சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரத்தில் கம்பீரமாக பறந்தது தேசியக்கொடி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஆக 2025 12:08
சிதம்பரம்; 79வது சுதந்திர தின விழாவையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவிலில், 152 அடி உயர ராஜகோபுரத்தில், பொது தீட்சிதர்கள் சார்பில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.
ஆண்டுதோறும், சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று, கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரத்தில் தேசியக் கொடி ஏற்றுவது வழக்கம். இன்று நாடு முழுதும் 79வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதனையொட்டி, சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோவில் கிழக்கு ராஜகோபுரத்தில், பொது தீட்சிதர்களால் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. முன்னதாக வெள்ளி தாம்பாளத்தில் தேசிய கொடியை வைத்து, சிவகாமசுந்தரி அம்பாள் சமேத நடராஜருக்கு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து கனகசபையில் இருந்து, மேளதாளங்களுடன், தேசியக்கொடி கோவில் வளாகத்தில், ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, 152 அடி உயரம் உள்ள கிழக்கு ராஜகோபுரத்தில் ஏற்றப்பட்டது. பக்தர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. தமிழகத்திலேயே கோவிலில் தேசியக்கொடி ஏற்றப்படுவது சிதம்பரம் நடராஜர் கோவிலில் மட்டும் தான். இந்திய சுதந்திரம் அடைந்தது முதல் இந்நிகழ்வுகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.