு தலைபிடி யாமுனம்
ஆனஞ்சு ஆடி உகந்தவாட் போக்கியார்
ஊன மில்லவர்க்கு உண்மையில் நிற்பரே.

தெளிவுரை : பஞ்ச கவ்வியத்தை அபிடேகமாகக் கொள்ளும் வாட்போக்கியில் மேவும் சிவபெருமான், தன்னை வழிபடும் அடியவர்கள், கால தூதர்களால் கொண்டு செல்லப்படுவதன் முன்னர், உடன் துணை நின்று, வினைகளை நீக்கிச் சிவ கதியில் செல்லுமாறு புரிபவர்.

850. பார்த்துப் பாசம் பிடித்தெழு தூதுவர்
கூர்த்த வேலாற் குமைப்பதன் முன்னமே
ஆர்த்த கங்கை அடக்கும் வாட்போக்கியார்
கீர்த்தி மைகள் கிளர்ந்துரை மின்களே.

தெளிவுரை : கூற்றுவனுடைய தூதுவர்கள் பாசத்தை வீசியும், சூலத்தால் துன்புறுத்தியும் வதைப்பதன் முன்னர், ஆர்த்து எழுந்த கங்கையைச் சடை முடியில் அடக்கி மேவிய வாட்போக்கியில் மேவும் ஈசனின் புகழ்களை, ஓதி உரைப்பீர்களாக. அது உம்மை உய்விக்கும்.

851. நாடி வந்து நமன்தமர் நல்லிருள்
கூடி வந்து குமைப்பதன் முன்னமே
ஆட் பாடல் உகந்தவாட் போக்கியை
வாடி யேத்தநம் வாட்டம் தவிருமே.

தெளிவுரை : நமனுடைய தூதுவர்கள் நள்ளிருளில் வந்து உயிரைக் கவர்ந்து துன்புறுத்துவதன் முன்னம், ஆடலும் பாடலும் உகந்த ஈசன் வீற்றிருக்கும் வாட்போக்கியை, விரதம் முதலானவை மேற்கொண்டும், தியானம் செய்தும் ஏத்த, நமது துன்பம் யாவும் கெடும்.

852. கட்ட றுத்துக் கடிதுஎழு தூதுவர்
பொட்ட நூக்கிப் புறப்படா முன்னமே
அட்ட மாமலர் சூடும்வாட் போக்கியார்க்கு
இட்ட மாகி இணையடி யேத்துமே.

தெளிவுரை : கட்டுக்களையும் பந்தங்களையும் அறுத்த கூற்றுவனின் தூதுவர்கள், பொட்டென்று எழுந்து விரைவில் உயிரைக் கவருவதன் முன்னம், அட்ட மலர்கள் சூடும் வாட்போக்கியில் மேவும் பரமனை விருப்பத்துடன் ஏத்தி, இணையடியை வணங்குவீராக. இது உய்வைத் தரும்.

853. இரக்க முன்னறி யாதுஎழு தூதுவர்
பரக்க ழித்தவர் பற்றுதன் முன்னமே
அரக்க னுக்கருள் செய்தவாட் போக்கியார்
கரப்ப துங்கரப் பார்அவர்தங் கட்கே.

தெளிவுரை : இரக்கம் இன்னது என அறியாத தன்மையுடையவர்களாகிய கூற்றுவனின் தூதர்கள், உயிரைப் பரக்கக் கவர்ந்து சென்று துன்புறுத்துவதன் முன்னமே, இராவணனுக்கு அருள் புரிந்த வாட்போக்கி இறைவன், தமது அடியவர்களை அத்தகைய இரக்கமற்ற கால தூதர்களுக்குத் தெரியாமல் மறைத்தும் காத்தருள்பவர்.

திருச்சிற்றம்பலம்

87. திருமணஞ்சசேரி (அருள்மிகு உத்வாகநாதர் சுவாமி திருக்கோயில், திருமணஞ்சேரி, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

854. பட்ட நெற்றியர் பாய்புலித் தோலினர்
நட்ட நின்று நவில்பவர் நாடொறும்
சிட்டர் வாழ்திரு வார்மணஞ் சேரிஎம்
வட்ட வார்சடை யார்வண்ணம் வாழ்த்துமே.

தெளிவுரை : சிவபெருமான் நெற்றியில் பட்டம் அணிந்து விளங்குபவர்; புலித்தோலை உடுத்தியவர்; நின்று மேவித் திருநடனம் புரிபவர்; முனிவர்கள் நாள்தோறும் ஏத்தி வழிபடுகின்ற செல்வம் திகழும் திருமணஞ்சேரியில், நீண்ட சடையைக் கொண்டை போல் சேர்த்து அழகு பொலிய விளங்குபவர். அப்பெருமானுடைய அருளாகிய எழில் வண்ணத்தை வாழ்த்துவோமாக.

855. துன்னு வார்குழ லாள்உமை யாளொடும்
பின்னு வார்சடை மேற்பிறை வைத்தவர்
மன்னு வார்மணஞ் சேரி மருந்தினை
உன்னு வார்வினை யாயின ஓயுமே.

தெளிவுரை : பின்னிய நீண்ட கூந்தலையுடைய உமாதேவியாரைத் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு விளங்கும் சிவபெருமான், சடைமுடியில் மேல் பிறைச் சந்திரனைச் சூடியவர். அப்பெருமான் சிறப்புடன் திகழும் திருமணஞ்சேரியில் அமுதமாகத் திகழ்பவர். அவரை நினைத்து ஏத்தும் அடியவர்களுடைய வினை யாவும் தீரும்.

856. புற்றில் ஆடரவு ஆட்டும் புனிதனார்
தெற்றி னார்புரந் தீயெழச் செற்றவர்
சுற்றி னார்மதில் சூழ்மணஞ் சேரியார்
பற்றி னார்அவர் பற்றவர் காண்மினே.

தெளிவுரை : புற்றில் வாழும் அரவத்தை ஆபரணமாக அணிந்து ஆட்டுகின்ற புனிதராகிய சிவபெருமான், மூன்று அசுரர்களின் கோட்டைகளை எரித்துச் சாம்பலாக்கி அழித்தவர். அப்பெருமான், நாற்புரமும் மதில் சூழ்ந்த திருமணஞ்சேரியில் வீற்றிருப்பவர். அவர் தன்னை உள்ளத்தில் பதித்துப் பற்றாகி மேவும் அடியவர்களைப் பற்றி இருந்து அருள் செய்யும் பெருமான் ஆவார். இது, ஈசன் தன் அடியவர்களைக் காத்தருளும் பாங்கினை உணர்த்துவதாயிற்று.

857. மத்த மும்மதியும் வளர் செஞ்சடை
முத்தர் முக்கணர் மூசுஅர வம்அணி
சித்தர் தீவணர் சீர்மணஞ் சேரிஎம்
வித்தர் தாம்விருப் பாரை விருப்பரே.

தெளிவுரை : சிவபெருமான், ஊமத்த மலரும், பிறைச் சந்திரனும் செஞ்சடையில் தரித்தவர்; உலகப் பற்று நீங்கிய மெய்யடியவர்களுக்கு முத்திப் பேற்றினை அளிப்பவர்; சூரியனை வலக்கண்ணாகவும், சந்திரனை இடக்கண்ணாகவும், அக்கினியை நெற்றிக் கண்ணாகவும் கொண்ட முக்கண்ணர்; உடலில் தவழுமாறு பாம்பை அணிந்துள்ளவர்; சித்தராகத் திகழ்பவர்; நெருப்புப் போன்ற சிவந்தமேனி வண்ணம் உடையவர். அப்பெருமான், சீர் மிகுந்த திருமணஞ்சேரியில், அறிவின் களஞ்சியமாக விளங்குபவராகித் தம்மை விரும்பும் அடியவர்களுக்கு விரும்பும் தலைவராகி அருள் புரிபவர்.

858. துள்ளு மான்மறி தூமழு வாளினர்
வெள்ள நீர்கரந் தார்சடை மேலவர்
அள்ளல் ஆர்வயல் சூழ்மணஞ் சேரிஎம்
வள்ள லார்கழல் வாழ்த்தல்வாழ் வுஆவதே.

தெளிவுரை : சிவபெருமான், மான் கன்றும் மழுப்படையும் கையில் ஏந்தியவர்; கங்கையைச் சடை முடியில் கொண்டு விளங்குபவர். அப்பெருமான், சேறு நன்கு விளங்கும் வயல்வளம் சூழ்ந்த திருமணஞ்சேரியில் வீற்றிருக்கும் வள்ளல். அவர் தம் திருக்கழலை வாழ்த்துதலே, இப் பிறவியில் நன்கு வாழும் வாழ்க்கை என்பதாகும்.

859. நீர் பரந்த நிமிர்புன் சடையின்மேல்
ஊர் பரந்த உரகம் அணிபவர்
சீர் பரந்த திருமணஞ் சேரியார்
ஏர் பரந்தங் குஇலங்குசூ லத்தரே.

தெளிவுரை : சிவபெருமான், கங்கையைச் சடைமுடியில் கொண்டு ஊர்ந்து செல்லும் பாம்பை ஆபரணமாகத் திருமேனியில் அணிந்துள்ளவர். அவர், சிறப்பு மிக்க திருமணஞ் சேரியில் பெருமையுடன் சூலப்படை யுடையவராய் விளங்கும் ஈசன் ஆவார்.

860. சுண்ணத் தர்சுடு நீறுகந்து ஆடலார்
விண்ணத் தம்மதி சூடிய வேதியர்
மண்ணத் தம்முழவு ஆர்மணஞ் சேரியார்
வண்ணத் தம்முலை யாள்உமை வண்ணரே.

தெளிவுரை : சிவபெருமான், திருவெண்ணீற்றைத் திருமேனியில் பூசி விளங்குபவர்; சாம்பலை உகந்து ஆட வல்லவர்; விண்ணில் தவழும் சந்திரனைச் சூடியவர்; வேதங்களை விரித்து ஓதியவர். பூவுலகத்தில் முழவு ஒலிக்கும் திருமணஞ்சேரியில் வீற்றிருக்கும் அப்பெருமான் வண்ணம் திகழும் உமாதேவியாரை உடனாகக் கொண்டு வீற்றிருப்பவர் ஆவார்.

861. துன்ன ஆடையர் தூமழு வாளினர்
பின்னு செஞ்சடை மேற்பிறை வைத்தவர்
மன்னு வார்பொழில் சூழ்மணஞ் சேரிஎம்
மன்ன னார்கழலே தொழ வாயக்குமே.

தெளிவுரை : சிவபெருமான், தைத்த கோவணத்தை ஆடையாக உடுத்தியவர்; மழுப்படையுடையவர்; பின்னி அழகுபடுத்திய சிவந்த சடைமுடியின்மீது, பிறைச் சந்திரனை வைத்தவர்; சிறப்பான பொழில் சூழ்ந்த திருமணஞ்சேரியில் விளங்கும் பெருமைக்கு உரியவர். அப்பரமனின் திருக்கழலைத் தொழுது ஏத்த எனக்குப் பேறு கிடைத்தது.

862. சித்தர் தேவர்கள் மாலொடு நான்முகன்
பத்தர் சேர்அமண் கையர் புகழவே
மத்தர் தாம்அறியார் மணஞ் சேரிஎம்
அத்த னார்அடியார்க்கு அல்லல் இல்லையே.

தெளிவுரை : சித்தர்கள், தேவர்கள், திருமால் மற்றும் நான்முகன் ஆகியவர்களுடன் புத்தரும் சமணரும் புகழ்ந்து ஏத்தவும் அத்தகையோர்க்கு, அறிய முடியாதவராகித் திருமணஞ்சேரியில் வீற்றிருப்பவர் ஈசன். அன்புக்குரியவராகிய அப்பரமனின் அடியவர்களுக்கு, அல்லல் என்பது இல்லை.

863. கடுத்த மேனி யரக்கன் கயிலையே
எடுத்த வன்னெடு நீள்முடி பத்திறப்
படுத்த லும்மணஞ் சேரி யருள்எனக்
கொடுத்த னன்கொற்ற வாளொடு நாமமே.

தெளிவுரை : இராவணன் கயிலையை எடுக்க, அவனுடைய நீண்ட முடிகள் பத்தும் நலியுமாறு அடர்த்து மேவிய ஈசனை, அவ்வரக்கன், திருமணஞ்சேரியின் நாதனே அருள்வீராக என்று ஏத்த, அவர் வாளும் அவ்வரக்கனுக்கு இராவணன் என்னும் பெயர் நிலைக்குமாறு அருள் செய்தவர்.

திருச்சிற்றம்பலம்

88. திருமருகல் (அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில், திருமருகல், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

864. பெருக லாம்தவம் பேதைமை தீரலாம்
திருக லாகிய சிந்தை திருத்தலாம்
பருக லாம்பர மாயதோர் ஆனந்தம்
மருக லான்அடி வாழ்த்தி வணங்கவே.

தெளிவுரை : மருகல் என்னும் தலத்தில் மேவும் சிவபெருமானுடைய திருவடியைப் போற்றி வணங்கத் தவப்பயன் பெருகும், பேதைமையான அஞ்ஞானம் நீங்கும்; வினைப்பயன் வழி மேவி, மாறுபட்டுத் திரியும் சிந்தையானது செம்மையுறும்; பரம்பொருளைத் தியானம் செய்து வாய்க்கும் சிவானந்தத் தேனைப் பருகுமாறு செய்து, பேரானந்தத்தை நல்கும்.

865. பாடங் கொள்பனுவல் திறம் கற்றுப்போய்
நாடங் குள்ளன தட்டிய நாணிலீர்
மாடஞ் சூழ்மரு கற்பெரு மான்திரு
வேடங் கைதொழ வீடெளி தாகுமே.

தெளிவுரை : நூல்களைக் கற்றுத் துறை போகியவர்களாக இருக்கின்றோம் என்று பல நாடுகளுக்கும் சென்று வருபவர்களே ! அக் கல்வியானது நிலைபேற்றுக்கு உரியதாகாது. மாட மாளிகைகள் சூழ்ந்த மருகலில் வீற்றிருக்கும் ஈசனின் திருக்கோலக் காட்சியைக் கைதொழுது ஏத்த, முத்தில் பேறு எளிதாக வாய்க்கும்.

866. சினத்தி னால்வரும் செய்தொழி லாம்அவை
அனைத்தும் நீங்கிநின்று ஆதர வாய்மிக
மனத்தி னால்மரு கற்பெரு மான்திறம்
நினைப்பி னார்க்கு இல்லைநீள்நில வாழ்க்கையே.

தெளிவுரை : நெஞ்சமே ! சினம் கொண்டு அதன் தன்மையால் பிறர்க்குச் செய்கின்ற இடையூரும் மற்ற செயல்களும் தீமையையே விளைவிக்கும். அதனைத் தவிர்க்க அன்புடையவனாய் மேவி மருகலில் வீற்றிருக்கும் சிவபெருமானுடைய அரிய புகழ்களை ஏத்தி உரைப்பீராக அது, இவ்வுலகின்கண் பிறாவமையாகிய பெருஞ் செல்வத்தை அளிக்கும். இல்லை நீள் நிலவாழ்க்கை; இவ்வுலகத்தில் வினைக்கீடாகப் பிறவி கொண்டு, அத்தகைய பிறவியைப் பெருக்கும் வகையில் சினமானது, வினையைப் பெருக்குகின்றது என்பதனை, நீள் நில வாழ்க்கை என இழிவுச் சிறப்பாக ஓதப் பெற்றது. இத் திருப்பாட்டானது, அன்பே சிவம் என்னும் நெறியை வலியுறுத்தும் பாங்காயிற்று.

867. ஓது பைங்கிளிக்கு ஒண்பால் அமுதூட்டிப்
பாது காத்துப் பலபல கற்பித்து
மாது தான்மரு கற்பெரு மானுக்குத்
தூது சொல்ல விடத்தான் தொடங்குமே.

தெளிவுரை : இந்த நங்கையானவள், சொன்னதைத் திருப்பி ஓதும் பைங்கிளிக்குச் சுவையான பாலமுது ஊட்டி வளர்த்துப் பலவாறாகிய பாடங்களைக் கற்பித்துத் தனது விருப்பங்களைத் தெரிவிக்கும் விதத்தில் மருகலில் மேவும் ஈசன்பால் தூது அனுப்பத் தொடங்கினாள். இது, ஈசன்பால் கொண்டுள்ள அன்பினை உரைக்கும் தன்மையில், அகத்துறையில் ஓதப் பெற்றது.

868. இன்ன வாறுஎன்பது உண்டு அறியேன்இன்று
துன்னு கைவளை சோரக் கண் ணீர்மல்கும்
மன்னு தென்மரு கற்பெரு மான்திறம்
உன்னி ஒண்கொடி உள்ளம் உருகுமே.

தெளிவுரை : இந்த நங்கை, தன் கைவளையைச் சோரவிட்டுக் கண்ணீர் மல்க, மருகலில் மேவும் ஈசனையே நினைத்து வாடுகின்றாள். அப் பரமனுடைய அருள் திறத்தை எண்ணி, இவள் உள்ளம் உருகுகின்றாள். இதற்கு என் செய்வது ! இத் திருப்பாட்டானது, ஆன்மாவானது ஈசன்பால் நெகிழ்ந்து உருகிப் பேரானந்தம் கொள்ளும் தன்மையை அகத்துறையில் வாயிலாகச் சுட்டப் பெற்றது.

869. சங்கு சோரக் கலையும் சரியவே
மங்கை தான்மரு கற்பெரு மான்வரும்
அங்க வீதி அருகு அமை யாநிற்கும்
நங்கைமீர் இதற்கு என்செய்கேன் நாளுமே.

தெளிவுரை : நங்கையர்களே ! இந்தப்பெண் தன் கை வளையல்களைச் சோர விடுகின்றாள்; மேலாடை சரிந்து விழுதலையும் கவனித்தாளில்லை; மருகற் பெருமான் திருவீதியுலா வரும் வீதியின் அருகில் சென்று, நாள்தோறும் நிற்கின்றாள். இதற்கு நான் என் செய்வேன் !

870. காட்சிப் பெற்றிலள் ஆகிலும் காதலே
மீட்சி ஒன்றிஅறி யாது மிகுவதே
மாட்சி யார்மரு கற்பெரு மானுக்குத்
தாழ்ச்சி சால வுண்டாகும்என் தையலே.

தெளிவுரை : மருகலில் மேவும் பெருமான் மிகவும் மாட்சிமையுடையவர். அப்பெருமானிடம் அன்பு பெருகிய இப்பெண், அவரைத் தரிசிக்கும் பேறு வாய்த்திலள். ஆயினும், அப்பெருமானையே எண்ணி ஏங்கும் இவள், மீண்டும் தன்னுடைய உணர்வைப் பெறுகின்ற வழியை அறியாது திகைக்கின்றாள். இதற்கு என் செய்வது ?

871. நீடு நெஞ்சுள் நினைந்து கண்ணீர்மல்கும்
ஓடு மாலினோடு ஒண்கொடி மாதராள்
மாடம் நீள்மரு கற்பெரு மான்வரில்
கூடு நீயென்று கூடல் இழைக்குமே.

தெளிவுரை : இப்பெண், மருகல் பெருமானை நெடிது நினைந்து, கண்ணீர் பெருக மயங்கியும், சோர்ந்தும் ஆயினள். அத்தன்மையில் தன் தலைவனின் வருகையானது அமையுமா எனத் தன் தோழியின்பால் கூடல் இழைக்குமாறு கூறத் தொடங்கினாள்.

872. கந்தவார் குழல் காட்டிலள் காரிகை
அந்தி மால்விடை யோடும்அன் பாய்மிக
வந்தி டாய்மரு கற்பெரு மான்என்று
சிந்தை செய்து திகைத்திடும் காண்மினே.

தெளிவுரை : இப்பெண், நறுமணம் கமழும் கூந்தலை நன்கு முடித்திலள்; பெருமை மிக்க இடபத்தையுடைய செம்மேனியராகிய மருகற் பெருமானே ! என்பால் வருவீராக என்று, சிந்தை செய்து, ஏத்தித் திகைப் புற்றவளாகி மேவினாள்.

873. ஆதி மாமலை அன்றுஎடுத் தான் இற்றுச்
சோதி என்றலும் தொல்லருள் செய்திடும்
ஆதி யான்மரு கற்பெரு மான்திறம்
ஓதி வாழ்பவர் உம்பர்க்கும் உம்பரே.

தெளிவுரை : ஆதி மாமலையாகிய கயிலையை எடுத்த இராவணன் நலியுமாறு அடர்த்தவர், சிவபெருமான். அஞ்ஞான்று, சோதியே என்று அவ்வரக்கன் அரற்றி ஏத்த, அருள் செய்தவர் மருகலில் மேவும் ஆதிப் பிரான். அப்பெருமானின் திறத்தை ஓதி வாழ்பவர், தேவர்க்கும் மேலானவர் ஆவார்.

திருச்சிற்றம்பலம்

89. பொது - தனித்திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

874. ஒன்று வெண்பிறைக் கண்ணியோர் கோவணம்
ஒன்று கீளுமை யோடும் உடுத்தது
ஒன்று வெண்தலை யேந்திஎம் உள்ளத்தே
ஒன்றி நின்றங்கு உறையும் ஒருவனே.

தெளிவுரை : சிவபெருமான், ஒற்றைப் பிறைச் சந்திரனைத் தரித்துள்ளவர். அவர் உமா தேவியோடு மேவியும் அணிந்து விளங்குவது கோவணம் ஒன்று ஆகும். அப்பெருமான் தனது கையில் ஏந்திய கபாலம் ஒன்றே. அவர் உள்ளம் ஒன்ற ஏத்தும் அடியவரின் மனத்தில் மேவி நிற்பவர். அவர் ஒருவரே ஆவார்.

875. இரண்டு மாம்அவர்க்கு உள்ளன செய்தொழில்
இரண்டு மாம்அவர்க்கு உள்ளன கோலங்கள்
இரண்டும் இல்இள மான்எமை யாள்உகந்து
இரண்டு போதும்என் சிந்தையுள் வைகுமே.

தெளிவுரை : சிவபெருமானுக்கு ஆற்றும் தொழில்கள் இரண்டு. அவை பந்தத்தில் பக்குவம் இல்லாத உயிர்களைச் செலுத்திப் பிறவி கொள்ளச் செய்தலும், வீட்டு நெறியாகிய முத்தி இன்பத்தில் பக்குவப்பட்ட ஆன்மாக்களை அடைவித்தலும் ஆகும். சிவபெருமான் சக்தியும் சிவமுமாக இரண்டு திருக்கோலத்தில் உள்ளவர். அப்பரமனுக்கு இல்லாள் எனச் சொல்லத் தக்கவர்கள், உமாதேவியும் கங்கா தேவியும் ஆகிய இருவர். எம்மை ஆட்கொண்டு உகந்து அருள் புரிகின்ற அப்பரமன். பகல் இரவு ஆகிய இருபொழுதுகளிலும், என் சிந்தையுள் விளங்குபவர் ஆவார்.

876. மூன்று மூர்த்தியுள் நின்றிய லும்தொழில்
மூன்றும் ஆயின மூவிலைச் சூலத்தன்
மூன்று கண்ணினன் தீத்தொழில் மூன்றினன்
மூன்று போதும்என் சிந்தையுள் மூழ்குமே.

தெளிவுரை : சிவபெருமான், மும்மூர்த்தியுள் விளங்கி அத்தொழிலை இயங்கச் செய்பவர்; மூன்று இலைகளையுடைய சூலத்தையுடையவர்; சூரியன், சந்திரன், அக்கினி ஆகியோரை முக்கண்ணாக உடையவர்; மூவகைத் தீயான ஆகவனீயம், காருகப்பத்தியம், தட்சிணாக்கினி எனப்படுபவர். அத்தகைய பெருமான், மூன்று சந்திகளாகிய காலை, பகல், மாலை ஆகிய காலங்களில் என் சிந்தையில் திகழ்பவர்.

877. நாலின் மேன்முகம் செற்றது மன்னிழல்
நாலு நன்குணர்ந் திட்டதும் இன்பமாம்
நாலு வேதம் சரித்தது நன்னெறி
நாலு போல்எம் அகத்துறை நாதனே.

தெளிவுரை : சிவபெருமான், பிரமனின் நான்கு திருமுகங்களுக்கு மேலாக இருந்த ஒரு முகத்தைக் கொய்தவர்; கல்லால மர நிழலின் கண்மேவிச் சனகாதி முனிவர்களாகிய நால்வருக்கு, அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய நாற்பொருளை நன்கு உபதேசித்தவர்; பேரின்பத்திற்கு வாயில் போன்று விளங்கும், ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய சரியை, கிரியை, யோகம் ஞானம் எனப்படுகின்ற நான்கு நெறிகளையும் காட்டி, என் உள்ளத்தில் மேவும் நாதன் ஆயினர்.

878. அஞ்சும் அஞ்சுமோர் ஆடி அரைமிசை
அஞ்சு போல்அரை ஆர்த்ததின் தத்துவம்
அஞ்சும் அஞ்சுமோர் ஓரஞ்சும் ஆயவன்
அஞ்சு மாம்எம் அகத்துறை ஆதியே.

தெளிவுரை : சிவபெருமான், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என ஐம் பூதங்களும் ஆகியவர்; பஞ்ச கவ்வியத்தை அபிடேகப் பொருளாக ஏற்றுப் பூசனை கொண்டு உகப்பவர்; அரையில் ஐந்தலை நாகத்தைக் கட்டி விளங்குபவர். அப்பெருமான், ஞானேந்திரியங்களான, செவி, மெய், கண், நாக்கு, நாசி என ஐந்தாகவும், அவற்றின் தன் மாத்திரைகளாகிய சப்தம், பரிசம், ரூபம், சுவை, மணம் என ஐந்தாகவும், குன்மேந்திரியங்களாகிய வாக்கு, பாதம், பாணி, பாயுரு, பெருமான், சுத்த தத்துவமாகிய சுத்தவித்தை, மகேஸ்வரம், சதாசிவம், சக்தி, சிவம் என ஐந்துமாகி கொல்லாமை அருள், ஐம்பொறியடக்கல், பொறை, தவம், வாய்மை, அன்பு, அறிவு ஆகியவற்றால் ஏத்தி என்றும் இதயத் தாமரையில் விளங்கும் ஆதியாவர்.

879. ஆறு கால்வண்டு மூசிய கொன்றையன்
ஆறு சூடிய அண்ட முதல்வனார்
ஆறு கூர்மையர்க்கு அச்சம யப்பொருள்
ஆறு போல்எம் அகத்துறை ஆதியே.

தெளிவுரை : சிவபெருமான், ஆறு கால்களையுடைய வண்டு ஒலித்துத் தேன் நுகரும் கொன்றை மலரைச் சூடி விளங்குபவர்; கங்கையைச் சடை முடியில் தரித்துத் தேவர்களின் தலைவராய்த் திகழ்பவர். அப்பெருமான், அறுவகைச் சமயத்தினர்க்கும் அச்சமயத்தின் பொருளாகவும், அவ்வவற்றின் வழிமுறையாகவும் விளங்கி, என் அகந்தனில் வீற்றிருப்பவர் ஆவார்.

880. ஏழு மாமலை யேழ்பொழில் சூழ்கடல்
ஏழு போற்றும் இராவணன் கைந்நரம்பு
ஏழு கேட்டருள் செய்தவன் பொற்கழல்
ஏழும் சூழ்அடி யேன் மனத்து உள்ளவே.

தெளிவுரை : சிவபெருமான், ஏழு பெருமைமிக்க மலைகளாகவும், ஏழு பொழில் சூழ்ந்த கடலாகவும் விளங்குபவர்; ஏழீசையால் இராவணன், தனது கை நரம்புகளை யாழாகக் கூட்டி ஏத்த, அதனை ஏற்று அருள் செய்தவர். ஏழ் வகையான பிறப்புக்களால் சூழப் பெற்ற அடியவனின் மனத்துள் அப்பெருமான் வீற்றிருப்பவர்.

881. எட்டு மூர்த்தியாய் நின்றிய லுந்தொழில்
எட்டு வான் குணத்து ஈசன்எம் மான்றனை
எட்டு மூர்த்தியும் எம்இறை எம்முளே
எட்டு மூர்த்தியும் எம்முள் ஒடுங்குமே.

தெளிவுரை : சிவபெருமான், அட்ட மூர்த்தமாய் விளங்கியும், அதற்குரிய தொழிலை ஆற்றியும், பெருமையுடைய எண் குணங்களையுடையவராய் விளங்கும் எம் அன்புக்குரிய தலைவர். அவர் எம் இறைவன். அப்பெருமான், என் உள்ளத்தில் எடக்ககூடியவராய் ஒடுங்கி, ஒப்பற்றவராய் விளங்குபவர் ஆவார்.

882. ஒன்பது ஒன்பதி யானை யொளிகளிறு
ஒன்றபது ஒன்பது பல்கணம் குழவே
ஒன்ப தாம்அவை தீத்தொழிலின் னுரை
ஒன்பது ஒத்துநின்று என்னுள் ஒடுங்குமே.

தெளிவுரை : சிவபெருமான், நவக்கிரகங்கள் ஒன்பதாகும் பதியாக விளங்குபவர்; ஒளிரும் களிறு அன்ன ஆற்றலையுடைய பதினெட்டு கணங்கள் சூழ விளங்குபவர். அப்பெருமான், ஒன்பது துவராங்களை உடைய இவ்வுடலின் கண் தீமை ஏதும் அணுகாதவாறு காத்து இனிய தன்மையில் திகழ்பவர். அவர், என்னுள்ளத்தின் உள்ளே விளங்கி, ஒன்பது என்று விளங்கும் தனித் தன்மையுடைய என்னைப் போன்று, என்னுள் ஒடுக்கம் கொண்டு விளங்குபவராவார்,

883. பத்த நூறவன் வெங்கண்வெள் ளேற்றண்ணல்
பத்து நூறவன் பன்சடை தோளிமிசை
பத்து யாம்இலம் ஆதலின் ஞானத்தால்
பத்தி யானிடம் கொண்டது பள்ளியே.

தெளிவுரை : சிவபெருமான், நூற்றுக்கணக்காக விரிந்து எல்லாப் பொருள்களிலும் வியாபித்து இருப்பவர்; சினம் மல்கிய வெள்ளை இடபத்தை வாகனமாக உடைய அண்ணல்; பலவாறு விரிந்த சடை முடியானது தோளின் மீது திகழ விளங்குபவர். பக்தியுடைய அன்பர்களின் மனத்தினை இல்லமாகக் கொண்டு வீற்றிருக்கும் அப்பரமனை, அத்தகைய ஞானத்தால் உணர்ந்து, அன்பர்கள் ஏத்தி மகிழ்வார்களாக.

திருச்சிற்றம்பலம்

90. பொது - தனித்திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

884. மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கை போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே.

தெளிவுரை : சிவபெருமானுடைய இணை மலர்களாகிய திருவடியின் ஒளியானது, குற்றமில்லாத வீணையின் நாதமாகச் செவிக்கு இனிமை தருவதும், மாலை நேரத்தில் விளங்கும் முழு நிலவினைப் போன்று கண்ணுக்கு இனிமை அளிப்பதும், வீசுகின்ற தென்றல் காற்று போன்ற நாசிக்குப் புத்துணர்வை நல்குவதும்; இளவேனில் போன்று மெய்யினுக்கு இளகிய வெப்ப உணர்வைத் தருவதும், வண்டுகள் ஒலிக்கும் நறுமணம் கமழும் பொய்கையில் விளங்கும் நீரின் குளிர்ந்த தன்மை போன்று வாய்க்குச் சுவைதருவதும், ஆகியவாறு விளங்கிற்று.

885. நமச்சி வாயவே ஞானமும் கல்வியும்
நமச்சி வாயவே நானறி விச்சையும்
நமச்சி வாயவே நாநவின்று ஏத்துமே
நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே.

தெளிவுரை : நமச்சிவாய என்னும் திருவைந்தெழுத்தானது, இறைவனுடைய திருவடி மலராகத் திகழ்ந்து பரஞானம், அபரஞானம் ஆகியவற்றை நல்கும் சிறப்புடையதாகும். நமச்சிவாய என்னும் அத் திருவைந்தெழுத்தானது, நான் அறிந்ததும், கற்றதும் ஆகிய கல்வியில் விளங்கும் சிறப்பு ஆகும். நமச்சிவாய என்னும் திருவைந்தெழுத்தை, நாவானது இடைவிடாது நவின்று ஏத்தியும், உள்ளமானது தியானித்தும் இருக்கும். நமச்சிவாய என்னும் திருவைந்தெழுத்தானது உலகில் நலம் தரக்கூடிய நல்ல நெறியைக் காட்டும்.

886. ஆளா காரஆளானாரை அடைந்து உய்யார்
மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்
தோளா தசுரை யோதொழும்பர் செவி
வாளா மாய்ந்துமண் ணாகிக் கழிவரே.

தெளிவுரை : சிலர், இறைவனுடைய திருவடிக்கு ஆளாகமாட்டார்கள்; இறைவனுடைய திருத்தொண்டர்களை அடைந்து அவர்கள்பால் அறிவுரை பெற்று உய்யும் தன்மையைக் கொள்ள மாட்டார்கள். இத்தன்மையுடையவர்கள் இறைவனுக்கு மீளா அடிமைத்திறம் கொண்டு மேவி மெய்பொருளின்கண் பற்றி மேவும் ஆற்றல் அற்றவர்கள் ஆவர். அவர்களுடைய காதுகள் நற் சொற்களால் துளைக்கப்படாதனவாகும். அவர்கள், இறைவனுக்கு ஆட்படாதவர்களாகி, இம் மண்ணுலகில் பயனற்றவர்களாய்க் காலத்தைக் கழிப்பவர்கள் ஆவர்.

887. நடலை வாழ்வுகொண்டு என்செய்தீர் நாணிலீர்
சுடலை சேர்வது சொற்பிர மாணமே
கடலின் நஞ்சமுது உண்டவர் கைவிட்டால்
உடலி னார்கிடந் தூர்முனி பண்டமே.

தெளிவுரை : இவ்வுலக வாழ்க்கையில் துன்புறுகின்ற மாந்தர்களே ! அத்தகைய துன்பமானது தீர்வதற்கு என் செய்தீர்கள் ? வாழ்க்கையின் இறுதிக்காலத்தில் இவ்வுடலானது, சுடலையில் கொண்டு சேர்க்கப்பட்டு, அழிக்கப் பெறுதலை உடையது; ஊர் மக்களால் முனிவும் வெறுப்பும் கொண்டு இகழப்படுவது. கடலில் தோன்றிய நஞ்சினை அமுதம் எனக் கொண்டு உண்டவர், சிவபெருமான். அப்பரமன், கருணை கொண்டு காத்தருளுவதால் வாழ்கின்றீர். அப்பெருமான், கைவிட்டால் பெருந்தீங்கு உண்டாகும், அறிவீராக; என்பது குறிப்பு.

888. பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார்
நாக்கைக் கொண்டரன் நாமம் நவில்கிலார்
ஆக்கைக் கேஇரை தேடி அலமந்து
காக்கைக் கேஇரை யாகிக் கழிவரே.

தெளிவுரை : மாந்தர்கள், மலர்களைக் கைகளால் தூவிச் சிவபெருமானை ஏத்தித் திருவடியைப் பணிதல் வேண்டும். நாவினால் அரனது நாமமாகிய திருவைந்தெழுத்தை ஓதுதல் வேண்டும். அவ்வாறு செய்து நற்கதியடைவதற்கு மேவாது, இவ்வுடலுக்கு இரைதேடி அதனைப் பேணும் தன்மைக்கே உழல்வார்களானால் அத்தகைய உடலானது, காக்கைக்கே இரையாகும்.

889. குறிக ளும்அடை யாளமும் கோயிலும்
நெறிக ளும்அவர் நின்றதோர் நேர்மையும்
அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும்
பொறியி லீர்மனம் என்கொல் புகாததே.

தெளிவுரை : புலன்களை நன்னெறியின்பால் செலுத்தாதவர்களே ! இறைவனுடைய திருவுருவங்கள், அப்பரமனின் அடையாளங்களாகிய திருவெண்ணீறு, உருத்திராக்கம், இடபக் கொடி முதலான செல்வங்கள், திருக்கோயில்கள் எனவும், சமய நெறிகளாகிய சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகியவையும் மற்றும் ஒழுக்கங்களை ஓதும் நூல்களும், வேதங்களும் பலவாறாக விளங்கிடினும், மனத்தினை ஈசன்பால் செலுத்தி வழிபடுவதற்குத் தடை யாது கொல் !

890. வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்த சென்னியும் தந்த தலைவனைச்
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே.

தெளிவுரை : சிவபெருமானுடைய திருவருளால் யாவும் படைக்கப் பெற்றது. இம் மானிடப் பிறவியானது வினையிலிருந்து நீங்க வேண்டும் என்பதற்காகவும், அதற்கு உறுதுணையாகவே நமது அவயங்கள் இயங்கவேண்டும் என்பதற்காகவும், இத்தேகம் வழங்கப் பெற்றது. இத்தன்மையில், வாயானது, சிவபெருமானுடைய புகழ்ச் செயல்களையும் அருளிச் செய்லகளையும் பேசியும், திருநாமத்தை ஓதியும் விளங்க வேண்டும்; நெஞ்சமானது, ஈசனையே இடையறாது பற்றி ஒழுக வேண்டும்; தலையானது, திருக்கோயிலையும், திருத்தொண்டர்களையும் வணங்க வேண்டும்; கைகளானவை மலர்கள் கொண்டு தூவிப் பெருமானின் திருப்பாத மலர்களை அருச்சித்துக் கூப்பி வணங்குதல் வேண்டும். நெஞ்சமே ! இவ்வாறு செய்யாது நெடுங்காலம் கழித்தனை. இவ்வாறு செய்தால் வினை யாவற்றையும் வீழ்த்தி இருக்கலாமே ! ஆ... ! என் செய்வது..... !

891. எழுது பாவைநல் லார்திறம் விட்டுநான்
தொழுது போற்றிநின்றே னையும் சூழ்ந்துகொண்டு
உழுத சால்வழி யேஉழுவான் பொருட்டு
இழுத நெஞ்சும் இதுஎன்படு கின்றது.

தெளிவுரை : உலகில் காம விகாரப்பட்டு மயங்கிப் பின் தெளிந்த தன்மையில், ஈசனை ஏத்தி வழிபடும் நெஞ்சமே ! வயலில் உழுத சால்வழி, மீண்டும் உழுதல் போன்ற ஏன் இழிவு கொள்கின்றன.

892. நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும் பொன்னார்சடைப் புண்ணியன்
பொக்க மிக்கவர் பூவும்நீரும் கொண்டு
நக்கு நிற்பர் அவர்தம்மை நாணியே.

தெளிவுரை : பொன் போன்ற அழகிய சடையுடைய ஈசன், நெக்குருகி நின்று வழிபடும் திருத் தொண்டர்களின் நெஞ்சுள் புகுந்து வீற்றிருப்பவர். அவர், பொய்த் தன்மையுடன் பூவும் நீரும் கொண்டு ஏத்துகின்றவர்களைக் கண்டு, அத்தகைய பொய் வழிபாடு செய்பவர்கள் நாணுமாறு, புன்னகை புரிவார்.

893. விறகில் தீயினன் பாலிற் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவு கோல்நட்டு உணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே.

தெளிவுரை : சிவபெருமான், விறகுக் கட்டையில் மறைந்து மேவும் நெருப்புப் போன்றும், பாலில், கண்ணுக்குப் புலனாகாது விளங்கும் நோய் போன்றும் திகழ்பவர். அவர், செம்மை மிகு மணியில் மேவும் சுயஞ்சோதியைப் போன்று, உள்ளிருந்து ஒளிர்பவர். அப்பரமனை அன்பாகிய உறவுகொண்டு, அடிமைத் தளை என்னும் உணர்வில் ஞானமாகிய கயிறால் நெஞ்சுள் கடைய, அவர் அமுதம் போன்று முன்னின்று வெளிப்படுபவர் ஆவார்.

திருச்சிற்றம்பலம்

91. பொது - தனித்திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

894. ஏயி லானைஎன் இச்சை அகம்படிக்
கோயி லனைக் குணப்பெருங் குன்றினை
வாயி லானை மனோன்மனி யைப்பெற்ற
தாயி லானைத் தழுவும்என் ஆவியே.

தெளிவுரை : சிவபெருமான், தனக்குமேல் தலைவர் எனச் சொல்லத் தகுந்தவாறு யாரும் இல்லாது, தானே உள்ளத்தில் முதன்மையாக விளங்குபவர்; என் உள்ளத்தில் விருப்பமாகக் கோயில் கொண்டுள்ளவர்; நற்குணத்தின் குன்றாகத் திகழ்பவர்; வாயாரத் தன்னடியை வாழ்த்துபவர்களின் வாக்கில் உள்ளவர்; சக்தியினை ஈன்றவர். அப்பெருமான், தனக்குத் தாய் என்று இல்லாத சுயம்புவாகித் தானே தோன்றியவராய்த் திகழ்பவர். அவர், என் உயிராகத் தழுவி இருப்பவர் ஆவர்.

895. முன்னை ஞான முதல்தனி வித்தினைப்
பின்னை ஞானப் பிறங்கு சடையனை
என்னை ஞானத்து இருள்அறுத்து ஆண்டவன்
தன்னை ஞானத் தளையிட்டு வைப்பனே.

தெளிவுரை : சிவபெருமான் யாவற்றுக்கும் முன்னர் தோன்றிய பொருளாகவும் ஞானமாகவும் தனித் தன்மை உடைய வித்தாகவும், மற்றும் ஞானம் பிரகாசிக்கும் ஒளியுடைய சடைமுடியுடையவராகவும் விளங்குபவர். அவர், என்னுள் இருந்த அறியாமையை நீக்கி, ஞானத்தை வழங்கி ஆட்கொண்டவர். அப்பரமனை, ஞானம் என்னும் தளையினால் இட்டு, என்னுடைய இருதயக் கமலத்தில் வைத்திருப்பேன்.

896. ஞானத் தால்தொழு வார்சில ஞானிகள்
ஞானத் தால்தொழு வேன்உனை நானலேன்
ஞானத் தால்தொழு வார்கள் தொழக்கண்டு
ஞானத் தாய்உனை நானும் தொழுவனே.

தெளிவுரை : ஞான வடிவாய் மேவும் சிவபெருமானே ! ஞானத்தால் தெளிந்த ஞானிகள், தேவரீரைத் தொழுது ஏத்துபவரானார்கள். ஆயினும், அத்தகைய ஞானத்தை நான் அடையப் பெறாதவனாகித் தொழுது ஏத்தாது, வெறுமையாக இருந்தேன். ஆயினும் ஞானிகள் தேவரீரைத் தொழுது ஏத்தும் பாங்கினைக் கண்டு, நானும் தொழுது ஏத்துதல் ஆனேன்.

897. புழுவுக் கும்குணம் நான்குஎனக் கும்அதே
புழுவுக்கு இங்குஎனக்கு உள்ளபொல் லாங்கில்லை
புழுவினும் கடையேன் புனிதன் தமர்
குழுவுக்கு எவ்விடத் தேன்சென்று கூடவே.

தெளிவுரை : சிவபெருமானே ! உயிரின் வர்க்கத்தில் நான்கறிவு உடையது புழு. அதனைப் போன்று, எனக்கும் நான்கு குணங்கள் உள்ளன. ஆயினும் புழுவானது, தனக்கு உரிய குணங்களைக் கொண்டு வினைகளைப் பெருக்கிப் பாவங்களை ஈட்டுவதில்லை. ஆனால் நான் அவ்வாறு இல்லை. எனக்குள்ள பொல்லாங்கு புழுவுக்கு இல்லை. எனவே நான் புழுவைவிடக் கீழ்ப்பட்டவன். தேவரீருடைய அடியவர்களாகிய புனிதர்பால், நான் எங்ஙனம் இணங்குவேன் !

898. மலையே வந்து விழினும் மனிதர்காள்
நிலையில் நின்று கலங்கப் பெறுதிரேல்
தலைவ னாகிய ஈசன் தமர்களைக்
கொலைசெய் யானைதான் கொன்றிடு கிற்குமே.

தெளிவுரை : மனிதர்காள் ! மலையே புரண்டு வந்து உங்களைத் தாக்குவதற்கு முனைந்தாலும், நீங்கள் நிலை கலங்க வேண்டாம். அது உங்களை ஒன்றும் செய்யாது. அது மட்டும் அன்று. சிவபெருமானுடைய அடியவர்களைக் கொலைத்தன்மையுடைய ஐம்புலன்களாகிய யானையும் இடர் செய்யாது.

899. கற்றுக் கொள்வன வாயுள நாவுள
இட்டுக் கொள்வன பூவுள நீருள
கற்றைச் செஞ்சடை யான்உளன் நாமுளோம்
எற்றுக் கோநம னால்முனி வுண்பதே.

தெளிவுரை : மாந்தர்காள் ! நாம் கற்றுக் கொள்வதற்கு உரிய மந்திரமாகிய திருவைந்தெழுத்து உள்ளது. அதனை ஓதுவதற்கு வாயும் நாவும் உள்ளன. பூசித்துப் பரவுவதற்குப் புனிதமாகிய பூவும் நீரும் உள்ளன. பூசித்து ஏத்தப் படுவதற்கு, இறைவனாகிய சிவபெருமான், சேர்த்து முடித்த செஞ்சடை முடி விளங்க வீற்றிருக்கின்றார். இப் பெருமானைப் பூசித்து ஏத்துவதற்கு இப்பிறப்பினைக் கொண்டு, நாம் விளங்குகின்றோம். இவ்வாறு இருக்க, நமன் வந்து நமது உயிரைக் கவர்ந்து விடுவானோ என்று, எதற்கு அஞ்ச வேண்டும் !

900. மனிதர் காள்இங்கே வம்மொன்று சொல்லுகேன்
கனிதந் தாற்கனி யுண்ணவும் வல்லிரே
புனிதன் பொற்கழல் ஈசன் எனுங்கனி
இனிது சாலவும் ஏசற்ற வர்கட்கே.

தெளிவுரை : மனிதர்காள் ! வாருங்கள், உங்களுக்கு ஒரு நற்செய்தியைச் சொல்கின்றேன். சுவைமிக்க கனியைக் கொடுத்தால் நீவிர் விரும்பி உண்பதற்கு உரியவர் அல்லவா ! சிவபெருமானின் திருக்கயல் அத்தகைய கனியாக உள்ளது; இனிமையுடையது; குற்றமற்றவர்களுக்கு விருப்பம் உடையது. அதனை உண்டு மகிழ்வீராக.

901. என்னை ஏதும் அறிந்திலன் எம்பிரான்
தன்னை நானுமுன் ஏதும் அறிந்திலேன்
என்னைத் தன்னடி யான்என்று அறிதலும்
தன்னை நானும் பிரான்என்று அறிந்தெனே.

தெளிவுரை : நான், என்னை அறியாதவனாக இருந்து, அஞ்ஞானத்தில் திரிந்தேன். எனவே, எனது தலைவனாகிய இறைவனை நான் அறிந்து கொள்ள இயாதவனானேன். பின்னர், இறைவன் என்னைத் தனது அடியவனாக நினைத்துக் கருணை புரிந்தார். அந்நிலையில், நான் என்னை உணர்ந்தேன்; என் தலைவனையும் அறிந்து அவருக்கு ஆட்பட்டேன்.

902. தெள்ளத் தேறித் தெளிந்துதித் திப்பதோர்
உள்ளத் தேறல் அமுத வொளிவெளி
கள்ளத் தேன்கடி யேன்கவ லைக்கடல்
வெள்ளத் தேனுக்குஎவ் வாறு விளைந்ததே.

தெளிவுரை : நெஞ்சமே ! நான் கள்ளத்தன்மையுடையவன். கொடிய தன்மையுடையவன், மாயையாகிய உலக வாழ்க்கையில் உழன்று அதன் துன்பக் கடலின் வெள்ளத்தில் கவலையால் ஆழ்ந்து இருந்தவன். அவ்வாறு இருக்கத் தெளிந்த அறிவும், இறைவனின் திருவடியின்பால் பற்றுக் கொண்டு மேவும் இனிய சுவையும், உள்ளத்தில் மகிழ்ச்சியும் அமுதம் உண்டதை யொத்தப் பேரானந்தப் பூரிப்பும் எங்ஙனம் விளைந்தது ! இத் திருப்பாட்டு, ஈசனின் திருவருளால் மன்னுயிரானது இன்புற்று, ஞானம் கொண்டு மகிழ்தலின் சிறப்பினை ஓதிற்று.

திருச்சிற்றம்பலம்

92. பொது - காலபாசத் திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

903. கண்டு கொள்ளரி யானைக் கனிவித்துப்
பண்டு நான்செய்த பாழிமை கேட்டிரேல்
கொண்ட பாணி கொடுகொட்டி தாளம்மைக்
கொண்ட தொண்டரைத் துன்னிலும் சூழலே.

தெளிவுரை : கால தூதர்களே ! யாராலும் காண்பதற்கு அரியவராகிய சிவபெருமானுக்கு, நான் அடிமைபூண்டவன். இதனை நன்கு கேளுங்கள். ஈசனின் திருப்புகழைப் பாடும் தொண்டர்கள், கைகளால் தாளம் இடுவர்; கொடு கட்டி என்னும் வாத்தியக் கருவியை முழக்குபவர். இத்தகைய அடியவர்களிடம் நீங்கள் அணுகாதீர்கள்.

904. நடுக்கத் துள்ளும் நகையுளும் நம்பர்க்குக்
கடுக்கக் கல்ல வடம்இடு வார்கட்குக்
கொடுக்கக் கொள்க எனஉரைப் பார்களை
இடுக்கண் செய்யப் பெறீர்இங்கு நீங்குமே.

தெளிவுரை : காலதூதர்களே ! தனது துன்பமானது நீங்க வேண்டும் என்னும் கருத்தினாலும் அல்லது, மகிழ்தலாலும் சிவபெருமானுக்குத் தொண்டு, திருப்பணிகள் செய்யும் தன்மையால், உருத்திராக்கமணி முதலான பொருள்களைக் கொடுப்பவர்களையும் மற்றும் கொடுக்குமாறு உரைப்பவர்களையும் துன்பம் செய்ய முடியாது. அத்தகைய சிவனடியார்களை விட்டு விலகிச் செல்லுங்கள்.

905. கார்கொள் கொன்றைக் கடிமலர்க் கண்ணியன்
சீர்கொள் நாமம் சிவன்என்று அரற்றுவார்
ஆர்களா கிலுமாக அவர்களை
நீர்கள் சாரப் பெறீர்இங்கு நீங்குமே.

தெளிவுரை : காலதூதர்களே ! கார் காலத்தில் மலரும் கொன்றை என்னும் நறுமண மலர்களைத் தரித்துள்ள சொல்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நீங்கள் சாராதீர்கள். அங்கிருந்து விலகிச் செல்லுங்கள்.

906. சாற்றி னேன்சடை நீண் முடிச் சங்கரன்
சீற்றம் காமன்கண் வைத்தவன் சேவடி
ஆற்ற வும்களிப் பட்ட மனத்தராய்ப்
போற்றி என்றுஉரைப் பார்புடை போகலே.

தெளிவுரை : காலதூதர்களே ! நீண்ட சடை முடியுடைய சங்கரனார், மன்மதனின் தேகமானது எரிந்து சாம்பலாகுமாறு நெற்றிக் கண்ணால் விழித்து நோக்கியவர். அப்பெருமானுடைய திருவடியை மனமானது மகிழுமாறு ஏத்திப் போற்றி வழிபடுகின்ற அடியவர்களின் பக்கம், போகாதீர்கள்.

907. இறையென் சொல்மற வேல் நமன் தூதுவீர்
பிறையும் பாம்பும் உடைப்பெரு மான்தமர்
நறவம் நாறிய நல்நறுஞ் சாந்திலும்
நிறைய நீறணி வார்எதிர் செல்லலே.

தெளிவுரை : காலதூதர்காள் ! என்னுடைய சொல்லை ஒருபோதும் மறவாதீர்கள். சிவபெருமான் பிறைச் சந்திரனும் பாம்பும் அணியாகக் கொண்டு விளங்குபவர். அவருடைய அடியவர்கள் நறுமணம் கமழும் சந்தனத்திலும், மேன்மை திகழும் திருவெண்ணீற்றினை அணிபவர்கள். அவர்கள் எதிரில் செல்லாதீர்கள்.

908. வாம தேவன் வளநகர் வைகலும்
காமம் ஒன்றில ராய்ககை விளக்கொடு
தாமம் தூபமும் தண்நறுஞ் சாந்தமும்
ஏம மும்புனை வார்எதிர் செல்லலே.

தெளிவுரை : காலதூதர்காள் ! சிவபெருமான் வளநகராகிய திருக்கோயிலில் வீற்றிருக்க, ஆங்கு மற்றோர் பற்றில்லாதவராகித் தினந்தோறும் தீபம் வைத்தும், மலர் மாலைகள் சாற்றியும், தூபம் முதலான வாசனைப் பொருள்களை நல்கி ஏத்தியும் வழிபடுகின்ற, அடியவர்களின் எதிரே செல்லாதீர்கள். வாமதேவன் - சிவபெருமானின் வடக்கு நோக்கிய திருமுகம். ஏனையவை, அகோரம் - தெற்கு நோக்கிய திருமுகம்.

909. படையும் பாசமும் பற்றிய கையினீர்
அடையன் மின்நமது ஈசன் அடியரை
விடைகொள் ஊர்தியி னான்அடி யார்குழாம்
புடைபு காதுநீர் போற்றியே போமினே.

தெளிவுரை : படைக்கலன்களும் பாசக்கயிறும் கையில் பற்றியுள்ள கால தூதர்களே ! நமது ஈசனுடைய அடியவர்கள் பக்கம் செல்லாதீர்கள். இடபத்தை வாகனமாகக் கொண்ட சிவபெருமானுடைய அடியவர் திருக்கூட்டத்தின் பக்கம் செல்லாதீர்கள். அத்தகைய பெருமை மிக்க அடியவர்களை நாடாது தொலைவின் நின்று, அவர்களைப் போற்றி வழிபட்டுச் செல்லுங்கள்.

910. விச்சை யாவதும் வேட்கைமை யாவதும்
நிச்சல் நீறணி வாரை நினைப்பதே
அச்சம் எய்தி அருகுஅணை யாதுநீர்
பிச்சை புக்கவன் அன்பரைப் பேணுமே.

தெளிவுரை : கால தூதர்காள் ! நீங்கள் கற்றுத் தெரிந்து கொண்டு தெளிவு பெற வேண்டியதும், விரும்பிச் செய்து அடையத் தக்கதும் ஒன்று உண்டு. அது, நாள்தோறும் திருநீறு அணிந்து விளங்கும் சிவனடியார்களை எண்ணி வணங்குவதேயாகும். அவர்களைக் கண்டு, பயபக்தியுடன் தொண்டு செய்வீராக. அவர்கள்பால் சென்றீர்களேயானால், உமக்கு நல்லது ஆகாது. அவர்கள், பிட்சாடணராகப் பொலிந்த ஈசனின் அடியவர்கள், அவர்களுக்கு உதவியாகவும், மகிழ்ச்சியடையும் வகையிலும் தொண்டு செய்வீராக.

911. இன்னம் கேண்மின் இளம்பிறை சூடிய
மன்னன் பாதம் மனத்துடன் ஏத்துவார்
மன்னும் அஞ்செழுத்து ஆகிய மந்திரம்
தன்னில் ஒன்றுவல் லாரையும் சாரலே.

தெளிவுரை : காலதூதர்காள் ! இன்னும் கேட்பீர்களாக ! பிறைச்சந்திரனைச் சடைமுடியுடைய பெருமைக்குரிய சிவபெருமானின் திருப்பாதமலரை மனத்தின் கண் பதித்துத் தியானம் செய்பவர்களிடமும், முற்றும் சிறப்பு பொருந்திய ஓதுகின்ற வல்லமையுடைய அடியவர்களிடமும் செல்ல வேண்டாம்.

912. மற்றும் கேண்மின் மனப்பரிப்பு ஒன்றின்றிச்
சுற்றம் பூசிய நீற்றோடு கோவணம்
ஒற்றை யேறுடை யான்அடி யேயலால்
பற்றொன்று இல்லிகள் மேற்கடை போகவே.

தெளிவுரை : கால தூதர்களே ! மற்றும் கூறுகின்றேன். கேட்பீர்களாக. திருமேனியில் திருவெண்ணீறு பூசியவராகிக் கோவண ஆடை தரித்த, ஒற்றை இடபத்தின் மீது வீற்றிருக்கின் வேறு பற்றில்லாத அடியவர்கள் செல்ல வேண்டாம்.

913. அரக்கன் ஈரைந் தலையுமோர் தாளினால்
நெருக்கி யூன்றிவூட் டான்தமர் நிற்கிலும்
சுருக்குஎ னாதங்குப் பேர்மின்கள் மற்றுநீர்
சுருக்கெ ளிற்சுட ரான்கழல் சூடுமே.

தெளிவுரை : காலதூதர்காள் ! இராவணனுடைய பத்துத் தலைகளையும் ஒரு தாள்விரலால் நெருக்கி ஊன்றிய சிவபெருமானுடைய அடியவர்கள் ஓரிடத்தில் நின்றிருந்தாலும், அங்கிருந்து விரைந்து அகன்று விடுங்கள். அவ்வாற விரைந்து அகலாது அங்கேயே இருப்பீர்களானால், தீப்பிழம்பின் வடிவமாக மேவும் ஈசனின் திருக்கழலானது உங்களைச் சுட்டு எரிக்கும்.

திருச்சிற்றம்பலம்

93. பொது - மறக்கிற்பனே என்னும் திருக்குறுந்தொகை.

திருச்சிற்றம்பலம்

914. காச னைக்கன லைக்கதிர் மாமணித்
தேச னைப்புக ழார்சிலர் தெண்ணார்கள்
மாசி னைக்கழித்து ஆட்கொள வல்லஎம்
ஈச னைஇனி யான்மறக் கிற்பனே.

தெளிவுரை : சிவபெருமான், நஞ்சினைக் கண்டத்தில் பதித்துக் கறை பொருந்தியவராக விளங்குபவர்; நெருப்பின் வடிவாகப் பெருஞ்சோதியாக ஓங்கியவர்; சுடர் விளங்கும் மாணிக்கம் போன்றவர். ஒளி மயமாகும் அப்பரமனை, அஞ்ஞானத்தில் அழுந்திய கீழ்மக்கள் புகழ்ந்து ஏத்தமாட்டார்கள். அவர் என்னுடைய குற்றம் யாற்றையும் போக்கி ஆட்கொண்டு அருளியவர். அத்தகைய அருளாளராகிய ஈசனை இனி, யான் மறப்பேனோ !

915. புந்திக் குவிளக் காய புராணனைச்
சந்திக் கண்நட மாடும் சதுரனை
அந்தி வண்ணனை ஆரழல் மூர்த்தியை
வந்துஎன் உள்ளங் கொண்டானை மறப்பனே.

தெளிவுரை : சிவபெருமான், என் அறிவுக்குத் தூண்டுதல் செய்து விளங்கும் விளக்குப் போன்றவர். பழமையானவர்; இரவில், மயானத்தில் நடனம் ஆடுகின்ற சதுரர்; செவ்வானத்தின் வண்ணம் போன்ற சிவந்த திருமேனி உடையவர்; எரியும் நெருப்பைக் கையில் ஏந்தி விளங்குபவர். அப்பெருமான் வந்து, என்னுள்ளத்தில் புகுந்து, என்னை ஆட்கொண்டவர். அவரை நான் மறக்க முடியுமோ !

916. ஈசன் ஈசன்என்றுறென்றும் அரற்றுவன்
ஈசன் தான்என் மனத்திற் பிரிவிலன்
ஈசன் தன்னையும் என்மனத்துக் கொண்டு
ஈசன் தன்னையும் யான்மறக் கிற்பனே.

தெளிவுரை : ஈசன், ஈசன் என்று என் மனத்தின் கண் எப்போதும் தியானித்து அப்பெருமானின் இனிய திருநாமத்தை உரைப்பேன். இத் தன்மையில், ஈசன் என் மனத்தில் பிரிவிலாதவராக விளங்கினார். நான் அப்பெருமானை என் மனத்தில் நன்கு பற்றினேன். இதனால் நான் ஈசனை மறக்கின்ற தன்மையில் இல்லை. என்னால் சிவöருமானை மறத்தல் முடியாது என்பது குறிப்பு.

917. ஈசன் என்னை அறிந்தது அறிந்தனன்
ஈசன் சேவடி யேற்றப் பெறுதலால்
ஈசன் சேவடி யேத்தப்பெற் றேன்இனி
ஈசன் தன்னையும் யான்மறக் கிற்பனே

தெளிவுரை : ஈசனுடைய செவ்விய திருவடிகளை என் உள்ளத்தில் ஏற்று நிலைக்கப் பெற்றதால், சிவபெருமான், அடியேனை அறிந்து ஆட்கொண்ட சிறப்பினை யான் அறியப் பெற்றேன் . ஆதலால் ஈசனின் திருவடியை ஏத்தினேன். இனிமேல், நான் ஈசனை மறத்தல் என்பது இயலாது.

918. தேனைப் பாலினைத் திங்களை ஞாயிற்றை
வான வெண்மதி சூடிய மைந்தனை
வேனி லானை மெலிவுசெய் தீயழல்
ஞான மூர்த்தியை நான்மறக் கிற்பனே.

தெளிவுரை : சிவபெருமான், தேனும் பாலும் பான்று இனிமையும் பயனும், தோற்றப் பொலிவும், உடையவர்; அட்ட மூர்த்தமாக விளங்கும் சந்திரனும் சூரியனும் திகழ்பவர். வானில் திகழும் வெணமையான பிறைச் சந்திரனைச் சடைமுடியில் சூடி விளங்குபவர்; மன்மதனை எரித்துச் சாம்பலாக்கியவர்; தீப் பிழம்பாக ஓங்கி விளங்கியவர். அப் பரமனை எண்ணால் மறக்க முடியுமோ !

919. கன்ன லைக்கரும்புஊறிய தேறலை
மின்ன லைமின் னையை உருவனைப்
பொன்ன னைமணிக் குன்று பிறங்கி
என்ன னைஇனி யான்மறக் கிற்பனே.

தெளிவுரை : சிவபெருமான், கரும்பாகவும் அதன் சாறு போன்றும் இனிமையானவர்; மின்னலைப் போன்று ஒளியும், அதன் வடிவமும் உடையவர்; பொன்னைப் போன்று அழகும், மாணிக்கக் குன்று போன்ற திரட்சியும் உடையவர். அப்பெருமான், என்னை உடையவராகி என்னைப் போன்ற இனிமையுடையவர் ஆயினார். அவரை என்னால் மறக்க முடியுமோ !

920. கரும்பி னைக்கட்டி யைக்கந்த மாமலர்ச்
கரும்பினைச் சுடர்ச் சோதியுட் சோதியை
அரும்பி னிற்பெரும் போதுகொண்டாய் மலர்
விரும்பும் ஈசனை யான்மறக்கித் பனே.

தெளிவுரை : சிவபெருமான், கரும்பு போன்றவர்; கரும்பின் கட்டி போன்றவர்; இதயத் தாமரையில் மேவும் அன்பு மலரில், விளங்கும் பக்தித் தேனை நுகரும் வண்டு போன்றவர்; வெளிப் புறத்தே புலனாகும் சோதிக்குள் ஒளிரும் சுடராகவும், அதன் சோதியாகவும் விளங்குபவர். நன்கு மலர்ந்த மலர்களை விரும்பிப் பூசித்து ஏத்த மகிழ்ந்து, அருள் புரிபவர். அப்பெருமானை யான் மறந்து விட முடியுமோ !

921. துஞ்சும் போதும் சுடர்விடு சோதியை
நெஞ்சுள் நின்று நினைப்பிக்கு நீதியை
நஞ்சு கண்டத்து அடக்கிய நம்பனை
வஞ்சனேன் இனி நான்மறக் கிற்பனே.

தெளிவுரை : சிவபெருமான், உறங்குகின்றபோது என் உள்ளத்தில் சுடர்விட்டு விளங்கும் சோதியாகத் திகழ்பவர்; என் நெஞ்சுள் நின்று நினைப்பினை விளைவிக்கின்ற நீதியாகுபவர். அப்பெருமான், நீலகண்டராக விளங்குபவர். பலன்களால் நான் வஞ்சிக்கப்படுபவனாக இருப்பினும், அப்பரமனை நான் மறக்க முடியுமோ ?

922. புதிய பூவினைப் புண்ணிய நாதனை
நிதியை நீதியை நித்திலக் குன்றினைக்
கதியைக் கண்டங் கறுத்த கடவுளை
மதியை மைந்தனை நான்மறக் கிற்பனே.

தெளிவுரை : சிவபெருமான், புது மலராக யாண்டும் திகழ்பவர்; புண்ணியத்தின் தலைவர்; பெரும் நிதிக் களஞ்சியமாக விளங்குபவர். முத்தின் குன்றெனத் திருவெண்ணீற்றுத் திருமேனியராக விளங்குபவர். நீலகண்டப் பெருமானாகிய அவர், ஞான வடிவாக என்னுள்ளத்தில் அன்பு திகழ விளங்குபவர். அப்பெருமானை நான் மறக்க முடியுமோ !

923. கருகு கார்முகில் போல்வதொர் கண்டனை
உருவ நோக்கியை ஊழி முதல்வனைப்
பருகு பாலனைப் பால்மதி சூடியை
மருவு மைந்தனை நான்மறக் கிற்பனே.

தெளிவுரை : சிவபெருமான், கருமையுடைய மேகம் போன்று, உயிர்களைக் காத்தருளும் பாங்கில், நஞ்சினைக் கண்டத்தில் தேக்கி நீலகண்டராகத் திகழ்பவர்; உலகமானது நன்னிலையில் திகழும் பெற்றியில், அருள் நோக்கால் புரந்தருள்பவர்; ஊழிக்காலத்தின் நாதனாக விளங்குபவர்; அன்பர்கள் மகிழ்ச்சியுடன் பருகும் பால் போன்ற தூய்மையானவர்; வெண்மையான பிறைச் சந்திரனைச் சூடி விளங்குபவர்; அடியவர்களின் உள்ளத்தில் மருவி இனிமை தருபவர். அப் பரமனை நான் மறக்க முடியுமோ !

திருச்சிற்றம்பலம்

94. பொது - தொழற்பாலதே என்னும் திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

924. அண்டத் தானை அமரர் தொழப்படும்
பண்டத் தானைப் பவித்திர ஆர்திரு
முண்டத் தானைமுற் றாத இளம்பிறைத்
துண்டத் தானைக்கண் டீர்தொழற் பாலதே.

தெளிவுரை : சிவபெருமான், உலகங்களின் வடிவமாக விளங்குபவர்; தேவர்களால் தொழுது ஏத்தப்பெறும் பெரும் பொருளாகுபவர்; தூய திருவெண்ணீற்றைத் தரிசித்த நெற்றியுடையவர்; இளம்பிறைச் சந்திரனைச் சடைமுடியில் சூடி விளங்குபவர். அப்பரமனே நாம் தொழுது ஏத்துவதற்கு உரிய கடவுள்.

925. முத்துஒப் பானை முறைத்தெழு கற்பக
வித்துஒப் பானை விளக்கிடை நேரொளி
ஒத்துஒப் பானை ஒளிபவ ளத்திரள்
தொத்துஒப் பானைக்கண் டீர்தொழற் பாலதே.

தெளிவுரை : சிவபெருமான், முத்தும் கற்பகத் தருவின் வித்தும், விளக்கின் ஒளியும், பவளத் திரட்சியும் போன்று விளங்குபவர். அப்பரமன், யாவராலும் தொழுது ஏத்தப்படுபவர் ஆவார்.

926.பண்ணொத் தானைப் பவளம் திரண்டதோர்
வண்ணத் தானை வகையுணர் வான்றனை
எண்ணத் தானை இளம்பிறை போல்வெள்ளைச்
சுண்ணத் தானைக் கண்டீர்தொழற் பாலதே.

தெளிவுரை : சிவபெருமான், பண்ணின் இசை போன்று இனிய நாதமாய் விளங்குபவர்; பவளத்தின் வண்ணம் போன்ற செம்மேனியுடையவர்; நாம் இவ்வுலகத்தில் ஆற்றுகின்ற எல்லாச் செயல்களையும் அதன் விளைவுகளையும் நன்கு அறிபவர்; நம் எண்ணத்தில் நிறைந்து விளங்குபவர். அவர், வெண்மையான பிறைச் சந்திரனைச் சடைமுடியிலும், திருவெண்ணீற்றைத் திருமேனியிலும் கொண்டு விளங்குபவர். அப்பரமனே தொழுவதற்கு உரியவர் எனக் காண்பீராக.

927. விடலை யானை விரைகமழ் தேன்கொன்றைப்
படலை யானைப் பலிதிரி வான்செலும்
நடலை யானை நரிபிரி யாததோர்
சுடலை யானைக்கண் டீர்தொழற் பாலதே.

தெளிவுரை : சிவபெருமான், எடுப்பான சிறந்த ஆற்றல உடையவர்; நறுமணம் கமழும் தேன் துளிர்க்கும் கொன்றை மலரை மாலையாகக் கொண்டு விளங்குபவர்; கபாலத்தைக் கையில் ஏந்திப் பிச்சையேற்றுத் திரிபவர்; நன்கு நடனம் புரிபவர்; நரிகள் திரியும் மயானத்தில் விளங்குபவர். அப்பரமனே யாவராலும் தொழுது ஏத்தப்பெறும் கடவுள் ஆவார்.

928. பரிதி யானைப்பல் வேறு சமயங்கள்
கருதி யானைக்கண் டார்மனம் மேவிய
பிரிதி யானைப் பிறரறி யாததோர்
சுருதி யானைக் கண்டீர்தொழற் பாலதே.

தெளிவுரை : சிவபெருமான், அட்ட மூர்த்தங்களில் ஒன்றாகிய சூரியனாகத் திகழ்பவர்; பல்வேறு சமயங்களுக்கும் ஆதி முதல்வனாக விளங்குபவர்; கண்டு தோத்திரம் செய்பவர்களின் மனத்தில் விரும்பி நிலை பெறுபவர். பிறரால் அறியப்படாதவர். வேதப் பொருளாக விளங்கும் அப் பரமனே யாவரும் தொழுது ஏத்தும் கடவுள் ஆவர்.

929. ஆதி யானை அமரர் தொழப்படும்
நீதி யானை நியம நெறிகளை
ஓதி யானை உணர்தற்கு அரியதோர்
சோதி யானைக் கண்டீர் தொழற் பாலதே.

தெளிவுரை : சிவபெருமான், ஆதியாக உள்ளவர்; தேவர்களால் தொழப்படும் நீதியுடையவர்; சிவாகம நெறிகளை ஓதியருளியவர்; உணர்வதற்கு அரியதோர் பெருஞ் சோதியாக விளங்குபவர். அப்பரமனே யாவராலும் தொழுவதற்குரிய மூலப்பொருள் ஆவார். இதனை அறிவீராக.

930. ஞாலத் தானை நல்லானைவல் லார்தொழும்
கோலத் தானைக் குணப்பெருங் குன்றினை
மூலத் தானை முதல்வனை மூவிலைச்
சூலத் தானைக்கண் டீர்தொழற் பாலதே.

தெளிவுரை : சிவபெருமான், ஞாலமாக விளங்குபவர்; எல்லா நற்செயல்களுக்கும் தலைவனாக விளங்கி ஆற்றுபவர்; வலிமையுடைய தேவர்களாலும் அசுரர்களாலும், தத்தமது வல்லமைக்குக் காரணமாக விளங்குபவர் ஈசனே யாதலை உணர்ந்த தன்மையில், தொழுது ஏத்தப்படுபவர்; எண் பெருங் குணத்தினராக விளங்குபவர்; யாவற்றுக்கும் மூலகாரணனாக விளங்கி, அதற்குரிய தானமாக (இடம்)வும் வீற்றிருப்பவர். அப்பெருமான், எல்லா நிலைக்கும் முதன்மையுடைய தலைமையாய் விளங்கிச் சூலத்தைக் கையில் ஏந்தி இருப்பவர். அப்பரமனே எல்லோரும் தொழுது ஏத்தக் கூடிய கடவுள் ஆவார்.

931. ஆதிப் பாலட்ட மூர்த்தியை ஆனஞ்சும்
வேதிப் பானைநம் மேல்வினை வெந்தறச்
சாதிப் பானைத் தவத்திடை மாற்றங்கள்
சோதிப் பானைக்கண் டீர்தொழற் பாலதே.

தெளிவுரை : சிவபெருமான், ஆதிப் பொருளாகியவர்; அட்ட மூர்த்தமாக விளங்குபவர்; பஞ்ச கவ்வியத்தால் பூசிக்கப்படுபவர்; நமது வினைகள் யாவற்றையும் தீய்த்துக் கருகுமாறு புரிபவர்; தவத்தின் வழி மேவும் யோகியர்களுக்குத் துணையாய் விளங்கி, அப் பயனை அளிப்பவர்; மன்னுயிர்கள் தவறு செய்யும் காலத்தில் அதனைக் களைந்து, நல்வழிக்கு ஆளாக்குபவர். அப்பரமனே தொழுது ஏத்துவதற்கு உரிய பரம்பொருளாவர். இதனைக் காண்பீராக.

932. நீற்றி னானை நிகரில்வெண் கோவணக்
கீற்றி னானைக் கிளரொளிச் செஞ்சடை
ஆற்றி னானை அமரர்தம் ஆருயிர்
தோற்றி னானைக் கண்டீர் தொழற்பாலதே.

தெளிவுரை : சிவபெருமான், திருநீற்று மேனியர்; ஒப்புமை கூறுவதற்கு ஏதும் இன்றித் தனிச் சிறப்புடைய தூய கோவண ஆடையை அணிந்து விளங்குபவர்; ஒளி திகழும் சிவந்த சடைமுடியின்மீது, கங்கையைத் தரித்து விளங்குபவர். தேவர்கள், பாற்கடலில் தோன்றிய நஞ்சின் வெப்பத்தால் மடியாதவாறு அதனைக் கண்டத்தில் தேக்கி உயிர் காத்து, நீலகண்டப் பெருமானாக விளங்கியவர். அப்பரமனே தொழுது ஏத்தப்பெறும் கடவுள் ஆவார். இதனை அறிவீராக.

933. விட்டிட் டானைமெய்ஞ் ஞானத்து மெய்ப்பொருள்
கட்டிட் டானைக் கனங்குழை பாலன்பு
பட்டிட் டானைப் பகைத்தவர் முப்புரம்
சுட்டிட் டானைக்கண் டீர்தொழற் பாலதே.

தெளிவுரை : சிவபெருமான், மெய்பொருள் விளக்கத்தையும் உண்மைகளையும் மெய்ம்மையை உபதேசிக்கும் ஞான நூல்கள் வழி அருளிச் செய்தவர்; உமா தேவியார்பால் அன்பின் வழி நின்று கட்டுப்பட்டு விளங்குபவர்; பகைத்துச் சீறி எழுந்த முப்புர அசுரர்களை எரித்தவர். அப்பரமனே தொழுது ஏத்தப்படும் கடவுள் எனக் காண்பீராக.

934. முற்றி னானை இராவணன் நீள்முடி
ஒற்றி னானை ஒருவிரலால்உறப்
பற்றி னானையோர் வெண்டலைப் பாம்பரைச்
சுற்றி னானைக்கண் டீர் தொழற்பாலதே.

தெளிவுரை : சிவபெருமான் முற்றுமாய் விளங்குபவர். அப்பெருமான், இராவணனுடைய நீண்ட முடிகள் பத்தும் நெரியுமாறு, திருப்பாத விரல் ஒன்றினால் அடர்த்தவர். அவர் பிரமனுடைய கபாலத்தைக் கையில் ஏந்திப் பாம்பை இடையில் கட்டி விளங்குபவர். அவரே தொழத்தக்க கடவுள் என்று காண்பீராக.

திருச்சிற்றம்பலம்

95. பொது - இலிங்கபுராணத் திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

935. புக்க ணைந்து புரிந்துஅலர் இட்டிலர்
நக்க ணைந்து நறுமலர் கொய்திலர்
சொக்க ணைந்த சுடரொளி வண்ணனை
மிக்குக் காணலுற்றார் அங்கு இருவரே.

தெளிவுரை : திருமால் நான்முகன் ஆகிய இருவரும் திருக்கோயிலுள் புகுந்து அன்பின் வழி நின்று நெகிழ்ந்துருகி மலர்களால் தூவி ஈசனை, ஏத்திலர்; மகிழ்வுடன் நறுமண மலர்களைப் பறித்திலர். இத் தன்மையில், அழகிய சுடரொளி வண்ணனாகிய சிவபெருமானைத் தம்முடைய முனைப்பில் மிக்கவராகிக் காணுதற்குத் தொடங்கினர். இது, எங்ஙனம் வெற்றியடைய இயலும் ? என்பது வினாக் குறிப்பு.

936. அலரு நீரும்கொண்டு ஆட்டித் தெளிந்திலர்
திலக மண்டலந் தீட்டித் திரிந்திலர்
உலக மூர்த்தி ஒளிநிற வண்ணனைச்
செலவு காணலுற் றார்அங்கு இருவரே.

தெளிவுரை : திருமால், நான்முகன் ஆகிய இருவரும், சிவபெருமானைத் தூயநீர் கொண்டு பூசித்தும் மலர் தூவி ஏத்தியும் வழிபாடு செய்திலர்; நெற்றியில் திலகம் அணிந்து வலம் செய்திலர். இத் தன்மையில் உலக நாயகராகிய ஒளி வண்ணம் உடைய சிவபெருமானைக் காண வேண்டும் என்னும் கொள்கையில் முனைந்தனர். இது, எவ்வாறு ஈசனைக் காண்பதற்கு இயலும் என்னும் வியப்பினை வெளிப்படுத்துவதாயிற்று.

937. ஆப்பி நீரோடு அலகுகைக் கொண்டிலர்
பூப்பெய் கூடை புனைந்து சுமந்திலர்
காப்புக் கொள்ளி கபாலிதன் வேடத்தை
ஒப்பிக் காணலுற் றார்அங்கு இருவரே.

தெளிவுரை : பசுவின் சாணத்தை நீரோடு கலந்து, திருஅலகு கொண்டு திருக்கோயிலைத் தூய்மை செய்திலர்; மலர்களைப் பறித்துக் கூடையில் இட்டுச் சுமந்து வந்து சேவை செய்திலர். திருநீற்றினத் தரித்துக் கையில் நெருப்பும் கபாலமும் ஏந்திய சிவபெருமானுடைய திருவேடத்தைக் காண வேண்டும் என்று திருமாலும் நான்முகனும் முனைந்தனர். இது, இவர்களால் ஈசனைக் காண இயலாமைக்குக் காரணமாயிற்று.

938. நெய்யும் பாலும்கொண்டு ஆட்டி நினைந்திலர்
பொய்யும் பொக்கமும் போக்கிப் புகழ்ந்திலர்
ஐயன் வெய்ய அழல்நிற வண்ணனை
மெய்யைக் காணலுற் றார்அங்கு இருவரே.

தெளிவுரை : இருவரும், நெய்யும் பாலும் கொண்டு சிவபூசை புரிந்திலர். பொய்த்தன்மை கெட்டழியுமாறு மனத்தில் தூய்மையும் ஞானமும் கொண்டவராய் ஏத்தி வழிபட்டிலர். இத்தகைய தன்மையில் நெருப்பின் செந்நிற வண்ணம் உடையவராகிய தலைவன் ஈசனின் திருமேனியைக் காண வேண்டும் என்று திருமாலும் பிரமனும் முற்பட்டனர்.

939. எருக்கம் கண்ணிகொண்டு இண்டை புனைந்திலர்
பெருக்கக் கோவணம் பீறி யுடுத்திலர்
தருக்கி னாற்சென்று தாழ்சடை யண்ணலை
நெருக்கிக் காணலுற் றார்அங்கு இருவரே.

தெளிவுரை : திருமால் நான்முகன் ஆகிய இருவரும், எருக்கம் மலர் சேரக் கொண்டு இண்டை மலர் புனைந்திலர்; கோவண ஆடை சூட்டிலர். தற்பெருமையுடைய தன்மையில் சிவபெருமானைக் காண வேண்டும் என்று முற்பட்டனர்.

940. மரங்கள் ஏறி மலர்பறித் திட்டிலர்
நிரம்ப நீர் சுமந்துஆட்டி நினைந்திலர்
உரம்பொ ருந்தி ஒளிநிற வண்ணனை
நிரம்பக் காணலுற் றார்அங்கு இருவரே.

தெளிவுரை : வலிமை மிக்கவரும் ஒளி வண்ணம் உடையவருமாகிய சிவபெருமானை நிரம்பவும் காண வேண்டும் தன்மையில், திருமால் நான்முகன் ஆகிய இருவரும் தருக்களிலிருந்து மலர்களைப் பறித்து ஈசனுக்கு அளிக்க மேவும் திருத்தொண்டும் ஆற்றிலர்; தூயநீர் கொண்டும் பூசித்திலர். இத்தன்மையினால், ஈசனைக் காண்பதற்கு இயலவில்லை என்பது குறிப்பு.

941. கட்டு வாங்கம் கபாலங்கைக் கொண்டிலர்
அட்ட மாங்கம் கிடந்துஅடி வீழ்ந்திலர்
சிட்டன்சேவடி சென்றெய்திக் காணிய
பட்ட கட்டமுற் றார்அங்கு இருவரே.

தெளிவுரை : தவத்தின் மேன்மையான சிவபெருமானுடைய திருவடியைக் காணுமாறு முனைந்த திருமாலும் நான்முகனும், ஈசனின் கபாலமும் யோக தண்டமும் கொண்டு மேவும் ஆற்றலை உணராதவராயும், அப்பரமனை அட்டாங்கமாக வணங்காதவராயும் இருந்தனர். எனவே அவர்களால் ஈசனைக் காண இயலவில்ல என்பதாயிற்று.

942. வெந்தநீறு விளங்க அணிந்திலர்
கந்த மாமலர் இண்டை புனைந்திலர்
எந்தை யேறுகந்து ஏறுஎரி வண்ணனை
அந்தங் காணலுற் றார்அங்கு இருவரே.

தெளிவுரை : இடப வாகனத்தில் ஏறும் எரியும் நெருப்பின் வண்ணம் உடைய எந்தை ஈசனைக் காண வேண்டும் என்ற இருவரும், திருநீறும் அணிந்திலர்; மலர் பறித்து இண்டை மாலையும் புனைந்திலர். எனவே அவர்கள் ஈசனைக் காணாதவராயினர் என்பது குறிப்பு.

943. இளவெ ழுந்த இருங்குவ ளைம்மலர்
பிளவு செய்து பிணைத்தடி இட்டிலர்
களவு செய்தொழிற் காமனைக் காய்ந்தவன்
அளவு காணலுற்றார் அங்கு இருவரே.

தெளிவுரை : மன்மதனை எரித்த சிவபெருமானைக் காண முனைந்த இருவரும், குவளை மலர் கொண்டு அப்பரமனை ஏத்திலர், இந்நிலையில் அவர்கள் ஈசனைக் காணாதவராயினர் என்பது குறிப்பு.

944. கண்டி பூண்டு கபாலங்கைக் கொண்டிலர்
விண்ட வான்சங்கம் விம்மவாய் வைத்திலர்
அண்ட மூர்த்தி அழல்நிற வண்ணனைக்
கொண்டிக் காணலுற்றார் அங்கு இருவரே.

தெளிவுரை : அண்டர் நாயகனாகிய சிவபெருமான், அழலின் வண்ணம் உடையவர். அப்பெருமானைக் காணும் பணியில் முனைந்த இருவரும், உருத்திராக்கமாலை பூண்டிலர்; ஈசனார் கபாலம் ஏந்திய அரும்பெருமையைக் கண்டிலர்; ஆராதனை செய்து சங்கொலி செய்திலர். இந்நிலையில், அவர்கள் அரனைக் காணாதவராயினர்.

945. செங்க ணானும் பிரமனும் தம்முளே
எங்கும் தேடித் திரிந்தவர் காண்கிலர்
இங்குற் றேன்என்றி லிங்கத்தே தோன்றினான்
பொங்கு செஞ்சடைப் புண்ணிய மூர்த்தியே.

தெளிவுரை : திருமாலும் பிரமனும் ஆகிய இருவரும், எல்லா இடங்களிலும் தேடித் திரிந்தும் காண முடியாதவாறு அயர்ந்து நிற்க, இங்கு உற்றேன் என்று, சடைமுடியுடைய புண்ணிய மூர்த்தியாகிய சிவபெருமான், சிவலிங்கத்தின் வடிவாய்த் தோன்றி காட்சியருளினர்.

திருச்சிற்றம்பலம்

96. பொது - மனத்தொகைத் திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

946. பொன்னுள் ளத்திரள் புன்சடை யின்புறம்
மின்னுள் ளத்திரள் வெண்பிறை யாய்இறை
நின்னுள் ளத்தருள் கொண்டிருள் நீங்குதல்
என்னுள் ளத்தளது எந்தை பிரானிரே.

தெளிவுரை : எந்தை பெருமானே ! தேவரீரின் பொன் போன்ற ஒளியுடைய புன்சடையில் ஒருபுறத்தில், மின்னலைப் போன்ற திரட்சியுடைய வெண்மையான பிறைச் சந்திரன் விளங்குகின்றது. அடியேனை உள்ளத்துள் கொண்டு ஒரு நொடி நேர அளவு கருத, என்னுடைய மனத்துள் இருந்த அஞ்ஞானமாகிய இருள் நீங்கிற்று.

947. முக்கணும் உடை யாய்முனி கள்பலர்
தொக்கெணும்கழ லாய்ஒரு தோலினோடு
அக்க ணம்அரை யாய்அரு ளேயலாது
எக்க ணும்இலன் எந்தை பிரானிரே.

தெளிவுரை : எந்தை பெருமானே ! மூன்று கண்களையுடையவரே ! முனிவர்கள் பலரும் கூடி ஏத்தும் அழகிய திருக்கழலையுடைய நாதனே ! புலித்தோலும் எலும்பும் இடையில் கட்டி விளங்குவதானது அருளின் தன்மையுடையதே அல்லாது வேறு இல்லை.

948. பனியாய் வெங்கதிர் பாய்படர் புன்சடை
முனியாய் நீயுல கம்முழு தாளினும்
தனியாய் நீசரண் நீசல மேபெரிது
இனியாய் நீஎனக்கு எந்தை பிரானிரே.

தெளிவுரை : எந்தை பெருமானே ! பனி போன்ற குளிர்ந்த தன்மையுடைய நாதனே ! விருப்பம் மிகுந்த சந்திரனுடைய கதிர்கள் படர்ந்த சடையுடைய முனிவனே ! தேவரீர் உலகம் முழுதும் ஆளுகைக்கு உரியவர். ஆயினும் தனித்தன்மையாய் ஏகனாக விளங்குபவர். சரணம் எனக்கு நீவிரே ஆகும். எனக்குத் துன்பமே பெரிதாகத் தோன்றுகின்ற தன்மையில், இனிமையாக இருந்து அருள்பவர் நீவிரே ஆவர்.

949. மறையும் பாடுதிர் மாதவர் மாலினுக்கு
உறையும் ஆயினை கோளர வோடுஒரு
பிறையும் சூடினை என்பதுஅலால் பிறிது
இறையும் சொல்லிலை எந்தை பிரானிரே.

தெளிவுரை : எந்தை பெருமானே ! தேவரீர், வேதங்களை ஓதுபவர்; பெருமையுடைய தவத்தினர்; மயக்கத்திற்கும் உறையுள் தேவரீரே. அரவத்தையும், பிறைச் சந்திரனையும் சூடியவர் என்பது அல்லாது, வேறு எத்தகைய சொல்லும் தேவரீரைப் பற்றிச் சொல்லுவதற்கு இல்லை.

950. பூத்தார் கொன்றையி னாய்புலி யின்னதள்
ஆர்த்தாய் ஆடர வோடுஅனல் ஆடிய
கூத்தா நின்குரை யார்கழ லேஅலது
ஏத்தா நாஎனக்கு எந்தை பிரானிரே.

தெளிவுரை : எந்தை பெருமானே ! நன்கு மலர்ந்த கொன்றை மலரைத் தரித்த ஈசனே ! புலியின் தோலை உடுத்திப் பாம்பினை அரையில் கட்டிக் கையில் எரியும் நெருப்பை ஏந்தி நடனம் ஆடிய நாதனே ! தேவரீரின் ஒலிக்கும் கழலை அல்லாது என்னுடைய நாவானது வேறு எதனையும் ஏத்தாது.

951. பைம்மா லும்அர வாபர மாபசு
மைம்மால் கண்ணியோடு ஏறுமைந் தாஎனும்
அம்மால் அல்லது மற்றடி நாயினேற்கு
எம்மாலும் இலேன் எந்தை பிரானிரே.

தெளிவுரை : எந்தைபெருமானே ! படம் எடுத்து ஆடுகின்ற பெருமையுடைய நாகத்தை ஆபரணமாக உடைய ஈசனே ! உமாதேவியை உடனாகக் கொண்டு இடபத்தில் வீற்றிருக்கும் அழகனே ! தேவரீரின் திருநாமத்தை ஓதி அதனால் பெறுகின்ற பேரின்ப மயக்கத்தையன்றி, வேறு எத்தகைய வகையாலும் அடியேன் ஆட்பட்டேன்.

952. வெப்பத் தின்மன மாசு விளங்கிய
செப்பத் தாற்சிவன் என்பவர் தீவினை
ஒப்பத் தீர்த்திடும் ஒண்கழலாற்கு அல்லது
எப்பற் றும்இலன் எந்தை பிரானிரே.

தெளிவுரை : எந்தை பெருமானே ! அன்பர்கள் தேவரீரைத் தியானித்து, அத்தன்மையால் ஏற்படுகின்ற ஞானத்தின் ஒளியால், குற்றங்கள் யாவும் விலகச் செப்பம் உடைய சிவநாமத்தினை ஓதுவார்கள். அந்நிலையில், தீவினையானது முற்றுமாய்த் தீர்த்திடும் உமது திருக்கழலையன்றி, நான் எத்தகைய பற்றும் இல்லாதவன்.

953. திகழும் சூழ்சுடர் வானொடு வைகலும்
நிகழும் ஒண்பொருளாயின நீதியென்
புகழு மாறும்அலால் உன பொன்னடி
இகழு மாறுஇலன் எந்தை பிரானிரே.

தெளிவுரை : எந்தை பெருமானே ! தேவரீர், திகழ்கின்ற சூரிய சந்திரர்களாகி, வானில் நித்தமும் விளங்கி, ஒளி பொருந்திய பொருள்களாகி, உலகில் எல்லா நலங்களையும் புரிபவர். தேவரீருடைய நியதிகளும் அருளிச் செயல்களும் புகழ்ந்து ஏத்துவதற்கே உரியதாகும். தேவரீரின் பொன்னடியை ஏத்துவதற்கு அன்றி, இகழ்ந்து குறை கூறும் தன்மையில் ஏதும் இல்லை.

954. கைப்பற் றித்திரு மால்பிர மன்உனை
எப்பற் றிஅறி தற்குஅரி யாய்அருள்
அப்பற்று அல்லது மற்றுஅடி நாயினேன்
எப்பற் றும்இலேன் எந்தை பிரானிரே.

தெளிவுரை : எந்தை பெருமானே ! திருமாலும் நான்முகனும் எத்தகைய தன்மையில் நாடினாலும், அறிவதற்கு அரிய ஒண் பொருளாக விளங்கும் ஈசனே ! தேவரீருடைய திருவருளையல்லாது வேறு எப்பற்றும் அடியேன் கொள்கிலேன்.

955. எந்தை எம்பிரான் என்றவர் மேல்மனம்
எந்தை எம்பிரான் என்றிறைஞ்சித் தொழுது
எந்தை எம்பிரான் என்றுஅடி ஏத்துவார்
எந்தை எம்பிரான் என்றுஅடி சேர்வரே.

தெளிவுரை : எந்தைபிரானாகிய சிவபெருமானுடைய திருநாமத்தை ஓதி வணங்குகின்ற சிவனடியார்கள்பால் தமது மனத்தைச் செலுத்திச் சிவபிரானாக ஏத்தி இறைஞ்சி வழிபட்டுத் தொழுது, எந்தை பெருமானே என்று, திருவடியைப் போற்றுகின்றவர் எந்தை பெருமானாகிய சிவபெருமானுடைய திருவடியைச் சேர்வர்.

திருச்சிற்றம்பலம்

97. பொது - சித்தத்தொகை திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

956. சிந்திப் பார்மனத் தான்சிவன் செஞ்சுடர்
அந்தி வான்நிறத் தான்அணி யார்மதி
முந்திச் சூடிய முக்கண்ணி னான்அடி
வந்திப் பார்அவர் வானுலகு ஆள்வரே.

தெளிவுரை : சிவபெருமான், தன்னைச் சிந்தித்து ஏத்தும் அடியவரின் மனத்தில் வீற்றிருப்பவர்; செஞ்சுடர் வண்ணம் உடைய அந்திவானம் போன்ற சிவந்த திருமேனியுடையவர்; அழகிய பிறைச்சந்திரனை நன்கு ஒளிர்ந்து விளங்குமாறு, முன்பக்கச் சடை முடியில் சூடியவர்; சூரியன், சந்திரன், அக்கினி என மூன்றினையும் கண்களாக உடையவர். அப்பெருமானுடைய திருவடியை ஏத்தி வணங்குபவர்கள் வானுலகை ஆளும் பெருமையுடையவர்களாவர்.

957. அண்ட மார்இருள் ஊடு கடந்துஉம்பர்
உண்டு போலும்ஓர் ஒண்சுடர் அச்சுடர்
கண்டுஇங்கு ஆரஅறி வார்அற வார்எலாம்
வெண்திங்கட் கண்ணி வேதியன் என்பரே.

தெளிவுரை : அண்டங்களை எல்லாம் அடக்கிய இருளின் இடையே கடந்து செல்லும் ஒப்பற்ற ஒளியுடைய ஒண்சுடர் ஒன்று உள்ளது போலும். அத்தகைய பெருஞ்சுடரை, இங்கு அறிபவர் யார் உளர் ? அத்தகைய சுடரை அறிபவர், பிறைச் சந்திரனைச் சூடி விளங்கும் சிவபெருமானே என, ஏத்தி உரைப்பர்.

958. ஆதி யாயவன் ஆரும் இலாதவன்
போது சேர்புனை நீள்முடிப் புண்ணியன்
பாதிப் பெண்ணுரு வாகிப் பரஞ்சுடர்ச்
சோதி யுட்சோதி யாய்நின்ற சோதியே

தெளிவுரை : சிவபெருமான், ஆதிப் பொருளாக விளங்குபவர்; தாய் தந்தை என்னும் உறவும் மற்றும் சுற்றம் என ஏதும் இல்லாத சுயம்புவாகத் திகழ்பவர். நறுமண மலர்களால் அலங்கரிக்கப்பெற்ற நீண்ட சடை முடியுடைய புண்ணியன். உமாதேவியைத் திருமேனியில் பாகமாகக் கொண்டு விளஙகுபவர். பெருஞ்சுடராகியும் சோதியாகவும் விளங்குபவர்.

959. இட்டது இட்டதோர் ஏறுஉகந்து ஏறியூர்
பட்டி துட்டங்க னாய்ப்பலி தேர்வதோர்
கட்ட வாழ்க்கையை னாகிலும் வானவர்
அட்ட மூர்த்திஅ ருள்என்று அடைவரே.

தெளிவுரை : சிவபெருமான், ஆங்காங்கே மாந்தர் இடுகின்ற பிச்சையுணவை ஏற்க இடப வாகனத்தில் ஏறி ஊர்ந்து சென்று கோவண ஆடை கொண்டு திரிகின்ற கடினமான வாழ்க்கையுடையவர். ஆயினும் தேவர்கள் அட்டமூர்த்தியாக மேவும் ஈசனே ! அருள்வீராக என்று ஏத்திச் சரணம் அடைவர். இத்திருப்பாட்டானது, இகரத்தை முதல் எழுத்தாகக் கொண்டு அருளிச் செய்யப்பட்டது.

960. ஈறில் கூறைய னாகி எரிந்த வெண்
நீறு பூசி நிலாமதி சூடிலும்
வீறி லாதன் செய்யினும் விண்ணவர்
ஊற லாய்அரு ளாய்என்று உரைப்பரே.

தெளிவுரை : சிவபெருமான், எல்லையில்லாத திக்குகளை ஆடையாக உடையவர்; எரிந்த பொருள்களால் ஆகிய சாம்பலைத் திருவெண்ணீறாகக் கொண்டு திருமேனியில் பூசி விளங்குபவர்;  பிறைச் சந்திரனைச் சடைமுடியில் சூடியவர். அப்பெருமான், பெருமையுடையதெனக் கருதுவதற்கு இயலாத செயல்களைச் செய்தாலும் தேவர்கள் கருணையுடைய பெருமானே அருள்வீராக ! என்று, உரைத்து ஏத்துவர். இத்திருப்பாட்டு, ஈ என்னும் எழுத்தை முதலாகக் கொண்டு அருளிச் செய்யப்பட்டது.

961. உச்சி வெண்மதி சூடிலும் ஊன்அறாப்
பச்சை வெண்தலை யேந்திப் பலஇ(ல்)லம்
பிச்சை யேபுகுமா கிலும் வானவர்
அச்சம் தீர்த்தரு ளாய்என்று அடைவரே.

தெளிவுரை : சிவபெருமான், வெண்மையான பிறைச் சந்திரனைச் சடைமுடியின் உச்சியில் சூடினாலும், ஊன் பொருந்திய பச்சை மண்டையோட்டைக் கையில் ஏந்திப் பல இல்லங்கள் தோறும் பிச்சையேற்கும் தன்மையில் புகுந்தாலும், தேவர்கள் எம்முடைய அச்சத்தைப் போக்கிக் காத்தருள்வீராக எனச் சரணாகதி அடைந்து ஏத்துவார்கள். இத்திருப்பாட்டானது, உகரத்தை முதலெழுத்தாகக் கொண்டு அருளிச் செய்யப்பட்டது.

962. ஊரி லாய்என்று ஒன்றாக உரைப்பதோர்
பேரி லாய்பிறை சூடிய பிஞ்ஞகா
காரு லாங்கண்ட னேயுன் கழலடி
சேர்வி லார்கட்குத் தீயவை தீயவே.

தெளிவுரை : சிவபெருமானே தேவரீர், தன்னுடைய ஊர் என்று ஒன்றினை உரைப்பதற்கு இல்லாதவர்; தனக்குப் பெயர் இன்னதென்ற ஒன்று இல்லாதவர்; பிறைச்சந்திரனைச் சூடிய சடைமுடியுடையவர்; கரிய வண்ணம் உடைய கண்டத்தினை உடையவர். ஆயினும் தேவரீருடைய திருவடியைப் பற்றாதவர்களுக்குத் தீய வினைகள் தீமையே செய்யும்.

963. எந்தை யேஎம் பிரானே எனஉள்கிச்
சிந்திப் பாரவர் தீவினை தீருமால்
வெந்த நீறுமெய் பூசிய வேதியன்
அந்த மாஅளப் பார்அடைந் தார்களே.

தெளிவுரை : சிவபெருமானை, எந்தையே ! எனவும், எம்பெருமானே ! எனவும் ஏத்தி, மனம் நைந்து உருகிச் சிந்திப்பவர்களுடைய தீய வினை யாவும் தீரும். அப்பெருமான், திருநீறு பூசி விளங்கும் திருமேனியுடையவர்; வேதங்களின் நாயகர். அப்பரமனை ஏத்தும் அன்பர்களுக்கு இவ்வுலகத்தில் கைகூடப் பெறாதது ஏதும் இல்லை. இத் திருப்பாட்டானது எ என்னும் அட்சரத்தை முதலாகக் கொண்டு அருளிச் செய்யபட்டது.

964. ஏன வெண்மருப் போடு என்பு பூண்டு எழில்
ஆனை யீர்உரி போர்த்துஅனல் ஆடிலும்
தானவண்ணத்த னாகிலும் தன்னையே
வானநாடர் வணங்குவர் வைகலே.

தெளிவுரை : சிவபெருமான், பன்றியின் வெண்மையான கொம்பும், எலும்பும் அணிகலனாகப் பூண்டு யானையின் தோலை உரித்துப் போர்த்தி விளங்குபவர். அப்பெருமான், நெருப்பைக் கையில் ஏந்தி ஆடினாலும், தானும் அத்தகைய நெருப்பு வண்ணமாகச் செம்மேனியராக விளங்கினாலும். அவரையே தேவர்கள் நாள்தோறும் வணங்குவார்கள். இத் திருப்பாட்டு, ஏ என்னும் எழுத்தை முதலாகக் கொண்டு அருளிச் செய்யப்பட்டது.

965. ஐயன் அந்தணன் ஆணொடு பெண்ணுமாம்
மெய்யன் மேதகு வெண்பொடி பூசிய
மைகொள் கண்டத்தன் மான்மறிக் கையினான்
பைகொள் பாம்பரை ஆர்த்த பரமனே.

தெளிவுரை : சிவபெருமான், என் தலைவர்; குளிர்ந்த தன்மையுடையவர்; ஆண் எனவும் பெண் எனவும் திருமேனியுடைய அர்த்தநாரியாக மேவுபவர்; திருநீறு பூசிய திருமேனியுடையவர்; கரிய கண்டத்தையுடையவர்; மான் கன்றைக் கையில் ஏந்தியவர்; படம் கொண்டு ஆடும் பாம்பை இடையில் கட்டி ஆரவாரித்து விளங்குபவர்.

966. ஒருவ னாகிநின் றான்இவ் வுலகெலாம்
இருவ ராகிநின் றார்கட்கு அறிகிலான்
அருஅ ராஅரை ஆர்த்தவ னார்கழல்
பரவு வாரவர் பாவம் பறையுமே.

தெளிவுரை : சிவபெருமான், உலகம் எல்லாம், தான் ஒருவனே ஆகி, நிறைந்து விளங்குபவர்; இருவராகிய திருமால், பிரமன் ஆகியவர்களின் காட்சிக்கு அரியவர்; அரிய அரவத்தை அரையில் கட்டி ஆரவாரம் செய்பவர். அப்பரமனின் திருக்கழலைப் பரவுபவர்களின் பாவம் யாவும் கெடும். இத்திருப்பாட்டு, ஒ என்னும் அட்சரத்தை முதலெழுத்தாகக் கொண்டு அருளிச் செய்யப்பட்டது.

967.ஓதவண்ணனும் ஒண்மலர்ச் செல்வனும்
நாத னேஅரு ளாய்என்று நாள்தொறும்
காதல் செய்து கருதப் படுமவர்
பாதம் ஏத்தப் பறையும் நம்பாவமே.

தெளிவுரை : சிவபெருமான், திருமாலும் நான்முகனும், நாதனே அருள்வீராக என, அன்புடன் ஏத்த அருள் செய்பவர். அப்பரமனின் திருவடியை ஏத்த நம் பாவம் கெடும். இத் திருப்பாட்டானது, ஓ என்னும் எழுத்தை முதலாகக் கொண்டு அருளிச் செய்யப்பட்டது.

968. ஒளவ தன்மை யவரவர் ஆக்கையான்
வெவ்வ தன்மையன் என்பது ஒழிமினோ
மௌவல் நீண்மலர் மேலுறை வானொடு
பவ்வ வண்ணனு மாய்ப்பணி வார்களே.

தெளிவுரை : அவ்வவரும், சிவபெருமானைச் சரீரத்தைக் கொண்டு அடைவதற்குக் கடுமையானவர் என்னும் கருத்தினைத் தவிர்மின். நீண்ட மலரின்மேல் விளங்கும் நான்முகனும், கடல் வண்ணனாகிய திருமாலும் ஈசனை ஏத்திப் பணிபவர்கள் ஆவர். இத் திருப்பாட்டானது ஒள என்னும் அட்சரத்தை முதலெழுத்தாகக் கொண்டு அருளிச் செய்யப்பட்டது.

969. அக்கும் ஆமையும் பூண்டுஅனல் ஏந்திஇல்
புக்குப் பல்பலி தேரும் புராணனை
நக்கு நீர்கள் நரகம் புகேன்மினோ
தொக்க வானவ ரால்தொழு வானையே.

தெளிவுரை : சிவபெருமான், எலும்பும் ஆமையும் பூண்டு, கையில் நெருப்பை ஏந்தி, இல்லம் தோறும் புகுந்து பலியேற்கும் புராணன் ஆவார். அவர், தேவர்களால் தொழப்படுபவர். அப்பெருமானை நீவிர் வழிபட்டு நரகத்தில் செல்லாது காத்துக் கொள்வீராக. இத்திருப்பாட்டானது ஃ என்னும் ஆய்த எழுத்தில் ஒலிக்குறிப்பு அமையுமாறு, அக்கு என்னும் சொல்லை முதலாகக் கொண்டு அருளிச் செய்யப்பட்டது.

970. கங்கை தங்கிய செஞ்சடை மேலிளந்
திங்கள் சூடிய தீநிற வண்ணனார்
இங்க ணார்எழில் வானம் வணங்கவே
அங்க ணாற்கது வாலவன் தன்மையே.

தெளிவுரை : சிவபெருமான், கங்கை தரித்த செஞ்சடையின்மீது இளமையான பிறைச் சந்திரனைச் சூடிய தீ வண்ணர். அவர், இவ்விடத்தில், எழில் மிக்க தேவர்கள் வணங்குமாறு திகழ்பவர். அழகிய கண்ணுடைய அப்பெருமானுக்கு, அதுவே இயல்பாகும். இத் திருப்பாட்டானது, க கரத்தை முதலெழுத்தாகக்கொண்டு அருளிச் செய்யப்பட்டது.

971. ஙகர வெல்கொடி யானொடு நன்னெஞ்சே
நுகர நீயுனைக் கொண்டுயப் போக்குறில்
மகர வெல்கொடி மைந்தனைக் காய்ந்தவன்
புகரில் சேவடி யேபுக லாகுமே.

தெளிவுரை : சிவபெருமான் மன்மதனை எரித்தவர். நெஞ்சமே ! இடபக்கொடியுடைய அப்பெருமானைக் கசிந்துருகி ஏத்தி உய்யும் வழியானது, அப்பரமனுடைய திருவடியை அடைக்கலம் புகுதலே ஆகும். இத் திருப்பாட்டு ங கரத்தை முதலெழுத்தாகக் கொண்டு அருளிச் செய்யப் பெற்றது. ஙகர எழுத்தானது இடபம் படுத்திருக்கும் வடிவம் கொண்டு விளங்குதலால், இவண் அதன் தன்மையில் ஓதப்பெற்றது.

972. சரண மாம்படி யார்பிற ரியாவரோ
கரணந் தீர்த்துயிர் கையில் இகழ்ந்தபின்
மரணம் எய்திய பின்னவை நீக்குவான்
அரண மூஎயில் எய்தவ அல்லனே.

தெளிவுரை : மூன்று அசுரர்களின் கோட்டைகளை எரித்துச் சாம்பலாக்கிய சிவபெருமானையன்றிச் சரணம் என்று அடையத் தக்கவர்கள் வேறு யார் உளர் ? அந்தக் கரணங்களாகிய மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என இவை, தன் நிலையழிந்து மரணம் உறும் காலத்தில், வினைகளை நீக்கிப் பிறவாமையாகிய நன்னிலையை அருளிச் செய்பவர் வேறு யார் உளர் ? இவண், ஈசனையே சரணம் அடைதலை ஓதுதலாயிற்று. இத்திருப்பாட்டு ச என்னும் அட்சரத்தை முதலெழுத்தாகக் கொண்டு அருளிச் செய்யப்பட்டது.

973. ஞமனென் பான்நர கர்க்கு நமக்கெலாம்
சிவனென் பான்செழு மான்மறிக் கையினான்
கவனம் செய்யும் கனவிடை யூர்தியான்
தமர்என் றாலும் கெடும்தடு மாற்றமே.

தெளிவுரை : சிவபெருமான், தீமை புரிந்து பாவம் சேர்ந்து நரகத்தில் உள்ளவர்களுக்கு நமனாகவும், அன்புடைய திருத்தொண்டர்களாகிய நமக்கெல்லாம் அன்பின் மிக்க ஈசனாகிய பதியாகவும் விளங்குபவர். அவர், மான்கன்றைக் கையில் ஏந்தியவர்; வேகத்துடன் செயல் ஆற்றும் பெருமையுடைய இடபத்தை வாகனமாக உடையவர். அப் பரமனின் தமர் எனக் கூறினும், தடுமாற்றம் யாவும் விலகிச் செல்லும். இத் திருப்பாட்டு ஞ கரத்தை முதலெழுத்தாகக் கொண்டு அருளிச் செய்யப்பட்டது.

974. இடபம் ஏறியும் இல்பலி யேற்பவர்
அடவி காதலித்து ஆடுவர் ஐந்தலைப்
படவம் பாம்பரை ஆர்த்த பரமனைக்
கரவி ராய்ச்சென்று கைதொழுது உய்ம்மினே.

தெளிவுரை : சிவபெருமான், இடப வாகனத்தில் ஏறியமர்ந்து இல்லங்கள் தோறும் சென்று பலியேற்பவர்; மயானத்தை விரும்பி நடனம் ஆடுபவர்; ஐந்து தலைகளையுடைய அரவத்தை இடையில் ஆர்த்துக் கட்டியிருப்பவர். அப்பெருமானை வணங்கும் கடமையுடைவராகக் கைதொழுது ஏத்தி உய்வீராக. இத் திருப்பாட்டானது ட கரத்தை முதலாகக் கொண்டு இடபம் எனத் தொடங்கி அருளிச் செய்யப்பட்டது.

975. இணர்ந்து கொன்றைபொன் தாது சொரிந்திடும்
புணர்ந்த வாளர வம்மதி யோடுடன்
அணைந்த அஞ்சடை யானவன் பாதமே
உணர்ந்த உள்ளத் தவர்உணர் வார்களே.

தெளிவுரை : சிவபெருமான், கொத்தாக இணைந்து விளங்கும் கொன்றை மலரின் பொன்மயமான மகரந்தங்கள் சொரிந்து விளங்க, அரவமும் சந்திரனும் அழகிய சடை முடியில் தரித்தவர். அப்பெருமானுடைய திருப்பாதத்தை உணர்ந்து ஏத்தும் உள்ளம் உடையவர்களே ஞானிகளாக விளங்குவார்கள்.

976. தருமந் தான்தவந்தான் தவத் தால்வரும்
கருமந் தான்கரு மான்மறிக் கையினான்
அருமந் தன்ன அதிர்கழல் சேர்மினோ
சிரமஞ் சேர்அழல் தீவினை யாளரே.

தெளிவுரை : ஈசனே, தருமமாகவும், தவமாகவும், தவத்தால் வரும பயனுடைய செயலாகிய விளைவாகவும் விளங்குபவர். அவர், மானைக் கையில் ஏந்தி அருமருந்தாகிய அமுதமாகத் திகழ்பவர். அப்பெருமானுடைய திருக்கழலை அடைந்து வணங்கத் துன்பம் தரும் தீவினை முழுவதும் தீரும்.

977. நமச்சி வாயஎன் பார்உள ரேல்அவர்
தமச்சம் நீங்கத் தவநெறி சார்தலால்
அமைத்துக் கொண்டதோர் வாழ்க்கைய னாகிலும்
இமைத்து நிற்பது சால அறியதே.

தெளிவுரை : நமச்சிவாய என்னும் திருவைந்தெழுத்தை ஓதுகின்ற அடியவர்கள், இம் மண்ணுலகத்தில் எல்லா அச்சங்களிலிருந்தும் விடுபட்டவராகித் தவநெறியைச் சார்ந்து விளங்குபவர் ஆவர். அத்தகையோர் இவ்வுலகத்தில் நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொண்டாலும், மீண்டும் பிறக்கின்ற தன்மையைப் பெற மாட்டார்கள்.

978. பற்பல் காலம் பயிற்றிப் பரமனைச்
சொற்பல் காலநின்று ஏத்துமின் தொல்வினை
வெற்பில் தோன்றிய வெங்கதிர் கண்டஅப்
புற்பணிக் கெடுமாறது போலுமே.

தெளிவுரை : பற்பல காலங்கள் பரமனைச் சொற்களால் பலகாலம் நின்று ஏத்துவீராக. உமது தொல்வினையானது, கதிரவனைக் கண்ட புல்லின் மேல் படிந்த பனிபோலக் கெடும். இத் திருப்பாட்டு, ப கரத்தை முதலாகக் கொண்டு அருளிச் செய்யப்பட்டது. ஈசனைச் சொற்கள் கொண்டு பலகாலம் ஏத்துக என்பது திருவைந்தெழுத்தால் ஓதி உய்தி பெறுக என்பதாம்.

979. மணிசெய் கண்டத்து மான்மணிக் கையினான்
கணிசெய் வேடத்த ராயவர் காப்பினால்
பணிகள் தாம்செய வல்லாவர் யாவர்தம்
பிணிசெய் ஆக்கையை நீக்குவர் பேயரே.

தெளிவுரை : சிவபெருமான், கரிய மணி போன்ற கண்டத்தையுடையவர்; மான் ஏந்திய கையினர்; நன்கு கணித்துச் செய்கின்ற திருவேடத்தை தாங்கியவராகி உயிர்களைக் காத்தருளும் தன்மையில் திருவருட் செயல்களைப் புரிபவர். அப்பெருமான், வினையானது உயிரைப் பற்றி மேவிப் பிறவியைப் பிணிக்கும் யாக்கை பெற்றுத் துன்புறாதவாறு அருள் புரிபவர் ஆவார். இது, ஈசன் பிறவிப்பணியை நீக்குபவர் என்பதாம். இத்திருப்பாட்டானது ம கரத்தை முதலெழுத்தாகக் கொண்டு அருளிச் செய்யப்பட்டது.

980. இயக்கர் கின்னரர் இந்திரன் தானவர்
நயக்க நின்றவன் நான்முகன் ஆழியான்
மயக்கம் எய்தவன் மாலெரி யாயினான்
வியக்கும் தன்மையி னான்எம் விகிர்தனே

தெளிவுரை : சிவபெருமான், இயக்கம், கின்னரர், இந்திரன் முதலான் தேவர்கள், அசுரர்கள் என எல்லோரும் விரும்பி ஏத்துமாறு கருணைக் கடலாக விளங்குபவர்; பிரமனும் திருமாலும் தேடித்திரிந்து காணப்பெறாது மயங்கிய நிலையில், எரியும் பெருஞ்சோதி வடிவாக விளங்கி, யாவரும் வியந்து ஏத்துமாறு மேவிய விகிர்தன் ஆவர்.

981. அரவம் ஆர்த்துஅனல் ஆடிய அண்ணலைப்
பரவு வாரவர் பாவம் பறைதற்குக்
குரவை கோத்தவ னும்குளிர் போதின் மேல்
கரவில் நான்முக னும்கரி அல்லரே.

தெளிவுரை : சிவபெருமான், அரவத்தைக் கையில் பற்றி ஆட்டி ஆரவாரித்து, நெருப்பை ஏந்தி ஆடிய அண்ணல் ஆவார். அப்பெருமானைப் பரவிப் போற்றுபவர்களுடைய பாவமானது விலகி அழியும். அதற்குக் குரவைக் கூத்து ஆடிய திருமாலும், மலரின் மீது அமர்ந்து விளங்கும் நான்முகனும் சான்றாக விளங்குபவர்கள் அல்லவா ! இத்திருப்பாட்டு ர, வ என்னும் அட்சரங்களைக் கொண்டு அரவம் எனத் தொடங்கி அருளிச் செய்யப்பட்டது.

982. அழலங் கையினன் அந்தரத்து ஓங்கிநின்று
உழலும் மூஎயில் ஒள்ளழல் ஊட்டினான்
தழலும் தாமரை யானொடு தாவினான்
கழலும் சென்னியும் காண்டற்கு அரியனே.

தெளிவுரை : சிவபெருமான், நெருப்பினைக் கையில் ஏந்தியுள்ளவர்; அந்தரத்தில் மாயை விளங்க நின்று தீமையை விளைவித்த மூன்று அசுரர்களுடைய கோட்டைகளை எரித்துச் சாம்பலாக்கியவர். அப்பெருமான், நான்முகனும் திருமாலும் தேடித் திரிந்து திருமுடியும் திருக்கழலும் காண்பதற்கு முனைந்த போது, அவர்களுக்கு அரியவராக விளங்கியவர். இத் திருப்பாட்டானது ழ, ல என்னும் அட்சரங்களைக் கொண்டு அழல் எனத் தொடங்கி அருளிச் செய்யப்பட்டது.

983. இளமை கைவிட்டு அகறலும் மூப்பினார்
வளமை போய்ப் பிணி யோடு வருதலால்
உளம்எ லாம்ஒளி யாய்மதி யாயினான்
கிளமை யேகிளை யாக நினைப்பனே.

தெளிவுரை : இந்தத் தேகமானது, இளமையகன்று, மூப்பு தொடர, வளமையும் கெட்டுப் பிணியும் சேர விளங்குவதாகும். சிவபெருமான், ஒளி வடிவாகிப் பேரறிவு விளங்கப் பெறுபவர். எனவே, நான் அப்பரமனையே உறவாகக் கொண்டு ஏத்தி, ஞான ஒளிபெறும் தன்மையில் இருப்பேன்.

984. தன்னிற் றன்னை யறியும் தலைமகன்
தன்னிற் றன்னை யறிவில் தலைப்படும்
தன்னிற் றன்னை யறிவில னாயிடில்
தன்னிற் றன்னை யும்சார்தற்கு அரியனே.

தெளிவுரை : சிவபெருமான், தன்னைத் தானே நன்கு அறியும் ஞான ஒளியாக விளங்குபவர். அப்பரமனைத் தன்னுடைய உள்ளத்தில் அறிந்து ஏத்தும் அன்பர்களிடம் தலைப்பட்டு, உணர்த்திப் பேரின்பத்தை நிகழ வைப்பவர். அவ்வாறு ஒருவர், அப்பெருமான் தன்பால் வீற்றிருக்கும் நிலையை அறியாராயின், அப்பரமன், தன்னுள்ளத்தில் குடி கொண்டிருந்தும் அறிவதற்கு அரியராக விளங்குவார். இது திருப்பாட்டில் ற ன என்னும் அட்சரங்கள் அமையப் பெற்று அருளிச் செய்யப்பட்டது.

985. இலங்கை மன்னனை ஈரைந்து பத்தும்அன்று
அலங்க லோடுட னேசெல ஊன்றிய
நலங்கொள் சேவடி நாடொறும் நாடொறும்
வலங்கொண்டு ஏத்துவார் வானுலகு ஆள்வரே.

தெளிவுரை : இராவணனுடைய பத்துத் தலைகளும் நெரியுமாறு ஊன்றிய சிவபெருமானுடைய செவ்விய திருவடியை நாள்தோறும் ஏத்தி வலம் வருபவர்கள், சிறப்புடைய வானுலகத்தில் ஆள்கின்ற பேற்றினை அடைவார்கள். இத் திருப்பாட்டானது சிவாலயத்தை நாள்தோறும் வலம் வரும் சிறப்பினை உணர்த்திற்று.

திருச்சிற்றம்பலம்

98. பொது - உள்ளத்திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

986. நீற லைத்ததோர் மேனி நிமிர்சடை
ஆற லைக்கநின்று ஆடும் அமுதினைத்
தேற லைத்தெளி யைத்தெளி வாய்த்ததோர்
ஊற லைக்கண்டு கொண்டது என்உள்ளமே.

தெளிவுரை : சிவபெருமான், திருநீறு பூசிய திருமேனியுடையவர்; சடை முடியின்மீது கங்கை தரித்து விளங்குபவர்; திருநடனம் புரிந்து அடியவர்களையும், யோகிகளையும், ஞானிகளையும் மகிழ்வுறச் செய்யும் நல்லமுதமாக விளங்குபவர்; தேன் போன்ற இனிமையும் தெளிந்த சித்தமும் கொண்டு விளங்குபவர். அப்பெருமானை என் உள்ளமானது கண்டு தன்னுள் அறிந்து கொண்டது.

987. பொந்தை யைப்புக்கு நீக்கப் புகுந்திடும்
தந்தை யைத்தழல் போல்வதோர் மேனியைச்
சிந்தை யைத்தெளி வைத்தெளி வாய்த்ததோர்
எந்தை யைக்கண்டு கொண்டது என்உள்ளமே.

தெளிவுரை : ஈசன், பொய்யாகிய இவ்வுடற்கண் புகுந்து, ஆன்மாவில் ஒளிர்ந்து அத்தகைய பொய்த் தன்மையுடைய பிறவியை நீக்கிப் பிறவாமையை அருளிச் செய்பவர். அவர், தந்தையாக விளங்குபவர்; தழல் போன்ற திருமேனியுடையவர்; சிந்தையில் தெளிவை உண்டாக்குபவர். அப்பெருமானை என் உள்ளமானது கண்டு தன்னுள் அறிந்து கொண்டது.

988. வெள்ளத் தார்விஞ்சை யார்கள் விரும்பவே
வெள்ளத் தைச்சடைவைத்த விகிர்தனார்
கள்ளத் தைக்கழி யம்மனம் ஒன்றிநின்று
உள்ளத்தில் ஒளியைக் கண்டது உள்ளமே.

தெளிவுரை : மன மகிழ்வில் விளங்கும் வித்தியாதரர்கள் விரும்புகின்ற தன்மையில், ஈசன், கங்கையைச் சடைமுடியில் வைத்த விகிர்தனார் ஆவார். கள்ளத் தன்மையானது விலகுமாறு, என் மனம் ஈசன்பால் ஒன்றி நின்று, அப்பரமனின் ஒளியை உள்ளத்தில் கண்டு அறிந்து கொண்டது.

989. அம்மா னையமு தின்னமு தேயென்று
தம்மா னைத்தத்து வத்துஅடி யார்தொழும்
செம்மா னநிறம் போல்வதோர் சிந்தையுள்
எம்மா னைக்கண்டு கொண்டதுஎன் உள்ளமே.

தெளிவுரை : சிவபெருமான், அன்புக்குரிய தலைவர்; இனிய அமுதமாக அடியவர்களால் ஏத்தப்படுபவர்; தத்துவப் பொருளாகத் திகழ்பவர்; சிவந்த வண்ணத் திருமேனி உடையவர். அப்பெருமான், சிந்தையுள் மேவக் கண்டு, என் உள்ளமானது அறிந்து கொண்டது.

990. கூறே றுளம்உமை பாகமோர் பாலராய்
ஆறே றும்சடை மேற்பிறை சூடுவர்
பாறே றுந்தலை யேந்திப் பலஇ(ல்)லம்
ஏறேறும் எந்தையைக் கண்டதென் உள்ளமே.

தெளிவுரை : சிவபெருமான், உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு விளங்குபவர்; சடை முடியின் மீது பிறைச் சந்திரனைச் சூடியவர்; பிரம கபாலத்தைப் பிச்சைப் பாத்திரமாகக் கொண்டு, இல்லங்கள்தோறும் ஏகி, உணவு கொள்பவர். அப்பெருமான், இடப வாகனத்தில் ஏறி விளங்கக் கண்டு தரிசித்து என் உள்ளம் அறிந்து கொண்டது.

991. முன்நெஞ்சம் இன்றி மூர்க்கராய்ச் சாகின்றார்
தன்நெஞ்சம் தமக்குத் தாம் இலாதவர்
வன்நெஞ்சம் அது நீங்குதல் வல்லீரே
என்நெஞ்சில் ஈசனைக் கண்டது என்உள்ளமே.

தெளிவுரை : சிலம், சிவபெருமானை இளமைக் காலத்தில் பக்தியுடன் வழிபட்டு, நற்கதிக்கு உரிய புண்ணியத்தை ஆற்றி வினையை மாய்க்கும் செயலைப் புரியாது, மூர்க்கத்தனமாய் இருந்து மீண்டும் பிறக்கின்ற தன்மையில், மடிகின்றனர். தன்னுடைய நெஞ்சத்தை அறிந்து, நன்மையைத் தாடே மேடிக்கொண்டு உய்வுபெறாது, கழியும் கொடிய தன்மையை நீக்குவீர்களாக. என்னுடைய நெஞ்சில் ஈசன் விளங்க, உள்ளமானது அப்பரமனை அறிந்து கொண்டது.

992. வென்றா னைப்புலன் ஐந்தும்என் தீவினை
கொன்றா னைக்குணத் தாலே வணங்கிட
நன்றா நன்மனம் வைத்திடு ஞானமாம்
ஒன்றா னைக்கண்டு கொண்டதுஎன் உள்ளமே.

தெளிவுரை : சிவபெருமான், புலன்கள் ஐந்தையும் வென்றவர்; என்னுடைய தீய வினைகளை முற்றுமாய் நீக்கியவர்; சத்துவ குணத்தால் வணங்கி ஏத்திட அத்தகைய நல்ல மனத்தில் ஞானமாக விளங்குபவர். அந்நிலையில் ஒப்பற்ற ஒருவனாகிய பரமனை என் உள்ளமானது கண்டு அறிந்து கொண்டது.

993. மருவினை மட நெஞ்சம் மனம்புகும்
குருவி னைக்குணத் தாலே வணங்கிடும்
திருவி னைச்சிந்தை யுட்சிவ னாய்நின்ற
உருவி னைக்கண்டு கொண்டதுஎன் உள்ளமே.

தெளிவுரை : நெஞ்சமே ! நீ ஈசனை மருவிப் பக்தி பூண்டனை. அப்பெருமான், கருணை என்னும் அருங்குணத்தால் என் மனத்தில் புகுந்தனர்; வணங்கப் படுகின்ற பெருஞ்செல்வமாகத் திகழ்பவர்; சிந்தையுள் சிவமாக விளங்குபவர். அத்திரு வடிவத்தை என் உள்ளமானது கண்டு அறிந்தது.

994. தேசனைத் திரு மால்பிர மன்செயும்
பூச னைப்புண ரிற்புணர் வாயதோர்
நேச னைநெஞ்சி னுள்நிறை வாய்நின்ற
ஈச னைக்கண்டு கொண்டதுஎன் உள்ளமே.

தெளிவுரை : சிவபெருமான், பேரொளியாகத் திகழ்பவர்; திருமால், பிரமன் ஆகியவர்களால் பூசித்து ஏத்தப்படுபவர்; தியானித்து ஏத்த, நெஞ்சுள் நேயமாக விளங்குபவர். அவ்வாறு நிறைந்து மேவும் ஈசனை என் உள்ளம் அறிந்து கொண்டது.

995. வெறுத்தா னைம்புல னும்பிர மன்தலை
அறுத்தா னையரக் கன்கயி லாயத்தைக்
கறுத்தா னைக்கா லினில் விரல் ஒன்றினால்
ஒறுத்தா னைக்கண்டு கொண்டதுஎன் உள்ளமே.

தெளிவுரை : சிவபெருமான், ஐம்புலத்தின் பந்தம் அற்றவர்; பிரமனுடைய ஐந்து தலைகளுள் ஒன்றினைக் கொய்தவர்; கயிலாயத்தின் மேல் சினந்து எழுந்த இராவணனைத் திருப்பாத விரல் ஒன்றினால் தண்டித்தவர். அப்பெருமானை என் உள்ளமானது கண்டு அறிந்தது.

திருச்சிற்றம்பலம்

99. பொது - பாவநாசத் திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

996. பாவமும் பழி பற்றுஅற வேண்டுவீர்
ஆவில் அஞ்சுஉகந்து ஆடும் அவன்கழல்
மேவ ராய்மிகவும்மகிழ்ந்து உள்குமின்
காவ லாளன் கலந்தருள் செய்யுமே.

தெளிவுரை : பாவமும் பழியும் ஆகிய தீய வினைகள், உயிரைப் பற்றி மேவாது நீங்கவேண்டும் என்று வேண்டுகின்ற அடியவர்களே ! பஞ்ச கவ்வியங்கொண்டு சிவ பூசை செய்து, அப்பரமனுடைய கழலை அடைக்கலமாக அடைந்து, மகிழ்ந்து அன்பு கூர்ந்து, ஏத்தி வழிபடுவீராக ! உள்ளத்தால் ஓன்றி நின்று தியானமும் செய்வீராக ! காத்தருளும் பெற்றியுடைய ஈசன், நம்முடன் கலந்து அருள் செய்பவர் ஆவார்.

997. கங்கை ஆடில்என் காவிரி ஆடில்என்
கொங்கு தண்கும ரித்துறை ஆடில்என்
ஓங்கு மாகடல் ஓதநீர் ஆடில்என்
எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே.

தெளிவுரை : கங்கை, காவிரி, குமரித்துறை மற்றும் கடல்நீர் ஆகிய புனித தீர்த்தங்களில் ஆடினாலும், சிவபெருமானுடைய சிந்தனை இல்லையானால், எத்தகைய பயனும் இல்லை.

998. பட்டர் ஆகில்என் சாத்திரம் கேட்கில்என்
இட்டும் அட்டியும் ஈதொழில் பூணில்என்
எட்டும் ஒன்றும் இரண்டும் அறியில்என்
இட்டம் ஈசன் எனாதவர்க்கு இல்லையே.

தெளிவுரை : எல்லாக் கலைகளிலும் பட்டம் பெற்று வல்லவராக இருந்தால் என்ன ? சாத்திர நூல்களைக் கேட்டு அறிந்த கேள்வி ஞானம் உடையவராக இருந்தால் என்ன ? தான தருமம் முதலானவற்றைச் செய்தும் அன்ன தானம் புரிந்தும் அறப் பணிகளை மேற்கொண்டு அவற்றால் பாதுகாக்கப்படுகின்ற படைபலத்தைக் கொண்டிருந்தாலும் என்ன ? எட்டும் ஒன்றும் இரண்டும் ஆகிய மெய்ம்மைகளை அறிந்தால் என்ன ? மனம் கனிந்து உள்ளம் ஒன்றிச் சிவ நாமத்தை ஓதவில்லையாயின், மேன்மை எதுவும் இல்லை.

999. வேதம் ஓதில்என் வேள்விகள் செய்யில்என்
நீதி நூல்பல நித்தல் பயிற்றில் என்
ஓதி அங்கமோர் ஆறும் உணரில்என்
ஈச னையுள்கு வார்க்கு அன்றி இல்லையே.

தெளிவுரை : வேதங்களை ஓதினால் என்ன ? வேள்விகள் செய்தால் என்ன ? நீதிநூல்களை நாள்தோறும் ஓதி உரைத்தால் என்ன ? வேதத்தின் ஆறு அங்கங்களையும் உணர்ந்தால் என்ன ? சிவபெருமானை ஏத்தி, ஈசுவர பக்தியுடன் விளங்கினால் அன்றி, மேன்மைகள் இல்லை.

1000. காலை சென்று கலந்த நீர் மூழ்கில்என்
வேலை தோறும் விதிவழி நிற்கில்என்
ஆலை வேள்வி யடைந்தது வேட்கில்என்
ஏல ஈசன்என் பார்க்குஅன்றி இல்லையே.

தெளிவுரை : காலையில் நீராடி விதிவழி நின்று வணங்கினால் என்ன ? விதிப்படி வேள்வி முதலான கிரியைகளை விரும்பி ஆற்றினால் என்ன ? மனத்தில் இனிமையுடையவராகி, ஈசுவர பக்தி கொண்டு விளங்கினால் அல்லாது மேன்மை இல்லை.

1001. கான நாடு கலந்து திரியின்என்
ஈனம் இன்றி இரும்தவம் செய்யில்என்
ஊனை உண்டல் ஒழிந்துவான் நோக்கில்என்
ஞானன் என்பவர்க்கு அன்றிநன்கு இல்லையே.

தெளிவுரை : கானகத்திலும், மற்றும் ஊர்கள் தோறும் சென்றும், தேச சஞ்சாரம் செய்தால் என்ன ? குற்றம் இல்லாத பெருமை மிக்க தவத்தினை மேற்கொண்டால் என்ன ? ஊன் தவிர்த்து பெருமையுடைய ஆராய்ச்சியில் மேவினால் என்ன ? ஞான வடிவாக விளங்கும் ஈசுவரனிடம் பக்தியின்றேல், எத்தகைய மேன்மையும் இல்லை.

1002. கூட வேடத்த ராகிக் குழுவில்என்
வாடி ஊனை வருத்தித் திரியில்என்
ஆடல் வேடத்தன் அம்பலக் கூத்தனைப்
பாட லாளர்க்கு அல்லாற் பயன் இல்லையே.

தெளிவுரை : தனது கீழ்மையை மறைக்கும் தன்மையில் உயர்வாகக் கருதக்கூடிய பொலிவுடன் வேடங்களைக் கொண்டு, அத்தகையவர்களுடன் இருந்தாலும் என்ன ? உடலை வருத்தி உணவை விலக்கித் திரிந்தால் என்ன ? திருநடனம் புரியும் அம்பலக் கூத்தனாகிய நடராசப் பெருமானைப் பக்தியுடன் பாடிப் போற்றித் துதிப்பவர்களுக்கு அல்லாது, மேன்மை இல்லை.

1003. நன்று நோற்கில்என் பட்டினி யாகில்என்
குன்றம் ஏறிஇருந்தவம் செய்யில் என்
சென்று நீரிற் குளித்துத் திரியில்என்
என்றும் ஈசன்என் பார்க்குஅன்றி இல்லையே.

தெளிவுரை : நோன்பு முதலான விரதங்கள் ஆற்றி உபவாசம் இருந்தால் என்ன ? மலையின் உச்சியில் ஏறி அமர்ந்து ஏகாந்தமாக அரிய தவத்தை மேற்கொண்டால் என்ன ? புனித தலங்கள் சென்று தீர்த்தங்களில் நீராடி வழிபட்டால் என்ன ? சிவ நாமத்தை ஓதி உரைத்தால் அல்லாது மேன்மை இல்லை.

1004. கோடி தீர்த்தம் கலந்து குளித்து அவை
ஆடி னாலும் அரனுக்குஅன்பு இல்லையேல்
ஓடு நீரினை ஓட்டைக் குடத்து அட்டி
மூடி வைத்திட்ட மூர்க்கனோடு ஒக்குமே.

தெளிவுரை : கோடி தீர்த்தங்கள் கலந்து நீராட மகிழ்ந்தாலும் சிவபெருமானிடம் அன்பு இல்லை யென்றால், ஓடுகின்ற நீரினை ஓட்டைக் குடத்தில் நிறைத்து மூடி வைத்து, அது அவ்வாறே உள்ளது என்று நம்புகின்ற மூடர்களின் தன்மையைப் போன்றதாகும்.

1005. மற்று நற்றவம் செய்து வருந்தில்என்
பொற்றை யுற்யெடுத் தான்உடல் புக்கிறக்கு
உற்ற நற்குரை யார்கழற் சேவடி
பற்றி லாதவர்க் குப்பயன் இல்லையே.

தெளிவுரை : உடலை வருத்தி நற்றவத்தைச் செய்தாலும் என்ன பயன் ? கயிலை மலையை எடுத்த இராவணனுடைய உடலை நலியுமாறு செய்த சிவ பெருமானுடைய ஒலிக்கும் கழலையுடைய செவ்விய திருவடியைப் பற்றி நிற்கவில்லையானால் எப்பயனும் இல்லை.

திருச்சிற்றம்பலம்

100. பொது - ஆதிபுராணத் திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

1006. வேத நாயகன் வேதியர் நாயகன்
மாதின் நாயகன் மாதவர் நாயகன்
ஆதி நாயகன் ஆதிரை நாயகன்
பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே.

தெளிவுரை : சிவபெருமான், வேதங்களுக்குத் தலைவர்; வேதம் ஓதுகின்ற உயர்ந்த செயலினை ஆற்றுபவர்களுக்குத் தலைவர்; உமா தேவியின் நாயகராக விளங்குபவர்; பெருமையுடைய தவ வேந்தர்களின் தலைவராக விளங்குபவர். அப்பெருமான் ஆதி மூர்த்தியாக விளங்கித் திருவாதிரை என்னும் விண்மீனுக்கு உரியவராகித் திகழ்பவர். பூதநாயகனாகிய அப்பெருமான் எல்லாப் புண்ணியங்களுக்கும் நிலைக்களமாக மேவும் புண்ணிய மூர்த்தியாவர்.

1007. செத்துச் செத்துப் பிறப்பதே தேவுஎன்று
பத்திசெய் மனப் பாறைகட்கு ஏறுமோ
அத்தன் என்றுஅரி யோடு பிரமனும்
துத்தி யம்செய் நின்றநற் சோதியே.

தெளிவுரை : தெய்வத்தன்மையுடைய பிறவியாகியும், இறந்து, கருவின்கண் மீண்டும் பிறவியடைந்ததும் மேவும் தன்மையைத் தெய்வமாகக் கொள்ளாதீர்கள். அவ்வாறு உடையவர்களைத் தெய்வமாக ஏத்திப் பக்தி செய்யாதீர்கள். திருமாலும் நான்முகனும் தமது தலைவனாகக் கொண்டு துதிக்கின்ற கடவுள் சிவபெருமான். சோதி வடிவாகிய அப்பரமனை ஏத்துவீராக.

1008. நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்
ஆறு கோடி நாராயர் அங்ஙனே
ஏறு கங்கை மணல்எண்ணில் இந்திரர்
ஈறு இலாதவன் ஈசன் ஒருவனே.

தெளிவுரை : நூறு கோடி பிரமர்கள் அழிந்தனர்; ஆறு கோடி நாராயணர்களும் அங்ஙனமே ஆயினர். இவர்களை விடக் கணக்கிட்டு எண்ண முடியாதவாறு கங்கையாற்றின் மணல் போன்ற எண்ணற்ற இந்திரர்கள் மாண்டனர். முடிவும் அழிவும் இல்லாதவராக விளங்குபவர் சிவபெருமான் ஒருவரே ஆவார்.

1009. வாது செய்து மயங்கும் மனத்தராய்
ஏது சொல்லுவீ ராகிலும் ஏழைகாள்
யாதோர் தேவர் எனப்படு வார்க்கெல்லாம்
மாதேவன் அலால் தேவர்மற்று இல்லையே.

தெளிவுரை : வாதம் செய்து மயங்கிய மனத்தினை உடையவராகி ஏதேதோ கூறித் தெய்வங்கள் பலவற்றை எண்ணாதீர்கள். அவ்வாறு எண்ணுவது அறியாமையாகும். எத்தன்மையிலாகிலும் தெய்வம் என்று சொல்லப்படுபவர்க்கும் சிவபெருமானே அல்லாது அவர்களுக்கு வேறு தெய்வம் இல்லை.

1010. பேய்வ னத்தமர் வானைப் பிரார்த்தித்தார்க்கு
ஈவ னைஇமை யோர்முடி தன்னடிச்
சாய்வ னைச்சல வார்கள் தமக்குடல்
சீவ னைச்சிவ னைச்சிந்தி யார்களே.

தெளிவுரை : சிவபெருமான், பேய்வனம் என்று சொல்லப்படும் சுடுகாட்டில் விளங்குபவர்; தன்னை அடைக்கலம் கொண்டு பிரார்த்தித்து ஏத்தும் அடியவர்களுக்கு அருள் வழங்குபவர்; தேவர்களால் முடிசாய்த்து வணங்கப்பெறுபவர். வஞ்சனையை நெஞ்சில் இருத்திய மாந்தர்கள், தமக்கு உடலாகவும் சீவனாகவும் விளங்கும் சிவபெருமானைச் சிந்தித்து ஏத்தும் அருளைப் பெறாதவர்களாவார்கள்.

1012. எரியெ ருக்குவர் அவ்வெரி ஈசனது
உருவ ருக்கம தாவது உணர்கிலார்
அரிஅ யற்கரி யானை அயர்த்துபோய்
நரிவி ருத்தம தாகுவர் நாடரே.

தெளிவுரை : சிவபெருமான் வேள்வித் தீயில் மேவும் நெருப்பின் வண்ணம் போன்றவர். அவரைக் காண வேண்டும் என்று சென்ற திருமாலும் நான்முகனும் அயர்ந்து நின்று நரிவிருத்தம் போன்ற நிலையில் மேவினர்.

1013. அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில்
அருக்க னாவான் அரனுரு அல்லனோ
இருக்கு நான்மறை ஈசனை யேதொழும்
கருத்தி னைநினை யார்கன் மனவரே.

தெளிவுரை : சிலர் சூரியனை அந்தி நேரங்களில் வழிபடுவார்கள். ஆயினும் சூரியன், ஈசனின் அட்ட மூர்த்தங்களில் ஒருவன் என்று நினையாதவராக உள்ளனர். அவர்கள் சூரியனைத் தொழுதாலும் இருக்கு முதலான நான்கு வேதங்களும் ஈசனையே தொழுகின்ற கருத்தை மறந்தனரே. சூரியனை வணங்குதலாவது சிவபெருமானை வணங்குதல் ஆகும் என, இவண் உணர்த்தப் பெற்றது.

1014. தாயினும் நல்ல சங்கரனுக்கு அன்பர்
ஆய உள்ளத்து அமுதுஅருந் தப்பெறார்
பேயர் பேய்முலை யுண்டுஉயிர் போக்கிய
மாயன் மாயத்துப் பட்ட மனத்தரே.

தெளிவுரை : கண்ணபிரான் தன்னைக் கொல்ல வந்த பூதகியாகிய அரக்கியின் உயிரைப் போக்கி மாயம் செய்தவர். அத் தன்மையில் சூழ்ச்சியுடையவர்கள், தாயினும் நல்லவராக இனிமையுடன் மேவும் சங்கரன்பால் அன்புடையவர்களுடைய உள்ளத்தில் இனிமையுடன் பொருந்துதல் இயலாது.

1015. அரக்கன் வல்லரட்டு ஆங்கு ஒழித் தார்அருள்
பெருக்கச் செய்த பிரான்பெருந் தன்மையை
அருத்தி செய்தறி யப்பெறு கின்றிலர்
கருத்தி லாக்கய வக்கணத் தோர்களே.

தெளிவுரை : சிவபெருமான், இராவணனுடைய கொடிய செயலை ஒழித்து அருள் செய்த பெருமான் ஆவார். அப்பெருமானுடைய பெருந்தன்மையை அன்பு கொண்டு அறியும் கருத்தினையுடையவர்கள் மிகச் சிலரே. அத்தகைய அன்பினை அறியாதவர்கள் கயமைக் கணத்தவர் ஆவர். ஈசன் இராவணனுக்குக் கருணையுடன் அருள் புரிந்த செம்மை இவண் ஏத்துதல் ஆயிற்று.

திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச் செய்த தேவாரம் - ஐந்தாம்  திருமுறை மூலமும் தெளிவுரையும் நிறைவுற்றது.

 
மேலும் ஐந்தாம் திருமறை »
temple news
திருநாவுக்கரசர் பாடிய 4,5,6 திருமுறைகளில் மொத்தம் 3064 பாடல்கள் உள்ளது. இதில் ஐந்தாம் திருமுறையில் 1015 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar