சதுரகிரியில் அமாவாசை விழா : ஏராளமான பக்தர்கள் தரிசனம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26நவ 2011 10:11
வத்திராயிருப்பு : சதுரகிரி மலையில் நடந்த கார்த்திகை அமாவாசையை யொட்டி , ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். விருதுநகர் மாவட்டம் வத்திரயிருப்பு அருகே சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி, சந்தன மகாலிங்க சுவாமி கோயிலில், கார்த்திகை மாதம் முழுவதும் தீபம் ஏற்றி, வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. சபரிமலைக்கு மாலையணிந்த பக்தர்களும் அதிகளவில் வழிபாடு நடத்தி வருகின்றனர். அமாவாசையொட்டி, நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை சுந்தர மகாலிங்க சுவாமி, சந்தன மகாலிங்க சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், சங்கொலி, முரசு ஒலி முழங்க தீபாராதனை, வில்வ அர்ச்சனை வழிபாடு நடந்தது. சுவாமி, தீபஒளியில் சுயரூப அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பஜனை பாடல்கள் பாடி, விடியும் வரை பூஜை செய்தனர். ஏற்பாடுகளை தக்கார் செந்தில்வேலவன், நிர்வாக அதிகாரி ஜவஹர் செய்திருந்தனர்.