கோவை: ஸ்ரீ தர்ம சாஸ்தா பூஜா சங்கம் சார்பில், ஆர்.எஸ்.புரத்தில் ராதா கல்யாண மஹோத்ஸவம், பக்தர்கள் சூழ விமரிசையாக நடந்தது.
ராதா கல்யாணம் என்பது கிருஷ்ணருக்கும், ராதைக்கும் நடைபெறும் திருமண வைபவம்.இது ஒரு ஆன்மிக வைபவமாக, பக்தர்களால் போற்றப்படுகிறது. இது நாமசங்கீர்த்தன மரபுப்படி பஜனை சம்பிரதாயத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, இது வைதீக முறைப்படி, தென்னிந்திய பஜனை மரபுகளைப் பின்பற்றி, நாமசங்கீர்த்தனத்துடன் நடத்தப்படும் பிரம்மாண்ட மஹோத்ஸவமாகும்.
ராதா கல்யாண மஹோத்ஸவத்தின் வாயிலாக இறைவனின் திருமணச் சடங்கு மட்டுமல்ல, ஜீவாத்மா (ஆன்மா) மற்றும் பரமாத்மா (இறைவன்) இடையே உள்ள ஐக்கியத்தை உணர்த்துவதாக, இந்நிகழ்வு ஆண்டுதோறும் கோவையில் நடத்தப்படுகிறது.
கைலாச பாகவதர் பஜனை மடம் என்றழைக்கப்படும், ஸ்ரீ தர்ம சாஸ்தா பூஜா சங்கம், கோவை ஞானானந்த மண்டலி ஆகியவை சார்பில், நேற்று ராதா கல்யாண மஹோத்ஸவம் நடந்தது.
ஆர்.எஸ்.புரம் மேற்கு ராமலிங்கம் சாலையிலுள்ள, ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி மஹாலில் காலை 8:00 மணிக்கு துவங்கியது. உஞ்சவிருத்தி பஜனையும், பாரம்பரியமும் கலாசாரமும் மாறாமல் நடத்தப்பட்டது. காலை 10:00 மணிக்கு, ராதா கல்யாண மஹோத்ஸவ நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.