பதிவு செய்த நாள்
26
நவ
2011
10:11
திருவண்ணாமலை : மகா கார்த்திகை தீபத் திருவிழா, இன்று, துர்க்கையம்மன் உற்சவத்துடன் துவங்குகிறது. திருவண்ணாமலை, அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கொண்டாடப்படும் முக்கியத் திருவிழாவான, கார்த்திகை தீபத் திருவிழா வரும், 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. வரும் டிச., 4ம் தேதி இரவு வெள்ளி ரத வீதி உலாவும், வரும் 5ம் தேதி மகா ரத தேரோட்டமும் நடக்கிறது. தொடர்ந்து, வரும் 8ம் தேதி அதிகாலை, 4 மணிக்கு, பரணி தீபமும், மாலை, 6 மணிக்கு, 2, 668 அடி உயரமுள்ள மலை மீது, மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. தீபத் திருவிழா இனிதே நடக்க வேண்டியும், எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல், அனைவரையும் காத்தருள வேண்டியும், நகரக் காவல் தெய்வமான துர்க்கையம்மனுக்கு, இன்று சிறப்பு பூஜை நடக்கிறது. விழாவில், துர்க்கையம்மன் வீதி உலாவும் நடக்கிறது.