இளம் பெண் துறவரம்: நெல்லை டவுன் ஜெயின் கோயிலில் கவுரவிப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07நவ 2011 11:11
திருநெல்வேலி : துறவரம் மேற்கொள்ளும் ஜெயின் சமுதாயத்தை சேர்ந்த இளம் பெண்ணிற்கு நெல்லை டவுனில் கவுரவிப்பு மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. ராஜஸ்தான் மாநிலம் ஜாலோன் மாவட்டம் உமேதாபார் கிராமத்தை சேர்ந்த ஜெயந்திலால், மணிதேவி தம்பதியரின் மகள் அம்ருதா என்ற ஹேமலதா (25). இவர் படித்துமுடித்துவிட்டு, பிரம்மச்சரியத்திலேயே பெற்றோர் சம்மதத்துடன் துறவியாக மாற விருப்பம் தெரிவித்தார். வரும் நவ.30ம் தேதி பெங்களூரில் ஸ்ரீ ராஜ எஸ்.சுரிஸ்வர்ஜி முன்னிலையில் துறவரம் எடுத்துக் கொள்கிறார். துறவியாக மாறும் இளம்பெண் அம்ருதாவிற்கு ஜெயின் சமுதாயத்தின் சார்பில் வரவேற்பு மற்றும் கவுரவிப்பு நிகழ்ச்சிகள் நடந்துவருகிறது. நெல்லை டவுனுக்கு வந்த அம்ருதாவை ஜெயின் சமுதாய மக்கள் பாட்டுப்பாடி சிறப்பான வரவேற்பு அளித்தனர். டவுன் அம்மன் சன்னதியில் இருந்து கீழரதவீதியில் உள்ள ஜெயின் கோயிலுக்கு அம்ருதாவை ஜெயின் சமுதாய மக்கள் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். ஜெயின் கோயிலில் ஜெயின் சமுதாய பெரியவர்களால் அம்ருதா கவுரவிக்கப்பட்டார். தொடர்ந்து அங்கு கூடியிருந்த மக்களிடையே அம்ருதா பேசுகையில், "உலகத்தில் எதுவும் நிரந்தரமானது இல்லை. தர்ம வழிகளில் அனைவரும் ஈடுபடவேண்டும். மோட்சத்தை அடையவேண்டும் என்றால் அதற்கான வழி துறவரம் தான். வாழ்க்கையில் எதுவே நிலையானது இல்லை என்பதால் மோட்சம் அடைய ஒரே வழி துறவரம் என்பதை முடிவு செய்து, அதை மேற்கொள்கிறேன். அனைத்து மக்களும் நல்வழிகளில் தர்ம சிந்தனையுடன் செயல்படவேண்டும். ஜெயின் சமுதாய மக்கள் துறவரம் நிலையை அடைய முயற்சிக்கவேண்டும் என்றார். நிகழ்ச்சியில் ஜெயின் சமுதாயத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஸ்ரீ சுபார்ஷநாத் ஜெயின் சங்கத்தினர் செய்திருந்தனர்.