இஸ்கான் அமைப்பு சார்பில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி ஒரே இடத்தில் 7 திருத்தலங்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஆக 2025 12:08
திருப்பாலை: மதுரை திருப்பாலை இஸ்கான் அமைப்பு சார்பில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு நாட்டிலுள்ள 7 முக்கிய திருத்தலங்களை ஒரே இடத்தில் தரிசிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு திருப்பாலை இஸ்கான் கிருஷ்ண பலராமர் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் கிருஷ்ண பலராமர் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். யாதவர் கல்லுாரி விளையாட்டு மைதானத்தில் இத்திருவிழாவின் ஒருபகுதியாக,இஸ்கான் அமைப்பு சார்பில் காலை 8:00 மணி முதல் அதிகாலை 12:00 மணி வரை கிருஷ்ணர் பலராமருக்கு அபிஷேகம், ஆரத்தி, ஆராதனைகள் நடக்கின்றன. பக்தர்களுக்கு நாள் முழுதும் பிரசாத விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
7 முக்கிய திருத்தலங்களான பத்ரிகாஷ்ரமம் பத்ரிநாராயணன், துவாரகை கிருஷ்ணர், அயோத்தி ராமர், பண்டரிபுரம் விட்டல் ருக்மணி, உடுப்பி கிருஷ்ணர், குருவாயூரப்பன் கிருஷ்ணர், திருப்பதி வெங்கடாஜலபதி ஆகிய திருத்தலங்களை காலை 8:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை ஒரே இடத்தில் காணலாம். அனுமதி இலவசம்.
இஸ்கான் ஸ்தாபகர் ஆச்சாரியார் பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதர் தோன்றிய நாளான இன்று (ஆக.,17), மாலை 5:00 மணிக்கு வினாடி வினா போட்டி, இரவு 7:00 மணிக்கு பிரபுபாதர் பற்றிய சிறப்புத் திரைப்படம்உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரை கிருஷ்ணரின் உருவங்களை ‘ட்ரோன் ஷோ’ மூலம் காட்சிப்படுத்துகின்றனர். 10 கி.மீ., தொலைவில் இருந்தும் வானில் கண்டுகளிக்கலாம். இன்றுடன் இத்திருவிழா நிறைவுபெறுகிறது.