சபரிமலை : தினமும் இரவு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை அடைத்த பிறகும், பக்தர்கள் தொடர்ந்து பதினெட்டாம் படி ஏற அனுமதிக்கப்படுவர். இவர்கள் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்ட பிறகு மூலவரை தரிசிக்கலாம். கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பிரசித்திப் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. இங்கு தற்போது மண்டல பூஜை உற்சவம் துவங்கி நடந்து வருகிறது. தரிசனத்திற்காக நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு குவிந்து வருகின்றனர். இவ்வாறு தலையில் இருமுடி சுமந்து வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருந்து, தரிசனம் செய்யவேண்டிய நிலை இருந்து வருகிறது. இதில், இரவு 11.45 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டால், பின்னர் பதினெட்டாம் படி ஏற முடியாத நிலை இருந்து வந்தது. அவ்வாறு படி ஏற முடியாவிடில், பக்தர்கள் வரிசையிலேயே மறுநாள் நடை திறக்கும் வரை காத்திருக்க நேரிட்டது. தற்போது இந்த நிலையை மாற்றி, இரவு கோவில் நடை அடைக்கப்பட்ட பிறகும், தொடர்ந்து பக்தர்கள் பதினெட்டாம் படி ஏறலாம். இவ்வாறு நள்ளிரவு 2.30 மணி வரை பக்தர்கள் பதினெட்டாம் படி வழியாக மேலே செல்லலாம். அவர்கள் அதிகாலை 3 மணிக்கு நடை திறந்த பிறகு வடக்கு பகுதி வழியே வந்து தரிசனம் செய்யலாம்.