பதிவு செய்த நாள்
07
நவ
2011
10:11
உடுமலை : "உடுமலை அருகே கோட்டமங்கலம் வரதராஜப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் விரைவில் நடத்த வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடுமலை அருகே கோட்டமங்கலத்தில், பழமை வாய்ந்த கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், கமலவல்லித்தாயார், பெருந்தேவி தாயார், ஆஞ்சநேயர், கருடாழ்வார், ராமானுஜர், ஆதிசேஷப்பெருமான் மற்றும் தும்பிக்கை ஆழ்வார் சன்னதிகள் இருந்தன. 40 ஆண்டுகளுக்கு பின் கோவில் கட்ட திருப்பணிக்குழு அமைக்கப்பட்டது. ஆனால், கோவில் கட்டப்படாமல், சிலைகள் கிணற்றில் இருந்தது. அதிருப்தியடைந்த பக்தர்கள் கோவில் அருகில் குடில் அமைத்து சிலைகளை வைத்து பூஜை செய்தனர். 2001ம் ஆண்டு மீண்டும் கும்பாபிஷேக பணிகளுக்கு குழு அமைக்கப்பட்டது. 2006ம் ஆண்டு கும்பாபிஷேகத்தை நடத்த முயற்சித்த நிலையில், இந்து அறநிலையத்துறையினர் முறையாக அனுமதி வழங்காததால், கும்பாபிஷேகம் தடை பட்டது. புதுப்பிக்கப்பட்ட கோவில் மற்றும் சிலைகள் பராமரிப்பின்றி சிதிலமடையத்துவங்கின. கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், கோவிலில், திருப்பணிகளை மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்த கடந்த ஆண்டு இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். முதற்கட்டமாக கடந்தாண்டு ஆக.,29ம் தேதி கருடகம்பம் மாற்றியமைப்பதற்காக சிறப்பு பூஜைகள் நடந்தன. கருவறைக்கு நேர் எதிராக கருட கம்பம் மாற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றது. இதனையடுத்து, கும்பாபிஷேகம் விரைவில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுவரை கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படவில்லை. "கருட கம்பம் மாற்றும் பணிகள் நிறைவடைந்து பல மாதங்கள் ஆகியுள்ளது. இதனால், கோவில் மீண்டும் பொலிவிழந்து காணப்படும் சூழ்நிலை உள்ளது. எனவே, விரைவில் கும்பாபிஷேகம் நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.