பவுர்ணமியன்று மலையை சுற்றி வருவது பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள். பரிக்ரமா என்னும் பெயரில் நர்மதை நதியை சுற்றும் வழக்கம் இருப்பது தெரியுமா? 1290 கி.மீ., நீளமுள்ள நர்மதை நதி, மத்திய பிரதேசத்தில் அமர்கண்ட் என்னும் இடத்தில் உற்பத்தியாகிறது. புனித நதியான இது, சிவனின் உடம்பில் இருந்து தோன்றியதால் ஜடா சங்கரி, ருத்ர கன்யா என அழைக்கப்படுகிறது. இந்நதியை முதன் முதலில் சுற்றி வந்தவர் மார்க்கண்டேய மகரிஷி. அஸ்வத்தாமா, பரசுராமர், ஆஞ்சநேயர், விபீஷணர், மகாபலி, கிருபாச்சாரியார், வியாசர் ஆகிய சிரஞ்சீவிகள் ஏழுபேரும் சுற்றி வருவோரை பாதுகாப்பதாக ஐதீகம். தங்களின் விருப்பம் நிறைவேற பக்தர்கள், 3 ஆண்டில், 26௦௦ கி.மீ., தூரத்தை சுற்றி வந்ததாக புராணம் சொல்கிறது. தற்போது ஒரு வாரத்திற்குள் நர்மதையை சுற்றி வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.