வல்லக்கோட்டை, திருப்போரூரில் ஆடி கிருத்திகை விழா விமரிசை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஆக 2025 12:08
ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, வல்லக்கோட்டை கிராமத்தில், 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த முருகன் கோவில் உள்ளது. 7 அடி உயரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் அருள்பாலித்து வருகிறார். கடந்த ஜூலை மாதம், கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடந்தது.
ஆடி மாதத்தில் வந்த இரண்டாவது கிருத்திகை விழாவை முன்னிட்டு, நேற்று காலை, முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து, உற்சவர் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்போரூர்: திருப்போரூரில் பிரசித்தி பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. நேற்று ஆடி கிருத்திகை விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, அதிகாலை 3:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின், சிறப்பு அர்ச்சனைகளும், தீபாராதனைகளும் நடந்தன. விழாவில், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள், காவடி எடுத்தும், அலகு குத்தியும், முடிகாணிக்கை செலுத்தியும் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
இரவு 7:00 மணியளவில் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய கந்தபெருமானின் வீதியுலா மாடவீதிகளில் நடந்தது.
* சித்தாமூர் அருகே பெருக்கரணை கிராமத்தில் நடுபழனி மரகத தண்டாயுதபாணி கோவில் உள்ளது. நேற்று ஆடிகிருத்திகையை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் உள்ள 45 அடி உயர முருகன் சிலையில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வீதி உலா வந்து, மரகத தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து பால், பன்னீர், தேன், சந்தனம் உள்ளிட்ட 27 வகை அபிஷேக பொருட்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மூலவருக்கு தீபாஆராதனை நடந்தது. இதில் சித்தாமூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.