பதிவு செய்த நாள்
17
ஆக
2025
12:08
கோவை கொடிசியா வளாகம் அருகில் இஸ்கான் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இங்கு கிருஷ்ண ஜெயந்தி விழா, கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு இஸ்கான் அமைப்பின் மண்டல செயலாளர் பக்தி வினோத ஸ்வாமி மகராஜ் தலைமையில், கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக நடந்தது.
நிகழ்ச்சிகள் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு தொடங்கின. சிறப்பு ஆராதனை, அகண்ட நாம சங்கீர்த்தனம், பாலகோபாலருக்கு அபிஷேகம், கோ பூஜை, ஜெகநாதருக்கு தீபாராதனை, ஆன்மிக சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள், அன்னதானம் நடந்தன.
நாடு முழுவதும் உள்ள பல புனித நதிகளில் இருந்து, 1008 கலசங்களில் கொண்டுவரப்பட்ட தீர்த்தத்தில், அபிஷேக நிகழ்ச்சிகள் நடந்தன. பக்தர்களுக்கு தானியங்கள் இன்றி தயாரிக்கப்பட்ட அனு பிரசாதம், அனைத்து பக்தர்களுக்கும் வழங்கப்பட்டது.
கோவை சந்திரா நாடக குழுவினர், திரவுபதியின் சரணாகதி நாடகத்தை நடத்தினர். விழாவில் பெண்கள் மட்டும் இளைஞர்களுக்கான ஆன்மிக வழிகாட்டல் அமர்வுகள் நடந்தன.
பக்தர்கள் அனைவரும், ‘ஹரே கிருஷ்ணா...’ மகா மந்திரத்தை ஒன்றுகூடி உச்சரித்தனர். கோயில் உள் வளாகம் முழுவதும் மின் விளக்குகள், பூமாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
குழந்தைகள் பங்கேற்ற, மாறுவேடப் போட்டியில் பாலகோபாலர், ராதை யசோதை, அர்ஜுனர் போன்ற வேடங்கள் மக்களை கவர்ந்தன.
போட்டிகளில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. நள்ளிரவு வரை விழா நிகழ்ச்சி நீடித்தது.